இதழ்கள் இளைஞர் முழக்கம்

புறக்கணிக்கப்படும் அம்பேத்கரும், நசுக்கப்படும் இந்திய அரசமைப்பு சட்டமும் – திருமூர்த்தி

 

இரண்டு ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள் தம் உடல் பொருள் எல்லாவற்றையும் ஆகுதியாக்கிக் கொண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுகிற பொழுது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிடித்த ஆன்மா என்னவென்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 226 மற்றும் 32 ஆகும், காரணம் ஏழை எளிய மக்களின் உரிமைகள் அரசாங்கத்தினால் நசுக்கப்படுகிறபொழுது, உழைக்கிற கடைகோடி சாமானியன் கூட அடிப்படை உரிமை மீறலுக்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினையோ அல்லது உச்சநீதிமன்றத்தினையோ அணுகலாம் என அந்த சரத்துகள் வழிவகை செய்கிறது என தம் கருத்தினை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். அப்படிபட்ட அடிப்படை உரிமைகளில் முதல் உரிமையாக வழங்கப்பட்டிருக்கிற உரிமை பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஆகும்(உறுப்பு 19(1) (அ)) ஆனால் இன்று இந்திய அரசமைப்பு சட்டம்தான் இந்தியாவை வழி நடத்தும் புனிதநூல் என உரையாற்றுகிற பாஜக தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பேச்சு சுதந்திரத்தையும், தனிநபர் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைதுகள், சிறைகள், காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து இந்திய அரசமைப்புச் சட்ட உரிமைகளை ஒடுக்குகிறது.

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா மரணம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கு இவையெல்லாம் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அல்லது பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை, உரிமைகளை புறந்தள்ளுகிற அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிற சமூக உணர்வுள்ள இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அண்மை உதாரணங்கள்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் “தான் கற்ற கல்வி சமூகத்துக்கு பயன்படவில்லையெனில் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்து விடுவேன்” எனக் கூறினார். அரசியல் அறிவு கொண்ட இளைஞர்கள் தம் கல்லூரி வளாகத்தில் அம்பேத்கரின் தத்துவத்தையும், தந்தை பெரியாரின் தத்துவத்தையும் பேசுவதற்குக்கூட தடை போட்டு அந்த கருத்துக்களை விவாதத்திற்கு உள்ளாக்குகிற மாணவர்களை கல்லூரியிலிருந்து நீக்கி பழிவாங்குகிறது. மக்களுக்கு நன்மை பயக்கிற கருத்துகளை கல்வி கற்ற இளைஞர்கள் பரப்புவதற்கு, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிற அரசின் கொள்கை செயல்திட்டத்தை மக்களிடத்தில் வெளிகொணர்வதற்குக்கூட முட்டுக்கட்டை போடுகிறது.

இந்திய அரசமைப்பின் பகுதி நான்கில் உள்ள உறுப்புகள் 36 முதல் 51 வரையிலான சரத்துகள் அரசுக்கு வழிகாட்டும்  நெறிமுறைகள் பற்றி கூறுகிறது. அதன் பொருள் என்னவென்றால் “சட்டங்களை இயற்றும் போதும், கொள்கைகளை உருவாக்கும் போதும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென்பதாகும். அந்த நெறிமுறைகளின் அடிப்படை நோக்கம் இந்திய அரசமைப்பு மக்கள் நல அரசு என்ற கருத்துப் படிவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதாகும். இதனை உச்சநீதிமன்றம்கூட கேசவானந்த பாரதி – எதிர் – கேரள அரசு என்ற, வழக்கில் அறிவுறுத்தியுள்ளது. முகப்புரையில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்ட கூற்று.“இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சி குடியரசு என்பதாகும்.”

சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவை சமூக பொருளாதார மற்றும் அரசியல் நீதி என்ற தலைப்பில் கொள்கைகளை உள்ளடக்கியது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் ஜனநாயகத்தையும், பொருளாதார ஜனநாயகத்தையும் உள்ளடக்கியது. ஆனால் இன்று அரசின் கொள்கை திட்டங்கள், அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

கார் கம்பெனிகளுக்கு பொருளாதார வரிச் சலுகையையும், கழனியில்  பாடுபடுகிற விவசாயிகளுக்கு சவப்பெட்டியையும் தருகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒரு உதாரணமாகும். இங்கே கோடி, கோடியாய் மக்கள் வரிப்பணத்தினை கொள்ளையடித்த சாராய வியாபாரி மல்லையாவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதே சமயம் விவசாயத்திற்கு டிராக்டர் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் போன விவசாயி பாலன் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஜனநாயகத்திற்கு எதிராகத்தான் ஆளும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன.

அரிசியின் விலை உயர்ந்து கொண்டே போகிறது, காரின் விலை குறைந்து கொண்டே வருகிறது. சாதாரண, சாமானிய நடுத்தர வர்க்கம் பயன்படுத்துகிற இருச்சக்கர வாகனத்தின் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் பெரும் பணக்காரர்கள் பயணிக்கிற ஆகாய விமானங்களின் எரிபொருள் விலை குறைந்து கொண்டே இருக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அரசு வங்கிகளும், அரசு நிர்வாகமும் வரிச்சலுகைகளை வாரி இறைக்கிறது. ஆனால் ஒரு விவசாயியோ அல்லது ஏழைத் தொழிலாளியோ விவசாயக் கடன் வேண்டும் என்றோ அல்லது கல்விக்கடன் வேண்டுமென்றோ வங்கிகளை அணுகினால் அவமானமே பரிசாகக் கிடைக்கிறது. எல்லா மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், பிறவியின் (சாதி) அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ, மொழி மற்றும் நிறத்தின் அடிப்படையிலோ  எந்த விதமான பாகுபாடும் காட்டக்கூடாது என அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை திருநாள்கொண்டச்சேரியில் ஒரு தலித் முதியவரின் பிணத்தினை பொதுச் சாலையில் எடுத்துச் சென்று புதைக்க முடியாமல் போன அவலம் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நடந்திருக்கிறது.

இந்த தேசம் சுதந்திரம் அடைந்தபோது டாக்டர் அம்பேத்கர் அவர்களிடம் நாட்டு சுதந்திரம் பற்றி கருத்துக் கேட்டபோது சொன்னார். நீங்கள் இந்தக் குளத்திற்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள், ஆனால் இந்தக் குளத்தில் எம் மக்கள் குளிக்க முடியாது. நீங்கள் இந்தக் கிணற்றிற்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள், ஆனால் எம் மக்கள் இந்தக் கிணற்றில் உயிர் போகும் போதுகூட தண்ணீர் அருந்த முடியாது. நீங்கள் இந்த சாலைக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இந்த சாலையில் எம் மக்களின் பிணம் கூட செல்ல அனுமதி கிடையாது. முதலில் எங்களுக்கு சமூக விடுதலை கிடைக்கட்டும் என அன்று சொன்ன வார்த்தைகளின் வரிகள் இன்றும் வலுவிழக்காமல் பாப்பாப்பட்டியில், கீரிப்பட்டியில், மேலவளவில், உத்தப்புரத்தில், திருநாள்கொண்டச்சேரியில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அரசுதான் எல்லோருக்கும் சமமான வாழ்வுக்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் இங்கே அதற்கு எந்த விதமான நடவடிக்கையையும் அரசு எடுப்பதில்லை.      இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 21 இல் வாழ்வுரிமையும், தனிநபர் சுதந்திர உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது. வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால், அதற்கு சன்மானமாக அவர்களின் உயிர் எடுக்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் லதாசிங் எதிர் – உத்திர பிரதேச அரசு என்ற வழக்கில் சாதி மறுப்பு மணம் செய்துக் கொள்ளும் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என எல்லா மாநில, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தது. ஆனால் இந்நாள் வரை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக அல்லது சாதி மறுப்பு மண தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எந்த சட்டமும் இயற்றவில்லை.

சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள வேறுபாடுகளைகூட கற்பிக்க தவறுகிற அரசும்  அதனை அறியாத இளைய தலைமுறையும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்ன அறிவு சமூகத்தை, அறிவு சமூகத்தின் மூலம் ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவமான பூமியைப் படைக்க தடைக்கல்லாக இருந்து வருகிறது. குடியரசு தினம் என்பது நமக்கு நாமே அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி அந்த அரசியல் அமைப்புக் கோட்பாடுகளின்படியும், நெறிமுறைகளின் படியும், இந்திய மக்களாகிய நாம் நம்மை வழி நடத்திக்கொள்ள போகிறோம் என்பதை பறைசாற்றுவதுதான். இந்திய அரசமைப்பு சட்டம் எத்தகைய நல்ல சட்ட வகையங்களை கொண்டிருந்தாலும் அதை நடைமுறை படுத்துகின்ற அரசும், அதிகாரப்பீடத்தில் இருக்கும் அதிகாரிகளின் செயல்முறைகளை பொறுத்தே இந்திய அரசமைப்பு சட்டத்தின் நன்மைகள் மக்களை சென்றடையும் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னார். எனவே இந்திய அரசமைப்பு சட்டத்தினை அச்சுபிசகாமல் அப்படியே நடைமுறைபடுத்துவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய நினைத்தாரோ அதை செய்து முடிக்கிற காரியமாகும். எனவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு உண்மையிலேயே நன்றி செலுத்த வேண்டுமெனில் அவர் அளித்த இந்திய அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளை உயர்த்தி பிடிப்பதும், அவர்கண்ட  சமத்துவ சமூகத்தை உருவாக்குவதும்தான்.

–   திருமூர்த்தி

9962282809

 

 

 

Related Posts