அறிவியல்

புளூட்டோவைப் பற்றி சில தகவல்கள்

நாசாவிலிருந்து ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன் புளூட்டோவை நோக்கி நியூ ஹாரிசான் (New Horizon) என்ற விண்கலம் ஏவப்பட்டது. அது இந்த ஆண்டு ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி 17.19 மணிக்கு புளூட்டோவிலிருந்து 12,472 கி.மீ. தூரத்தைச் சென்றடைந்தது. புளுட்டோ பற்றி ஏற்கனவே தெரிந்த தகவல்கள் போக மேலும் பலவற்றைத் திரட்டவே இந்தப் பயணம். இத்தருணத்தில் புளூட்டோ பற்றி ஏற்கனவே தெரிந்த சில விவரங்களை நினைவுகூர்வோம்.

  •  2006ஆம் ஆண்டுவரை சூரியனிலிருந்து மிக அதிக தூரத்தில் இருக்கும் ஒன்பதாவது கிரகமாக புளூட்டோ கருதப்பட்டு வந்தது. அந்த ஆண்டில்  சர்வதேச வானியல் சங்கத்தினால் அது கிரகம் அல்ல, குட்டிக் கிரகம் (dwarf planet) என்ற மறுவரையறைக்கு உள்ளானது. (இது பற்றி 2006ஆம் ஆண்டிலேயே அறிவியல் கதிர் பகுதியில் பார்த்திருக்கிறோம்).  அளவில் புளூட்டோ சந்திரனைவிடச் சிறியது.
  •  1905ஆம் ஆண்டில் அதுவரை தெரியாத ஒரு கிரகத்தின் புவிஈர்ப்புவிசையின் காரணமாக நெப்டியூன், யுரேனஸ் ஆகிய இரு கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையில் சில இடையூறுகள் ஏற்படுவதாக அமெரிக்க வானவியலாளர் பெர்சிவால் லோவெல் கணித்தார். அந்த கிரகத்தின் இருப்பிடத்தை அரிசோனாவிலிருந்த வானவியல் மையத்தின் மூலம் தேடத் தொடங்கினார். டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி அந்த கிரகத்தின் புகைப்படத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் தன் முயற்சியில் வெற்றிபெறுவதற்கு முன் 1916ஆம் ஆண்டில் இறந்து போனார்.
  • 1929ஆம் ஆண்டில் 22 வயதே ஆன அமெரிக்க வானவியலாளர் கிளைட் டாம்பாக் இந்த முயற்சியைத் தொடர்ந்தார். மேலும் அதிக சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி 1930 பிப்ரவரி 18 அன்று புதிய கிரகத்தைப் படம் பிடிப்பதில் வெற்றியடைந்தார். அந்த கிரகத்திற்கு புளூட்டோ எனப் பெயரிடப்பட்டது.
  • புளூட்டோ சூரியனைச் சுற்றிவரும் பாதை மற்ற கிரகங்களின் சுற்றுப்பாதையிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது. சூரியனுக்கு மிக அருகில் இருந்தபோது சூரியனிலிருந்து 440 கோடி கி.மீ. தூரத்திலும் மிக அதிக தூரத்தில் இருந்தபோது 740 கோடி கி.மீ. தூரத்திலும் அதன் சுற்றுப்பாதை இருந்தது.
  • சூரியனைச் சுற்றிவர புளூட்டோவுக்கு 248.54 ஆண்டுகள் பிடிக்கும். புளூட்டோ சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப்பாதையின் தளத்திலிருந்து அதன் அச்சு 17 டிகிரி சாய்ந்திருக்கும். இந்த அளவு சாய்மானம் சூரியமண்டலத்தில் உள்ள மற்ற எந்த கிரகத்திற்கும் கிடையாது.
  • பூமிக்கும் புளூட்டோவுக்கும் இடையில் உள்ள தூரம் 430 கி.மீ. தூரத்திலிருந்து 750 கி.மீ. வரை மாறுபடும். புளூட்டோவின் பொருட்திணிவு பூமியின் பொருட்திணிவில் 500இல் ஒரு பங்குதான். புளூட்டோவின் ஈர்ப்புவிசை பூமியின் ஈர்ப்புவிசையில் எட்டு சதவீதம்தான். பூமியில் உங்கள் எடை 50 கிலோகிராம் எனில், புளூட்டோவில் உங்கள் எடை 4 கிலோகிராம்தான் இருக்கும்! * புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டபோது நெப்டியூனைவிட அதிக தூரத்தில் இருந்த ஒரே கிரகம் அதுவாக இருந்தது. ஆனால் 248 ஆண்டுகளுக்கொரு முறை அது நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் வந்து 20 ஆண்டுகள் வரை இருக்கும். அந்த நேரங்களில் சூரியனிலிருந்து நெப்டியூனைவிட குறைந்த தூரத்தில் இருக்கும்.
  • புளூட்டோவுக்கு சரோன் (charon) என்ற துணைகிரகம் இருப்பதை 1979ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் கிறிஸ்டி கண்டுபிடித்தார்.

நியூ ஹாரிசான் தரப்போகும் மேலும் பல தகவல்களுக்காகக் காத்திருப்போம்.

பேராசிரியர் கே. ராஜு

Related Posts