இதழ்கள் இளைஞர் முழக்கம்

பொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்

இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்குமான தேசிய தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் பல்கலைக்கழகம் என அனைத்து வகையான கல்விநிலையங்களுக்கும் மதிப்பெண்கள் மற்றும் தர நிர்ணயம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தர வரிசைக்கு விண்ணப்பித்த கல்லூரிகளின் பட்டியல் மற்றும் அதன் மதிப்பெண் விபரங்களைகூகுளில் தேடினால் மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் 563 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 164 கல்லூரிகள் மட்டுமே (சுமார் 29 சதவீதம்) இந்த தரவரிசைக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதாவது, தமிழகத்தில் உள்ள 71 சதமான பொறியியல் கல்லூரிகள் தரமில்லாதவையாக அல்லது தரவரிசைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவையாக இருக்கிறது என்பதே நிதர்சன உண்மை. தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தேசிய அளவிலான 100 சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலின்படி, தமிழகத்தில் பொறியியல் படிக்க தகுதி வாய்ந்த கல்லூரிகள் 22 மட்டுமே. இந்த 22 கல்லூரிகளில் இடம் கிடைக்காத போதும், தங்களது குழந்தைகளை எப்படியாவது பொறியியல் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிற பெற்றோர்கள், தரவரிசைக்கு விண்ணப்பித்திருந்த 164 கல்லூரிகளில் இருந்து தங்களுக்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது ஒரளவிற்கு பயன்தரும்.

கல்லூரியின் தரத்தை அறிந்து கொள்ள, தரவரிசைக்கான அளவீடு வழிமுறையை அறிவது பயன்தரும். தரவரிசைப் பட்டியல் ஐந்து வகையான அளவீடு வழிமுறைகளை கொண்டுள்ளது.

1. கற்றல், கற்பித்தல், வளம்:

ஆசிரியர் மாணவர் விகிதம், முனைவர்பட்டம் பெற்ற ஆசிரியர்கள், ஆய்வகம் மற்றும் நூலக வசதி, விளையாட்டு பாடத்திட்டம் அல்லாத மாணவர்களின் ஆளுமை வளர்க்க பயன்படும் கூடுதல் செயல்பாட்டிற்கான வசதிகள்.

2. ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி, கூட்டு செயல்திறன் :

ஆசிரியர் – மாணவர் ஆராய்ச்சி முடிவுகளை விளக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை, அந்த கட்டுரை வெளியிட்ட இதழ்களின் தரம், காப்புரிமை பெறுவதற்கான ஆராய்ச்சி, அதற்கான முயற்சி, அரசு மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து ஆராய்ச்சிக்காக நிதி பெறுதல்.

3. பயின்ற படிப்பின் பயன்கள்:

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவிலான மாணவர்களின் தேர்ச்சி, பயிற்சிபெரும் பாடங்களை உள்ளடக்கிய மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்கள், அரசுபணி மேல்படிப்பிற்கானநுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வேலை வாய்ப்பு மற்றும் மாணவர்களின் சுயதொழில் முயல்திறன் – மாணவர்களின் சராசரி ஊதியம்.

4. வெளித்தொடர்புகள் மற்றும் பல தரப்பட்டவர்களை உள்ளடக்குவதற்கான முயற்சி:

இதர கல்லூரியின் மாணவர்களை – ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தும் வகையிலான கருத்தரங்குகள், கல்விசார் மாநாடுகள், பயிற்சிபட்டறைகள், தொழிற்சாலை தொழில் வல்லுநர்களுடனான தொடர்பு, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் பங்கேற்பு, மாணவிகளின் எண்ணிக்கை, பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விபெறும் வாய்ப்பு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயில வசதிகள்.

5. சமூகப்பார்வையிலான மதிப்பீடு:

கல்வியாளர்கள் மற்றும் சிறந்த ஆளுமைகளின் பார்வையில் கல்லூரியின் மதிப்பீடு, சிறந்த ஆளுமைகளை உருவாக்கியதில் கல்லூரியின் பங்கு என மேற்கண்ட ஐந்து வகையான வழிமுறைகளை கொண்டு கல்லூரியின் தரம் அளவிடப்படுகிறது. இந்த வழிமுறைகளில் நாம் சேர விரும்பும் கல்லூரியின் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பித்த கல்லூரியின் அறிக்கையை நாம் இணையத்தில் பெறமுடியும்.

தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர நினைக்கும் பெற்றோர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரி இந்த தரநிர்ணயத்திற்கு விண்ணப்பித்திருந்ததா? அதன் மதிப்பெண் என்ன? என்பதை அந்த கல்லூரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேவேலையில், தமிழகத்தில ஒரு பொறியாளனாக உருவாக நாம் செலவு செய்யும் அதே தொகையில் ஐரோப்பிய நாடுகளில் மிகத் தரமான பட்டத்தை பெற்றிட முடியும் என்பதை அறிந்திட வேண்டும். இது குறித்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளே. காரணம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் இணையான கல்வி அங்குதான் கற்பிக்கப்படுகிறது. அத்தகைய கல்வியை இந்தியாவில் பெற வேண்டுமென்றால் வெற்று கோஷம் மட்டும் பத்தாது. அதை சாத்தியப்படுத்தும் எதிர்கால தொழில் வல்லுநர்களை உருவாக்கும் தரமான, விஞ்ஞான பூர்வமான கல்வி வேண்டும்.

இப்போது தர வரிசைப்படுத்தியுள்ள எந்த கல்லூரியிலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப பொறியாளர்களை உருவாக்கும் திறன் இல்லை. அதனை சாத்தியப்படுத்த இன்னும் பத்து மடங்கு கல்விக்கான நிதி வேண்டும். அறிவியல்பூர்வமான அணுகுமுறை கொண்ட அரசு கல்விகொள்கை வேண்டும்.

Related Posts