இதழ்கள் இளைஞர் முழக்கம்

போதைக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம் – சி.பாலசந்திரபோஸ்

1999- ஜூன் 26 அன்று கள்ளச்சாராயத்தை எதிர்த்து மூன்று வருடங்களாக போராடி வந்த வாலிபர் சங்கத்தின் கடலூர் புதுப்பாளையம் பகுதியின் மாணிக்கங்களான தோழர்கள் குமாரும், ஆனந்தனும் கள்ளச்சாராய சமூக விரோதிகளான சக்திவேல், நாகராஜன் உள்ளிட்ட 46 ரவுடிகளால் வெட்டி வீழ்த்தப் பட்டனர். இதில் உடல் முழுவதும் 26 இடங்களில் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆனந்தன் மாண்டுபோனார். உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் உயிர் துடித்துக் கொண்டிருந்த குமாரை அப்பகுதி மக்களும் வாலிபர் சங்கத் தோழர்களும் அருகாமையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். சில நொடிகளிலே குமாரும் இறந்து போகிறார். 1999-ஜூன் 25 அன்று தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி சட்டப் பேரவையில் இனி கள்ளச்சாராய பானைகள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாயும் என வசனம் பேசிய மறுநாள் இத்தகைய சம்பவம் அரங்கேறியது. யார் இந்த குமாரும், ஆனந்தும்….

09.05.1974 ல் பிறந்த தோழர் குமார் ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு தம்பிகள், அவரது குடும்பம் பன்றிகள் மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தது. குமார் ஒரு பி.எஸ்.சி பட்டதாரி. தனது தம்பிகளின் கல்விக்காக தினமும் செய்தித்தாள் போட்டு படிக்க வைத்தவர். 07.07.1977 இல் பிறந்த ஆனந்தன் குடும்பத்தின் நான்காவது வாரிசு ஆவார். சிறுவயதிலேயே தந்தை இறந்து விட்டதால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் பள்ளிப் பருவத்தில் வேலைக்கு போக நேரிட்டது. இரு குடும்பங்களும் கடலூர் அருகே உள்ள புதுப்பாளையம், சுப்ரமணிய கோவில் பகுதியில் வசித்து வந்தன. இத்தகைய சூழலில் குமாரும், ஆனந்தனும் நண்பர்களாகின்றனர். 1994-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பரின் நட்பு கிடைக்கப்பெற்று, அவரோடு சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் பங்கேற்கின்றனர். முஸ்லீம் எதிர்ப்பு வெறியூட்டி வளர்க்கப் படுகிறது. பயிற்சி முடிந்து ஊருக்குள் வந்த இளைஞர்கள் அங்கிருந்த ஒரு மூஸ்லீம் வீட்டையும் சில கடைகளையும் அடித்து நொறுக்குகின்றனர். காரணம் கேட்டதற்கு இவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்கள் என்று பதில் அளித்துள்ளனர். இப்படி மதவெறி இயக்கத்தில் செயல்பட்டவர்கள் தான் பிற்காலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து மக்கள் கொண்டாடும் தலைவர்களாக உயர்ந்தனர். இதே கால கட்டத்தில் தான் தாமோதரன் வேலை செய்த நிறுவனத்தில் தொழிலாளர்கள் மூலமாக இந்திய தொழிற்சங்க மையத்தில் இணைகிறார். 1996-ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தில் இணைத்துக் கொள்கிறார்.

இத்தகைய சூழலில் தான் சுப்ரமணிய கோவில் தெருவில் வான்மயில் நற்பணி மன்றம் மூன்று தலைமுறையாக இயங்கி வருகிறது. அதில் குமார் தலைவராக இருந்தார். ஏற்கனவே பல சேவைகளை செய்த நற்பணி மன்றத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பணிகளை கவனித்த குமாரும், ஆனந்தனும் 1997 இல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகின்றனர். 1998 இல் வாலிபர் சங்கக் கிளையில் இணைகின்றனர். குமார் கிளையின் தலைவர் பொறுப்புக்கு உயர்கிறார். அன்றிலிருந்து கள்ளச்சாரயத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள், கமியங்கோட்டை ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் கேட்டு, குண்டு உப்பளவாடி சாலை வசதி கேட்டு, புதுப்பாளையம் பள்ளியை சீரமைக்க இப்படி எண்ணற்ற போரட்டங்களில் தோழர்கள். குமாரும், ஆனந்தனும் தாமோதரன், கனகராஜ், ரமேஷ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு கள்ளச்சாரய கும்பலுக்கு எதிரான தொடர் போராட்டத்தின் விளைவாக அடிக்கடி போலீஸ் ரைடும் அதன் மூலம் மாமூலும் அதிகம் கொடுக்க வேண்டி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சமூக விரோதிகள் சக்திவேல், நாகராஜ் கூட்டம் 1998 ஆகஸ்ட் ஏழாம் தேதி தோழர் கனகராiஜை பட்டப்பகலில் மார்க்கெட்டில் வைத்து வெட்டினர். தோழர் பிழைத்துக் கொண்டார். போரட்டம் தீவிரம் அடைகிறது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் களத்திற்கு வந்து கள்ளச்சாரயக் கும்பலை முழுமையாக காலி செய்ய வைக்கிறார். இந்த வெறிக்கூட்டம் 1999 ஜூன் 26 அன்று தோழர்கள் தாமோதரன், கனகராஜ், குமார், ஆனந்தன், ரமேஷ் ஆகிய 5 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. அதில் தோழர்கள் குமாரும், ஆனந்தனும் படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தகைய நீண்ட நெடிய பாரம்பரியமும் வாலிபர் சங்கத்தின் நீடித்த தொடர் போராட்டமும் தான் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வகைசெய்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பூட்டிய 1200 க்கும் மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க நீதி மன்றத்தின் வாசலில் நிற்கிறது தமிழகத்தின் அரசு. 2011 இல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது என 2016 இல் தமிழக அரசின் தலைமை வருவாய் செயலாளராக உள்ள பி.ஆர் பாலகிருட்டினன் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில் கைது செய்யப்பட்ட மாதவராஜ் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் 40 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கூறுகிறார். நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கோவையில் செயல்பட்டு வந்த குட்கா ஆலை சீல் வைப்பு, 5 பேர் கைது, பல கோடி மதிப்புள்ள குட்கா கைப்பற்றியுள்ளனர்.

நெல்லையில் தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வருவதால் கல்வி பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்ட தினேஸ். எனது இறப்பிற்கு பின்பாவது தமிழக அரசு டாஸ்மாக் கடையை மூட வேண்டும்இல்லையெனில் ஆவியாக வந்து துன்புறுத்துவேன் என கடிதம் எழுதிவைத்து விட்டு செத்துப்போயிருக்கிறான். இவைகள் உணர்த்துகின்ற செய்தி போதைக்கு எதிரான வலுவான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். அதுதான் கடலூர் குமார், ஆனந்தனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

Related Posts