இந்திய சினிமா சினிமா

பைரவா விமர்சனம் . . . . . . !

No-punch-dialogues-in-Bhairava

ஐசி(ஐ)சிஐ (ஹை… நடுவுல ஐ கிடையாது.) வங்கியின் கலெக்சன் பாய் பைரவா, காதலில் விழுந்த பின், காதலுக்காக, காதலிக்காக… காதலியின் தோழிக்காக… கல்வித்தாய் அவதாரம் எடுத்து, கல்வித் தந்தைகளில் ஒருவரை பந்தாடும் கதம்ப மசாலா, பைரவா. அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார், இயக்குநர் பரதன்.

கடைசியில் பாயாசம் இருக்கு… அதனால சாம்பார் சுமாராத்தான் இருக்கும் என்று சொல்வது போலவே இருக்கிறது முதல் பாதி பைரவா.

அதிலும் படத்தின் முதல் காட்சியே நமது ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாகத்தான் இருக்கிறது.

கபாலி, வீரம், சிவாஜி, வேதாளம் இன்னும் சில பல ஹிட் படங்களை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கடவுள் ராஜேந்திரனில் ஆரம்பித்து மைம் கோபி, குழந்தையிடம் விளையாட்டுக்கு ச்சும்மா என்று சொல்வது வரை நீள்கிறது, அந்த ஞாபகப்படுத்துதல் படலம். ரஜினி ‘மகிழ்ச்சி’, என்றால்  விஜய் ‘சிறப்பு’ என்கிறார். அது ‘மிகச்சிறப்பாக’ இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்து, படம் பார்த்து முடிவு செய்யுங்கள்.

விஜய், கீர்த்தி சுரேஷை விட ஸ்லிம்மாக இருக்கிறார். ஸ்டைலாகவும் இருக்கிறார். ஆனாலும் திரைக்கதைக்கு பொருந்தாத காமெடி காட்சிகளில் சலிப்படைய செய்ய வைக்கிறார்.

கோயம்பேடு பஸ் நிலையத்தை செட் போட மெனக்கெட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட உண்மையான கோயம்பேடு பஸ் நிலையம் தான் என்று நம்ப வைத்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கலை இயக்குநர் குழுவிற்கு. ஆனாலும், விஜய்யின் வீடு… தெரு எல்லாம் எல்.கே.ஜி. குழந்தை வரைந்த ஓவியம் போல செம செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அது போதாதென்று விஜய், சைக்கிள், பைக்கில் வரும் காட்சிகள் எல்லாம்… நாங்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் தான்…. என்று ‘பச்சை’யாக சொல்லித் தொலைக்கிறது.

 கதை, திருநெல்வேலிக்கு நகர்ந்ததும்… சுள்ளென்று சுருக்கென்று மாற முயற்சிக்கிறது. ஜெகபதி பாபு, திட்டமிட்டு செய்யும் ஒவ்வொரு அடாவடியையும் வாயிலேயே காட்சிப்படுத்தி கடுப்பேத்துவது… நல்லாருக்கா நல்லாயில்லையான்னு கடைசி வரை முடிவுக்கு வர முடியல. தம்பி ராமையா, மாரிமுத்து எல்லாம் இருக்கிறார்கள் படத்தில்.

 விஜய் படம் என்றாலே பாடல்கள் சிறப்பாகவும் மிகச்சிறப்பாகவும் இருக்கும். ஆனால்… பைரவா பாவம் என்று தான் தோன்றுகிறது. இதே பரதன் இயக்கி, இதே விஜய் நடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் பாடல்கள் இன்று வரை தொலைக்காட்சிகளில் ரவுண்டு கட்டுகிறது. ஆனால், பைரவா படம் முடிந்து வருகையில் எந்த பாட்டையும் தன்னிச்சையாக முணுமுணுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வர்லாம் வர்லாம் வா… வசனமாக எடுத்துக்கொள்ளப்படுவது தனிக்கதை.

இப்படி சில பல, சிறப்புகள், சிராய்ப்புகளைத் தாண்டி இந்த படத்தையும், நடிகர் விஜய்யையும் பாராட்டியாக வேண்டும். ஏனென்றால் தனியார் கல்வி, என்கிற வைரஸ் இந்தியாவை எல்லா திசையிலும் இருந்து… தாறுமாறாக தாக்கிக்கொண்டிருக்கிற உண்மையை உரக்க பேச முயற்சி செய்தமைக்காக.

அதிலும் கோர்ட்டில் விஜய் பேசுகிற…. அந்த வசனம் தனி வீடியோ க்ளிப்பாக வைரலாகும் என்பது என் யூகம் மட்டுமல்ல. நம்பிக்கையும் கூட. பட வெளியீட்டு நிறுவனம் அந்த கோர்ட் காட்சியின் முதல் பாதியை சமூக ஊடகங்களில் வைரல் ஆக்கினால் விற்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கூடும் என்று நம்புகிறேன்.

“கும்பகோணத்துல குழந்தைகள் எரிஞ்சு சாம்பலாகிறாங்க. வெளியேறுவதற்கு சரியான பாதைகள் இல்லாத ஒரு பள்ளிக்கூடம் என்பது தான் இதுக்கு காரணம். உடனே தமிழ்நாட்டுல உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் போக, வர வழி சரியாக இருக்குதான்னு ஆய்வு பண்ணுவீங்க”.

“தாம்பரத்துல ஒரு குழந்தையை அம்மா ஸ்கூல் பஸ்ஸில் ஏத்தி விட்ட, அஞ்சாவது நிமிசம் பஸ்சுக்குள்ள இருந்த ஓட்டை வழியா… குழந்தை விழுந்து பலியாகுது. உடனே எல்லா ஸ்கூல் பஸ்ஸிலயும் ஓட்டை இருக்கான்னு ஆய்வு பண்ணுவீங்க”.

“ஏன்யா.. அது வரைக்கும்  என்னத்த … புடுங்குறீங்க…”…

என விஜய் கொந்தளிக்கும் காட்சி… நிஜமாவே அபாரம் விஜய். சபாஷ் இயக்குநர் பரதன்.

 எடுத்துக்கொண்ட கதைப்பொருளுக்காக பைரவா, சிறப்போ இல்லையோ… ஆனால் வசூல் மன்னனாக இருக்கிற, ஒரு முன்னணி கதாநாயகன் சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கிற ஒரு சமூக அவலத்தை சமரசமில்லாமல் பதிவு செய்த அந்த ஒரு காட்சி மிகச்சிறப்பாகவே எனக்கு தோன்றுகிறது. அதற்காக மட்டுமாவது இயக்குநர் பரதனையும் நடிகர் விஜய்யையும் பாராட்டவே ஆசைப்படுகிறேன்.

– முருகன் மந்திரம்.

Related Posts