சித்திரங்கள்

பொருளியல் அரங்கம்!

நாலு பேர்

கடைசியில் தூக்குவதற்கு நாலு பேர் வேண்டும் என்பார்கள். ஆனால் வங்கித் துறையைப் பொருத்தவரையில் நாலு பேர் பொதுத்துறை வங்கிகளின் உயிரை வாங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. கடந்த மார்ச் கணக்குப் படி வங்கித் துறையின் வராக்கடன் ரூ. 1,64,461 கோடிகள். 2007-2013 க்கு இடைப்பட்ட காலத்தில் வராக் கடன்கள் ரூ.5 லட்சம் கோடிகள் அதிகரித்துள்ளன. இதுவெல்லாம் சாதாரண மக்கள் திரும்பக் கட்டாத கடன்கள் அல்ல. நான்கே நான்கு கடன்காரர்கள் மட்டுமே திரும்பக் கட்டாத கடன் ரூ.22,666 கோடிகள் என்றால் பாருங்களேன்! 2007-2013 க்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.1,41,000 கோடி கடன்கள் வஜா செய்யப்பட்டுள்ளது. இது பூராவும் மிகப்பெரும் கார்ப்பரேட்டுகள், தொழிலகங்கள் கட்டாத கடன்களே.

முழுங்கிய முப்பது

இப்போது ஒவ்வோர் வங்கியிலும், ஒவ்வோர் மண்டலத்திலும் முதல் 30 வராக் கடன் கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட டாப்-30 கணக்குகள்தான் மொத்த வராக் கடன்களில் 34 சதவீதமாக உள்ளனவாம். இவை சரிசெய்யப்பட்டாலே பெருமளவுக்கு வங்கிகள் நிமிர்ந்து விடுமாம். டாப் -30 கடன்காரர்கள் எவ்வளவு விழுங்கி இருக்கிறார்கள் தெரியுமா! ஸ்டேட் வங்கி குழுமத்தின் மொத்த வராக்கடன் ரூ 71620 கோடி என்றால் அதில் “முழுங்கிய முப்பது” ரூ. 15266 கோடி. அதாவது 21 சதவீதம். மற்ற தேசியமயமான வங்கிகளின் மொத்த வராக் கடன்கள் ரூ.1,11,209 கோடிகள் எனில் அதில் ரூ 48406 கோடிகள் “முழுங்கிய முப்பதின்” கைங்கர்யம்.

ஏறுமுகம்

ஏறுமுகம் 2008 லிருந்து மொத்த கடன்களில் வராக் கடன் விகிதம் 2.3, 2.4, 2.5, 3.1, 3.4, 3.8 சதவீதம் என ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. நிதியமைச்சர் சிதம்பரம் (பிசினஸ் லைன் -அக் 22) இக்கடன்களில் பெரும்பகுதி ரூ.1 கோடிக்கு அதிகமான கடன்களே அதிகம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். வேண்டுமென்றே கட்டாதவர்கள்தான் அதிகம் என்றும் ஒத்துக் கொண்டுள்ளார். கடன் மறு சீரமைப்பு என்ற பெயரால் நிறைய வராக் கடன்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றன. வராக் கடன்களுக்கான காப்புகளும் போதுமான அளவு உருவாக்கப்படவில்லை. தற்போது இது 45 சதவீதமாக உள்ளது. உலக அளவில் இது 70 – 80 சதவீதமாக உள்ளது.

வஜா பெரிசா? வசூல் பெரிசா ?

சிதம்பரத்தின் இன்னொரு அறிவுரை அதிர்ச்சிகரமான உண்மையைச் சொல்கிறது. வஜா தொகையைக் காட்டிலும் வராக் கடன் வசூல் தொகை அதிகமாக இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்துகிறார். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி ஆகிய ஆறு வங்கிகளும் வஜா வசூலை விட அதிகமாக உள்ளது.இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான கணக்கு இது. வராக் கடன் வஜா 30.6.2013 வரை ரூ. 83000 கோடிகளாம்.

சுமை தாங்கி

பஞ்சாப் நேசனல் வங்கியின் லாபம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 53 சதவீதம் சரிந்துள்ளது. காரணம் வராக்கடன்கள் அதிகரிப்பே! இதனால் பஞ்சாப் நேசனல் வங்கியின் பங்கு விலைகள் சரிந்துள்ளன. விஜயகாந்த் வசன மொழியில் சொல்வதானால் 119 ஆண்டு வயது, 6000 கிளைகள், 5 வெளிநாட்டுக் கிளைகள், 6460 ஏ.டி.எம் கள், 2165 அல்ட்ரா மினி கிளைகள், 8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள ஒரு வங்கியின் எதிர்காலத்தை ஒரு 30 பேர் தீர்மானிக்கிறார்கள் என்றால் எவ்வளவு விபரீதம்! சுமை தாங்கிகள் சாதாரண வாடிக்கையாளர்கள்தான்!

Related Posts