இதழ்கள் இளைஞர் முழக்கம்

மக்களிடமிருந்து…. மன்னர்களுக்கு….. செ. முத்துக்குமாரசாமி

southlive-english_2016-11_e60a58f1-aa01-4776-bca2-61320340a361_gg

நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கிறது. பிரதமரின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனும் அறிவிப்பும், அதைத் தொடர்ந்த குரூரமான கோமாளிக் கூத்துக்களும். சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகக்குள்ளாகியுள்ளனர். பிரதமர் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று மார் தட்டுகிறார். ஏடிஎம் மற்றும் வங்கிகளின் வாசலில் நிற்பவர்களிடம் தேசபக்தி பேசப்படுகிறது. பிரதமரின் இந்த அறிவிப்புகளும், அதை தொடர்ந்த நடவடிக்கைகளும் நம்முன் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதற்கான பதில்களை பிரதமரிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர் நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்வதில்லை.

இருப்பினும் நமது கேள்விகளும் அதற்கான பதில்களும் மக்கள் மத்தியில் உள்ள கோபத்தை ஆவேசமாக மாற்ற முயலட்டும். பணமதிப்பை நீக்கம் செய்யும் இந்த துல்லிய தாக்குதல் யாருக்காக? பணமதிப்பை நீக்கம் செய்யும் அறிவிப்பு வெளியான நவம்பர் 8 அன்று ரிசர்வ் வங்கியில் இருந்த கையிருப்பு தொகை 4.70 லட்சம் கோடி ரூபாய். நவம்பர் 28 வரை வங்கியில் மக்களால் செலுத்தப்பட்ட தொகை 8.5 லட்சம் கோடி என அரசு அறிவித்துள்ளது. ஆக 13 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் தற்போது வங்கிகள் வசம் உள்ளது. மத்திய அரசே மாநிலங்களவையில் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 500 மற்றும் 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. அப்படியெனில் மேற்கொண்டு வர வேண்டியது 2.5 லட்சம் கோடி ஆகும். காலக்கெடு முடிய இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் வந்து விடும் என எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கருத்து தெரிவிக்கிறார். இதுதான் நிலைமை எனில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடி மட்டுமே மிஞ்சப்போகிறது. கிட்டத்தட்ட எல்லாப்பணமும் வந்துவிட்டால் கறுப்புப்பணம் எங்கே போனது? அரசின் அறிவிப்புகள் தடுமாற்றங்களாக வந்து கொண்டிருப்பதன் பின்னணி இதுதான்.

கறுப்பு பணம், கறுப்பு நிதி, கறுப்பு வருமானம் என மூன்று வெவ்வேறான நடவடிக்கைகளில் உள்ளது. அரசுக்கு வருவாயை மறைத்து ஈட்டப்படும் வருமானத்தில் ஒரு பகுதியை செலவழிக்கிறார்கள். இன்னொரு பகுதியை பலவிதமான சொத்துக்களாக நகை, நிலம், பங்கு சந்தை என முதலீடு செய்யப்படுகிறது. ரொக்கமாக இருப்பது மிகச்சிறு பகுதியே. இது மாதிரியான கறுப்பு பொருளாதாரம் என்பது மொத்த உற்பத்தியில் 62 சதமாகும். இந்த ஆண்டின் மொத்த தொழில் உற்பத்தி 150 லட்சம் கோடி. இதில் 93 லட்சம் கோடி கறுப்பு வருமானம். கறுப்பு நிதி என்பது இதை விட 3 மடங்காக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட 300 லட்சம் கோடி. இதில் மிகச்சிறு பகுதியாக, அதாவது 1 லட்சம் கோடி ரொக்கமாக இருக்கும். மேலும் இதைத் தடுக்க தேவை அரசின் உறுதியான கொள்கையும் அரசியல் உறுதியும். அனுபவிக்கப்போவது யாரு?

வங்கிகளில் ரொக்க இருப்பு விகிதம் (கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி) அதிகரித்திருப்பது வங்கிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வங்கிகள் கட்டாயமாக கடன் கொடுக்க வேண்டிய நிலைமையை உருவாக்கியுள்ளது. வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும் என்பது தெரிந்த விசயமே. விவசாயம் சார்ந்த, சிறுதொழில்களுக்கு கடன் கொடுக்கும் அளவு குறைந்துவரும் நிலையில், இதுவரை 16.50 லட்சம் கோடிகளை இந்திய பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளது இந்திய வங்கித்துறை. எனவே வங்கிகளின் மீது இப்போது சுமத்தப்பட்டுள்ள ரொக்க இருப்பு நெருக்கடி மீண்டும் பெரும் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில்தான் முடியும். அதில் 8.5 லட்சம் கோடி இதுவரை வராத கடன் பட்டியலில் உள்ளது. மேலும் வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை துவக்க சரியான நேரமான மத்திய அரசு இத்தருணத்தை பார்க்கிறது.

எந்த வகையிலும் பிரதமர் மோடியின் இந்த முடிவு நாட்டு மக்களையும், நாட்டின் பொதுத்துறை வங்கிகளையும் சீரழிக்கும் முடிவாகவே அமையும். அரசின் முடிவுகளில் அது விரும்புகிறவர்களின் நலன் ஒளிந்திருக்கும் எனும் விதியின் அடிப்படையில் இந்த முடிவும் பெரும் முதலாளிகளின் நலன்களையே மையப்படுத்தும். மோடி எனும் முகமூடி அணிந்து தேசீயம் பேசி மக்களின் பணத்தை மன்னர்கள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையே இது. இதற்கு எதிரான போராட்டக்களத்தில் மக்களை இணைத்து நாமும் இணைவது அவசர அவசியம்.

Related Posts