பிற

மதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …

  • சிவகுரு

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே….

புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது.

நூலாசிரியர் நா.முத்துநிலவன் தமிழகம் முழுதும் அறியப்பட்ட நல்ல நாகரீக பேச்ச்சாளர் , முற்போக்கு சிந்தனையாளர், கவிஞர், எனும் தளத்திலிருந்து ஆசிரியர்( அதுவும் தமிழ் ஆசிரியர்) எனும் நிலையிலிருந்து இந்நூலை நம் கைகளில் தவழ ( தவழ என நான் சொல்வதற்கு இந்நூல் கல்வி குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றது, மேலும் இது குழந்தைகள் சம்மந்தப்பட்ட்து என்பதால்) விட்டுள்ளார். அதை பத்திரமாக காக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் மட்டுமல்லாமல் நம் அனைவரின் கையில் தான் உள்ளது.

பல்வேறு கால கட்டத்தில் முத்துநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகவும், இந்நூலுக்காக தனியாக எழுதிய விவரங்களையும் தன்னக்கத்தே இப்புத்தகம் கொண்டுள்ளது என்று சொல்லும் வேளையில், எல்லா கட்டுரைகளும் தனித்தன்மையோடு வாசகனை ஈர்க்கின்றது. கல்வி குறித்த அக்கறையோடும், எதிர்கால சமூகம் முன்னேற வேண்டும் எனும் அவா, தற்போதுள்ள கல்வி முறை மீதுள்ள அளவிலா கோபம் என பக்கத்துக்கு பக்கம் எழுத்தில் பொறி பறக்கின்றது. எதிர்கால தமிழ் சமூகம் எப்படியிருக்க வேண்டும் , எந்தத் திசை வழியில் பயணிக்க வேண்டும் எனும் சிந்தனையோட்டத்தோடு இந்நூல் நம்மிடத்தில் நிறைய பேசுகிறது.

சென்னையில் மாணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் சம்பவத்திலிருந்து புத்தகம் தொடங்குகின்றது. கல்வி சூழல்,பாடத்திட்டம்,கற்றுக்கொடுக்கும் முறை,பள்ளிகளின் திறன், தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பு, குழந்தைகளின் உருவாக்கும் திறன் என பல கட்டுரைகளில் அவரின் அனுபவமும், நடைமுறையில் உள்ள அவலங்களை மாற்றிடாவிட்டால் ஏற்படபோகும் அபாயங்களையும் கோடிட்டு காட்டுகிறது இப்புத்தகம். தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பீட்டு முறையில் உள்ள பலவீனங்கள்,செய்ய பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் சொல்லுகின்றது.

கல்வியில் ஜனநாயகம் பற்றி எழுதும் போது, ஒவ்வொரு மாணவனும் தன் விடைத்தாள் எப்படி திருத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளும் முறை முழுமையாக அமலாக்க வேண்டியதின் அவசியம் புலப்படுகிறது. இன்றும் சில நடைமுறையில் இருக்கும் டபுள் பிரமோஷன் எனப்படும் முறை குறித்து கேள்வி எழுப்பும் நூலாசிரியர் , உண்மையிலேயே 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தேவை தானா எனும் கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறார். 20 அல்லது 21,22 வயதில் தான் பட்டப்படிப்பு முடிக்கும் இன்றைய சூழலில் ,குறைந்த வயதில் படிப்பை முடிக்கும் வண்ணம் எவ்வாறு கல்வி முறை மாற்றப்படலாம் எனும் மாற்று சிந்தனையை எழுப்புகிறார்.

வகுப்பறை அனுபவங்கள்

ஒரு முன்மாதிரி ஆசிரியராக பணியாற்றி , தமிழக அரசு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வந்து, அதை எவ்வாறு புத்தகங்களில் கொண்டுவருவது எனும் ஆலோசனை குழுவில் இருந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவங்கள், அரசின் நடைமுறைக்கும், களநிலைக்கும் உள்ள வேறுபாடு, ஒரே மாதிரி பயணிக்காமல் சற்று மாற்றி யோசித்தால் எவ்வளவு அதிரடி மாற்றங்கள் நேரும் என்பதெல்லாம் இந்நூலில் சொல்லப்படும் விஷயங்களை படித்தால் போதும்.

தன்னிடத்தில் படிக்கும் மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்கள் வாழ்நிலையோடு ஒன்றர கலந்து , பெற்றோர்களை சந்தித்து, தேர்வுக்காக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்காக அவர்கள் செய்திட வேண்டியதை அனுபவத்தோடு பகிர்ந்து கொள்ளும் முத்துநிலவன் அப்படி செய்ததின் விளைவாக கிடைத்த பலன்கள் பற்றி விவரிக்கும் பக்கங்கள் அற்புதம். இப்படி எல்லா ஆசிரியர்களும் செய்தால் எப்படி இருக்கும் என யோசிக்க வைக்கிறது . இப்படி நிறைய சம்பவங்கள் இப்புத்தகத்தில் உள்ளது. பதவி உயர்வு, தமிழாசிரியர்கள் சிலர் செய்யும் தவறுகள், தமிழ் எழுதும் போது செய்யப்படவேண்டிய திருத்தங்கள் , தமிழக கல்வி துறையில் நடைபெற வேண்டிய மாற்றங்கள் என சகல மட்டத்திலும் நடைபெற வேண்டிய மாற்றங்கள் குறித்தும் நூல் பேசுகின்றது.

கவனிக்க வேண்டியவை…….

இந்நூல் கட்டுரைகளின் தொகுப்பு ஒரு கட்டுரையின் தலைப்பு கல்வி ”புகட்டுவது” சரியா? புகட்டுவது என்றாலே திணிப்பது போன்றது… அது எப்படி மாணவர்களை பாதிக்கின்றது என சொல்கிறது.

சமச்சீர் கல்வி முறை குறித்து அவர் அழுத்த்த்தோடு பதிவு செய்யும் போது அது எப்படி சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பது புரிகிறது. அதற்காக காந்தி தாய்மொழியில் கற்பது தான் சிறந்தது என சொன்னதை பதிவு செய்துள்ளார்.

கோடை விடுமுறை தேவைதானா? என்ற கட்டுரையில் சில அம்சங்கள்… தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலம், தற்கால மாணவன் கட்டுரை கூட எழுத முடியாமல் போன அவலம், அடுத்த ஆண்டு எடுக்க வேண்டிய பாடங்களை முன்கூட்டியே எடுத்து மதிப்பெண் எடுக்கும் கருவியாக மாணவனை மாற்றியுள்ள போக்கு குறித்த கவலை பற்றி பதிவுகள் சிந்திக்க வைக்கின்றது.

கடித வடிவில் முதல் மார்க் எடுக்க வேண்டாம் மகளே கட்டுரை ஆஹா கண்களில் கண்ணீரை தாரை தாரையாக வரவைக்கின்றது. அதில் நெகிழ வைக்கும் கவிதைகள், நம் வாழ்வில் எப்படி நம் குழந்தைகளிடம் இருக்க வேண்டும் என்பதற்கான அற்புத பதிவு.

தனியார் பள்ளிகள் செய்யும் சாதனை என்ன? என்ற கட்டுரை இன்றைய கல்வி எப்படியெல்லாம் வணிக மயமாகி விட்டது என்பதையும் அதனால் மாணவர்கள் எப்படி பலிகடா ஆகியுள்ளார்கள் என்பதையும் வேதனையுடன் பதிவிடுகின்றது. இப்படி இந்நூலில் கல்வியில் முறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி ஏராளமாய் சொல்லியுள்ளது. படித்தால் தெரியும்.

சிந்திக்க….செயல்பட…:

கல்வி துறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்த குரல்கள் அதிமாகி வருகின்றது. அதையொட்டி தொடர் விவாதங்களும் நடக்கின்றது என்பதும் உண்மை என்றாலும், உலகமய சுனாமி புரட்டி போடும் புறச்சூழலில் நல்ல பதிவுகள் விவாதிக்கப்படவேண்டும். கல்வி துறையின் அனைத்து மட்டங்களிலும் பேசப்பட இந்நூல் அறிமுகப்படுத்துதல் அவசியம். ளிய தமிழில், அழகு கவிதைகளை மேற்கோளாக காட்டி, தேவையான இடங்களில் பதிவிட்டு சோர்வூட்டாமல் படிக்க வைக்க வைத்த்து சிறப்பு.

தமிழகத்தில் கல்வி தளத்தில் செயல்படும் பல அமைப்புக்கள் இந்நூலை வாசித்து அதற்காக அங்கீகாரம் அளித்து வரும் செய்திகளை காணும் போது ஒரு ந்ல்ல மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கான வழிகாட்டியாக இந்நூல் இருக்கின்றது என்பது மகிழ்ச்சியே.  கல்வியாளர் ராஜகோபாலன் ஐயா அணிந்துரையில் சொல்லியிருப்பது போல் தீவிர விவாதங்களை இந்நூல் எழுப்பினால் முத்துநிலவனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக   அது இருக்கும் விவாதிப்போம் மாற்றம் காண்போம்.

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. .

நா.முத்துநிலவன்

வெளியீடு அகரம் பதிப்பகம்

தஞ்சாவூர்

விலை ரூ/ 120

Related Posts