இதழ்கள் இளைஞர் முழக்கம்

மக்கள் கிளர்ச்சி : பலன் என்ன? – என்.குணசேகரன்

இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் 1937-ஆம் ஆண்டு துவங்கி மூன்று ஆண்டுக் காலம் நடைபெற்றது. 1940-ஆம் ஆண்டில் ராஜாஜி அரசாங்கம் பிறப்பித்த ஆணையை, அந்த அரசு பதவி விலகிய பிறகு அன்றைய ஆங்கிலேய அரசு விலக்கிக் கொண்டது.

இந்தப் போராட்டத்தையும்,அடுத்தடுத்து 1960-ஆம் ஆண்டுகள் வரை நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களையும் திராவிட இயக்கத்தினர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் கருத்து ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தங்களை பலப்படுத்திக் கொண்டு, 1967-ல் மாநில ஆட்சியை பிடித்தனர்.

வேறுபட்ட சக்திகளின் சங்கமம்

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் எதில் இருக்கிறது? இதனை ஆராய்ந்தால் ஒரு முக்கிய உண்மை புலப்படும். சமூக வாழ்க்கையில் பல்வேறு அடுக்குகளில் இருந்த மக்களும், எதிரும்புதிருமாக வேறுபட்ட கருத்துக்களும் கொள்கைகளும் கொண்டவர்களும் இந்தப் போராட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டனர். மத எதிர்ப்பு கொண்ட பெரியார் ஈ.வெ.ராமசாமி இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். நேர் மாறாக, மத மறுமலர்ச்சியை முன்னெடுக்கும் நோக்கம் கொண்ட மறைமலை அடிகளாரும் அதில் இணைந்து கொண்டார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் சோமசுந்தர பாரதி, பூர்ணலிங்கம் பிள்ளை போன்றோர் போராட்டத்தை ஆதரித்து வழி நடத்தினார்கள். மறுபுறம், கல்லூரி, பள்ளி மாணவர்கள் திரளாக இந்தித் திணிப்பு எதிர்ப்பில் களம் கண்டனர். அன்று நாட்டுப் பிரிவினையை ஆதரித்துக் கொண்டிருந்த சி.என்.அண்ணாத்துரையும் இந்திய ஒற்றுமை, தேசியம் பேசிய திருவி கல்யாணசுந்தரம், மாபொ.சிவஞானம் போன்றோரும் போராட்டத்தில் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தினர்.

நாவலர் நெடுஞ்செழியன் இந்தி எதிர்ப்பு மாநாட்டு நிகழ்வு ஒன்றினை இவ்வாறு குறிப்பிடுகிறார்; “1938 சூன் 3-ஆம் நாளன்று சென்னைக் கோடம்பாக்கத்தில் பேராசிரியர் மறைமலையடிகளார் தலைமையில் இந்தி ஒழிப்பு மாநாடு ஒன்று நடந்தேறியது. தமிழைக் காக்கும் ஆர்வத்தோடும் ஆவலோடும், அரசியல் அறிஞர்கள், சமய விற்பன்னர்கள், பகுத்தறிவு நெறியாளர்கள், சுயமரியாதை இயக்கத்தினர், நீதிக்கட்சியினர், தனித்தமிழ் இயக்கத்தினர், தமிழ்ப்புலவர்கள், கலைஞர்கள், வணிகர்கள் போன்ற எல்லாத்தரப்பினரும் பாகுபாடு ஏதுமின்றி தமிழர்கள் என்ற உணர்வோடு பெருந்திரளினராக மாநாட்டில் குழுமியிருந்தனர்.” இந்த விவரிப்பு இந்தி எதிர்ப்பு இயக்கம் பன்முகத் தளத்தில் வாழ்ந்த அனைவரையும் ஒன்று சேர்ந்ததை எடுத்துக்காட்டுகிறது.

அடித்தட்டு மக்கள் எழுச்சி

இவற்றுக்கெல்லாம் மேலாக, இந்தப் போராட்டத்தில் சமூகத்தின் அடித்தட்டில் இருந்தவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும், பாமர மக்களுக்கும் வெவ்வேறு நலன்கள் இருந்தன. 1938 ஜூன் 26 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் 50,000 என்ற எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றனர். அடுத்த மாதம் ஜூலையில் விருதுநகரில் நடந்த கூட்டத்தில் 10000 பேர் கலந்துகொண்டனர். அந்த நாட்களில் தமிழ்நாட்டைச் சுற்றி நடந்த 87 கூட்டங்களில் சுமார் ஐந்து இலட்சம் பேர் பங்கேற்றனர். எனவே இந்த இயக்கம் அடித்தட்டு மக்களையும் ஈர்த்த இயக்கமாக தமிழகத்தில் நடைபெற்றது.

சுய மரியாதை இயக்கமும், பின்னர் திராவிட இயக்கமும் வளர்த்த தமிழர் என்ற இன உணர்வு அனைவரையும் ஒரு குடையில் திரட்ட உதவியது. எனினும் சாதாரண மக்களுக்கு கல்வி சார்ந்த தேவைகள் இருந்தன. நீதி, நிர்வாகத்தில் பங்காற்றிட தாய் மொழி தேவை என்ற ஜனநாயக உணர்வும், அதற்கேற்ற கல்வி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தன. அதில் அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
வலுவான வாக்கு வங்கி

1937 முதல் 1960 -கள் வரை நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்ட இலட்சக்கணக்கான நகர்ப்புற, கிராமப்புற அடித்தட்டு மக்கள்தான், பின்னர் திராவிட இயக்கத்தின் வலுவான வாக்கு வங்கியாக மாறி அடுத்தடுத்து திராவிட இயக்கங்கள் மாநில ஆட்சியில் அமர்வதற்கு உறுதுணையாக இருந்தனர். ஆனால், மிக முக்கியமான கேள்வி என்ன? இந்த அடித்தட்டு மக்களின் மொழி சார்ந்த தேவைகள் நிறைவேறியதா என்பதுதான். பெரியார் 1931-ஆம் ஆண்டில் குடி அரசு இதழில் எழுதிய ஒரு தலையங்கத்தில் “இந்தியை எக்காரணம் கொண்டும், எந்த வகையிலும், தென்னாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் புகுத்தக் கூடாது’ என்று கூறி ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். இந்தியை புகுத்துவதால் “..பார்ப்பனீய ஆதிக்கம்தான் ஏற்படுமேயல்லாமல், திராவிடப் பெருங்குடி மக்களுக்கு எள்ளளவு பயனும் ஏற்படப்போவதில்லை” என்றும், அதனை திராவிட மக்கள் முழுமூச்சோடு எதிர்க்க வேண்டும்..” என்றும் எழுதினார்.

இதில் பார்ப்பனிய ஆதிக்கம் என்று அவர் குறிப்பிடுவதில், கல்வி அனைவருக்கும் கிடைப்பதை மறுத்து, சாதிய அமைப்பில் மேலடுக்கில் உள்ள பிராமணர் பிரிவினருக்கே கல்வி என்ற நால்வருண மூடத்தனமும் அடங்கும். பெரியாரும், அன்றைய பிராமணரல்லாதார் இயக்கத் தலைமையினரும், இந்தியை எதிர்த்ததற்கு இது முக்கிய காரணம். ஆனால் இந்த பிராமணிய கருத்தியல் எதிர்ப்பு இயக்கத்தின் வழித்தோன்றலாக வந்த திமுக, அதிமுக தங்களது ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? குறிப்பாக அறிவுச் செல்வத்தை அடைய முதல் படியாக விளங்கும் எழுத்தறிவினைப் பெற அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? ஆரம்பக்கட்ட எழுத்தறிவினை மக்கள் பெற்றிருப்பதுதான் சமூக வளர்ச்சிக்கு முக்கியமான தேவை. இது, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் கருத்து.

கல்வி மறுப்பு

சில புள்ளி விவரங்கள் திராவிட இயக்க ஆட்சிகள் இதில் செய்த ‘சாதனையை’ விளக்கிடும். கடந்த 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னை மாகாண மக்கள்தொகையில் வெறும் 6 சதம் பேர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். 1951-ஆம் ஆண்டு நாடு விடுதலை அடைந்த நிலையிலும் 20-சதம் மக்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். உண்மையில், இந்த வளர்ச்சி விகிதம் 1970-ஆம் ஆண்டில் குறைந்து போனது. இந்தக் காலங்களில் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்த காலம். கிராமப்புற மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவுக்கு எழுத்தறிவு பெறாத நிலையே நீடித்தது. விடுதலைப் போராட்ட காலங்களிலேயே அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை முற்போக்காளர்களும் கம்யூனிஸ்ட்களும் முன்வைத்து போராடி வந்துள்ளனர். விடுதலை கிடைத்து இரு பத்தாண்டுகள் ஆன போதும் அது நிறைவேறவில்லை.

திமுக, அதிமுக ஆட்சி செய்த காலமான 1981-ஆம் ஆண்டு வரை கிராமப்புற மக்களில் 44 சதம், பெண்களில் 39 சதம், தலித் மக்களில் 30-சதம் மட்டுமே எழுத்தறிவு பெற்றனர். எந்த மக்களை பிராமணிய கருத்தியல் கல்வியறிவு பெறுவதிலிருந்து தடுத்து வந்ததோ, அந்த மக்கள் திராவிடக் கருத்தியல் அதிகாரத்திற்கு வந்தபோதும் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்தனர். இதே காலத்தில் ஆளுகிறவர்களால் அவ்வப்போது வேட்டையாடப்பட்டு வந்த கம்யூனிஸ்ட்டுகள் கேரளத்தில் ஆட்சிக்கு வந்து 1981-ஆம் ஆண்டில் 78 சதம் அளவிற்கு எழுத்தறிவு பெற்றவர்களின் என்ணிக்கையை உயர்த்தினர். பிறகு நூறு சதம் எட்டி சாதனை படைத்தனர். ஆக, எந்த அடித்தட்டு மக்கள் தங்களது அரசியல் தளமாகவும் வாக்கு வங்கியாகவும் இருந்து ஆதரவு அளித்தார்களோ, அவர்களுக்கு கல்வி வாய்ப்புக்கள் பரவலாக கிடைப்பதற்கு திராவிட ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை. ஆட்சியில் இருந்த போது இதற்கான கொள்கைகள், உரிய நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.

இதற்கான காரணம் ஆழமானது. அவர்கள் உண்மையில் தமிழகம் உள்ளிட்ட பிரதேசம் சார்ந்த முதலாளிகளின் நலன்களை காப்பதில்தான் உறுதிபட இயங்கினர். முதலாளித்துவம் என்றுமே கல்வியை பரவலாக்குவதனை விரும்பாது. தனது தேவைக்கு உட்பட்டு மட்டுமே கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தும். மத்தியில் அன்றைய காங்கிரஸ் அரசும் இதே பாதையில் சென்றது. அதற்கேற்ப மாநிலத்தில் திராவிடக் கட்சிகளின் அரசின் கல்விக் கொள்கை அமைந்திருந்தது. தமிழகத்தில் கூட இடதுசாரிகளும் முற்போக் காளர்களும்தான் எழுத்தறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர். 1991-ஆம் ஆண்டுகளில் மக்கள் இயக்கமாக நடைபெற்ற அறிவொளி இயக்கம் கிராமம் கிராமமாக எழுத்தறிவைப் பரப்பி வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனை முற்போக்காளர்களும் இடதுசாரிகளுமே முன்னின்று நடத்தினர். இதனால் எழுத்தறிவுப் பெற்றோர் எண்ணிக்கை உயர்ந்தது மட்டுமல்லாது பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் எண்ணிக்கையும் அதிகரித்தது. அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு அனுப்பும் விழிப்புணர்வை குடும்பங்களில் நேரடியாக பிரச்சாரம் செய்து வெற்றி கண்ட இயக்கம், அறிவொளி இயக்கம். ஆட்சி அதிகாரம் கையில் இருந்த போதும், திராவிடக் காட்சிகள் இந்தக் கடமையை அக்கறையோடு மேற்கொள்ளவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம், அவர்கள் அரசியலுக்காக மக்களைத் திரட்டுவதற்கு ஒரு வழிமுறையாகவே மொழிப்பிரச்னையை பயன்படுத்திக் கொண்டனர்.

எந்த மொழித் திணிப்பும் கூடாது என்பதோடு நீதி, நிர்வாக மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை முழுமையாக மக்கள் அறிந்து, அவற்றில் அவர்கள் பங்கேற்கும் வகையில் தாய்மொழி பயன்பாடு அனைத்திலும் இருக்க வேண்டும். சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இசைந்தவாறு மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும். திராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும்.

Related Posts