இதழ்கள் இளைஞர் முழக்கம்

பொருளாதார யுத்தத்தின் பிடியில் லத்தீன் அமெரிக்கா – பேரா.பிரபாத் பட்நாயக்

பொருளாதார யுத்தத்தின் பிடியில் லத்தீன் அமெரிக்கா – பேரா.பிரபாத் பட்நாயக்

 

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் இடதுசாரிகளின் எழுச்சி சற்று பின்தங்கி இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.

2015 அக்டோபரில் கவுதமாலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி சார்புடைய வேட்பாளரான சான்ட்ரா டோரஸ், வலதுசாரி பழமைவாத வேட்பாளர் ஜிம்மி மொரேல்ஸால் தோற்கடிக்கப்பட்டார்.

நவம்பர் 22ந்தேதி அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பழமைவாத வேட்பாளரான மௌரிசியோ மேக்ரி, தனது தீவிர அரசியல் எதிரியான டேனியல் சியோலியை தோற்கடித்தார். டேனியல் சியோலி, அர்ஜெண்டினாவில் இடதுசாரி ஆதரவு ஜனாதிபதிகளாக மிக நீண்டகாலம் ஆட்சி நடத்திய நெஸ்டர் கிர்ச்னர் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கிர்ச்னர் ஆகியோரைத் தொடர்ந்து இடதுசாரி சார்புள்ள வேட்பாளராக இத்தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.

இதற்கு பின்னர் 2015 டிசம்பர் 6ம்தேதி வெனிசுலாவில் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கட்சி தோல்வியைத் தழுவியது. நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலாவின் மகத்தான போராளியாம் ஹியூகோ சாவேசைத் தொடர்ந்து பொலிவாரியப் புரட்சி ஆட்சியின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்று செயல்பட்டு வருபவர் ஆவார். 17 ஆண்டுகள் கழித்து இப்போது வெனிசுலா நாடாளுமன்றம் இடதுசாரி ஆதரவு ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து போய்விட்டது.

இதேபோல பிரேசில் நாட்டிலும், மக்களின் பேராதரவைப் பெற்ற ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஜனாதிபதி டில்மா ரூசெப், தற்சமயம் மக்கள் செல்வாக்கை படிப்படியாக இழந்து வருவதும், அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதை எதிர்கொள்ளவேண்டிய நிலைமையிலும் இருக்கிறார்.

லத்தீன் அமெரிக்காவில் ஒரு கட்டத்தில் இடதுசாரி ஆதரவு அலை மிகப் பெரிதாக  எழுந்தது என்பது உண்மைதான். ஆனால் பொலிவியா, வெனிசுலா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கும் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளுக்கும் இடையே சில பிரதான வேறுபாடுகள் இருக்கின்றன. இதில் நாம் கியூபாவை சேர்க்க வேண்டியதில்லை. கியூபா புரட்சிகரப் பாதையில் தெளிவாக முன்னேறி வருகிறது.

இதில் குறிப்பாக வெனிசுலாவில் மதுரோவின் கட்சி நாடாளுமன்றத்தை இழந்தது என்பது ஒரு முக்கிய பின்னடைவாக கருதப்படக்கூடும். எனினும் வெனிசுலாவில் மதுரோவின் கட்சியே இன்னும் பிரதான இடதுசாரி சக்தியாக தனது இடத்தை – தீர்மானிக்கும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதில் மற்றொரு உண்மையையும் நாம் பார்க்கலாம். வெனிசுலாவில் உள்ளது போன்ற மிக முக்கியமான இடதுசாரி சக்தி என்ற முறையில் புரிந்துகொண்டாலும் சரி அல்லது பொதுவாக இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளது போன்ற இடதுசாரி ஆதரவு அரசியல் அணிசேர்க்கைகள் என்று புரிந்துகொண்டாலும் சரி, மொத்தத்தில் லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் பெருவாரியான பகுதிகளில் இந்த இடதுசாரி சக்திகளே இன்னும் அதிகாரத்தை பரவலாக கையில் வைத்திருக்கின்றன.

ஆனால், இடதுசாரி எழுச்சியின் வீச்சு படிப்படியாக பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. அதுமட்டுமல்ல, மத்திய அமெரிக்காவில் பல்வேறு நாடுகளில் தீவிர வலதுசாரி அரசாங்கங்கள் ஆட்சியில் இருக்கின்றன என்ற உண்மையையும், அந்த அரசாங்கங்களும் மக்களிடையே செல்வாக்கை கடுமையாக இழந்து வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, மெக்சிகோவைச் சொல்லலாம். மெக்சிகோ போன்ற நாடுகள், மிக ஆழமான சமூக அரசியல் நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் பின்னணியில் அந்த அரசாங்கங்கள் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளன.

காரணம் என்ன?

உலக முதலாளித்துவ நெருக்கடியானது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு பேரழிவைத் தருகிற தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த தாக்கமே, இந்த நாடுகளில் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக – அவை வலதுசாரி அரசாங்கமோ அல்லது இடதுசாரி அரசாங்கமோ, கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இந்த அரசாங்கங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, முதலாளித்துவத்திற்கும் அப்பால் என்ன தீர்வு என்பதை சிந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சவால்களை முழுமையாக உணர்ந்துகொண்டு அவற்றிலிருந்து மீள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மிகப்பெரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் வலதுசாரி அரசுகள் இந்தப் பிரச்சனையை மோசமான முறையில் கையாளுகின்றன; இடதுசாரி சார்புள்ள அரசுகள் இதன் தீவிரத்தை உணர்ந்து அதற்கேற்ற தீர்வுகளை பொருத்தமான முறையில் இன்னும் செயல்படுத்த முடியவில்லை. இதுதான் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி எழுச்சியை மட்டுப்படுத்துவதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது.

கடனில் சிக்கியது எப்படி?

லத்தீன் அமெரிக்க நாடுகள் ராணுவ ஆட்சியாளர்களின் கீழ் இருந்த போது அல்லது தீவிரமான எதேச்சதிகார ஆட்சிகளின் கீழ் இருந்தபோதுதான் அங்கு நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்டன. நவீன தாராளமய கொள்கைகளின் மிகக்கடுமையான பொருளாதார விளைவுகள் அந்த நாடுகளின் மிகப்பெருவாரியான ஏழை, எளிய மக்களின் மீது திணிக்கப்பட்டன. அந்த சமயத்தில் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி எதுவும் இல்லை, என்ற போதிலும் லத்தீன் அமெரிக்க மக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுரண்டல் கட்டவிழ்த்து விடப்பட்டது. குறிப்பாக உள்ளூர் பெருமுதலாளிகள் – பெரும் பணக்காரர்கள் அந்த நாடுகளின் வளங்களையெல்லாம் ஒட்டச் சுரண்டி அமெரிக்காவுக்கு கடத்தினார்கள். பொருளாதார தாராளமயம் என்ற பெயரில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் செல்வங்களையும் ஆதார வளங்களையும் அந்த பெரும் பணக்காரர்கள் அமெரிக்க வங்கிகளில் அடகுவைத்தார்கள். இப்படித்தான் லத்தீன் அமெரிக்காவின் கடன் நெருக்கடிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் துயரம் என்னவென்றால், இந்த நாடுகள், தங்களுடைய சொந்த வளம் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதால் ஏற்பட்ட நிதி மூலதன நெருக்கடியை சமாளிப்பதற்கு அதே அமெரிக்க வங்கிகளிடமே மீண்டும் கடன் வாங்கின என்பதுதான். உண்மையில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடன்களில் 60சதவீதம் கடன், அந்த நாடுகளிலிருந்து உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்களால் வளங்கள் ஒட்டச் சுரண்டி கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்க வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்காக அதே அமெரிக்க வங்கிகளிடம் வாங்கிய கடன் தொகைதான் என்பதே இதில் இருக்கும் மிகப்பெரும் சோகம். அப்படி அமெரிக்க வங்கிகள், லத்தீன் அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதாகச் சொல்லி மீண்டும் கடன் வழங்கிய போது அவை ஏராளமான நிபந்தனைகளை விதித்தன. குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் விதமான நிபந்தனைகளை முன்வைத்தன. இப்படியாக லத்தீன் அமெரிக்காவில் நவீன தாராளமயம் என்பது மிகவும் கொடூரமான, கொலைவெறித் தன்மை கொண்ட அரசியல் எதேச்சதிகாரத்தையும் மக்கள் மீதான மிகக்கடுமையான பொருளாதாரச் சுரண்டலையும் ஒரு சேர ஏவிவிட்ட பயங்கரம் நிகழ்ந்தது.

ஆக, லத்தீன் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி சக்திகளுக்கு அந்த நாடுகளின் வரலாறு இரண்டு முக்கிய கடமைகளை முன்னிறுத்தியது; இடதுசாரி சக்திகளால் மட்டுமே அந்த இரண்டு வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற முடியும் என்று மக்கள் கருதியதன் விளைவாகவே இடதுசாரிகள் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். அதன் விளைவாகவே இடதுசாரிகளின் எழுச்சி என்பது ஒரு அலையாக எழுந்தது.

அப்படி வரலாறு முன்னிறுத்திய இரண்டு கடமைகள் என்ன? ஒன்று, உடனடியாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயகத்தை மீட்பது. மற்றொன்று நவீன தாராளமயத்தின்கீழ் ஆழ்த்தப்பட்டு துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை விடுவித்து அவர்களுக்கு ஆறுதலான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

உண்மையில் ஒவ்வொரு நாடாக, பல்வேறு குணங்கள் கொண்ட – பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்ட இடதுசாரி அரசியல் அணி சேர்க்கைகள் மக்களால் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டன; ஏனென்றால் அந்த நாடுகளின் எதேச்சதிகார ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி மரண தண்டனைகளையும் கொடிய சித்ரவதைகளையும் நீண்டகால சிறைவாசத்தையும் அனுபவித்தவர்கள்; மக்களுக்காக களத்தில் நின்றவர்கள் இடதுசாரிப் போராளிகளே என்பதால்தான். அதுமட்டுமல்ல, நவீன தாராளமயத்தை எதிர்த்தும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களே உறுதியாக போராடினார்கள் என்பதால்தான்.

இத்தகைய பின்னணியில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசியல் அணி சேர்க்கைகள், தங்களது கடமைகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டன என்று சொல்வது சற்று கடினம்தான். ஆட்சிக்கு வந்த எல்லா நாடுகளிலுமே ஜனநாயகம் முழுமையாக மீட்கப்பட்டது; கிட்டத்தட்ட லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டது; ஆனாலும் தற்போது பல நாடுகளில் இடதுசாரி சக்திகளின் தோல்வி என்பதை அந்த ஜனநாயக கட்டமைப்புகள் தற்போது தீவிரமாக வேலை செய்யத் துவங்கிவிட்டன என்பதன் அடையாளமாகவே பார்க்க வேண்டும்.

சில நாடுகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரி அரசாங்கங்கள் உண்மையில் அந்த நாடுகளின் ஜனநாயக அமைப்பு முறையை பாதுகாக்கும் உறுதிப்பாடு கொண்டவை அல்ல. ஆனால் அதே நேரத்தில் அந்த கட்டமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடனும் இல்லை. மாறாக எதிர்காலத்தில் எந்த தருணத்திலும் இடதுசாரிகள் முழுமையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடாமல் தடுக்கும் நோக்கத்துடனேயே செயல்படுகின்றன. ஜனநாயக கட்டமைப்பை தகர்க்க எந்தவொரு சிறு முயற்சி செய்தாலும் கூட அதற்கு எதிராக மக்களின் பேரெழுச்சி ஏற்படும் என்பதையும், அதை சமாளிக்க முடியாது என்பதையும் அந்த சக்திகள் உணர்ந்தே இருக்கின்றன. இப்படியாக லத்தீன் அமெரிக்காவில் மக்களின் உணர்வுகளை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் விதத்தில் வடிவமைத்ததில், உத்வேகப்படுத்தியதில் லத்தீன் அமெரிக்க இடதுசாரி சக்திகள் மிகமிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.

அதேபோல லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் ஏழைகளுக்கு நிவாரணம் அளிப்பதிலும், வளங்களை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதிலும் ஒரு சிறந்த கட்டமைப்பை இடதுசாரி சக்திகள் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பிரேசில் நாட்டில் ஜனாதிபதி லூலா ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் அரசாங்கம் பணப்பட்டுவாடா செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கவுதமாலாவிலும் அர்ஜெண்டினாவிலும் பல ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. உண்மையில் லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதுமே வரலாறு நெடுகிலும் தீவிரமான வருமான ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடிய நாடுகளாகவே இருந்துள்ளன. இந்நிலையில் இடதுசாரிகளின் எழுச்சியும் ஆட்சியும் வந்த பிறகே ஏற்றத்தாழ்வு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

பொருளாதாரமே தீர்மானிக்கிறது

எனினும், லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் பொருளாதார சாதனை என்பது உலக மூலப்பொருள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விலை ஏற்றத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. சீனாவின் பொருளாதாரம் தொடர்ச்சியான வளர்ச்சியை எட்டிய போது அந்நாட்டிற்கு பிரேசில் தனது தாது வளங்களை ஏற்றுமதி செய்தது. அதன் மூலமாக பிரேசில் தாது வளங்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. ஈக்வடார், பொலிவியா, இன்னும் சொல்லப்போனால் வெனிசுலாவும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளாக தொடர்ந்தன. அர்ஜெண்டினாவும் பாரம்பரியமாகவே ஒரு பிரதான உற்பத்திப் பொருள் ஏற்றுமதியாளராக திகழ்ந்தது.

உலக அளவில் இந்த நூற்றாண்டின் துவக்க காலக்கட்டத்தில் அனைத்து முதன்மையான உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு என்பது லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரங்களை நல்ல நிலைமையில் வைத்திருந்தது. இதில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசாங்கங்கள் செய்தது என்னவென்றால், இதுபோன்ற பிரதான பொருட்கள் ஏற்றுமதிகளால் கிடைக்கப்பெற்ற வருமானத்தை இதற்கு முன்பு பெரும் பணக்காரர்கள் கடத்திக் கொண்டுபோனது போல அனுமதிக்காமல், அந்த வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளை நோக்கி திருப்பிவிட்டன; ஏழைகளுக்கு பகிர்ந்து அளித்தன. குறுகிய காலகட்டத்திலேயே இடதுசாரி அரசாங்கங்கள் உலகளாவிய மூலப்பொருள் மற்றும் உற்பத்திப்பொருள்களின்  விலை உயர்வுகளை பயன்படுத்தி அதனால் கிடைத்த பயன்களை தங்கள் நாட்டு ஏழைகளின் நலன்களுக்காக மறு பகிர்மானம் செய்யும் அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கிவிட்டன.  இது சாதாரணமாக ஒதுக்கி தள்ளிவிடக்கூடிய ஒரு எளிய சாதனை அல்ல.

ஆனால் அதே நேரத்தில் அவர்கள், ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், எதிர்காலத்தில் விலைகள் வீழுமானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொண்டு, தங்களது மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கான பொருத்தமான வழிகளில் எந்தவொரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தையும் செய்யவில்லை என்பதுதான் பிரச்சனை.

சரிவில் சிக்கிய சாதனைகள்…

ஒரு கட்டத்தில் எண்ணெய் விலைகள் மிக வேகமாக சரியத் துவங்கின. சீனாவில் வளர்ச்சி தீவிரமாக தொடர்ந்த போது அதிகரித்த பிரதான பொருட்களின் விலைகள், அதன்விளைவாக சொத்துக்களின் மதிப்புகளில் ஏற்பட்ட மிகப்பெரும் உயர்வு போன்றவை, உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதிலும் ஒரு பாதுகாப்பை தந்தது; ஆனால் அந்த நெருக்கடி சீனாவிலும் இதர கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியபோது அந்த நீர்க்குமிழி உடைந்து சிதறியது; இதன் விளைவாக அனைத்து பிரதான  உற்பத்திப் பொருட்களின் விலைகளும் சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கின. இந்த சரிவே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகின. இதை எதிர்கொள்ள இடதுசாரிகளோ அல்லது வலதுசாரிகளோ – அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களால் உடனடியாக முடியவில்லை. அவர்களால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டிய, மக்களின் துயரங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலைமை அரசாங்கங்களுக்கு வந்தது. அந்த நாடுகளின் மக்கள் அரசாங்கத் திட்டங்களை அனுபவிக்கும் பயனாளிகளாக மட்டுமே மாற்றப்பட்டிருந்தார்களே தவிர, அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட்டிருக்கவில்லை. லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் அந்த பலவீனமே, நெருக்கடியை சமாளிக்கும் திறன் இல்லாமல் செய்தது.

இதுபோன்ற அரசாங்கங்கள் நலத்திட்டங்களை முன்மொழிபவர்களாக இருக்க முடியும்; ஆனால்  நலத்திட்டங்களே மட்டுமே அளிப்பவர் என்ற பெயர் மட்டுமே இடதுசாரிகளுக்கு ஒருபோதும் போதுமானதல்ல;  நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் மீதான புரிதலை மக்களுக்கு  ஏற்படுத்த வேண்டும்; நாட்டின் வரலாறு குறித்த உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்; வெறுமனே பொருளுதவி செய்வது மட்டும் போதுமானதல்ல.

ஒரு பெரிய சவால்

இன்றைக்கு புதிய சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கும் நாடுகளில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவிலும் இடதுசாரிகளுக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது; அது என்னவென்றால், இன்னும் அதிகாரத்தில் இருக்கும் நாடுகளில் இடதுசாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான். உண்மையில் உலக நிலைமை எப்படி மாறியிருக்கிறது என்பதை மக்களுக்கு விளக்குவது என்பது ஒரு அரசியல் கடமை; அதே நேரத்தில் மக்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஜனநாயக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது ஒரு முக்கிய கடமை; சில இடங்களில் ஊழல் என்பது ஒரு பெரிய புகாராக எழுந்திருக்கும் நிலையில் இடதுசாரி அரசுகள் தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொள்ள வேண்டிய பணியையும் செய்ய வேண்டி உள்ளது.

இதெல்லாம் சரி, ஆனால் பொருளாதார தளத்தில் என்ன செய்வது?

பிரதான மூலப் பொருட்களின், உற்பத்திப் பொருட்களின் விலை நிலைத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மக்களின் அடிப்படையான தேவைகளுக்கு இறக்குமதி செய்யும்போது அதற்கான நிதிச் செலவினத்திற்கு அன்னிய செலாவணி தேவைப்படுகிறது; ஆனால் அது பற்றாக்குறையாக இருக்கிறது. இது பணவீக்கத்திற்கு காரணமாகிறது; இதன் விளைவாக பண மதிப்பு வீழ்ச்சியடைகிறது; இது இன்னும் தீவிரமான பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது; இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை தீவிரமாகிறது; அதே நேரத்தில் வருமானம் குறைகிறது; இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் மீதான கிராக்கி குறைகிறது; இதன் விளைவாக பொருளாதார சரிவும் அதைத் தொடர்ந்து, பொருளாதார தேக்கமும், அதைத்தொடர்ந்து வேலையின்மையும் தீவிரமடைகிறது.

எனவே அந்நியச் செலாவணியை பாதுகாப்பது, அந்நிய செலாவணி வெளியேறாமல் தடுப்பது, அதற்காக பெரும் பணக்காரர்கள்  பணத்தை பதுக்குவதை தடுப்பது போன்றவை முக்கிய கடமைகளாக முன்னிற்கின்றன.

இதை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் இடதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வங்கிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அந்நாடுகளின் வெளிநாட்டு வர்த்தகம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.  சந்தேகம் இல்லை; இடதுசாரி அரசாங்கங்கள் இதற்கான போராட்டங்களைத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முடிவுகளை நோக்கிச் செல்லும் போது அதற்கு எதிரான சக்திகள் திட்டமிட்டு எதிர்ப்பை கட்டவிழ்த்துவிடுகின்றன. எனவே லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்கள் மிகவும் தீர்மானகரமாக முடிவெடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

பொருளாதார யுத்தம்

வெனிசுலாவைப் பொறுத்தவரை இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா ஒரு பொருளாதார  யுத்தத்தையே கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எண்ணெய் விலைகள் மிகப்பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதை தடுத்து நிறுத்த முன்வராமல், எண்ணெய் நாடுகளின் அமைப்பான ஓபெக், எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த மறுத்துவிட்டது. இதன் பின்னணியில் சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் இருக்கின்றன. ஓபெக் அமைப்பில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என்று சவூதி அரேபியா தீவிரமான நிலைபாட்டை எடுத்ததன் விளைவாகவே, உற்பத்தி குறைக்கப்படவில்லை. இதில் அமெரிக்காவின் நலன் அடங்கியிருக்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் ஆளும் நாடுகளின் பொருளாதாரத்தையும் தகர்ப்பதுதான் இதன் பின்னணி. ஏனென்றால் அந்த நாடுகள் அனைத்தும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளாக இருக்கின்றன. எண்ணெய் ஏற்றுமதி மூலம் இந்த நாடுகளுக்கு பெருமளவில் பணம் வந்துகொண்டிருந்ததை எண்ணெய் விலை வீழ்ச்சியின் மூலமும், அந்த வீழ்ச்சியை இன்னும் அதிகரிக்கும் நோக்கத்துடன் எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்து அதிகரிப்பதன் மூலமும் இன்னும் தீவிரப்படுத்தலாம் என அமெரிக்க ஏகாதிபத்தியம் கணக்கு போட்டுள்ளது.

 

ஏகாதிபத்தியத்திடமிருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். கியூபாவிற்கு எதிராக மிக நீண்ட காலமாக தொடுத்த பொருளாதார யுத்தத்தை அமெரிக்கா இப்போது லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசாங்களுக்கு எதிராக தீவிரப்படுத்தியிருக்கிறது.

இதை எதிர்த்து இடதுசாரி அரசாங்கங்கள் செயலாற்ற வேண்டிய தருணம் இது.

– தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்.

Related Posts