சினிமா தமிழ் சினிமா

மகளிர் மட்டும் – ஆண்களின் மனசாட்சியை உறுத்தும் படம் . . . . . !

பெண்களுக்கான படம் என்பதை அறித்து கொளத்தூர் பகுதியிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாதர்சங்க பெண் தோழர்களுடன்  சேர்ந்து இப்படத்தை பார்த்தேன். என் வாழ்நாளில் படத்திற்காக இவ்வளவு பெண்கள் ஒன்றுகூடி பார்த்த முதல் படம் இதுதான்.

காலம் காலமாக நம் சமூகத்தில் எந்த சூழலும் பெண்களுக்கு தொடர்ந்து கொடுமைகள் நடந்துக் கொண்டுதான் வருகிறது. இதில் குடும்பங்களில் நடக்கும் கொடுமைகளை ஆணுக்கு உணர்த்த எடுக்கப்பட்ட படமாக மகளிர் மட்டும் உள்ளது.

அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் சொல்லி இருந்தாலும் இந்த சமத்துவத்தை எங்காவது குடும்பங்களில் பார்க்க முடிகிறதா? அப்படியே சரி சமம் மரியாதைக் கொடுக்கும் குடும்பத் தலைவர்களை சமுகம் என்ன சொல்கிறது? கூஜா, பெண்டாட்டி தாசன் போன்ற வசையாடல்கள்தான். தன்னை முற்போக்காளன் என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களிளெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரும் தனது குடும்பத்தில் சரிசம வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கீறார்களா என்பதுதான் பெரிய கேள்வியாகயுள்ளது.

மகளிர்மட்டும் கதாநாயகி ஜோதிகா விசாலமான பார்வை கொண்ட ஆவணப்பட இயக்குநர். பெரும்பாலும் பெண்களிடம் நீ என்ன பண்ணுறீங்க என்று கேட்டால் சும்மாதான் இருக்கேன்னு சொல்லுவாங்க. அதிலிருந்து முரண்பட்டு தனது தினதொறும் வேலையை பட்டியலிட்டு சொல்லி முடிந்ததை கேட்டு அதிர்ந்து போகிறாள். உடனே அவளுக்கு தனது மாமியார் ஊர்வசியை நினைத்து பார்க்கிறாள்.

ஊர்வசியின் சந்தோஷம் என்பது அவரது விடுதி வாழ்க்கைதான் என்றும் அவரது தோழிகளான பானுப்ரியா, சரண்யா இவர்களோடு  கழித்த நாட்களே. 1970-களில் வெளியான ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்ப்பதற்காக விடுதி மதில் சுவரை தாண்டி  சினிமா பார்க்க செல்லும்போது விடுதி நிர்வாகியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு விடுதியைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

அக்காலத்திலேயே 3 பேரும் காதலித்து திருமணம் செய்வது என்று நினைத்திருப்பது சிறப்பு. இதில் சரண்யா தன்னை ஏமாற்றிய ஆணை அடித்துவிட்டு வெளியேறுவது அருமை. கௌசல்யா, சங்கர் நிலை பானுப்ரியா காதலனுக்கு ஏற்படுவது என்பது எத்தனை வருடம் கடந்தாலும் சாதி வெறியை நாம் வாழும் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ என்ற தோன்றுகிறது.

இயற்கை பேரிடர்களுக்கு உதவி, முகம் தெரியாத பல நல்ல நண்பர்கள், ஒத்த கருத்துள்ள பலரை ஒன்றிணைப்பது, எதிர் கருத்து உள்ளவர்களையும் நட்பாக பார்ப்பது போன்ற செயல்களை முகநூல்கள் செய்திருப்பதை பார்க்கிறோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்துபோன நண்பர்களை ஒன்றிணைக்கும் கருவியாக முகநூலை காட்டி இருப்பது சிறப்பு.

நீ குடிக்குறநான் என்ன செய்யணும்? கல்யாணமே ஒரு மாயாஜால ஜெயில், பொம்பளை இருக்கிற வீட்ல சாப்பாட்டுல முடி விழத்தான் செய்யும், கழுத்து நிறைய நகைகளோடு நடுராத்தியில் தனியாக நடந்து வருவது மட்டுமே அல்ல பெண் சுதந்திரம், மனதுக்குப் பிடித்தவனை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதும்தான். நாம பந்து தூக்கிப்போட மட்டும்தான், சமயத்துல நம்ம ஆட்டத்தை வேற ஒருத்தர் கூட ஆடறாங்க 38 வயசுக்குள்ள 14 குழந்தை பெத்து, செத்துப் போன மும்தாஜோட கல்லறை தானே இந்த தாஜ்மஹால்? நான்தான் இங்கே மூத்த வேலைக்காரி உட்பட பல வசனங்களுக்கு பெண்கள் கை தட்டலை பார்க்கும்போது, இது திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் படத்தில் உள்ள காட்சிகளில் அவர்களின் ஏதார்த்த வாழ்க்கையோடு பயணித்திருப்பார்கள். அந்த வகையில் நானும் பயணம் செய்திருப்பதாக உணர்கிறேன்.

என்னோடு படித்த பள்ளி 13 தோழிகளை தேடிச் சென்று பார்த்தேன். இதில் ஒருத்திதான் செல்வா. பள்ளிக்கு 2 ஆசிரியர் வந்துபோன பிறகு வரும் இடைவேளியில்தான் எப்போதும் வருவாள். ஆனால் எங்கள் பள்ளியில் அவள்தான் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி. எனக்கு ஒரே நாளில் விடிய விடிய Record எழுதி தருபவளும் அவளே.

ஆனால், அவளோ….

சென்னை வாழ்க்கையை கடந்து உடுமலை தாண்டி குக்கிராமத்தில் ஒரு குடிசை வீட்டுக்கு முன் சாணி தெளித்துக்கொண்டிருந்தாள். பல ஆண்டுகள் கடந்து என் உயிர் தோழியை இப்படி பார்த்தது வருத்தம் அடைந்தேன். பள்ளி நாட்களில் நன்றாக படிக்கும் மாணவர்களை பார்க்கும்போது வருங்காலத்தில் இவர்கள் பெரிய ஆளாக வருவார்கள் என்று தான் நம் நினைப்போது. ஆனால் குடும்ப சூழல் அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. மேலும் தனக்கு கிடைத்த வாழ்க்கை நிறைவானது என்றும் நம்ப தொடங்கிவிட்டாள். அதுமட்டுமல்லாமல் என் நினைவாக அவள் குழந்தைக்கு என் பெயர் வைத்து என்னை ஆச்சிரியப்படுத்திவிட்டாள்.

பள்ளி பருவத்தில் சுவருக்கு வெளியே பையை விசிறி அடித்துவிட்டு அப்பாவி பெண் போல வெளியில் வந்து பை எடுத்துச் சென்ற ஓடி சென்றது. கால் கொலுசை அடகு வைத்து சினிமா பார்த்தது போன்ற நினைவுகள் எல்லாம் கடந்துதான் போகிறது. அதேபோல பெண்கள் மட்டும் பயணம் செய்தால் ஏற்படும் அனுபவத்தை முழுமையாக தொடர்ந்து அனுபவித்து வருபவள் நான். இன்றும் பல பெண் தோழிகள் என் Bike பின் அமர்ந்து சென்னையை சுற்றி வர நினைப்பதுண்டு.

இப்படத்தில் 1970களில் வெளியான அவள் அப்படிதான் படத்தை பார்க்க நினைக்கும் தோழிகள் 38 வருடம் கழித்து சந்திப்பு, பயணம் என தொடங்கி தனது கனவை முடித்துக் கொண்டு இந்த சந்தோஷத்தின் மூலம் தனது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் வாழவும் தொடங்குகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி கதையை முடித்திருப்பார் இயக்குநர் பிரம்மா.

ஜோதிகா நடிப்பு படத்தில் செயற்கையாக இருந்தாலும் ஊர்வசியின் இயல்பான நடிப்பு படத்திற்கு அழகு.

பெண்களை காலம்காலமாக ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் என்று நம்ப வைத்ததால், அவர்களுடைய சுயம் என்ன என்பது அவர்களுக்கு அறியாமல் போயிவிட்டது. இப்போதும் வீட்டைவிட்டு தனியே தனது பெண் தோழிகளுடன் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருந்தும் பல பெண்கள் பெற்றோரிடம் கேட்க தயங்கியும் பயந்தும் பல கனவுகளை புதைத்து வளர்கின்றனர்.

மகளிர் மட்டும்ஒவ்வொரு ஆணும் கட்டாயம்  பார்க்க வேண்டிய திரைப்படம். சிறப்பான படத்தை எடுத்த இயக்குநர் பிரம்மா மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள்

 

– ஹேமாவதி.

 

Related Posts