அரசியல்

மந்திரக்கோல் வேலைகளால் கறுப்புப்பணம் ஒழியுமா?

8.11.2016 இரவு சுமார் 8.00 மணிக்கு ஊடகங்களில் திடீர் அறிவிப்பு. இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பே அது. சில நிமிடங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள் செயலாற்றுப் போகிறது. பலர் செய்தி கேட்டு தலையில் இடிவிழுந்தது போன்று நிலைகுலைந்தனர். சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை ஐநூறு மற்றும் ஆயிரமாக மாற்றி தங்களிடமே பத்திரப்படுதியவர்கள், வங்கியைப் பயன்படுத்தாதவர்கள், இன்னும் கூட சம்பளத்தை ரூபாய் நோட்டுகளாகவே வாங்கிக் கொண்டிருப்பவர்கள், என்று வங்கி நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் கோடிகணக்கான மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்து நின்றனர். போதாக்குறைக்கு இரண்டு நாட்கள் வங்கியும் ATM-ம் செயல்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டு மக்களை மேலும் திகிலின் உச்சகட்டத்திற்கே அரசு கொண்டுசென்றது. உத்திரபிரதேசம் கான்பூரில் இதைக் கேள்விப்பட்டு மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார். கோரக்பூரில் மருத்துவமனையில், தனது குழந்தையின்  சிகிச்சைக்கு எடுத்துச்சென்ற பணம் செல்லாது என அறிந்த ஏழைத்தாய் மயங்கி விழுந்து மரணம்.  இது போன்ற சம்பவங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

சைக்கிளில் வைத்து டிரம் டீ விற்கும் ஒரு வயதான பெரியவர், ஒவ்வொருவரிடமும் டீ வேண்டுமா என்று கேட்டுச் செல்கிறார். சில்லறைக் காசு இல்லாததால் யாரும் டீ வாங்கவில்லை. எல்லோரும் 500 ரூபாய் நோட்டை நீட்டுகிறார்கள். சில்லறை இல்லையென நகர்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வருகிறார். வழியில் தென்படுகிறவர்களிடம் எல்லாம் டீ குடிக்கிறீர்களா எனக்கேட்டு டீயை காசு வாங்காமலேயே கொடுக்கிறார். டீ வியாபாரம் ஆகாததால் இது வீணாகிவிடும், அதைவிட யாரவது குடிக்கட்டும் என்று வேதனையோடு சொல்லி டீயைக் கொடுக்கிறார். சிலர் தங்களிடம் இருந்த சிறு சில்லறை நாணயங்களை கொடுக்கிறார்கள். சிலர் காசு கொடுக்கவேண்டுமென்று நினைத்தும் கொடுக்கமுடியாமல் தவிக்கின்றனர். இது நாடு முழுவதும் 09.11.2016 அன்று நடந்த ஏராளமான சம்பவங்களில் ஒன்று.

சரி, என்ன காரணத்திற்காக இந்த நடவடிக்கை? கறுப்புபணத்தை ஒழிக்கவும் கள்ளநோட்டுகளின் நடமாட்டத்தை குறைக்கவும் தான் இந்த அதிரடி நடவடிக்கை  என்று அரசு கூறுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் கறுப்புப்பணத்தையும் கள்ளநோட்டுகளையும் ஒழிக்க உதவுமா என்று கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தால், இத்தகைய நடவடிக்கைகள் படுதோல்வியே என்றும் பொருளாதார பிரச்சனைகளை அதிகரிக்கும் என்றும் நிரூபிக்கபட்ட உண்மைகள் மேலும்மேலும் அச்சத்தையே உருவாக்குகிறது.

கள்ளநோட்டுகளை ஓரளவு ஒழிக்க முடியும், அதுவும் சாதாரண மக்கள் தங்கள் கைகளில், கள்ளநோட்டு என்று தெரியாமலேயே வைத்திருக்கும் கள்ளநோட்டுகளை, அதாவது ஏற்கனவே கள்ளநோட்டுக்காரர்கள் திட்டமிட்டு புழக்கத்தில் விட்ட கள்ளநோட்டுகளை மட்டுமே ஒழிக்க முடியும். ஆனால் மிகப்பெரும் கள்ளநோட்டுக் கும்பல்கள் வைத்திருக்கும் புழக்கத்தில் விடுவதற்கு தயாரித்து வைத்திருக்கும் நோட்டுகள் புழக்கத்திற்கு விடாமல் அழித்துவிட்டு, அடுத்து வரும் புது நோட்டுகளின் கள்ளநோட்டுகளை தயாரிக்க ஆரம்பிப்பார்கள். இந்த நடவடிக்கை மூலம் கள்ளநோட்டுகளை ஓரளவுதான் ஒழிக்க முடியும் என்று கேரள நிதியமைச்சரும் சிறந்த  பொருளாதார வல்லுனருமான தோழர். தாமஸ் ஐசக்கும் உறுதி படுத்துகிறார்.

அதுவே கறுப்புப்பணம் என்ற கண்ணோட்டத்தில் இது கால்காசுக்கு பயனற்ற நடவடிக்கை ஆகும். அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் சென்னையில் எல்லா நகைக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியுள்ளது. ஒரு சில கடைகளில் விலையை 30% வரை அதிகரித்துள்ளனர்.எல்லா நகைகளுக்கும் சேதாரத்தை 20% என்ற ஒரே அளவில் வசூலித்துள்ளனர். இருப்பினும் நள்ளிரவு வரை நடந்த வியாபாரம் மூலம் ஏராளமானவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை தங்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெரும் வியாபாரிகள் இந்த பணத்தை சட்டபூர்வமாக மாற்றும் முயற்சியை செய்துவருகின்றனர்.  அதுபோலவே கருப்புப்பணக்காரர்கள் தங்களது ஆட்கள் மூலம் எல்லா சிறு கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள்மூலம் பொதுமக்களிடம் இருந்து வசூலாகும் சிறு மதிப்பிலுள்ள ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி அதன்மூலம் கருப்புப்பணத்தை தக்கவைத்துக்கொள்ளும் பணியும் கனஜோராக நடப்பதாக கூறப்படுகிறது. 100, 50 போன்ற ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருந்து வாங்கப்படும் ஆனால் சில்லறையாக மக்களிடம் திரும்புவதில்லை.

1946-ல் 10000 ரூபாய் நோட்டை அன்றைய அரசு செல்லாததாக்கிய போது, கறுப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகக்untitled1 கூறித் தான் நியாயப்படுத்தியது. அன்று இந்தியாவில் 10000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகள் புழக்கதிலிருந்தன, கறுப்புப்பண விவகாரத்தைக் கூறி அவற்றை செல்லாது அறிவித்த பிறகும் கறுப்புப்பணம் ஒழியவில்லை. ஒருபுறத்தில் அதிகமதிப்புள்ள நோட்டுகளை ஒழிக்கும் சாகசம் நடந்தது மறுபுறம் கறுப்புப்பணம் பல்கிப்பெருகியது.

1938-ம் வருடம் முதன்முதலில் 10000 ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தி, பின்னர் 1946-ம் வருடம் 10000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. 1954-ல் மீண்டும் அதே 10000 ரூபாய் நோட்டுகளை செல்லுபடியாகுமென அறிவித்ததோடு, 5000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தியது. 1978-ம் வருடம் 10000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் செல்லாது என அரசு அறிவித்தது.

1953-1954 காலகட்டத்தில் வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் சுமார் 300 கோடி ரூபாய். அதுவே 1965-1966 ஆண்டுகளில் ஆயிரம் கோடி என்ற அளவில் அதிகரித்தது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான National Institute of Public finance and policy என்ற நிறுவனத்தின் கணக்கு படி1980-1981-ம் வருடம் வரிஏய்ப்பு சுமார் 10,000 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2012-ம் வருட கணக்கு படி 6,50,000 கோடி ரூபாய் ஆகும்.

1946 மற்றும் 1978-ம் வருடங்களில் ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவித்த நடவடிக்கை முழு தோல்வியையே அடைந்தது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. கணக்கு காண்பித்து சட்டபூர்வமாக செல்லத்தக்கதாக மாற்றியது 15% நோட்டுகள் மட்டுமே 85% கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்ட நோட்டுகள் ஏற்கனவே வேறுவடிவத்தில் அசையும் அசையாத சொத்துக்களாக மாற்றப்பட்டன. ஒரு சிறு தொகை யாருக்கும் பயன்படாததாக அழிக்கப்பட்டன. பெரும்பாலும் கறுப்புப் பணமாக பதுக்கப்படும் பணம் வேறுவடிவங்களிலேயே மாற்றப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இப்பொழுது 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியதன் விளைவும் அதுவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வரிவிலக்கு அல்லது வரிச்சலுகை உள்ள பல நாடுகளில் இத்தகைய பணம் சேமிப்பாகவோ முதலீடாகவோ பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய முறைகளில் பாதுகாக்கப்பட்ட கறுப்புப்பணம், முதலீடுகள் அல்லது சேமிப்புகள் வடிவத்தில் சுமார் 11,70,000 கோடியாக இருக்கும் என தற்போதைய கணக்குகள் கூறுகின்றன. சுருங்கச்சொன்னால் இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவத்தில் பதுக்காமல் பங்குகள், கடன் பத்திரங்கள், டாலர் மூலமான  பங்கு பரிவர்த்தனைகள் என்று வடிவம் மாறிய கறுப்புப்பணத்தை, இந்தியாவின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்குவதால் கட்டுப்படுத்த இயலாது.  . நிலம், தங்கம், மற்றும் சினிமா போன்ற கலைத்துறைகளில் உள்ள முதலீடுகளிலும், வடிவம் மாறி கறுப்புப்பணம் பதுங்கி கிடக்கிறது என்பது தனிக்கதை.

இப்போதும் அரசியல்வாதிகள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பல்வேறு வழிகளில், வேறு செல்லத்தகுந்த நோட்டுகளாக பகிரங்கமாக மாற்றி வருகின்றனர். பெரும் கார்பரேட்டுகளுக்கு இந்த தகவல்கள் முன்கூட்டியே தெரிந்து அவர்கள் தங்களை பத்திரப்படுத்திய பிறகே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக JIO சிம் திட்டத்தை அம்பானி குழுமம் இந்த விஷயத்திற்காகத் தான் அறிமுகப்படுத்தியது என்று சொல்லப்படுவதை எளிதில் புறம்தள்ளிவிட முடியாது.

எனவே தான் 1946 மற்றும் 1978-ம் வருடங்களில் நடந்தது போலவே 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்படும் சாகசத்தால், ஏழை மக்களை அலையவிட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை என்ற உண்மையை அரசு கூட நிராகரிக்கவில்லை. பணத்தை கனவுகளில் மட்டும் காணும் கோடிகணக்கான மக்களின் சிறிய சேமிப்புகளை தட்டிப்பறிக்கும் நடவடிக்கையாகவே  இது மாறும். இரும்பு உலக்கையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயத்தைக் குடிப்பது போன்றதே, அதிரடி நடவடிக்கைகள் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய கோமாளித்தானங்கள் என்பது தெளிவு.

– சதன் தக்கலை.

Related Posts