அரசியல்

பேரிடரும் இனி ஆளும் வர்க்கத்தின் அடியாள்தான் . . . . . . . . !

“பெருங்கடல் வேட்டத்து“ – ஒக்கி புயலின் கோரப்பிடியில் சிக்கி அரசின் பாராமுகத்தால் கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் துயரங்களை பேசும் ஆவணப்படம். பேரழிப்பை சந்தித்த சமூகத்தின் உள்ளிருந்து கேட்கும் குரல் மட்டுமல்ல, அச்சமூகத்தை சார்ந்தவரின் பதிவு  என்பதும் இந்த படைப்பிற்கு கூடுதல் முக்கியத்துவத்தை தருகிறது. மீனவ சமூகத்தின் கடல் குறித்த மரபு அறிவையும், கடல் தொழில் மீதான அவர்களின் உரிமையையும், அரசின் மீதான  கோபத்தையும்  வெளிப்படுத்தும் பாங்கில் அதனை உணரலாம். மீனவ மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் எழுத்தாளர் அருள் எழிலன் (Arul Ezhilan) இந்த படத்தை இயக்கியுள்ளார்.
“ஆர்ப்பரிக்கும் கடலோடு இணைந்த எங்கள் வாழ்க்கையில், இயற்கையின் சீற்றம் எங்களுக்கு புதிதல்ல. ஆனால்  அரசின் பாராமுகமும், மீனவர்களை இரண்டாம் பட்ச  குடிமக்களாக ஒதுக்கும் போக்குதான் புதிது“ என குற்றவாளி கூண்டில்  அரசை ஏற்றுகிறது  இப்படம். உறவுகளை இழந்த மீனவ பெண்களின் ஆழ்மன குமுறல்களும், அரசை பார்த்து தொடுக்கும் குற்றச்சாட்டுகளும், பொது சமூகத்தை நோக்கிய அவர்கள் கேள்வியின் நியாயங்களும் யாவரையும் கண்கலங்க வைக்கிறது.
“கடலுக்கு போன எங்க சொந்தங்க கரைதிரும்பலனா கூட, உள்நாட்டில் வெள்ளத்துல சிக்குன பிற இன மக்களை காப்பாத்த பைபர் படக எடுத்துட்டு போனவங்க எங்க மீனவர்கள். எங்களுக்கு பிற உயிருக மேல இருக்கிற மனிதாபிமானம். எங்க மீனவ சொந்தங்கள் மேல ஏன் அரசுக்கு இல்லாம போச்சு“ என்ஜினியரிங் பட்டதாரியான தன் மகனை கடலுக்கு தாரைவார்த்த தாய்யின் கண்ணீர் கலந்த கேள்வி  இது. ”நாங்கள் கிருத்துவர் என்பதால்தான் எங்களை இப்படி கொல்லுராங்களா” என்று ஒரு மீனவப் பெண் போகிற போக்கில் முன்வைக்கும் கருத்தை அவ்வளவு இயல்பாக கடந்து செல்லமுடியாது.
மகனை, கணவனை, சகோதரனை இழந்த மீனவ பெண்களின் அழுகுரல் நெஞ்சை பிசைகிறது. இவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு யார் காரணம்?மக்களை மீட்பதாக குமரி முனையல் முகாமிட்ட மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மீட்பு பணிகளை திட்டமிட்டே முறையாக நடத்தவிடாமல் பார்த்துக்கொண்டனர் என்பதை அழுத்தமாக சொல்கிறார்கள் படத்தில் சாட்சியம் கூறும் மீனவர்கள். ”நாங்க எங்க போட்டுல போய் காப்பாத்துன உயிர்கள்தான் அதிகம். கடற்படை ஒன்னுஞ்செய்யல. அவங்க எங்கள தடுக்காம விட்டிருந்தாலே இன்னும் நிறைய உயிர காப்பாத்தி இருப்போம்”  கடற்படையை நம்பி ஏம்மாந்த மீனவ இளைஞனின் குரல் இது.
இவ்வளவு இறப்புகளும், மக்களின் அழு குரல்களும் நாட்டை ஆள்பவர்களை கொஞ்சமும் உறுத்தவில்லை என்பதை அவர்களின் முகமே காட்டிக்கொடுகிறது. குமரிமுனை கிராமங்களில் முகாமிட்ட அமைச்சர் பெருமக்களின் அடாவடி பேச்சே இதற்கு சாட்சி. இதில் மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மனித தன்மைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தன் முகபாவனையில் வெளிப்படுத்துகிறார்.
படம் முழுக்க குமரியின் நாடாளுமன்ற உறுப்பினரின் சுவடே தெரியவில்லை. தொகுதி மக்களை துயரில் இருந்து மீட்கும் களத்தில் அவர் ஏன் இல்லை? மீனவர்கள் கடலில் மிதக்க, அவர்களது குடும்பத்தினர் கரையில் கண்ணீரில் மிதக்க அவர்களை ஏன் சென்று பார்க்க வில்லை என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ”என் மனதில் இன்னும் மண்டைக்காடு சுவடுகள் விலகவில்லை” என்று பதிலளித்தார். தொகுதியின் பிரதிநிதி என்பதை விட தான் சார்ந்த மதத்தின், சாதியின் பிரதிநிதியாகவே தன்னை கருத்திக்கொள்பவர் எப்படி கிருத்தவ மீனவர்களை சென்று பார்ப்பார்.
ஒக்கி புயலின் போது தொலைகாட்சியில் வந்த மரண ஓலங்களை கேட்டு கேட்டு உணர்ச்சி வயப்பட்டு, பின்புமறத்துப்போன பொது சமூகம், மீண்டும் இப்படம் பார்ந்து உணர்ச்சி வயப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு மேல் இந்த துயருக்கு யார் காரணம்? என்ன காரணத்தால் மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்? என்பதை பொது சமூகம் கண்டரிய வேண்டும் என்ற நோக்கோடு படத்தொகுப்பை நேர்த்தியாக கையாண்டுள்ளதை உணர முடிகிறது. மீனவர்கள் தங்கள் துயரங்களை முன்வைக்கும் அதே வேளையில் அவர்கள் சந்தித்த பாதிப்புகள், துரோகங்கள், தரப்பு நியாயங்களையும் நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.
படித்த மீனவ இளைஞர்கள் தன் முன்னோர்களின் பட்டறிவையும், தொழிற் சார்ந்த சமீபத்திய தொழிற்நுட்பத்தையும் இணைத்து விளக்கும் விதம் பெரும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
குமரி மாவட்ட மீனவர்கள் வாழ்க்கையில் அனைத்து வகையிலும் நிறைந்திருக்கும் திருசபைகள், மறுபுறம் அவர்களின் அரசியல் எழுச்சி, சுயதலைமை உருவாவதற்கு தடையாக இருப்பதையும் காட்டமாக விமர்சிக்கிறது.
சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம், ஒக்கி புயலின் பாதிப்புகளை, அரசின் நயவஞ்சகத்தை தோலுரிக்கும் அதே வேளையில். மீனவ சமூகம் குறித்த வரையப்பட்டுள்ள பொது புத்தியை அடித்து நொறுக்கியுள்ளது.
கடற்கரை என்பதை தொழிற்மயத்தின் கேந்திர பகுதியாக மட்டுமே பார்க்கும் அரசு இயந்திரமும், ஆளும் வர்க்கமும் மீனவர் இல்லாத கடற்கரையை  உருவாக்க எத்தணிக்கிறது. ஒரு இயற்கை பேரிடரை கூட தங்களின் நோக்கத்தை  நிறைவேற்றிக் கொள்வதற்கான பேராயுதமாக எப்படி பயன்படுத்தும் என்பதற்கு ஒக்கி புயல் மீட்புபணிகளே சாட்சி. மீனவர்களை கடற்கரையில் விட்டு அகற்ற அன்று சுனாமியை காரணம் காட்டினார்கள், இன்று ஒக்கியை காட்டி மிரட்டுகிறார்கள். அமெரிக்காவின் நகரங்களில் இருந்து கருப்பின மக்களையும், ஏழை உழைப்பாளர் மக்களையும் வெளியேற்ற கேத்ரீனா புயலை பயன்படுத்திய  அமேரிக்க வல்லரசு தான் இந்தியாவிற்கு பல விசயங்களில் வழிகாட்டி என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
இந்த ஆவணப்படத்தின் மூலம் அதிகம் பேசப்படாத மீனவ மக்களின் துயரை முன்வைத்து, அரசின் வஞ்சகத்தையும் தோலுரித்த தோழர் அருள் எழிலனுக்கு வாழ்த்துக்கள்.
– அ.பகத்சிங்.

Related Posts