இதழ்கள் இளைஞர் முழக்கம்

புறப்படுவோம்.. அவர்கள் வருகிறார்கள் – அகிலன்

 

கோமாதா வாழ்க என முழக்கமிடுவது போதாது. பசுவை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். 2017 ஏப்ரல் 30 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க, – ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசிய உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளார். ஆம் அவர்கள் வெறுமனே முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்த நிலையைத் தாண்டி இப்போது வெளிப்படையான செயல்களில் இறங்குகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் அதிக வலுவோடு ஆட்சியமைத்த பிறகு, தோல்வியடைந்த பிறகு கூட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியமைக்க முடியும் என்பதை கோவாவில், மணிப்பூரில் உணர்ந்த பிறகு அவர்களின் வேகம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானின் அல்வாரில் இஸ்லாமிய இளைஞர்களை நடுரோட்டில், பட்டப்பகலில் சங் பரிவாரங்கள் அடித்து உதைத்த காட்சி ஊடகங்களில் வெளியாகி நாட்டையே உலுக்கியது. அதில் ஒரு இஸ்லாமியர் இறந்தும் போனார். மொத்த எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து முழங்கிய போதும் பா.ஜ.க.வோ, பிரதமரோ அமைதியை மட்டுமே பதிலாக்கினர். இதன் பொருள் என்ன? ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கும் அமைதி இல்லையா இது. தாக்குதலுக்கு அளிக்கப்பட்ட மறைமுக ஒப்புதல் இல்லையா இது?

இந்த ஒப்புதல் மவுனம் கொடுத்த தைரியத்தில் தலைநகர் டெல்லியிலும் இத்தகைய தாக்குதல் அரங்கேறியிருக்கிறது. மறுபடியும் கண்டனங்கள், மறுபடியும் கள்ள மவுனம். இது ஏதோ ஆங்காங்கே நடக்கிறது எனக் கருதி விட முடியாது. நாள்தோறும் இத்தகைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தொடக்கத்தில் இது என்ன என வியப்போடு தலைப்புச் செய்தியான இத்தகைய செய்திகள் அப்புறம் முக்கிய செய்திகளாகி, மாநில செய்திகளாகி, பெட்டிச் செய்திகளாகி விடுகின்றனர். இதையே அவர்கள் விரும்புகிறார்கள். இது வழக்கமான ஒன்று தான் என்றும், அவங்க தான் அடிக்கிறாங்கன்னா, இவங்களும் ஏன் அந்த மாட்டுக்கறியவே திங்கணும், நாட்டுல திங்கிறதுக்கு வேற கறியே இல்லையா என பொதுப்புத்தியை கேட்க வைக்கும் தந்திரம் இது. பிரச்சனை என்பது வெறும் மாட்டிறைச்சி சார்ந்தது அல்ல. இது ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல். உணவு உரிமைக்கு எதிரான தாக்குதல். நான் என்ன உண்ண வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது இப்போது நாக்பூரில் தீர்மானிக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார். பசு பாதுகாவலர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். சட்டத்தை மீறி செயல்படக் கூடாது என்கிறார். அதே வேளையில் நாடு முழுமைக்குமான பசுவதைத் தடைச்சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறார். உரிய சட்டம் இல்லாததாலேயே பசு காவலர்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என நியாயப்படுத்துகிறார். ஆம் அவர்கள் தங்கள் விருப்பங்களை சட்டப்பூர்வமானதாக்க முனைகிறார்கள்.

உத்திரபிரதேசத்தில் ஆதித்யநாத் முதலமைச்சரானதையடுத்து முதல் வேலையாக கறிக்கடைகள் மூடப்பட்டன. திருமண வீடுகளில் மாட்டிறைச்சி சமைக்க கூடாது என தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி பெறுவது போல விழாக்களில் என்ன சமைக்க வேண்டும் என காவல்துறையிடம் அனுமதி கேட்கும் நிலை உள்ளது. அங்குள்ள இஸ்லாமிய குடும்ப திருமணமொன்றுக்கு கோழிக்கறி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என காவல்துறை எழுத்து பூர்வமாகவே உத்தரவு போடுகிறது.

மாட்டிறைச்சி மட்டுமல்ல கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தங்கள் அதிகாரத்தை நிறுவ முயல்கிறார்கள். மத்திய பிரதேச மாநில கிராமம் ஒன்றில், தலித் குடும்ப திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்தியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கசாதி திமிர். தலித்துகளின் குடிநீர் ஆதாரமான கிணற்றில் மண்ணென்ணெய்யை கலந்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளது. முத்தலாக்கிற்காக பிரதமர் தொடங்கி அனைத்து பாஜகவினரும் ஒப்பாரி வைக்கின்றனர். இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என முழங்குகின்றனர். இவர்கள் முழங்க தொடங்கியவுடன் அது தினந்தோறும் செய்தியாக்கப்படுகிறது. போஸ்ட் கார்ட் மூலம் முத்தலாக், வாட்ஸ் அப் மூலம் முத்தலாக், ஸ்பீட் போஸ்ட் மூலம் முத்தலாக் என விதவிதமாக புகார்கள் எழுகின்றனர். மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, ஆனால் அழுவது ஓநாய்கள் என்னும் போது தான் சகிக்க முடியவில்லை. 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போதும், இன்னபிற கலவரங்களின் போதும் இவர்கள் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை எப்படியெல்லாம் பாதுகாத்தார்கள் என நாம் சொல்லி நாட்டுக்கு தெரியவேண்டியதில்லை.

முற்போக்கு இயக்கங்களும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரும் முன்னெப்போதையும் விட தீவிரமாக களமிறங்க வேண்டிய காலம் இது. போராட்டங்கள் வீதியிலும் கருத்தியல் தளத்திலும் அதிகரிக்க செய்வதே இதற்கு ஒரே தீர்வு. அந்த வகையில் தமிழகம் ஓர் முன்னோடி மாநிலம், மீத்தேன் தொடங்கி ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்சனை என சகலத்திலும் மத்திய அரசை உலுக்கியெடுக்கும் பெருமைக்குரியவர்கள் தமிழக இளைஞர்கள். இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் இத்தகைய எதிர்ப்புகளை. அந்த அரசியல் கடைமையும், சமூகப் பொறுப்புணர்வும், செய்வதற்கான ஆற்றலும் மற்றெல்லொரையும் விட இடதுசாரி அமைப்புகளுக்கு சற்று அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையாற்றுவோம். அதே வேகத்தோடும்.. விவேகத்தோடும்..

Related Posts