அறுவை சிகிச்சை மட்டும் இல்லை என்றால் இன்று நம்முடைய பிரியத்திற்குரிய பலர் நம்மோடு இருந்திருக்க மாட்டார்கள். இறப்பைத் தள்ளிப்போட மட்டுமல்ல சிசேரியன் மூலம் பிறப்பை தீர்மானிக்கும் சக்தியும் அறுவை சிகிச்சைக்கு உண்டு. அறுவை சிகிச்சை என்பது ஒரு தனி வைத்திய முறை. அதை எந்த வைத்தியமுறையுடனும் இணைத்து சிகிச்சையளிக்க முடியும். நமது நாட்டில் கூட சுஷ்ருதா என்கிற மருத்துவர், ஆயுர்வேதத்தோடு இணைத்து மூளை அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது அறுவை சிகிச்சையை ஆங்கில மருத்துவம் ஆக்கரமித்துக் கொண்டது. அதைப் பேசினால் இந்த கட்டுரை பெரிய அரசியல் கட்டுரையாக மாறிவிடும் என்பதால் நாம் பேச வந்த ஆங்கில மருத்துவத்திற்கு அறுவை சிகிச்சையை போதித்த அலெக்சாண்ட்ரா கிலியானி என்கிற பெண்மணியைப் பற்றி பார்த்துவிடலாம்.
ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடல் அறுப்பவர் என்று பலரால் அறியப்பட்ட அலெஸ்ஸாண்டிரா கிலியானி கி.பி 1307 ல் பிறந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது . மதத்தின் தீவிரமான பிடியில் இருந்த மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம், மத துவேஷம் என்று பார்க்கப்பட்டது. தெய்வ நிந்தனை செய்பவருக்குத் குறைந்தபட்சமாக தூக்கு தண்டனையும் அதிகபட்சமாக பொது இடத்தில் மக்களால் அடித்து கொலை தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட காலத்தில் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக, இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார். இவர் அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து,இறந்த உடலை அறுத்து அதிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்த குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். அதன் மூலம் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்கு செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டார். உலகில் இப்படி முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, வேறு வண்ண திரவம் ஏற்றியவரும். அதனைப்பற்றி பதிவு செய்தவரும், அலெஸ்ஸாண்டிரா கிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியமுடிந்தது. இவ்வாறு கிலியானி மருத்துவர்களுக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தார்.
ஆண்கள் இத்துறையில் ஈடுபடுவதையே ஏற்காத மதம் அந்த அப்பாவிப் பெண்ணின் மேல் சூனியக்காரி பட்டம் கட்டியது. அவரது குறிப்புகள் அனைத்தையும் எரித்தது. அவர் கி.பி 1326 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இறக்கும் போது அலெஸ்ஸாண்டிரா கிலியானிக்கு வயது பத்தொன்பது மட்டுமே. மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி, குறிப்பிட்டு எழுதியுள்ளார்.அதன் மூலம் தான் உலகத்திற்கு கிலியானா பற்றி தெரியவந்தது.இவர் கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பபடுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857 ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். கிலியானி பற்றி 18ம் நூற்றாண்டுக்கு முன் எந்தவித பதிவும் நேரடியாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி பார்பாரா குயிக் என்பவர் எழுதியுள்ளார். அந்தக்கால நூலகர் மற்றும் ஒட்டோவின் எழுத்துக்களின் படி, கிலியானி பற்றிய யாவும் தேவாலயத்தில் உள்ளன என்கின்றனர்
19 ஆண்டுகள் மட்டுமே. உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்க கிலியானியை மேற்கு உலகம் அறுவைசிகிச்சையின் முன்னோடிகளின் ஒருவர் என்று மதிக்கிறது.