’ஜல்லிக்கட்டு’ பண்பாட்டுத் தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்றுவந்த போராட்டம், காவல்துறை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தகைய அடக்குமுறைகள் புதியவை அல்லவென்றாலும், இந்தமுறை மக்கள் கண்முன் பட்டவர்த்தனமாக நிகழ்த்தப்பட்டது.
ஏன் ஜல்லிக்கட்டு?
தமிழக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நம்மால் வரிசைப்படுத்த முடியும். காவிரி நீர் உரிமைக்கான போராட்டத்தை டெல்டா விவசாயிகள் நடத்தினார்கள். அது விவசாயிகள் அமைப்புகளின் ஒன்றுபட்ட போராட்டமாகவும், அனைத்துக் கட்சிகளின் போராட்டமாகவும் மாறியது. மாநிலம் தழுவிய கடையடைப்பு நடந்தபோது, சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளும் வலுவான எதிர்ப்பை பதிவு செய்தன. நீட் தேர்வுகள் புகுத்தப்பட்டதும் அத்தகையதொரு பிரச்சனைதான். செல்லா நோட்டு அறிவிப்பை மத்திய அரசு மேற்கொண்டபோது அது ஊரக வங்கிகளையும், ஊரக பொருளாதாரத்தையும், சிறு வணிகத்தையும் பாதித்தது. அத்தோடு மாநில அரசுகளின் வரிவருவாயை பாதித்தது. வறட்சியும் கைகோர்க்க, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு விவசாயிகள் மரணம் ஒரு பெருங்கவலையாக அதிகரித்தது.
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்குவதில் தாமதம். பொங்கல் விடுமுறை குறித்த முடிவில் மத்திய அரசு நிர்வாகத்தின் அணுகுமுறை என பல பிரச்சனைகளும் முன்வந்தன. சென்னை பெருவெள்ளத்தில் களத்திற்கு வந்த இளைஞர்கள், நிவாரணம், மீட்பு, நீராதாரங்களின் நிலை குறித்து கவலை கொண்டார்கள். இவையெல்லாம் நீறுபூத்த நெருப்பாகவே தொடர்ந்தன. இந்தப் பின்னணியில்தான் ‘ஜல்லிக்கட்டு’ பொது முழக்கமானதைப் பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கிறது. இளைஞர்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் பிரபலமானது. இணையவழி இயங்கும் பல்வேறு ஊடகங்களும் இப்பிரச்சனைக்கு பின்னணியாக அமையும் பல்வேறு சந்தேகங்களை முன் வைத்திருந்தன. அவற்றை கவனித்திருந்ததும், உள்வாங்கியிருந்ததும், இளைஞர்கள் இந்த முழக்கத்தில் பெருமளவில் ஈர்க்கப்பட ஒரு காரணமாக இருந்தது.
நம்பிக்கையா? கண்மூடி நம்பிக்கையா?
மெரீனா போராட்டக் களத்தில் ஒரு பெண்ணிடம் ‘நந்தினி என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட
தகவல் தெரியுமா? அதற்காக யாராவது போராடினால் நீங்கள் பங்கேற்பீர்களா?” என்ற கேட்டபோது அவர் “எனது ஃபேஸ்புக் டைம்லைனில் இந்தப் பிரச்சனை வரவில்லை. இனிமேல் தேடுவேன். போராடினால், எல்லோரும் வந்தால், நானும் வருவேன்” என்று தெரிவித்தார். போலீசார் உங்களை தாக்க முற்பட்டால் ‘தேசியக் கொடியை உடல் மீது போர்த்திக் கொள்ளுங்கள், தேசிய கீதம் பாடத் தொடங்குங்கள்’ என்ற ஒரு வாட்சாப் செய்தியை நம்பி, போலீஸ் வன்முறையின்போதே அவர்கள் பாடியதையும், பாடிக் கொண்டிருக்கும்போதே போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக தாக்கி, கடும் வார்த்தைகளாலும் காயப்படுத்தி அப்புறப்படுத்தியதையும் தொலைக்காட்சிகள் நேரலையில் காட்டினார்கள். அந்த அளவு இணையத் தகவல்களை நம்புவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இணையம் ஒரு தனித்த ஊடகம் அல்ல. அதனை பல்வேறு நிறுவனங்களும் ஆதிக்கம் செய்கின்றன. பேஸ்புக், டுவிட்டர், அரசு உளவு நிறுவனங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் கூட – பிரபலங்கள் செய்யும் பதிவுகள், பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள், இணைய சிறப்பு ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், மீம் என்ற நகைச்சுவைப் பக்கங்களின் விமர்சனங்கள் என்று பல்வேறு ‘நிறுவனங்களின்’ ஆதிக்கம் அங்கே நிலவி வருகிறது. மேலும், சமீபத்தில் வெளியான ‘ஐ ஏம் ட்ரோல்’ என்ற புத்தகம், சங் பரிவார அமைப்புகள் எப்படி திட்டமிட்ட வகையில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள், ஒரு கட்டமைக்கப்பட்ட வன்முறை நிறுவனமாக ஆதிக்கம் செய்ய முயல்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது. தனிமனிதர்களே ஒரு ஊடகமாகி இயங்க முடியும் என்றாலும், இணையத்தின் மீது செலுத்தப்படும் ஆதிக்கம் அனைத்தையும் அவர் எதிர்கொள்கிறார்.
அரசு என்ன புரிந்துகொண்டது?
மத்தியிலும், மாநிலத்திலும் அமைந்துள்ள அரசாங்கங்களைத் தாண்டி, இந்திய அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்தும் ஒரு வெறுப்பும், அவநம்பிக்கையும் நிலவுவதை ஜல்லிக்கட்டுப் போராட்டக் களம் வெளிப்படுத்தியது. அவர்கள் பன்னாட்டு குளிர்பானங்களை தூக்கில் தொங்கவிட்டார்கள். கார்ப்பரேட் சுரண்டல் குறித்துப் பேசினார்கள். இரவும் பகலும் போராட்டக் களத்திலேயே தங்கியவர்கள், அவ்வப்போது வந்து சென்றவர்கள், அரசியல் இயக்கங்களின் பிரதிநிதியாக வந்தவர்கள், பிரபலங்கள், தொலைக்காட்சி வழியே பார்த்து போராட்டம் பற்றி முடிவு செய்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு. இந்த திரட்சியில் ஒத்த உணர்வு இருந்தது ஆனால் ஒருங்கிணைப்பில்லை. அரசென்ற கருவி, அனைத்துக் கரங்களைக் கொண்டும் எல்லாவற்றையும் கவனித்தே வந்தது. பலம், பலவீனங்களை கணக்கிட்டே செயல்பட்டது.
அரசியல் கரங்கள்:
ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் தலைமையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடக்கவில்லை. ஆனாலும் இந்தப் போராட்டக் களத்தில் எல்லா அரசியல் கரங்களும் இருந்தன. சிலர் ‘பீட்டா அமைப்புதான் எதிரி’ என்று நிறுவ முயன்றார்கள். அதே சமயம் போராட்டம் ‘விவசாயிகள் பிரச்சனையை’ நகரத் தொடங்கியது. ஊடகங்களில் இந்த வாதங்கள் மேலெழுந்தன. அதே சமயத்தில், பொது மனநிலையின் முழுமையான பிரதிநிதி என்ற அவதாரத்தை ஊடகங்கள் எடுத்தன. சில இணைய ஊடகங்கள், பிரபலங்கள் போராட்டங்களுக்கு தங்களையே வழிகாட்டிகளாக வறித்துக்கொண்டார்கள். அனைத்துமே போட்டிபோட்டு அவைகளுக்கான இடங்களை உறுதி செய்தும் கொண்டன. தனக்கான இடத்தை உறுதி செய்ய முடியாதவர்கள், ஆட்டத்தை மொத்தமாகக் கலைக்க வேண்டும் என்ற மனநிலைக்குச் சென்றார்கள். இவை அனைத்தையும் போராட்டக் களமும் கவனித்தது. எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்தது. இந்த ’தாராளப்’ பண்பு கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அது மட்டுமே போதாது என்பது மிக முக்கியமான அரசியல் படிப்பினை.
எரிச்சலின் எதிர்வினைகள்:
முதலில் ஜல்லிக்கட்டு என்ற ‘பண்பாட்டு அடையாளம் சார்ந்த’ உணர்வை, தங்கள் ஒற்றைக் கலாச்சார அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்த முடியுமா என சங் பரிவாரங்கள் முயன்றார்கள். அவர்களின் அரசியல் கருவியாக காளையை மாற்றவும், உணர்ச்சி வணிகம் செய்து, வன்முறை விதைக்கவும் முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், பற்றியெரிந்த போராட்டக் களத்தில் அவர்களின் முயற்சிகள் வெற்றியடையவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை களத்தில் தென்பட்டது. மத்திய அரசின் ‘தொடர் துரோகங்கள்’ என்ற பட்டியலை அது நினைவூட்டியது. இதன் காரணமாக அவர்கள் இரண்டு நாட்களிலேயே எரிச்சலானார்கள். சுப்பிரமணிய சாமியின் ‘பொறுக்கி’ என்ற டுவிட்டர் பதிவும், ராதாராஜனின் ‘கட்டற்ற பாலியல் தேடல்’ என்ற விமர்சனமும், ஹெச்.ராஜா பதிவில் வெளிப்பட்ட ‘முஸ்லிம் வெறுப்பும்’ மிகக் கடுமையான எதிர்வினைகளையே கொடுத்தன. ஆனாலும் அவர்கள் அந்தப் பாதையில்தான் நகரத் தொடங்கினார்கள். தொடர்ந்து தங்களுக்கு தேவையான கதைகளைக் கட்டமைத்தார்கள்.
கட்டுக்கதைகளின் அரசாட்சி!
’போஸ்ட் ட்ரூத்’ என்ற ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்திய கடுமையான விமர்சனத்தை என்.டி.டி.வி தொலைக்காட்சி ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சமீபத்தில் பயன்படுத்தியது. அந்த வார்த்தையின் பொருள் தாங்கள் விரும்பும் உண்மைகளை உருவாக்கும் யோக்கியமற்ற செயலாகும். அந்த முயற்சிகள் இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
20 ஆம் தேதி ஸ்வராஜ்யா ஆங்கில இணையத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு கட்டுரை எழுதினார். அதில்தான் பின் லாடன் படத்துடன் கூடிய ஒரு வாகனம் இடம்பெற்றது, அது எங்கே யாரால் எடுக்கப்பட்டது என்ற குறிப்பு எதுவுமில்லை. இதே படத்தை டுவிட்டரில் அவர்கள் சிலர் பதிந்தபோது ‘பதிவு எண்ணை வைத்து வழக்கு பதிய வேண்டியதுதானே?’ என்ற கேள்விகளை மக்கள் எழுப்பினார்கள். வழக்குப் பதிவதா அவர்களின் நோக்கம்?
மறுபக்கம், இந்த போராட்டத்தை ‘ஜல்லிக்கட்டோடு’ நிறுத்தும் பிரச்சாரங்கள் தொடங்கின. அரசு நிர்வாகம், அரசியல், காவல்துறை மற்று உளவுத்துறை ஆகியவை முழு வேகத்துடன் அதில் இறங்கினார்கள். பிரபலங்கள் பேச, ஊடகங்கள் அவற்றை எதிரொலித்தன. நாயைக் கொல்வதற்கு முன், அதற்கு வெறிபிடித்ததாய் நம்ப வைக்க வேண்டும் என்ற பழங்கால நுட்பம்தான், ஆனாலும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிக முக்கியமானவை. ’சமூக விரோதிகள்’, ‘பின் லாடன்’, ‘தேச விரோதிகள்’ எனத் தொடங்கி ஒரு காவல்துறை அதிகாரி ‘தோழர்’ என அழைப்பதைக் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தும் அளவுக்குச் சென்றார். இடதுசாரி அமைப்புகளை பெயர் குறிப்பிட்டு களங்கம் கற்பிப்பதில் இறங்கினார்கள்.
ஒரு எச்சரிக்கை:
பின் லாடன் படமுள்ள புகைப்படத்தை முதலமைச்சரும் சட்டமன்றத்தில் காட்டினார். இத்தனை நாட்களில் புலனாய்வு செய்து உரிய நபர்களை சட்டத்தின் மீது நிறுத்தியிருக்க முடியும். ஆனால், தானும் ஒரு இணையவாசியைப் போல அரசு படங்களைப் பகிர்ந்தது. சில வீடியோக்களை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறது காவல்துறை. சில நிருபர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘இந்தப் படம் மெரீனாவில் எடுக்கப்பட்டதில்லை என்கிறார்களே?’ என்ற கேள்வியை வைத்தார்கள். அரசிடம் பதில் இல்லை. அவர்கள் நோக்கம், அந்தப் படத்தை விதைப்பதே.
இந்த அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தங்களுக்கு தேவையான கட்டுக்கதைகளை உண்மையைப் போல் விதைக்கும் நுட்பத்தில் தேர்ந்த ‘சங் பரிவார குருக்கள்’ (பழைய வார்த்தையில் கோயபல்சுகள்) இணையத்தை அந்த நோக்கத்தில் பல ஆண்டுகளாகவே பயன்படுத்திவருகின்றனர். பின்லாடன் படமிட்ட வண்டியை முன்நிறுத்துவதும், நம்மையும் அதுபற்றி மட்டும் பேசவைப்பதும் அவர்களின் நோக்கம். அந்த வகையில், மெரீனா போராட்டத்தின் ஒட்டுமொத்த கோபத்தையும், ஒரு சில புகைப்படத்தின் பின் மறைக்க விரும்புகிறார்கள்.
வெமுலாவை மறப்போமா?
ரோஹித் வெமுலா என்ற மாணவனுக்கு எதிராக இரண்டு அமைச்சர்கள் களமிறங்கியதை நாம் மறந்திருக்க மாட்டோம். அவர் கல்லூரி வளாகத்திலேயே ஒதுக்கப்பட்டார், அவரின் கல்வி உதவித்தொகையை அரசு பாக்கிவைத்திருந்தது. இத்தகைய நெருக்குதலால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த மாணவனுக்கு ஆதரவாக எழுந்த உணர்வலையை வீழ்த்த பொய்மையே பயன்படுத்தப்பட்ட்து. தனிப் பெண்ணால் வளர்க்கப்பட்ட வெமுலாவின் சாதி ஆராய்ச்சி அங்கே ஆயுதமானது. இதே பரிவாரங்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஜனநாயக சூழலை சிதைப்பதற்கான முயற்சியை மிகுந்த வன்மத்துடனே மேற்கொண்டார்கள். அதிலும்,சில வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டன. ஜீ தொலைக்காட்சி அவைகளை வெளியிட்டது. பின் அந்தப் பொய்மை வீடியோக்கள் அம்பலப்பட்டன.
இந்த திட்டமிட்டு கட்டமைக்கப்படும் ‘பொய்மை’ அரசியலை புகைப்படம் குறித்தான இணையப் புலனாய்வு மட்டுமே வீழ்த்திவிட முடியாது. அவர்கள் உருவாக்க விரும்பும் பொய்மையின் போர்க் களத்தையே இல்லாமல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நகர்விலும், களத்தில் அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அறிவியல் சிந்தனைகளையும், அரசியல் விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகளின் வழியேதான் இதைச் செய்ய முடியும். நேர்மையற்ற அவர்களின் அரசியலைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவதன் மூலமே அவர்களை வீழ்த்த முடியும்.
– இரா.சிந்தன்
Recent Comments