இதழ்கள் இளைஞர் முழக்கம்

மக்கள் ஒற்றுமை கொண்டு முறியடிப்போம் – கே.எஸ்.கனகராஜ்

img-20160924-wa0008

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரம் கோவை கடந்த செப்டம்பர் 21 தேதி அன்று இரவு வழக்கம் போல அமைதியோடு உறங்கச் சென்றது. தொழிற்சாலைகளின் இரவுப்பணி பிரிவுகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. செப்டம்பர் 22 அதிகாலை பதட்டத்தோடு விடிந்தது. பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளின் மீது கல்வீச்சு, திறந்திருந்த கடைகளின் மீது தாக்குதல், மிரட்டல் என அதிகாலையிலேயே ஒருவித பதட்டச்சூழல் எங்கும் படர்ந்தது. வேலைக்கும் பள்ளிக் கல்லூரிகளுக்கும் செல்வோர் இந்த கலவர சூழல் கண்டு திகைத்தனர். தாமதமாகக்தான் தெரிந்தது முந்தைய நாள் இரவு இந்து முன்னணி அமைப்பின் மாநகர மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது தகவல் பரவ துவங்கியதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கொலையாளிகள் யாரென்பதும், கொலைக்கான காரணம் என்ன? என்பதும் இந்த கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் நிமிடம்வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாலையிலேயே மூன்று மசூதிகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சசிக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த கோவை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முன்பு இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலையிலிருந்தே குவியத் துவங்கினர். அவர்கள் வரும் வழியிலிருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திக் கொண்டே மருத்துவமனை நோக்கி வந்தனர். மருத்துவ மனைக்கு அருகேயுள்ள பகுதியான டவுன் ஹாலில் காலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதற்கெல்லாம் முன்பாக அதிகாலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர் “எங்கள் தொண்டர்கள் கோவையை குஜராத் ஆக மாற்றுவார்கள்” என்று பேட்டி கொடுத்து உசுப்பேற்றிவிட்டார்.

மருத்துவமனையில் கூட்டம், சேரச் சேர வெறிபிடித்த முழக்கங்கள் அதிகரித்தன. ஒரு கூட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். டவுன்ஹால் அருகே இஸ்லாமியர்கள் குவியலாக வாழும் கோட்டைமேடு பகுதிக்குள் நுழையச் சென்றது அக்கூட்டம். இஸ்லாமியரை கண்டித்து வெறிபிடித்த, ஆபாசம் மிகுந்த கோஷங்களை எழுப்பியவாறு அப்பகுதிக்குள் நுழைய முயன்றது. அப்பகுதி இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு அதை முறியடித்தனர். நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் பின்வாங்கிய கூட்டம் டவுன்ஹால் பகுதியிலிருந்து சிறுகடைகளை அடித்து நொறுக்கியது. வாகனங்களை உடைத்தது. அப்பகுதியிலிருந்த கிறித்துவ மிஷனரி நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிமீது கல்வீசி தாக்கியது.

இத்தனை வன்முறை செயல்களையும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சில இடங்களில் வன்முறையாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. காலை 11.40 மணிக்கு மருத்துவ உடற்கூராய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது துவங்கிய இறுதி ஊர்வலம் மாலை 5.40 மணிக்குத்தான் நிறைவடைந்தது. 18 கி.மீட்டர் தூரம் இறுதி ஊர்வலம் நடந்தது. இடையில் இரண்டு இடங்களில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏற்கனவே கோவையில் பதட்டமான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள ரத்தினபுரியிலுள்ள சசிக்குமாரது தாயார் வீட்டிலும் பின் சுப்பிரமணியம்பாளையத்திலுள்ள அவரது வீட்டிலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலம் செல்லும் வழியெங்கும் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 3000 பேர் வரை கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக அனுமதிக்கப்பட்டது. காந்திபுரம் கிராஸ்கட் காலையிலிருந்த ஒரு கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. பல கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன. அண்ணா புதுலைன் பகுதியில் வாலிபர் சங்கத்தின் பெயர்பலகை, கொடிமரம் அடித்து நொறுக்கப்பட்டது. இத்தனையும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே நிகழ்த்தப்பட்டது.

நிற்க.. இதே காவல்துறை உடுமலையில் சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டபோது எப்படி நடந்து கொண்டது? அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்து உடலை அவரது தந்தைக்குக் கூட முறையான தகவல் அளிக்காமல், உடுமலை எடுத்துச் சென்றது காவல்துறை அங்கு சங்கர் வீட்டிற்குகூட எடுத்துச் செல்லாமல் நேராக மயானத்திற்கு கொண்டு சென்றது. அதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தது. காவல்துறையே அடக்கம் செய்தது. ஏன் இந்த பாரபட்சம் என்று காவல்துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும்.

சசிக்குமார் உடல் அடக்கம் நடந்த துடியலூர் பகுதியில் வன்முறை வெறியாட்டம் உச்சகட்டம் அடைந்தது. அங்கு 19hqdefault கடைகள் சூறையாடப்பட்டன. குறிப்பாக சமூக வலைத்தளத்தில் காணொலி காட்சியோடு பரவிய சிம்ஸ் மொபைல் ஷாப்பில் மட்டும் 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை  மொபைல்ஸ் கடையில் 30 லட்சம் மதிப்பிலான ஃபேன்சி பொருட்கள், செருப்புக்கடைகள், பேக்கரி, பழக்கடைகள், இரண்டு பிரியாணிக் கடைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. காவல்துறை வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

கலவரத்தடுப்பு காவல்துறை, அதிரடிப்படை, சிறப்பு அதிரடிப்படை என அத்துனை பிரிவும் கோவையில் இருந்தும் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்று மாலையே அனைத்து கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை, காவல்துறை ஆணையரை சந்தித்து கோவையில் அமைதியும் சமூக நல்லிணக்கமும் ஏற்படுத்தவேண்டி முறையிட்டனர். மறுநாள் அனைத்து கட்சிகள் சமூக நல அமைப்புகள் சார்பில் சமூக நல்லிணக்க உறுதிமொழியேற்பும், ஆர்ப்பாட்டமும் காவல்துறை தடையை மீறி நடைபெற்றது.

துடியலூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர் குடியிருப்பை வாலிபர் சங்கத்தினர் (DYFI) க்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து, அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வாலிபர் சங்கத்தின் (DYFI) நடவடிக்கை அப்பகுதிமக்களுக்கும், வணிகர்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.

திட்டமிட்டு நடைபெற்ற தாக்குதல், சமூக பதட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், இருபகுதி மக்களும் நடந்த காலங்களைப் போல மதவெறிக்கு இரையாகாமல், மக்கள் ஒற்றுமையை உயர்த்தி பிடித்துள்ளனர். ஜனநாயக அமைப்புகளின் உடனடி தலையீடும் இதற்கு காரணம். மதவெறியர்களை மக்கள் ஒற்றுமை என்ற ஆயுதம் கொண்டே முறியடிக்க வேண்டியுள்ளது.

Related Posts