இலக்கியம்

புலிகளின் தமிழீழம் என்பது முஸ்லிம்களற்ற தனிநாடு…

 journalist, poet, writer and activist from Eravur, in Sri Lanka’s Eastern Provinceஸர்மிளா செய்யித் (1982)  இலங்கை மட்டகளப்பு பகுதியின் ஏறாவூரில் பிறந்தவர் ஆவார். கல்வி முகாமைத்துவம், இதழியல், உளவியல் துறைகள் கற்றுள்ளார். சட்டக் கல்வி பயின்று வருகிறார். பெண் விழிப்பு மற்றும் சமூக அபிவிருத்திகளில் ஈடுபட்டு வருகிற அதேவேளையில் புனைவுகளிலும் புனைவற்ற பதிவுகளிலும் தீவிரமாக கவனம் செலுத்திவரும் ஸர்மிளா  இலங்கை  அரசாலும்  ஆயுத குழுக்களாலும் மதநிறுவனங்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இவரது முதல் கவிதை தொகுப்பான சிறகு முளைத்த பெண் 2012டிலும் இரண்டாவது கவிதைதொகுப்பான ஒவ்வா 2014லிலும் வெளியாகியிருக்கிறது.
2013ல் வெளியான இவரது உம்மத் நாவல் போர்க்கால அவலத்தையும் போருக்கு பிந்தைய மீளமைப்பு வாழ்வையும் ஒரு இஸ்லாமிய பெண்ணிய பார்வையில் நம்மோடு பேசுறது. இது இவரது முதல் நாவலாகும். 2013 வது ஆண்டுக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான பரிசையும் இந்நாவல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நாவல் குறித்தான சில கேள்விகளுக்கு ஸர்மிளா நம்மோடு பகிர்ந்து கொண்டவை….

1. தவக்குல், யோகலட்சுமி, தெய்வானை என மூன்று பேருமே காதல் வயப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அந்தக் காதலின் மெல்லிய தருணங்கள் குறித்து…..

வாழ்வின் ஆதாரம் காதல். வாழ்வின் தூரத்தை நிர்ணயிக்கப் போதுமான அளவு கோளாக இருப்பதுவும் காதல். காதலுக்கு ஆண்பெண் பேதமில்லை. அதுகுடும்பப்பெண், போராளி, படித்தவள், படியாதவள், சமூகஆர்வலர், ஆர்வலரில்லாதவர் என்பதான மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது. இயற்கையின் காதல் நியதியை தவக்குல், யோகலட்சுமி, தெய்வானை மூவரும் எதிர்கொள்கிறார்கள்.

2. சிங்கள பேரினவாத அரசும்,விடுதலைப்புலிகளும் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காக அப்பாவி மக்களை கொன்றுகுவித்ததன் மூலம் எதை நியாயப்படுத்த முடிகிறது அவர்களால்?

எதையுமே நியாயப்படுத்த முடியவில்லை, அநியாயத்தைத் தவிர. அதிகாரத்தை நிறுவுவதற்கோ, அல்லது தக்கவைப்பதற்கோ ஆயுதப்பிரயோகம் செய்கின்ற தேவை ஏற்படுகின்றபோது, மக்களைக் கொன்றுகுவிப்பது தவிர்க்க முடியாத அநியாயமாகி விடுகின்றது என்பதைத்தான் இலங்கையின் அரசு – புலிகள் யுத்தம் நிரூபித்திருக்கிறது. நியாயங்கள் எதையும் நியாயப்படுத்த முடியாதபடியே மக்களைக் கொன்றுகுவித்த கோரயுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆயினும், யுத்தத்தின் இறுதியில் 32 நாட்களில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகள், அரசபடையினர் முதலானோரின் தொகை, 32 ஆண்டுகால இனப்பிரச்சினையின் போது உயிரிழந்த மக்களின் தொகையைவிட அதிகமாகக் காணப்படுகிறது.

3. போருக்குப் பிறகான இன்றைய சூழலில் தமிழர்கள் என்கின்ற ஒற்றை அடையாளத்திற்குள்ளாக இஸ்லாமியர்களை பொருத்தி வைக்க இயலுமா?

முடியாது. இலங்கையைப் பொருத்த வரையில், வரலாற்று ரீதியாக தமிழ் இஸ்லாமியர்களின் தாய்மொழியென நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிற அதேநேரம், அவர்கள் எக்காலத்திலும் மொழியைவிட மதத்துக்கே முன்னுரிமை கொடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்கள் தமிழைநேசித்து வரும் அதேநேரம், மதத்தைச் சுவாசித்து வருகிறார்கள்.

தமிழ் பேசுகின்ற ஏனைய இந்து, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் மதத்தையும் தங்கள்மொழியையும் சமாந்தரமாக நேசிப்பதையும், சுவாசிப்பதையும் காண முடிகின்றது. ”சைவமும் தமிழும் இருகண்கள்” என்பதான ஆறுமுகநாவலர் போன்றோரின் கடந்த நூற்றாண்டுக் கருத்துக்கள் தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் இணைத்ததாக மட்டுமே காட்டப்படுகின்றது.

ஆக தமிழ்பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ”தமிழர்கள்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தங்களைப் பொருத்திக்கொள்ள எக்காலத்திலும் சித்தமாயிருக்க, முஸ்லிம்கள் எக்காலத்திலும் ”தமிழர்கள்” என்ற அடையாளத்திற்குள் பொருத்திக் கொள்ளவிரும்பியவர்களாக இருந்ததில்லை.

தமிழர்களின் வன்முறை ஊடான இனத்துவ அரசியல், முஸ்லிம்களுக்குத் தங்களது தனித்துவமான அடையாள அரசியலுக்கான வாசலைத் திறந்துவிட்டது. அந்த அரசியலை யுத்தம் முடிவடைந்த பின்னும் தொடர்வதற்கு முஸ்லிம்கள் விரும்புவதால், ”தமிழர்கள்” என்கின்ற ஒற்றை அடையாளத்திற்குள் முஸ்லிம் களைப்பொருத்தி வைப்பது இயலுமானதாக இருக்காதென்பதே எனது புரிதல்.

4. போராளியாகவும், சமூக செயற்பாட்டளராகவும் ஒருபெண் இருந்தபோதிலும் அவளால் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள முடியவில்லைதானே…?

யதார்த்தம் அப்படியாகத்தான் உள்ளது. தன்னை நிலைநிறுத்தக் காலந்தோறும் பெண் போராடுகிறாள். ஆனால் அவள் ஒருபோதும் சோர்ந்து விழுவதில்லை.

5. முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை புலிகள் எங்கிருந்து கட்டமைக்கத் தொடங்கினார்கள்?

யுத்தத்துக்கு முன்பு, விசேடமாகக் கிழக்கு மாகாணத்தில் ஓர் உள்ளார்ந்த பொருளாதார முரண்பாடு தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களுக்கு மிடையிலும் இருந்தே வந்துள்ளது.  இந்த மெல்லிய முரண்பாடு கொண்ட சமூகத்துக்குள் இருந்து தான் புலிகளுக்கு உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த உறுப்பினர்கள் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குள் அமிழ்ந்து போனதால், போராட்டத்தில் மனிதாபிமானமே புறக்கணிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம்களுக்கிடையிலான சின்னச்சின்ன உள்ளுர் கலவரங்கள் வெளிப்படத் தொடங்கின. 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் முடிவடைந்த பின் தொடங்கப்பட்ட யுத்த காலத்திலிருந்து அரசுக்கெதிரான போரின் போது கிழக்கு மாகாண புலி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு புலிகள் அமைப்புக்குத் தேவையான ஒன்றாகவும், புலிகள் அமைப்பினால் புறந்தள்ள முடியாத ஒன்றாகவும் இருந்தது. இக்காரணங்கள் புலிகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கிய வடக்குப் புலித் தலைவர்களால் கிழக்குப் புலித் தலைவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் சென்றது.

அதற்குப் பிறகு புலிகளின் தமிழீழம் என்பது, ”முஸ்லிம்களற்ற தனிநாடு” என்கின்ற மிக மோசமான கோட்பாட்டு ரீதியான மாற்றத்திற்குள்ளாகியது.

முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்களப்பெரும்பான்மை அரசியலோடு தங்களை அடையாளம் காட்டியமை பற்றிய கோபமும் இம்மாற்றங்களுக்குக் காரணமாகியிருந்தது. இந்த ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார, சமூக விடயங்களின் காரணமாகவே புலிகள் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியைக் கட்டமைக்கத் தொடங்கினர். முஸ்லிம்களையும் தனி இயக்கமாகப் நோக்கத் தொடங்கினர். இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் போது அந்த இயக்கங்களை அழிப்பதற்கு புலிகளால் எவ்வாறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதோ அதேபோல முஸ்லிம்களையும் ஒரு இனமாகவோ, ஒரு மதம் சார்ந்த சமூகமாகவோ அங்கீகரிக்காது ஆயுதங்களைப் பயன்படுத்தி அழிக்க முயன்றனர்.

6. ஒரு சமூக செயற்பாட்டாளராக இயங்கக் கூடிய தவக்குல் போன்ற பெண்களுக்கு இச்சமூகம் கொடுக்கும் அவப்பெயரிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லையா?

சமூக மதிப்பீடுகள் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது மாறக்கூடியது. உறுதி, நம்பிக்கை, துணிவு இவையெல்லாம் நேர்கொண்டிருக்கிறபோது அவமதித்த சமூகமே கொண்டாடுவதும், மீள்வதற்கு கதவுகளைத் திறந்துவிடுவதும்  நிகழ்வதுண்டு.இன்னொரு உண்மையும் உண்டு. அது, அவமானங்களைக் கண்டு துவண்டு போகிற பெண்கள் மூழ்கிப்போக நேர்வதுடன்,அவமானங்களை எதிர்கொள்கிறவர்கள் தான் அதிலிருந்து மீள்கிறார்கள் என்பதே.

7. போராளிகள் மீண்டும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப நினைக்கும் போது அவர்களை பெற்றவர்களே புறந்தள்ளுவதும் அவமானப்படுத்துமான செயல்களுக்குப் பின்பான உளவியல் குறித்து……

புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தவர்களின் சமூகப் பிண்ணனி குறித்த தெளிவே இந்தக் கேள்விக்கான பதிலை அடைய உதவும் என நம்புகிறேன். புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாகப் பார்க்கையில் கீழ் மத்திய வர்க்கத்தினராகவே இருந்தனர். பொருளாதார வசதிபடைத்த தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு ஆதரவு இருந்ததே தவிர,  நேரடியாகப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மிகக்குறைவானவர்களாகவே இருந்தார்கள். இந்தப் பிண்ணனியைக் கொண்டவர்கள் போர் முடிவுக்கு வந்தபின்னர் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகையில் இரண்டு விதமான சவால்களை எதிர்கொள்கின்றர். ஒன்று பொருளாதார ரீதியானது. மற்றையது சமூகம் சார்ந்தது.

போராட்டத்திலிருந்து திரும்பியவர்களை பெற்றோர்கள் புறக்கணிப்பதற்கு, அவர்களைச் சுமையாகக் கருதுவதே காரணம். இளம் பெண் போராளியெனில் திருமணம் பெரும் சுமையாகப் பார்க்கப்படுகின்றது. காணி, வீடு,  திருமணச் செலவு, சீதனம் என்று ஈடுகட்ட முடியாதவற்றைச் சுமப்பதைக்காட்டிலும், நீண்ட காலம் குடும்பத்தை விட்டு விலகியிருந்து இணைகின்றவரை புதிய ஒருவராகக் கருதிப் புறப்பணிக்கிற மனப்போராட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மற்றுமொரு உளவியல் போராட்டத்திற்கு காரணமானவர்கள் மீதான தார்மீகக் கோபம். அதுவே புறக்கணிப்பாக வெளிப்படுகிறது. போராடி இவர்கள் அடைந்ததென்கின்ற  வலியுடனான ஏமாற்றம், – போராட்டத்தில் இழுத்துவிட்டவர்களால் எதிர்கால வாழ்விற்கான உத்தரவாதமான சூழல் உருவாக்கித்தரப்படவில்லை என்கிற அதிருப்தி, – போராட்டத்தில் பங்காளிகளாக ஆக்கிவிட்டவர்கள்தான் போராட்டம் முடிந்த பின்பும் போராளிகளின் பொறுப்புதாரிகள் என்ற எண்ணக்கூடிய மனப்பாங்கு என்பதாகப் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் பல்வேறு மனப்போராட்டங்கள் இருக்கின்றன.

8. என்னதான் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருந்தும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும்போது ஆறுதல் தருகிற மனங்களைக் காட்டிலும் உத்வேகம் ஊட்டுகிற ஒருவரையும் காண முடியாதது தான் சமூக எதார்த்தமா?

தவக்குல் எதிர்கொண்ட யதார்த்தம் அப்படியாக இருந்தது. அது ஒட்டுமொத்தப் பெண்களின் அனுபவமாகப் பார்க்கப்பட வேண்டியதில்லை!

9. போருக்குப் பிந்திய சூழலில் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்த அவசியமும், உங்களது மதிப்பீடும்.

தொண்டு நிறுவனங்கள் இரண்டு வகையாகப் பங்காற்றுகின்றன. ஒன்று உள்ளுர் நிறுவனம். மற்றையவது சர்வதேச நிறுவனம். இலங்கையைப் பொறுத்தவரையில் தொண்டு நிறுவனங்களின் வருகை சுனாமிக்குப் பின்னரே அதிகரித்தது. எந்தவோர் அனர்த்தமாக இருந்தபோதும் தொண்டு நிறுவனங்களின் தேவைப்பாடு அதிகளவில் உணரப்படுகின்ற ஒரு நிலமாக இலங்கை பிராந்தியம் முழுவதும் இருந்து கொண்டிருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்டவர்களில் அரச உதவியைப் பெற்றவர்களைக் காட்டிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்றவர்களும் அதன் துணையுடன் நிமிர்ந்தவர்களுமே இன்று அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நலனோம்பு செயற்பாடுகளுக்கு அப்பாலான கண்ணோட்டமென்பது முக்கியமாகப்படுகின்றது. அதாவது முன்னர் கூறியதுபோல தொண்டு நிறுவனம் உள்ளுராயினும், சர்வதேசம் சார்ந்திருப்பினும் நிதி வெளிநாடுகளிலிருந்தே பெறப்படுகின்றது. ஆகவே, தொண்டு நிறுவனங்களின் செயற்பாடென்பது பன்னாட்டு தலையீடு மற்றும், கண்காணிப்பையும் கட்டமைப்பாகக் கொண்டது. இது அரசியல் சமூக, கலாசார ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தப் போதுமானது.

மற்றொரு புறம், தொண்டு நிறுவனங்களில் தலைமை வகிப்பவர்கள் ”வைட் கொலர்ஸ்” என்று சொல்லக்கூடிய உயர்மட்டத்தவர்கள். இவர்கள் அடிமட்ட மக்களின் இயல்பு வாழ்வோடு கலந்து செயற்படுவதில் தோல்வியடைந்தவர்கள்.இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களையோ தேவை உடையவர்களையோ இனங்காண முடிவதில்லை. பயனாளர்கள் பட்டியலில் பல உரிமை மீறல்கள் இடம்பெற இடம்முண்டு. ஆனபோதும், குறித்த செயற்றிட்டத்தைத் திட்டமிட்ட காலத்திற்குள் முடிப்பதில் காண்பிக்கப்படும் கவனம் பயனாளர்கள் தெரிவில் காண்பிக்கப்படுவதில்லை.

தொண்டு நிறுவனங்கள் அரசியல் சார்பற்றவை என்று சொல்லப்பட்டாலும் அவை ஏதேனுமொரு அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கவே செய்கின்றன. அத்தோடு தொண்டு நிறுவனங்களுக்கிடையிலான ”அரசியல்” மக்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகளில் பாதிப்புச் செலுத்துவதும் நிகழ்கிறது.

10. சமூகத்தின் மீதான கோபம், வஞ்சிக்கப்பட்ட எளிய மனிதர்கள் மீதான கருணை, குடும்பத்தின் மீதான கட்டற்ற நேசம் இவைகள் தவக்குல்லுக்கு எங்கிருந்து சாத்தியமானது?

இவை பொதுவான மனிதகுணாம்சங்கள். மிகச்சிலராலேயே தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துவது சாத்தியமாகின்றது. அந்த மிகச்சிலருள் தவக்குல் இருப்பதனால் இருக்கலாம்!

11. போருக்குப் பிந்தைய இன்றைய சிங்கள பேரினவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், தமிழ் குறுந்தேசியவாதம், இவைகளுக்கு மத்தியில் அங்குள்ள எளிய மனிதர்களின் வாழ்க்கைச்சூழல் என்னவாக இருக்கின்றது?

போரற்ற சூழ்நிலை யுத்தஅழிவுகள், மரணங்கள், முதலான அவலங்களிலிருந்து சகல மக்களுக்கும் விடுதலை வழங்கியிருக்கின்ற போதிலும், அம்மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித நிறைவையும் தரவில்லை. போர்ச்சூழலிலான மரணங்கள் இல்லாத போதும் அச்சம் நீங்கியதான சூழல் ஏற்படவில்லை. கெடுபிடிகளின் ஆதிக்கம் ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி தலைகாட்டுவதோடு, போர்கால அகதிகளுக்கான விமோசனம் கிட்டவில்லை. அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் நாட்டுக்குள் மீளவந்துகுடியேறவில்லை. நிறைவான புனர்வாழ்வு ஏற்பாடுகள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. விவசாயிகள், மீனவர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் அன்றாடக் கூலிகள் முதலான எவரது வாழ்விலும் யுத்தம் முடிவுற்றமை வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை.

இனவாதம் அப்படியே இருக்க மதவாதசெயற்பாடுகள் மேலோங்கி வருகின்ற சூழ்நிலை, வஞ்சிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சிறுபான்மை இன இந்து, கிறிஸ்தவ  முஸ்லிம் மக்களின் மதங்களின் மீதான பெருமதவாதத்தின் திட்டமிட்ட வன்முறை யுத்தத்தின் பின்னரான காலத்தில் மெல்லெனத் தொடங்கி தற்போது ஆங்காரமாக எரியத்தொடங்கியுள்ளது. மேலும் பாய்ச்சல்களுக்கான வாய்ப்பு உள்ளது என்ற வகையில் சிறுபான்மை மக்களுக்குள் பதட்ட நிலை காணப்படுகின்றது.

12. விரும்பியவன் சிங்கள ராணுவத்தினனாக இருக்க, தெய்வானையைப் போன்ற பெண்களுக்கு இயக்கத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் எதுவிதமான கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டிருப்பார்கள்?

விலையாக  உயிரையும் தரும் நிலையை எதிர்கொள்வதே இறுதியாக நிகழக்கூடியது. இப்படியான மரணதண்டனைகள் இருதரப்பிலும் சாத்தியமானதே.இராணுவ புலனாய்வுக்காக புலிகள்தரப்புடன் இயங்கக்கூடியவர்கள், – புலிகள் புலனாய்வுக்காக இராணுவ தரப்பில் இயங்கியவர்கள் ஆகியவர்களால் எல்லாவிதமான தகவல்களுமே பரிமாறப்படும்.இப்படியான காதல் ”கிசுகிசு”க்கள் கசிவதை மாபெரும் இனத்துரோகமாகவே புலிகளும் இராணுவத்தினரும் கருதினர். புலி உறுப்பினரில் காதல் கொண்டதால் இராணுவன் இராணுவத்தினராலேயே கொல்லப்படுவதும், இராணுவனில் காதல் கொண்டிருந்தால் புலி உறுப்பினர் புலிகளாலேயே கொல்லப்படுவதும், சித்திரவதை செய்யப்யப்படுவதும் மிகச்சாதாரண இராணுவ கடமைகளாகவே கருதப்பட்டன. இதனாலேயே தலைமறைவாகி வாழ்ந்த, நாட்டை விட்டுத் தப்பியோடிய உறுப்பினர்கள் இருதரப்பிலும் உள்ளனர்.

13. அண்டை அயலாரிடம் தாமரை இலைத் தண்ணீர் போலவே தவக்குல்லின் தந்தை ஹபீப் இருக்க வேண்டிய அவசியம் தான் என்ன?அவர் அவ்வாறு இருக்கிறாரா, அல்லது அச்சமூகம் அவ்வாறு இருக்கிறதா?

இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் பெண் பிள்ளைகளின் தந்தையொருவர் தன் ஒவ்வொரு காரியங்களையும் கவனித்து நிதானித்து செய்யவே பழக்கப்பட்டவராகிறார். மகளுக்கு மாப்பிள்ளை தேடுகையில் தான் தலைநிமிர்ந்தவராக இருப்பதற்கு அவர் அப்படிக் கவனத்துடன் இருக்க வேண்டிய தேவையுள்ளது.  இஸ்லாமிய சமூகத்தில் பெண் ஒழுக்கம் எனப்படுவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரது நடத்தைகளைக் கொண்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

# இது அக்டோபர் மாத “புத்தகம் பேசுது”  இதழில் வெளியாகியிருக்கும் நேர்காணலின் முழு தொகுப்பு …

Related Posts