புதிய ஆசிரியன்

பெண்கள் சாதனை படைக்கும் காலம்…

பெண்கள் சாதனை படைக்கும் காலம்

இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 4 இடங்களைப் பிடித்து பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களில் ஐரா சிங்கால் முதலிடத்தையும் ரீனு ராஜ் 2-ம் இடத்தையும், நிதி குப்தா 3-ம் இடத்தையும், வந்தனா 4-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடத்தைப் பிடித்த முதல் மாற்றுத் திறனாளி ஐரா சிங்கால்தான். நான்கு முறை தேர்வு எழுதி, வழக்காடி போராடிய பிறகுதான் அவர் இந்த வெற்றியை அடைய முடிந்திருக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரியாக விரைவில் பதவி ஏற்க இருக்கிறார். கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சாருஸ்ரீ, இதே தேர்வில் அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த பார்வைத் திறனற்ற பினோ ஜெபைன், ஐஎப்எஸ் அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வில் 2 முறை வெற்றியை நழுவவிட்ட வான்மதி, 3-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். வான்மதி ஒரு கார் டிரைவரின் மகள்.

சென்னையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியிருக்கிறது. இதில் ஐந்து பெண் ஆபரேட்டர்கள் நியமனம் பெற்றுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் ஓட்டத்தைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பு பெண் ஓட்டுநர் ப்ரீத்திக்கே கிடைத்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ப்ரீத்தி. இந்த வெற்றி தனக்கு அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்கிறார் ப்ரீத்தி.

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற பாரதியின் வாக்கை மெய்ப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாதனைப் பெண்களுக்கு புதிய ஆசிரியன் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Posts