சமூகம்

தமிழகத்தில் மது ஒழிப்பு யாரால் சாத்தியம்?…

(காந்திய வழியில் மதுவை எதிர்த்து போராடி, இன்று 31.7.2015 தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் சசி பெருமாள் என்ற போராட்டக்காரர். அவரது மறைவுக்கு ‘மாற்று’ இதழ் அஞ்சலி செலுத்துகிறது.)

-ச.தனராஜ் சமூக செயல்பாட்டாளர், தொடர்புக்கு: dhanamradhai@gmail.com

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. குழந்தைகள் தங்கள் வாழ்வினில் கேட்கும் முதல் எச்சரிக்கை பழமொழி இதுவாகத்தான் இருக்க முடியும். “கள் உண்டோர் நஞ்சுண்டோர் “ என ஈராயிரம் வருடங்களுக்கு முன்பே அதன் ஆபத்தை இடித்துரைத்த வள்ளுவன் வாழ்ந்த பூமி. ஆனால் இவ்விரண்டையும் இங்கே அளவுக்கு மீறி இலக்கு வைத்து விற்று மக்களை குடிக்கச்செய்து வருகிறது இந்த மக்கள்நல அரசு.

ஜனநாயக நாட்டில் அரசு என்பது பெற்ற தாயை போன்றது. அந்த தாயே தன் குழந்தைக்கு மது எனும் விஷத்தை கொடுத்து அழிப்பதனை இனியும் செய்யலாமா? தமிழகத்தில் மதுவிற்கு எதிராக அனைவரது போராட்டம் அரசை ஒரு உறுதியான முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவே தெரிகிறது. இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கிற்கான அவசியத்தையும், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்துவது அதனை நோக்கி உடனடியாக நகர்வது காலத்தின் கட்டாயம். ஏனென்றால் அரசு செய்ய தயங்குவதை இங்கே மக்கள் செய்திட தயாராகி விட்டார்கள். ஆனால் பூரண மதுவிலக்கின் வெற்றி என்பது நம் ஒவ்வொருவர் செயல்பாட்டில்தான் அடங்கி இருக்கிறது.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் மதுவை இயற்கையில் இருந்தே எடுத்தான். பாளையை கொண்டுள்ள பனை, தென்னை, ஈச்சம் மரங்களில் இருந்தும், பழங்கள் மற்றும் தானியங்களை கூழாக்கி நொதிக்க வைத்து சேகரித்து குடித்தான். பன்னெடும்காலமாக இவ் மதுரசங்களை உண்டு களித்து ஆசைகளின்றி மகிழ்ச்சியில் ஆடிப்பாடி சிக்கலின்றி மனநிறைவாக வாழ்ந்தவன். இதன் எச்சங்களை இன்றும் நம் பூர்வகுடிகளான பழங்குடிகளிடம் காணலாம். மது இயற்கையின் ஒரு முக்கிய பாகம். அது தன்னிலையை மறக்கச்செய்யும் உற்சாக பானம். அது கடவுளுக்கு அளிக்கப்படும் முதற்பொருள், தங்களின் முக்கிய உணவு, விருந்தினரை மகிழ்விக்கும் உயர்வான பொருள், பாரம்பரியம், கலாச்சாரம், இன்ப துன்ப நிகழ்வுகளில் பிரிக்க முடியாத முக்கிய அம்சமாக இருப்பவை. இவை எல்லாவற்றையும் விட அது அவர்களின் பாரம்பரிய உரிமை. பாரம்பரிய அறிவு. அது தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தவை. அன்று சுயசார்பு தயாரிப்பு மற்றும் பண்டமாற்று முறைமையில் மது கிடைத்தாலும் மது அருந்துவோர் விகிதம் மிக மிக குறைவு. ஆனால் அக்கால கட்டத்திலேயேதான் வள்ளுவனும் கள்ளுண்ணாமை அதிகாரம் படைத்துள்ளான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் மக்களின் பாரம்பரிய மற்றும் இலாப நோக்கமற்ற மது தயாரிப்பும் குடித்தலுக்கான பாரம்பரிய உரிமைகள் காலனிய, அதன் பிந்தைய அரச நிர்வாகத்தால் ஒழுங்கு படுத்துதல் எனும் பெயரில் தட்டி பறிக்கப்பட்டு அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டது. மக்கள் மதுவை தயாரிப்பதும் விற்பதும் குற்றம். அது தண்டனைக்குரியதாக்கப்பட்டது. ஆனால் வருவாய்காக அரசோ, அரசிடம் உரிமம் பெற்றவரோ அச்செயலை செய்யலாம். அது குற்றமோ தண்டனையோ இல்லை என்பது விசித்திரமானதுதான்.

வணிகமயப்படுத்தப்பட்ட மது வருவாயினை மையப்படுத்தியதே. மக்கள் பெருவாரியாக அருந்தும் மொலாசஸ், எரிசாராய வகை மது எவ்வித சுவையுமற்ற கசப்பு, எரியூட்டும் காரத்தன்மையுடையது. குடிப்பர்களை மேலும் மேலும் குடிக்க வைக்க தூண்டும் விஷம். கூடவே மது விற்பவர்களையும் மேலும் மேலும் விற்க தூண்டுகிற விநோத போதையை தன்னகத்தே கொண்டுள்ளது.

பூரண மதுவிலக்கு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர். ஆனால் வட இந்திய ஆதிவாசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பினால் அது முடியாமல் போனது. அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு மது எதிரானது எனும் கருத்தில் உறுதியாக இருந்தார். இறுதியில் மது மருத்துவ, இராணுவ காரணங்களுக்காக மட்டுமன்றி வேறு எந்த வகையில் பயன்படுத்தப்படுவதை அரசு ஊக்குவிக்க கூடாது என்கிற அளவில் அரசியல் அமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் மட்டுமே இடம்பெறச்செய்தார்.

எந்த ஒரு அரசனும் தன்னுடைய ஆட்சி நிலைத்திருக்க மக்களை மது, விலைமாது, சூதாட்டம், நிலையில் வைக்க வேண்டும். என சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. இதையே இந்த மக்களாட்சி மன்னர்களும் ஆட்சி நடத்தி நல்வழி படுத்திட தேர்ந்தெடுத்த தங்களுடைய மக்களையே போதைக்குஅடிமையாக்கி, நோயாளியாக, ஊனமுற்றவர்களாக, மகிழ்ச்சி – அமைதியற்றவர்களாக, தங்கள் உரிமைகளை ஏதும் உணராத மாக்களாக மாற்றிட அதிதீவிரமாக முனைகிறார்கள். மேலும் மக்களாட்சியின் உரிமைகளையும், கடப்பாடும், பயன்களும் மக்களுக்கு கிடைக்காமல் அவர்களை மயக்க நிலையிலேயே நீடிக்க வைக்கும் தந்திர யுக்தி.
பொதுவாக மது மனிதனின் இயற்கையான மனித நேய பண்புகளை சிதைக்கிறது. அவனது சிந்திக்கும் திறனையும் உழைக்கும் ஆற்றலை இழக்கச் செய்கிறது. இதனால் குடிப்பவன் தான்செய்யும் செயல் என்னவென்று உணரமுடியாத நிலைக்கு ஆளாகிறான். மது குடிப்பவர்களின் சுயமாண்பினை சீரழிக்கும், கெளரவத்தை காவுவாங்கும், சுயஒழுக்கத்தை சமாதியாக்கி விடும். கூடவே நேசிக்கும் உறவுகளை சந்தேகிப்பது, அடிப்பது, சித்தரவதைச் செய்வது, ஏன் கொலை கூட செய்வது, பாலியல் வன்கொடுமை, திருட்டு, கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை, என பல்வேறு வன்முறைசெயல்களுக்கு இட்டுச்செல்லும். தனிநபர் மதுநுகர்வு அவனது உடல்நலம் மட்டுமல்லாது குடும்ப, சமூக அமைப்புகளையும் மிகக் கடுமையாக சீரழித்துவிடும்.

மதுவினை அரசே முன்னின்று இலக்கு வைத்து விற்பனை செய்வது, விற்பனையை அதிகரிப்பது பாதகச் செயல். அன்று மதுவை மனிதன் குடித்தான். இன்று மனிதனை மது குடிக்கிறது. மதுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த மது விற்கும் அரசாங்கம் உயிர் வாங்கும் எமனே. அரசாங்கம் மது விற்பனையை நேரடியாக தொடங்குவதற்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருட்டுத்தனமாக நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், குடிக்காரர்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவே.

1983 ல் எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனமும், 1989 களில் கருணாநிதி அரசு அமுல்படுத்திய மலிவு விலை பாக்கெட் சாராய விற்பனையும், அதன்நீட்சியாக உருவாக்கப்பட்ட தனியார், அரசு மதுகடைகளினால் ஏற்பட்ட தாக்கமும் மதுஅடிமை நோயாளிகளின் எண்ணிக்கையை தமிழகத்தில் கோடிகளில் அதிகரிக்கச்செய்து பிரச்சனைகளையும் பலமடங்கு விசுவரூபமாக்கியது. ஜெயலலிதா ஆட்சியில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்பட்டன. அதன் பிறகு மது வருமானமே அரசின் பிரதான நோக்கமாக மாறி ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி வரையில் மதுவினால் ஆன வருமானத்தை அரசு எதிர்நோக்குகிறது.

மதுவினால் ஒருவித அடிமை மனோபாவம் நம்மை வியாபித்துள்ளது. அன்று மது (சாராயம்) விற்றவர்களும் அவர்களுக்கு மிக நெருக்கமான கூட்டாளிகளே ஆளும்கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள். இன்றைய டாஸ்மாக் பார் வரை அது பொருந்தும். மதுவும், வருமானமும், அடியாட்கள் பலமும் அவர்களுடைய அமைப்புக்கு வலு சேர்த்தது. அன்று கள்ள சாராயம் விற்பவன் அந்த பகுதியில் ரௌடித்தனம் பண்ணுபவனுக்கு ஓசி சாராயம் கொடுத்து விற்பனைக்கு எதிராக ஊரில் யாருரையும் எதிர்ப்பு குரல் கொடுக்கவிட மாட்டான். மீறி ஏதேனும் எதிர்ப்பு வந்தால் அந்த ஓசி சாராய உள்ளூர் ரௌடியை வைத்து சண்டையிட விடுவான். இதற்கு பயந்து யாரும் உள்ளூர் சாராய விற்பனைக்கு எதிராக குரல் கொடுக்க தயங்குவர். இன்னொன்று அன்றைக்கு கள்ளசாராய கடையில் அதிகம் ஓசி சாராயம் குடிப்பவர்கள் மதுவை ஒழிக்க வேண்டிய காவல்துறையின் ஒருசிலரும் அடக்கம். ஆனாலும்கூட மது விற்பவனுக்கும் குடிப்பனுக்கும் அது கள்ளச்சாராயம் என்பதும் செய்யக்கூடாத தவறென நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த பயமும், சமூக கட்டுப்பாடும் – புறக்கணிப்பும், விற்பவனும், குடிப்பவனுக்கும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் எப்போதும் சமூகத்தால் புறந்தள்ளியே வைக்கப்பட்டிருந்தனர்.

உள்ளூர் ரௌடிக்கு அன்று ஓசி சாராயம். அதுவே இன்று சைக்கிள், டி.வி. கிரைண்டர், மிக்ஸி, லேப்டாப், ஃபேன், இலவச அரிசி, தாலிக்கு தங்கம் என ஜொலித்துக்கொண்டு இருக்கிறது. கவர்ச்சி இலவச திட்டமும், வாக்குக்கு பணமும் பெருவாரிமக்களை சலனப்படவைக்கிறது.

இத்தகைய இலவசத்திட்டங்கள் மதுவினால் கிடைத்த பணம் என உணரவைக்கப்பட்டு, நியாயப்படுத்தப்படுவதுதான் கொடுமையின் உச்சம்.

மதுவினால் தனிமனித பாதுகாப்பு கேலிக்கூத்தாகிறது. குடித்துவிட்டு நம்மிடம் வம்புக்கு இழுக்கிறவனை பார்த்து பயந்தோ, கண்ணெதிரே தவறு செய்கிறவனை கண்டுகொள்ளாமலும், மது அருந்தி விபத்தில் சிக்கி இறந்து போகிறவனின் சாவை நியாயப்படுத்தி பேசும் நியாயவான்களாக நாம் நிற்கின்றோம். அநீதிக்கு எதிரான கோபம் நம்மிடையே குறைதல் ஆட்சியாளருக்கு மிகப்பெரிய பலம். குடிப்பவர்களும் குடிக்காதவர்களும் சேர்ந்து வாழ முடியாமல் இங்கே பலநிலைகளில் பிரிக்கப்பட்டு இடைவெளி அதிகரித்து அவலநிலையில் அலைகின்றோம்.

மதுவுக்கு எதிராக 2014-ம் ஆண்டு தமிழகத்தில் நாங்கள் மேற்கொண்ட 100 நாள் நடைபயண போராட்டதில் எங்களுடன் பங்கெடுத்த பெண்கள் பலர் “வயதுக்கு வந்த பெண் குழந்தையை என் கணவனை நம்பி வீட்டில் விட முடியவில்லை.” என்ற வாக்குமூலம் எங்களை நிலைகுலைய வைத்தது. இவ்வாறான இழிநிலையின் உச்சமே மதுவுக்கு எதிராக அனைவரையும் இன்று ஒன்று திரள வைத்துள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு சமூக பிரச்சனையும் வெகு மக்களை இந்த அளவிற்கு தட்டி எழுப்பச்செய்திருக்காது. மது குடிப்பவர்களும், மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களும்கூட மதுக்கடையை மூடுங்கள் என கதறி அழுதும் இந்த கல்(ள்) நெஞ்சர்கள் கலங்கவில்லை.

தனிமனிதனுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் மது எவ்வடிவத்தில் இருந்தாலும் அது விஷமே. அது இயற்கையில் இருந்து கிடைக்க பெற்றாலும் அல்லது வேறு வகையாயினும் அது முற்றாக தடை செய்யப்பட வேண்டியதே. இதில் சமரசத்திற்கு இடமளிப்பது பூரண மதுஒழிப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். ஆனாலும் மதுவிலக்கு சாத்தியமா? என்பதில் சலனம் நீடிக்கிறது. தமிழகத்தில் லாட்டரி – பரிசு சீட்டு விற்பனை மிகப்பெரிய சமூக பிரச்சனையாக இருந்த போது அரசு முற்றிலும் தடை செய்தது. இன்று அந்த பழக்கம் இளைஞர்களிடம் இல்லையே. இது பெருமைக்குறிய விசயம் அல்லவா? அதே போல் மதுவிற்பனையை தடை செய்வதால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என ஓலமிடுபவர்கள் “அன்றைக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டிய கள்ளசாராயம் காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல் நடைபெற்றது என்பதை உறுதி கூறுவார்களா”? மேலும் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அக்கால கட்டத்தில் காவல்துறையை அணுகுவதில் அச்சமும், பயமும் வெகுஜன மக்களிடம் இருந்தது. சாராயம் விற்பனை குறித்து யாராவது தகவல் சொல்ல வேண்டுமென்றால் காவல்நிலையம் வரை நடந்து செல்லவேண்டும்.

அதுமட்டுமின்றி மது பிரச்சனையின் தாக்கம் இன்றுள்ள அளவிற்கு மோசமாக இருந்ததில்லை.
மக்களின் வாழ்வாதாரங்களும், இயற்கை வளங்களும் சுருங்கி வரும் இன்றைய சூழலில் உலகமயக்கொள்கைகளும் சந்தை பொருளாதாரத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறையும் மது அருந்துதலை மேலும் மேலும் தூண்டுமே தவிர ஒரு நாளும் குறைத்திட வழி செய்யாது.

இதனால் பூரண மதுவிலக்கு சாத்தியமே இல்லை எனக்கூறுவோர் உண்டு. அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனென்றால் பூரண மதுவிலக்கு என்பது உடனடியாக சட்டத்தால் மட்டுமே செய்துமுடிக்கக்கூடிய செயல் மட்டும் அல்ல.
உறுதியற்ற நடவடிக்கைகளினால் பூரண மதுவிலக்கு ஒரு நாளும் சாத்தியமில்லை என்பதை நமக்கு குஜராத் அனுபவம் எச்சரித்துள்ளது.

அங்கே பணம் இருப்பவர் அதிக விலை கொடுத்தும், ஏழை அடித்தட்டு மக்கள் வசிக்கும் இடங்களில் தாராளமாக அதிக கேடு விளைவிக்கும் கள்ளச்சாராய விற்பனையும் கனஜோராக நடந்து வருகிறது. விளிம்புநிலை மக்களின் மது அருந்தும் உரிமையை இழக்கச்‌ செய்து பணக்காரர்களின் மது அருந்தும் உரிமையை மட்டும் உறுதி செய்வது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும். இந்த யதார்த்த உண்மையையும், கடந்தகால அனுபவங்களை கொண்டு மதுவிற்பனையை குறைக்கிறோம், கட்டுப்படுத்துகிறோம் என்று போக்குகாட்டாமல் மதுவை முற்றிலும் ஒழிக்க உறுதியான ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.

காலனிய அடிமைப்போல மது அடிமை போதையில் கிடக்கிறது தமிழகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்றில்லாமல் பூரண மதுவிலக்கை இத்தருணத்தில் அமுல்படுத்தாவிடில் தமிழ் சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பண்பாடு, நாகரீகம், தனித்த பண்புகள், குண நலன்களையும், சிறப்பு அம்சங்கள் அத்தனையையும் இத்தலைமுறையோடு இழந்து நிர்கதியாகிவிடுவோம். அதனை நிரூபிக்கும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி அனைவரையும் கடுமையாக அச்சுறுத்துகிறது.

பூரண மது ஒழிப்பு என்பது உயர்ந்த இலட்சியம். இரண்டாம் சுதந்திரப் போர். நமக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு. பூரண மதுவிலக்கை இனியும் காலம் தாமதிக்காமல் உடனடியாக செய்திடவேண்டும். இல்லையென்றால் மது எனும் கொடிய விஷம் ஒட்டுமொத்தமாக மது குடிப்பவர், குடிக்காதவர் என்ற பேதமில்லாமல் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழித்து விடும்.

பிரச்சனைக்கு தீர்வு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. கிராமங்களில் கூட அனைவரிடமும் செல்போன் வசதியுள்ள இக்காலகட்டத்தில் மது விற்பனையை தடுக்க சிறப்பு தொலைபேசி எண்கள், சிறப்பு கட்டமைப்பு, கடுமையான அபராதம் போன்ற சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். பூரண மது ஒழிப்பிற்கு மதுஒழிப்பு போராளிகள், பெண்கள், காவல்துறையினர், மாணவர்கள், இளைஞர்களை உள்ளடக்கிய அதிகாரமிக்க கண்காணிப்பு குழு, மது ஒழிப்பிற்கான தனி விரைவு நீதி மன்றங்கள், போன்றவை பூரண மது ஒழிப்பிற்கு வலு சேர்க்கலாம். அத்தோடு பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் மதுவின் தீமை, பூரண மதுவிலக்கின் அவசியம் குறித்த பாடங்கள். மது அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கு உளவியல், மருத்துவ சிகிட்சை வழிமுறைகள், மது ஒழிப்பு தொடர்பான ஆவண விளம்பர படங்களை தயாரித்து சினிமா, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது நல்ல பலனளிக்கலாம்.

மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு, நீதி நிவாரணம், அவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்தல், மதுவினால் கணவனை இழந்த தகுதியுள்ள பெண்களுக்கு அரசு பணிவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தல் போன்ற செயல்பாடுகளும் அவசியமாகிறது.

நாம் அனைவரும் விரும்புவது அன்பு அமைதியே அதன் முதல் படி பூரண மது ஒழிப்பே. ஒவ்வொரு தனிமனிதனும் மது மறுப்பாளானாக, மது ஒழிப்பு போராளியாகவும் மாறினால் மட்டுமே பூரண மது ஒழிப்பு ச(சா)த்தியம்.

பூரண மதுவிலக்கு நம்மால் முடியும் என்றால் நமக்குதானே பெருமை…

Related Posts