பேராசையின் உச்சகட்டம்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் பயணிக்கும் போது, இருமருங்கிலும் பச்சை பசேலன்ற வயல்வெளிகள் கண்ணுக் கினிய காட்சிகளாய் அமைந்த காலம் ஒன்றிருந்தது. வைகை அணை யிலிருந்து கால்வாய் மூலம் பாயும் நீர்வளத்தால் மேலும் வளங் கொழித்தது மேலூர்.

கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல சிறப்புக்களில் ஒன்று, அது தொடர்ச்சியின்றி இருப்பது.  மற்றொன்று அதன் தொன்மை மிக்க வலுவான பாறைகள். கிரானைட் என்றழைக்கப்படும் இப்பாறைகளின் அருமையை கட்டடக் கலை வல்லுநர்கள் நன்கறிவர்.

இயற்கை அளித்த இந்தக் கொடையை வெட்டி எடுத்து விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தது ஒரு கும்பல். இந்தக் கொள்ளைக் கும்பலுக்குத் தலைமை வகித்தது பி.ஆர்.பி என்ற நிறுவனம்.

தமிழகத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் செல்லப் பிள்ளையாய் வளர்ந்தது இந்நிறுவனம். சிறந்த தொழிலதிபர், ஏற்றுமதியாளர் என்று பி.ஆர். பழனிச்சாமிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்கள்.

சுரங்கத்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, காவல்துறை என்று தமிழகத்தின் அனைத்து அதிகார மையங்களும் இவருக்குக் கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்தன. மதுரை மாவட்ட ஆட்சியராக நேர்மை மிகு உ. சகாயம் பொறுப்பேற்றதும் அலமாரியிலிருந்த எலும்புக்கூடு களையெல்லாம் வெளிக்கொணர்ந்தார்.

அரசின் அனைத்துத் துறை களின் ஆசிகளுடன் பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை அறிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டு அரசின் உத்தரவிற்காகக் காத்திருந்தார். உத்தரவு வந்தது. பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அல்ல.

சகாயத்தை மதுரை ஆட்சியர் பணியிலிருந்து மாற்றி கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவே வந்தது! அவருக்கு முப்பத்து நான்காவது பணியிடமாற்றம்! அடுத்து வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவும் கிரானைட் கொள்ளையின் முழுப்பரிமாணத்தையும் வெளிக்கொணர்ந்ததுதான் ஆச்சரியம்.

ஆனால் தமிழக அரசு கிரானைட் கல்லைவிட வலுவாக அசையாமல், அசராமல் இருந்தது. டிராஃபிக் ராமசாமி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர, சென்னை உயர்நீதிமன்றம் திரு. சகாயம் அவர்களையே விசாரணைக் கமிஷனராக நியமித்தது.

இன்று மேலூர் பூமியில் தோண்டத் தோண்ட உண்மைகள் மட்டுமல்ல, எலும்புக் கூடுகளும் வெளிவருகின்றன.

ஆம்… பேராசையின் உச்சகட்டம் மூடநம்பிக்கைதானே? தங்களின் கொள்ளை லாபம் செழித்திட நரபலி கொடுத்துள்ள கொடூர உண்மையும் வெளிவந்துள்ளது. நாடெங்கிலும் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளைபோவதற்கு ஒரு சாம்பிள்தான் கிரானைட் கொள்ளை. நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஆசிரியர் குழு, புதிய ஆசிரியன்