அறிவியல் தொழில்நுட்பம்

பேஸ்புக் – இணையத்தை இலவசமாக்குமா?

1) இணையதளம் இலவசமா?

பேஸ்புக் பயன்படுத்த இணையதள இணைப்பும் இலவசம் என்கின்றனர். ஆனால் அது ஒரு கவர்ச்சி அறிவிப்புதான். உண்மையில் உள்ளதையும் பிடுங்கிக் கொள்ளும் நடவடிக்கையாகும்.

2) அது எப்படி?

நாம் இப்போது ஒரு இணையதள இணைப்பு பெற்றுவிட்டால் எந்த தளத்திற்கும் செல்லும் சுதந்திரம் உள்ளது. அதனால் ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு என்ன லாபம்? … பிலிப்கார்ட்டில் பொருள் வாங்கினாலும், ஸ்னாப் டீலில் வாங்கினாலும் இணைப்பு தரும் நிறுவனங்களுக்கு ஒரு லாபமும் இல்லை. இந்த நிலைமையை மாற்றுவதற்கான முயற்சியின் தொடக்கமே இலவச பேஸ்புக் ஆகும்.

3) இலவசமாகக் கொடுத்தால் அப்படி மாறுமா?

பேஸ்புக் வழியாக பல இணையக் கட்டுரைகள் பகிர்கிறோம். அதனைச் சென்று பார்க்க இப்போது எந்தத் தடையும் இல்லை. ஆனால், இலவச பயன்பாடு அதிகரிக்கும்போது, வேறு தளங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். இணைப்பு கொடுக்கும் நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் நம்மால் விரும்பியதைப் படிக்க முடியாது. முதலில் ஒரு கடிவாளம் கட்டும் முயற்சிதான் ‘இலவச இணையம்’.

4) இப்படிச் செய்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

தொலைக்காட்சி பார்க்க செட் டாப் பாக்ஸ் வைக்கிறோம். விரும்பிய சானலை பார்க்க, பணம் செலுத்த வேண்டும். இணைப்புக்கு தனியாக பணம், சானலுக்கு தனியாக பணம் என்பது இன்னும் இன்னும் சம்பாதிக்க வழிவகுக்கும். அப்படி இணையத்தையும் மாற்றுவதே அவர்களின் நோக்கமாகும்.

இரண்டாவது, இணையதளத்தில் யார்வேண்டுமானாலும் தனக்கென ஒரு தளம் உருவாக்கி செயல்பட வாய்ப்பு உள்ளது. முன்னேறிய நாடுகளாலேயே கூட இதனைத் தடுக்க முடிந்ததில்லை. ஜனநாயகமாக மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு மற்ற எல்லா ஊடகங்களை விடவும் இணையத்தில் அதிகம். அதற்கு ‘இணையத்தில் நிலவும் சமநிலையே’ காரணமாகும். இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் கையில் கட்டுப்பாடு வந்துவிட்டால் குறிப்பிட்ட தளங்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

உங்களுக்கு ஒரு நூலகம் இருக்கிறது. நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திவிட்டி, விரும்பியதைப் படிக்கிறீர்கள். ஒவ்வொரு புத்தகத்துக்கும் கட்டணம் செலுத்துவதாக மாற்றுவதுதான், இப்போது நடக்கும் முயற்சியாகும்.

5) இப்போது ஏன் செய்கிறார்கள்?

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் – ஏற்கனவே சில பரிந்துறைகளைச் செய்தது. இணையத்தில் சமநிலை பாதுகாப்பதற்கான விருப்பம் கொண்டவர்கள் சுமார் 1.5 லட்சம் இ-மெயில்கள் உருவாக்கி அந்த முயற்சியைத் தடுத்தனர். இப்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வரையறுத்துள்ளனர். 

அதனை மாற்றியமைக்கவே இப்போது பெரிய அளவில் மீண்டும் தொடங்குகின்றனர். இலவச இணையத்தை தேர்வு செய்வோர் பெயரில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இ-மெயில் செல்லுமாறும் செய்துள்ளனர். 

6) இப்போதும் நாம் எதிர்ப்பை தெரிவிக்கலாமா? 

கண்டிப்பாக, அதற்கான லின்க் – http://www.savetheinternet.in/ 

7) எல்லோருக்கும் இலவச இணையதளம் வழங்க இந்த முயற்சி உதவாதா? 

எல்லோருக்கும் இணையதள இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்குவது சாத்தியமே. அதற்கான திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அதற்கான நிதியைக் கொண்டு 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை ‘பைபர் ஆப்டிகல் கேபில்’ மூலம் இணைக்க கடந்த யுபிஏ அரசு முடிவு செய்தது. 

அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்த செலவில் செய்யப்பட்ட திட்டம், திடீரென சில தனியார் கைக்கு மாற்றப்பட்டது. அதற்கான செலவும் உயர்ந்தது. இருப்பினும், அப்படி ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், பல நிறுவனங்கள் இணைய இணைப்பை எல்லோருக்கும் கொடுக்க வாய்ப்பு ஏற்படும். இப்படி கிராமங்களிலும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திய பிறகுதான், குறைந்த செலவில் அல்லது இலவசமாக இணைய இணைப்பை வழங்கவே முடியும். 

8) பேஸ்புக் வழியில் செய்ய முடியாதா? 

பேஸ்புக் நிறுவனம் ஒரு லாப நோக்கில் செயல்படும் நிறுவனமாகும். அவர்கள் தங்கள் தளத்தை பயன்படுத்தும் உறுப்பினர்களின் விருப்பம் என்ன என்று ஆய்வு செய்து, அந்த விபரங்களை அவசியப்படுவோருக்கு விற்பனை செய்யும் முறையில் லாபமீட்டுகின்றனர். வளரும் நாடுகளில் அந்த தளத்தின் பயன்பாடு அதிகரித்தால் இன்னும் இன்னும் சந்தை மதிப்பு அதிகரிக்கும். 

ஏற்கனவே இணைய இணைப்பு, அலைபேசி இணைப்பு உள்ள நகரப் பகுதி மக்களுக்கு பேஸ்புக் பயன்பாடு அதிகரிக்கவும், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வாங்கவுமே இந்த நடவடிக்கைகள் உதவுமே அன்றி, எல்லோருக்கும் இலவச இணையம் இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல.

(இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் சார்பில் அழகுநம்பி வெல்கின் அவர்களுடனான உரையாடலின் உதவியோடு எழுதப்பட்டது)

Related Posts