பிற

“மஞ்சள் பையும் மோப்ப நாயும்”

சின்னக்கதவுகளுக்கிடையே… ரூபத்தின் பிம்ங்கள். இந்த இரண்டு கதையும் இணையத்தின் துணைக்கொண்டு முன்பே படித்திருக்கிறேன்.
தோழர் KG Baskaran அவர்களின் சமிபத்தில் வெளி வந்த “மஞ்சள் பையும் மோப்ப நாயும்” என்னும் முதல் சிறுகதை தொகுப்பை நேற்று முன்தினம் வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருப்புதமான படைப்பு..
எந்த இடத்திலும்  சலிப்படைந்து சோர்வுற்று வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு கதைகளை தொடர்ந்து வாசிக்க வைக்கும் அழகிய எழுத்து நடை.
கதைகளை வாசித்துவிட்டு கடக்க தோனவில்லை. இப்படிதான் தோழர் Kareem Aak அவர்களின் “தாழிடப்பட்ட கதவுகளை.” படித்து விட்டு எழுத முயற்சித்து இயலாமல் போய் பல இரவுகளில் தூக்கத்தை தொலைத்து.. “மனவலியோடு விழித்திருந்தே இருளை அகற்ற முடியாமல் தவித்திருக்கிறேன்”.
தோழர் கரீமை இரண்டு முறை நேரில் சந்தித்த பின் கொஞ்சம் மனவலி குறைந்தது. ஆயினும் கரீம் தோழரிடம் நூலை குறித்து நேரில் சந்தித்தும் அதிகம் பேசாமல் வந்தது. வேறொரு குற்ற உணர்வை தந்தவிட்டது. சுழலும் நேரமும் நமக்கு விரிவாய் கிடைக்கவில்லை என மனதை தேத்திக்கொண்டேன். அப்படி மனநிலையில் மீண்டும் அகப்பட கூடாதென்று உடனே எழுத தொடங்கினேன் இக் கதைக்கு..
தோழர் பாஸ்கர். சிறந்த பேச்சாளர், நல்ல கள செயல்பாட்டாளர். தோழர் அவர்களை எங்கஊரில் அறிமுகம் படுத்தும் போதே.. (தோழர் Paulraj Santhanam அவர்கள்தான் அறிமுக படுத்தினார்  என்று நினைக்கிறேன்.) தோழரை ஒரு ‘புத்தகப்புழு’ என்றே அறிமுக படுத்தினார்கள். தீவிர வாசிப்பு பழக்கம் கொண்டவர். ஒரு கருத்தியலை எளிமையாய் புரிய வைக்க கூடியவர். போராட்டங்களில். பேரவை கூட்டங்களில் சில புத்தகங்களை அறிமுகபடுத்தியே செல்வார். கதை சொல்வார்..
ஒரு போராட்டத்தில் மாண்டோவின்  கதை ஒன்றை சொன்னார்.. அந்த போராட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் அந்த கதை ஆழப்பதிந்திருக்கும் ஏனெனில் தோழர் சொன்ன விதம் அப்படி. எனக்கும் அந்த கதை ஏதோ செய்தது.. அவர் கூறிய வார்த்தைகளை வைத்து உடனே அந்த கதைய எழுதினேன் மனபாரத்தை குறைக்க. முக நூலில்   அதை பதிவிட்டேன்.
அந்த கதைய எழுதிய எனக்கு மாண்டோவின் கதையென எழுதி முடித்த பிறகுதான் தெரியும். மாண்டோவின் படைப்பு முழுவதையும் வாசிக்க வைத்தது அந்த கதை. ஒரு மாபெரும் எழுத்தாளரின் கதைய கேட்டு எழுதிவிட்டு அந்த கதைய எழுத்தாளரின் எழுத்து நடையில் வாசிக்க வைத்த பெருமை  பாஸ்கர் தோழரையே சேரும்.
ஒரு கருத்தை தத்துவத்தை எளிமைபடுத்தி கூறுவதை தோழர் நேர்த்தியாய் செய்வார்.. என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடு ‘மஞ்சள் பையும் மோப்ப நாயும்’ சிறுகதை தொகுப்பை எதிர்ப்பார்தேன்.. தமுஎகச மாநில மாநாட்டில் வெளிட்ட போதே படிக்கும் ஆவல் தொத்திக்கொண்டது. ஆயினும் வாங்கும் சூழல் நேற்று முன் தினம்தான் கிட்டியது… படித்தேன் நம்பிக்கை வீண் போகவில்லை.
திருநெல்வேலி மாநகரை சுற்றியே கதை களம் நகர்கிறது. அடுப்படி, அடுக்களை,பெறகு, தொற, என கதைகள் அனைத்திலும் நெல்லை வட்டார தமிழ் சுற்றிவந்தாலும் பிற வட்டார மொழி வாசகர் ரசிக்க வைக்கும் நேர்த்தியான அழகிய சொல்லாடளும் குவிந்து கிடக்கிறது. நீலவேணி யின் மகன் கேட்டான் ” ஆளுங்க வளந்து வளந்து பெருசாகி, பெறகு குறைஞ்சி சிறுசாயிருவாங்களா” அது எப்படில சிறுசாவாங்க………”பெறகு எல்லாரும் என்ன ஆவாங்க, வளந்துக்கிட்டே இருப்பாங்களா”?

அலையுறும் எறும்புகள்…

வாடகை வீட்டு வாசிகளின் உணர்வுகளின் பிரதிபலிப்பு..
“தரையில் இருந்து ஒரு உயரத்தில் மார்பிள்ஸ் பதிக்கபட்டிருந்தது.”??
ஒரு அடி உயரத்திற்கு தரையின் அடி பகுதியில் எங்கும் ஒட்டபடுவதில்லை. அது அரை அடி உயரம் என்பதற்கு பதில் தவறாக அச்சிட பட்டுள்ளதோ என நினைக்கிறேன்.அப்படி  ஒரடி உயரம் ஒட்டபட்டிருந்தால் அதற்கு பின்னால் ஒரு கதை    இருந்திருக்கும்.
அடி சுவரில் அதிக நீர் படுதல், உப்பு பொறிதல், அல்லது மார்பிள்ஸ் அதிக அளவு மிச்சமிருந்தால். அல்லது இனமாக கிடைத்தது என காரணங்கள் நிறைய இருக்கு. அதுவும் மாடி வீடுகளில் ஒட்டுவது என்பது பெரும் பாலும் நிகழாது. தோழர்தான் அதை விளக்க வேண்டும்.
நானும் வாடகை வீட்டில் வசிக்கிறேன். வாடகை வீட்டில் வசிப்பதென்பது வாழ்வின் எல்லா அனுபவத்தையும் கற்று தரும். சமூகத்தின் கோபம் சந்தோஷம்  குரூரம் என எல்லாவற்றையும் எளிதில் உணர வைத்து விடும்.கதையின் போக்கு அப்டியே செல்கிறது ஆயினும்.
வீடு தேடும் நபரும்,வீடு தரும் நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ… முன் வைக்கும் சொல் ‘ ” அவரு என்ன ஆளுக”.. “நீங்க என்ன ஆளுக” என மனு தர்மம் பேசும்  வாடகை வீடுகள்  இல்லாதது கதைய ஒரு சமூகத்துக்குள் சுருங்கி போனதாய் தெரிகிறது.

சிதைவு…

கதையின் முபராகை யாரும் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. அந்த கதையில் பயணிக்கும் இசக்கி மன ஒட்டதோடு கதை முடிகிறது.. நிச்சயம் இசக்கிக்கு கடைசியில் ஒர் குற்றவுணர்வு வந்திருக்கும். கதை படிக்கும் இசக்கிகளுக்கும் வரலாம்.

வதம்…

பெண்ணியம் பேசுகிறது. தன்னை முற்ப்போக்காளனாக எல்லா இடங்களில் நிலைநிறுத்திக்கொண்டாலும் வீட்டில் மனைவி, மகளிடம்  பேசும்போதும் ஏதாவது ஒரு வேலைய ஏவும் போதும் ஏன் அன்பை வெளிகாட்டும் போது கூட சித்தாந்தமற்ற சராசரி மனிதனாய் மாறிவிடுவோம்.  அதை எப்போதாவது நினைந்து பார்கையில் சிவராமனின் கழுத்து இறுக்க படுவது போல் பாலின சமத்துவத்தை விரும்பும் எல்லொரும் உணர்வோம்.
அதை அருமையா சொல்கிறது கதையின் போக்கு.
காயத்ரி அழுத்தமாய் நிற்கிறாள்!.. இந்த வரிகளில் “அது ஒரு நா கூத்து இல்ல…. .. கல்லு தட்டி கால் வலிச்ச மாதிரி கெடையாது”.
மஞ்சள் பையும் மோப்பநாயும்… துப்பறியும் கதை போன்று தலைப்பு.
தலைப்பே கதை வாசிப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. சமூகத்தில்  தனிமனிதன்  தன் பொருளாதாரத்தின் கனவுகளை நிறைவேற்ற பயணிக்கும் மனித மனசின் பயணம் சிக்கலானது ; சிரிப்பானது. கதை இரண்டையும் சொல்கிறது. கதையில் லட்சுமி காதாபாத்திரத்தை குறிப்பிடும் போது ” லட்சுமி பத்து வரை படிச்சிருந்தாலும் மிச்சம் பிடிக்கவும் எதையாவது வாங்கி சேர்த்து வைக்கவும் ஆசைப்பட்டாள்” ‘படிச்சிருந்தாலும்’ என்ற வார்த்தை ஏனோ நெருடலாக உள்ளது.
“தாத்தா மாதிரி பிரஜைகள் பொது விஷயம் பேசியது காந்தி காலத்தில் தானே தொடங்கியது.  டீ விலை கூடியதில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது.”
பெரும் செய்திய இலகுவாய் சொல்லி விட்டு நகர்கிறது கதை.
ஈஸ்வரி, நிஷா மற்றும் அந்த நாலுபேர்… சமிப காலத்தில் நடந்த ரணமான வலிகளின் தொகுப்பு. கதை சொல்லப்பட்ட விதம் அருமை சம்பவ காட்சிகளை உருவகபடுத்திய வரிகள்.
நாம் என்ன வேலை பார்த்தாலும் அவ்விடத்தில் இல்லாவிடிலும்
கதையில் வரும் முப்பிடாதி போல் போ.. போ… வேகமாய் போ. என வலிகளை மறக்க கடந்து செல்கிறோம். ஆனால் தோழர் கோபியும் அந்த குழந்தையும் நம் கண்ணீர் கோபத்தை என்றாவது ஒருநாள் பெரும் புரட்சி செய்ய வைப்பார்கள்…

கரைசல் …

நீலவேணி.. நீலவேணி.. என இரண்டு பேர் நிச்சயம்   எல்லா வீட்டிலும் வாழ்வார்கள்.
இப்பொழுது உள்ள அறிவியல்  சூழல் நீலவேணிகளை சாந்த படுத்தலாம்.  ஆனாலும் நீலவேணி நினைவுகளை மறக்க நேர்ந்து கொண்டே இருப்பது தாயிக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடல் உணர்த்தி விடும் ஒவ்வொரு வீட்டிலும்…
“அவர் செல்லாத போகாத இடத்துக்கு முதல் தடவையாய் போகிறேன்.”
 தந்தையின் மீதுள்ள பாசம் சமூகத்தின் மீதான நேசம். அழகாய் சொல்கிறது.
சின்னக் கதவுகளுக்கிடையே.. உடல் அசைந்தது மனம் நடுங்கவில்லை.
வாசிப்பவரை நிச்சயம் அசைத்துவிடும்.
ரூபத்தின் பிம்பங்கள்,ஜன்னலில் ஒரு சீட்டுக்குருவி.. உட்பட அனைத்து  கதைகளும்  (ஈஸ்வரி நிஷா மற்றும் நாலுபேர், சின்னக் கதவுகளிடையே…. தவிர)  ஒரு பெரும் நாவலில்… ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி ஆண் குழந்தையின். வெவ்வேறு நாட்களில் நடந்த சம்பவங்களின் காட்சிகளாவே தோன்றுகிறது.. இன்னும் நிகழ்வு நிறைய இருப்பது போல் அடுத்து எதிர்க் நோக்க வைத்து விட்டது இந்த சிறுகதை தொகுப்பு.
தோழர் பாஸ்கர் அவர்களை முதலில் பாராட்ட வேண்டும். இருபது ஆண்டு மேலாய் பல்வேறு தருணங்களில் எழுதிய கதைகளை இப்போது தொகுத்து தந்தற்கு.
லட்சிய பயணத்தில் பதினெழு வயது முதல் வர்க்க கள செயல்பாட்டாளராய் வாழ்வில் பயணிக்கும் ஒருவர் அழகிய இலக்கியம்  படைப்பது கடினம்தான். பாஸ்கர் தோழர் சாதித்து விட்டார்..
– பிச்சுமணி.

Related Posts