இதழ்கள் இளைஞர் முழக்கம்

பூவும்மா… பூவு – தினா ராகவன்

1112

கடிகாரத்தின் முள் மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. ‘ஏய் பூங்கொடி மணி என்ன ஆகுதுன்னு பாத்தியா, இன்னும் இழுத்து போத்திட்டு தூங்கிட்டிருக்க.. எழுந்துருடி. கூட மாட எதாவது ஒத்தாசயா இருக்கனுனு தோணுதா இவளுக்கு.. வேலக்கி போவ ஆரமிச்சதுல இருந்து வீட்ல ஒரு வேல பண்றதுல்ல..” என்று திட்டியபடியே அம்மா வீட்டுக்குள் நுழைய, அங்கே ஓரமாக படுத்திருந்த பூனை அவளை பார்த்ததும் வேகவேகமாக வீட்டை காலி செய்து கொண்டு வெளியே ஓடியது. அம்மா கால்கடுக்க வரிசையில் நின்று தெருவில் உள்ள தண்ணீர் டேங்கிலிருந்து பிடித்து வந்த முக்கால் குடம் தண்ணீரை இறக்கி வைத்தாள்.. சென்னையின் தண்ணீர் பஞ்சத்துக்கு கே.கே.நகர் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த முக்கால் குடம் தண்ணீருக்கு அவள் பட்ட பாடு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

பூங்கொடியின் அப்பா, தன் மனைவியையும் மகளையும் நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தார். சத்தம் போட்டு கூட ஒரு வார்த்தை பேச மாட்டார். திடீரென ஒரு நாள் ஏதோ வேலை விசயமாக வெளியூர் சென்று வருவதாக கூறி சென்றவர் தான் திரும்பி வரவேயில்லை. ஆரம்பத்தில் சொந்தக்காரர்கள் வீட்டிலெல்லாம் தேடி பார்த்தனர். கிடைக்கவில்லை. பிறகு அவர் வேறொரு குடும்பத்தோடு எங்கோ வாழ்கிறார் என்று மட்டும் இவர்களுக்கு தெரியவந்தது. அதையடுத்து இவர்களும் அவரை தேடுவதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. அவரும் இவர்களை தேடி வரவில்லை. அம்மாவுக்கு வைராக்யம் அதிகம். பூங்கொடிக்கு ஒரு ஆறேழு வயதிருக்கும் போது அவர் விட்டு சென்றார். அவர் சென்று பதிமூன்று வருடங்கள் ஆகின்றது. தன்னந்தனியாக வீட்டுவேலை செய்து கஸ்டப்பட்டு பூங்கொடியை வளர்த்திருக்கிறாள்.

பூங்கொடிக்கு எப்போதுமே விடிய விடிய தூங்கியபடியே கனவு காண்பது தான் வழக்கம். ஆனால் இன்று விடிந்து வெகுநேரமாகியும் கனவோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். கண்டிப்பாக ஏதோ நல்ல கனவாகத் தான் இருக்க வேண்டும். அதனால் தான் அம்மா அவ்வளவு திட்டியும் படுக்கையிலிருந்து ஒரு சிறு அசைவு கூட அவளிடம் தென்படவில்லை.

பூங்கொடி பதினொன்னாம் வகுப்பு வரை படித்தாள். அதன் பிறகு வீட்டு சூழ்நிலையும் சரி இல்லை. அம்மாவுக்கு உடம்புப் பெருத்துப் போய், முன்ன மாதிரி ஓடி ஆடிலாம் அவளால் வேலை செய்ய முடியவில்லை.. .. எனவே பூங்கொடி பள்ளிக்கு போவதை நிறுத்தி விட்டு வேலைக்கு போக தொடங்கினாள். அதன் பிறகு அம்மா வீட்டோடு இருந்து விட்டாள். பூங்கொடி இப்போது கெமிக்கல் கம்பெனி ஒன்றில் ஹெல்பராக வேலை செய்கிறாள்.
கனவிலிருந்து விழித்தவளாய் பூங்கொடி பாதி கண்களை மட்டும் திறந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பொறுமையாக எழுந்து உட்கார்ந்து தனக்கு பக்கத்திலிருந்த ஃபேன் ஸ்விட்சை ஆஃப் செய்தாள். அவ்வளவு நேரம் கரகரகர வென சத்தம் போட்டு கொண்டிருந்த ஃபேன் மெதுமெதுவாக தனது சத்தத்தை நிறுத்திக் கொண்டது. கிச்சனில் அம்மா சாமானை உருட்டிக் கொண்டிருக்க, கடிகாரத்தில் நேரத்தை பார்த்த பூங்கொடி “ஏம்மா டைம் எவ்வளவு ஆயிடிச்சி.. என்ன எழுப்ப வேண்டியதுதான..” “ஏன்டி தொண்ட தண்ணி வத்த வத்த காலைல இருந்து கத்திட்டு உன்ன எழுப்ப முடியாம இப்போத்தா உள்ள வந்தேன்.. எழுப்புனா மதிக்குற ஆளாடி நீயி.. அப்படி என்னதான் ஒரு தூக்கமோ ஊர்ல உலகத்துல இல்லாத தூக்கம்..” பூங்கொடி போர்வையை மடித்து பாயை சுருட்ட, “எழுந்து சட்டுபுட்டுனு களம்புற வழிய பாருடி” என அம்மா சத்தமாக முனுமுனுத்தாள்..

கடிகாரத்தை பார்த்தபடியே பூங்கொடி பரபரவென்று கிளம்பிக் கொண்டிருந்தாள். அம்மா அவளுக்கான மதிய உணவை டிபன் பாக்ஸில் போட்டு மூடி வைத்து விட்டு டி.வி. முன் உட்கார்ந்து விட்டாள். இனி இடியே விழுந்தாலும் எழுந்திரிக்க மாட்டாள்.

பூங்கொடி டிபன் பாக்ஸை பையில் போட்டபடி அம்மாவிடம் “நான் கிளம்புறேன்ம்மா” என கூறிவிட்டு வெளியே வந்தாள். வீட்டு வாசலில் காலையில் அம்மா போட்டிருந்த கோலம் தடம் தெரியாமல் அழியும் நிலையில் இருந்தது.. அங்கிருந்த பூவரசமரத்தில் ஒரு காக்கா அமர்ந்து கத்திக் கொண்டே இருக்க பூங்கொடி அதை பார்த்தபடியே வீட்டை கடந்தாள்.

அவளது தெரு முனையில் ஒரு சின்ன மாரியம்மன் கோயில் இருக்கிறது. ஜன்னல் போன்ற இரும்பு கம்பிகளால் தான் அந்த கோயிலுக்கு கதவு இருக்கும். வெளியே இருந்து பார்க்க சிறைக்குள் மாரியம்மன் போல தான் அந்த அம்மன் காட்சி அளித்து கொண்டிருப்பாள். ஏதோ ஆடி மாசம் மட்டும் தான் அந்த கோயில் கதவு திறக்கப்பட்டு கோலாகலமாக அம்மனை அலங்கரித்து திருவிழாவாக கொண்டாடுவார்கள். மற்ற நாட்களில் இப்படி தான் அம்மன் சிறைக்குள் அடைபட்ட பறவை போல கவனிப்பாரற்று உள்ளே இருப்பாள். பூங்கொடி எப்போதுமே இந்த கோவிலை தாண்டி போகும் போது அம்மனை பார்த்து கண்ணை மூடி வாயில் கை வைத்து “ச்சு” என்று சத்தம் மட்டும் இட்டு விட்டு போவாள். அவள் ஏதும் வேண்டிலாம் கொள்ள மாட்டாள். ஆனால் தினமும் இதை தவறாமல் பண்ணி விடுவாள். இன்னைக்கும் இதை நடந்தபடியே செய்து விட்டு நடந்து கொண்டிருக்கிறாள்..

அவசர அவசரமாக கம்பெனிக்குள் நுழைந்தாள் பூங்கொடி. சின்ன கம்பெனிதான். மொத்தமே ஒரு முப்பது பேர் தான் வேலை செய்வார்கள். ஒரு இடத்தில் அனைவரது லஞ்ச் பையும் வரிசையாக இருந்தது. பூங்கொடி தனது லஞ்ச் பையை கீழே வைக்காமல் எதையோ தேடிக் கொண்டே இருந்தாள். பார்த்திபனுடைய லஞ்ச் பையை பார்த்ததும், அவனுடைய பைக்கு பக்கத்தில் தன்னுடைய பையை நெருக்கமாக அணைத்து வைத்து விட்டு சிரித்தபடி திரும்பினாள்.
பார்த்திபன் கெமிக்கல் பாட்டில்களை கொண்ட பாக்ஸை தூக்கி இறக்கி கொண்டிருந்தான். பூங்கொடி அதையே கண்களால் கவனித்தவாறு பழைய பாட்டில்களை கழுவி கொண்டிருந்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த செல்வி பூங்கொடியிடம் “பூவு இன்னும் எத்தன நாளைக்குதாண்டி இப்படி பாத்துட்டே இருக்கப்போற.. புடிச்சி இருந்தா போய் சொல்லிட வேண்டியதுதான..” “புடிச்சி இருக்கு ஆனா பயமா இருக்குடி” என்றாள் பூங்கொடி. “ஏன் பயம்” “இல்ல இது வரைக்கும் யார்கிட்டயும் பேசுனது கூட கிடையாது.. எப்படி பேசறதுனே தெரியலடி” அதற்கு செல்வி “நான் ஒன்னா போய் சொல்லிடட்டுமா நீ லவ் பண்றன்னு..” வேணாம் வேணாம் வேணாம் நானே எப்படியாவது சொல்லிர்றேண்டி.” என கூறி பூங்கொடி வெட்கத்தை ஒளித்து வைக்க முயற்சித்தாள்.

அவளும் இப்படிதான் நீண்ட நாட்களாக பார்த்திபனை பார்த்து கொண்டே இருக்கிறாள். ஏன் எதற்கு என்றெல்லாம் காரணம் தெரியாமல் பூங்கொடிக்கு பார்த்திபனை ரொம்பவும் பிடித்திருந்தது. பார்த்திபனையே சுற்றித் திரிந்து தனது உள்ளுணர்வினை வெளிப் படுத்திட வேண்டுமென முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

பார்த்திபன் இந்த சமயத்துக்காக தான் கொஞ்ச நாட்களாக காத்திருந்தான். யாருமற்ற அவனை மட்டும் கொண்ட தனிமையான வீடு. இருளை உள்ளடக்கிய அறை. இதைதான் எதிர்பார்த்திருந்தான். இப்போது இதோடு மட்டும் தான் இருக்கிறான். எல்லோரும் ஏதோ விசேசத்துக்காக வெளியூர் போயிருந்தார்கள். ஒரு விதமான பதற்றத்தோடு கைகள் நடுங்க பீரோவை திறப்பதற்காக அவன் இழுக்க, அது நீண்ட பெரும் சத்தத்தை எழுப்பியபடி திறந்து கொண்டது. தன் கண்களை கொண்டு மேலிருந்து கீழாக பீரோவை அலசினான். அவனது அம்மாவுடைய பழைய பட்டுப்புடவை ஒன்று அவனையே அறியாமல் அவனது கையில் இருந்தது.

புடவையை கட்டிக் கொண்டு அவனது அறையில் மங்கிப் போய் இருந்த கண்ணாடி முன் நின்றான். அதிசயமாய் கண்ணாடி உருவத்தை தெளிவாக அவனுக்கு காட்டிக் கொண்டிருந்தது. கண்ணாடியில் உருவம் ஒரு அழகான பாவனையை அவன் மீது தெளித்து சென்றது. அவன் அப்படியே தலை குனிய, அப்போது அறையில் சுவரோடு ஒட்டி இருந்த பல்லி ஒன்று “ச் ச் ச்” என்று சத்தம் போட அலறி திரும்பினான்.

பூங்கொடி எப்படியாவது தனது காதலை இன்று அவனிடம் சொல்லிவிட வேண்டுமென முடிவுக்கு வந்து, வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பினாள். தெரு முனையில் இருக்கும் அந்த சிறைக்குள் மாரியம்மனிடம் நின்று கண்களை மூடி வேண்டத் தொடங்கினாள். “நா என் மனசுக்குள்ள இருக்கறத இன்னைக்கு எப்படியாவது அவங்க கிட்ட சொல்லிடனும். அதுக்கு நீங்கதான் எனக்கு தைரியத்த தரணும் என் கூடவே இருக்கனும்மா தாயே” என முடித்து நம்பிக்கையோடு நடக்கத் தொடங்கினாள்.

மாலை ஆனதும் வேலையை முடித்து எல்லோரும் கம்பெனியிலிருந்து வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். பார்த்திபன் தனியாக நடந்தபடி இருக்க, பூங்கொடி தயங்கியபடி அவனருகே வந்து “ம்க்ம் ம்க்ம்” என தொண்டையை கரகரத்தாள்.. பார்த்திபன் அவள் பக்கம் திரும்ப “பார்த்தி ஒரு நிமிசம்” என்றதும் அவன் நிற்க அவளும் அவனருகே நின்றாள். அவள் சொல்ல வேண்டுமென நினைத்த ஒட்டுமொத்தமான அனைத்து வார்த்தைகளையும் சொல்லி விட்டாளா என தெரியவில்லை. ஆனால் தனக்குள் இருந்த காதலை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். பார்த்திபன் அதை முழுவதுமாக கூட கேட்கவில்லை. பதில் ஏதும் கூறாமல் அவனது கால்கள் அங்கிருந்து வேகமாகநகர ஆரம்பிக்க, பூங்கொடியின் கால்கள் அங்கேயே அப்படியே நின்று விட்டன.. ..

பார்த்திபன் தனது அறையில் உள்ள மங்கலான கண்ணாடியின் முன் மங்கலான உருவத்தோடு உட்கார்ந்திருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லை. ஆனால் அதையும் தாண்டிய சோகமும் கோபமும் வெறுப்பும் அறுவறுப்பும் என அனைத்தோடும் வெந்து கொண்டிருந்தான். தனக்குள்ளான மாற்றத்தை மற்றவரிடத்தில் எப்படி சொல்வதென புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். யாருடைய கண்களிலும் படாமல் போய் விட வேண்டுமென்று கூட நினைத்தான். அவனுக்குள் பயம் மட்டும் தான் அவனை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது. அந்த வேதனையை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் அது ஆயிரமாயிரம் தற்கொலைகளின் வலியை விட அதிகமென்று… இந்த உலகத்திற்கே கேட்கும்படி ஓங்கி ஒரு முறை கத்தி விட்டாள் தனது இயலாமைக்கு விடை கிடைத்து விடுமென நினைத்தான். ஆனால் பார்த்திபன் அந்த அறையில் அமைதியாய் அப்படியே அமர்ந்தபடி இருந்தான்.
மறுநாள் பூங்கொடி கம்பெனிக்குள் நுழைந்து பார்த்திபனது லஞ்ச் பையை தேடிக் கொண்டே இருந்தாள்.. கிடைக்கவே இல்லை.. அவளது பையை தனியாக வைத்து விட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள். அவள் அங்கிருந்து நகர்ந்தாலும் அவளால் அந்த சோகத்திலிருந்து நகர முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை உண்மையாகவே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நாட்கள் சில கரைந்தன.. பூங்கொடி.. அவளுக்கு திருமணமாகி இருந்தது. ஒரு பெண் குழந்தை கூட இருந்தாள். அவளது கணவன் குழந்தையோடு கடலில் விளையாடிக் கொண்டிருக்க, அவள் அதை பார்த்து கொண்டு கரையில் உட்கார்ந்திருந்தாள்.

ஒரு திருநங்கை அங்கே பூ விற்றபடி இருந்தாள். அவள் பூங்கொடியிடம் “ஏம்மா பூ வாங்கிக்கோம்மா தலையில எதுவும் இல்லாம இருக்கக் கூடாதும்மா பூ வாங்கி வெச்சிக்கோம்மா.. புது பூவும்மா..” அதற்கு அவள் “ம்.. ஒரு முழம் குடுங்க.” பூவை கொடுத்ததும் பூங்கொடி “எவ்ளோ” என்றாள். “இருவது ரூவா தாம்மா போதும்” பூங்கொடி காசை எடுக்க பர்ஸை திறந்து தேடி கொண்டிருக்க, கொஞ்சம் தூரத்திலிருந்து “ஏம்மா பூவு இங்க வாம்மா” என்று சத்தம் வர, திருநங்கை எழுந்து, அங்கே சற்று பக்கத்தில் திரும்பி “பூவும்மா… பூவு” என்று கூவி கொண்டிருந்த இன்னொரு திருநங்கையிடம் “ஏய் வனிதா இவங்க கிட்ட இருவது ரூவா வாங்கிக்கோடி” என கூறி சென்றாள்.

அவள் பணத்தை தேடி எடுத்து நிமிர்ந்து நீட்ட, வனிதா செய்வதறியாது திகைத்தாள். இது அந்த பூங்கொடியே தான்.. பார்த்திபனை காதலித்த அதே அந்த பூங்கொடியே தான்.. வனிதா யாரை இனி என்றுமே பார்க்கக் கூடாதென்று நினைத்தாளோ அவளே தான்.. வனிதா அங்கிருந்து நகர முயற்சித்தும் முடியவில்லை. அவளது கால்கள் மணலுக்குள் புதைப்பட்டதை போல அங்கிருந்து நகர மறுத்தன.. கண்கள் அவளையும் மீறி சற்று கலங்கின.. .. தன்னை இப்போது முதல்முறையாக புதியவளாக அவளிடம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டுமென தோன்றியது. நீ நேசித்தவன் எனக்குள் தான் இருந்தான். அவன் இப்போது மறைந்து விட்டான் இல்லை இல்லை மரணித்து விட்டான். நான் இப்போது அவளாக இருக்கிறேன் முழுமை பெற்ற அவளாக.. பொய்களை இழந்த உண்மைகளாக.. என அவளது காதுகளுக்கு மட்டும் உரைக்கும்படி கூறவேண்டுமென நினைத்தாள். பிறகு மரணித்தவனை பற்றி கூற என்ன இருக்கிறது. அவன் ஒரு ஜடம். கண்ணாடியில் பிம்பமற்ற உருவம் அவன்.. அவனை பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று அவளுக்கு தோன்றியது. மேலும் அவனை பற்றி கூறி அவளை சங்கடப்படுத்த வேண்டாமென நினைத்தாள். பூங்கொடி, வனிதாவை சந்தேகத்தோடு பார்த்தபடியே அடையாளம் காண முற்பட்டுக் கொண்டு, இருபது ரூபாயை நீட்டியபடியே இருக்க, அதை வாங்காமலேயே வனிதா அந்த இடத்தை கடந்தாள்.

பூங்கொடி, வனிதாவையே பார்த்தபடி இருக்க, வனிதா அவளது கண்களில் படாமல் போய் விட வேண்டுமென தண்ணீரோடு தண்ணீராய் கலந்து அந்த இடத்தை விட்டு கடந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.. .. .. ..

Related Posts