இதழ்கள் இளைஞர் முழக்கம்

புத்தகம் புதிது – சிராஜ்

113857249

கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதிவரை சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வெளிவந்த புத்தகங்களில் எண்ணிக்கை ஒரு தொகை. அதில் புதிய நூல்களும் மறு பதிப்பு நூல்களும் செம்பதிப்பு நூல்களும் அடங்கும் அவற்றில் முக்கியமான புத்தகங்களை இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது முழுமையானது இல்லை. என்றாலும் ஓரளவேனும் நாம் கவனிக்க வேண்டிய புத்தகங்கள்தாம்.
சமூக வலைத்தளத்தின் ஆதிக்கம், இணைய வழியிலான வாசிப்பு என்று புத்தகங்களின் மீதான கவனத்தை திசை மாற்ற பல சாதனங்கள் இருந்தாலும் மக்களிடம் புத்தகத்தின் மீதான பேராவல் குறையவில்லை என்பதையே ஒவ்வொரு புத்தகச் சந்தையும் நிரூபணம் செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் கண்காட்சிக்கு வருகை புரிவதோடு மட்டுமல்லாமல் ஆக்கப்பூர்வமான நூல்களைத் தேடித்தேடி வாங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் நம்மை.

ஒரு முழு இரவு பயணம் செய்து புத்தக்க் கண்காட்சிக்கு வருகை தரும் இளைஞர்களின் உற்சாகமான, தேடல் உள்ள மனநிலையை காணும் போது அறிவார்ந்த சமூகத்தை அடைய நினைக்கும் இளைஞர்கள் மத்தியில் தான் நாமும் செயலாற்றுகிறோம் என்பதே பெருமைக்குறிய விஷயம்.

நறுமணம் – இமையம்

நவீன காலத்திலும் சமூகத்தில் ஆழமாக வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப்பாகுபாட்டை வாசக மனங்களில் ஊடறுத்து செல்லக்கூடிய வகையிலான எழுத்துக்குச் சொந்தக்காரர் இமையம்.
மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவுச்சோறு, சிறுகதை தொகுப்புகள் வரிசையி நறுமணம் இமையத்தினுடைய ஐந்தாவது தொகுப்பு.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் நவீன தொழில்நுட்பம் எவ்வாறு மனித உறவுகளை சிதைக்கிறது என்பதையும், சமூக மதிப்பீடுகளை நிர்மூலமாக்குகிறது என்பதையும், எல்லாக் காலத்திலும் பெண்களே பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதைப் பேசுகிறது.

வெளியீடு; க்ரியா
விலை;195
பக்கம்;184

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் – கவின்மலர்

கடந்துபோன ஆறேழு ஆண்டுகளில் தமிழகத்தில் சாதியின் பெயரால் மிகக் கொடுமையான வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன் அவ்வாறான நிகழ்வுகளை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளில் விரிவாகவும், காத்திரமாகவும் அதே நேரத்தில் ஆதிக்க சாதியினரை சமூகத்தில் அம்பலப் படுத்தியும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தோழர் எஸ்.வி. ராஜதுரையின் முன்னுரை நூலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
வெளியீடு; எதிர்
விலை; 150
பக்கம்;168

தீண்டாமைக்குள் தீண்டாமை; புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்
– சி. லஷ்மணன் – கோ. ரகுபதி

தமிழ்ச்சமூகத்தில் பறையர், பள்ளர், அருந்ததியர்கள்தான் கடைசிப்படிநிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்களுக்கும் கீழே புதிரை வண்ணார் சமூகம் ஒன்று இருக்கிறது. இவர்கள் பிராமணர்கள் தொடங்கி அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஒடுக்குதல்களையும், பறையர், பள்ளர், அருந்ததியரின் ஒடுக்கதல்களையும் சேர்த்து இரட்டைத் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு நூல் நிரூபணம் செய்கிறது.

வெளியீடு; புலம்
விலை;100
பக்கம்;120

பலூட்டா – தயா பவார், தமிழாக்கம்; ச. பிரபு தமிழன்

இந்நூல் மராத்தி மொழியில் வந்த முதல் தலித் சுயசரிதை.. இந்நூலுக்குப் பின்னர் வந்த மூன்று முக்கியமான நூல்களான கிஷோர் சாந்தாபாய் காலேவின் குலாத்தி (தந்தையற்றவன்) லட்சுமன் கெய்க்வாட்டின் உச்சாலியா(பழிக்கப்பட்டவன்), லஷ்மண் மானேவின் உபாரா(அந்நியன்) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வந்து பெரும் சலனத்தை உண்டாக்கிய நூல்கள்..
நூலிலிருந்து…என் உண்மையான பெயர் தக்டு… மண்ணாங்கட்டியை உணர்த்துகிறது இந்தப்பெயர். நமது பட்டப்பெயர்களைப் பார் ! குப்பையைக்குறிக்கும் கஸ்ரீயா, கல்லைக்குறிக்கும் தொண்டியா என்றெல்லாம் இருக்கிறது. ஒருவேளை யாராவது தன் குழந்தை இகு கௌதம் என்று பெயர் வைக்கிறார்கள் என்றால் அதைச் சுருக்கி கௌதியா என்கிறார்கள். மநுதர்ம்ம் சூத்திர்ர்களுக்கென்றே தனியாக ஒரு பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறது.

வெளியீடு
விடியல் பதிப்பகம்
விலை:280
பக்கம்; 296

அரசியல் பழகு – சமஸ்samas

தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த சமஸின் கட்டுரைகளில் சில முக்கியமான அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் அரசியல் மயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறுநூலும் இது.

துளி வெளியீடு
விலை; 20
பக்கம்;48

காதல் கடிதம் – வைக்கம் முகம்மது பஷீர்

1943இல் வெளியான பஷீரின் முதல் நாவல் இது எழுதப்பட்ட காலத்தின் சமூகப் பழக்கத்தை எள்ளி நகையாடவும், காதலின் சிக்கலையும், காதலர்களின் சாதுர்யங்களையும் பேசும் படைப்பு இது. அநாயசமாக செல்லும் கதையாடல், தனித்துவமான மொழி கதாபாத்திரத்தில் மறைந்திருக்கும் நுட்பம் ஆகிய இயல்புகள் இந்தபுனைவை முக்கியமாக்குறது..

வெளியீடு; காலச்சுவடு பதிப்பகம்
விலை;75

அறிவியல் அ முதல் ஃ வரை பொருட் களஞ்சியம்

உருவாக்கம்
ஆத்மா கே. ரவி ஆயிஷா இரா. நடராசன், முனைவர் வள்ளிநாயகம், முனைவர் த.வி. வெங்கடேஷ்வரன்

பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து வகைத் தேர்வாளர்களுக்கும் உற்சாகமளிக்கக் கூடிய நூலாக இந்நூல் விளங்கும். ஆங்கில அறிவியல் தலைப்புகளுக்குத் தமிழில் அர்த்தம் தருவதோடு குறிப்பிட்ட கால வரிசையும், அறிவியலாளர்களின் பெயர்களோடு அவர்களின் வரைபடமும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் முதன் முறையாக வெளியாகும் நூலாகும்.

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்ஸ்
விலை;110
பக்கம்; 224

பின் நவீனத்துவமும் அடையாள அரசியலும் அய்ஜாஸ் அகமது
தமிழில்; பாவெல் சக்தி

பின்நவீனத்துவம் குறித்து பேசுவதில் உள்ள முதல் சிக்கலே, அது ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு தனது அர்த்தங்களை மாற்றிக்கொண்டு தெளிவில்லாத அர்த்தங்களைக் கொடுக்கும் வார்த்தையாக இருப்பதிலிருந்துதான் தொடங்குகிறது என்கிற வார்த்தையோடு நூலைத்தொடங்கும் தோழர் அய்ஜாஸ் அகமது அமெரிக்க வரலாற்றுச் சூழலில் தொடங்கி, பிரான்சில் வளர்ந்து, பின் உலகம் முழுக்கப் பரப்பட்ட பின் நவீனத்துவத்தின் அசலான முகத்தை, அதன் அரசியலைத் தெளிவான மொழியில் விளக்கியுள்ளார்

வெளியீடு; பொன்னுலகம் பதிப்பகம்
விலை:70
பக்கம்;88

சுவிசேஷங்களின் சுருக்கம்
லியோ டால்ஸ்டாய்

இந்நூலில் காணப்படும் இறையியலும் காந்தியின் ஆன்மிகமும் எந்தப்புள்ளியில் இணைகின்றன என்று எடுத்துக்காட்டும் நூல் இது.
மத நிறுவனங்கள், மத போதகர்கள், இயேசுவின் அற உரைகளை கைவிட்டுவிட்டன என்று திறந்த மனதுடன் டால்ஸ்டாய் எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்த அறவுரைகளின் சாரத்தையும் இயல்பான மொழியில் விளக்குகிறார் இந்நூலில்.

வெளீயீடு; பாரதி புத்தகாலயம்
விலை;200
பக்கம்;272

கஜினி முகமது; சோமநாதா படையெடுப்பு
ரொமிலா தாப்பரின் நூலை முன் வைத்து
சஃபி

கஜினி முகம்மது ஏன் சோமநாதா ஆலயத்தின் மீது படையெடுத்தார். இந்துக்களின் விக்கிரக வழிபாடு பிடிக்காததினாலா ? அரேபியாவிலிருந்து கட்த்தி வரப்பட்ட மனத்தெய்வம் அங்கு வழிபடப்பட்ட்தினாலா ?
கொள்ளையில் கிடைக்கும் செல்வத்தினாலா அல்லது அரபு வணிகர்கள் மேற்கிந்தியாவின் வழியாக குதிரை வணிகத்தை நட்த்திக்கொண்டு இருந்தார்கள். அது கஜ்னவி நகரின் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியான குதிரை வணிகத்தை பாதித்துக் கொண்டிருந்த்து அதைக்களைவதற்காக போர் தொடுத்தாரா ?
அல்லது எல்லாக் காரணிகளின் கூட்டுக்கலவையாக அவருடைய படையெடுப்பு நிகழ்ந்த்தா ?

வெளியீடு; பாரதி புத்தகாலயம்
விலை; 170
பக்கம்; 216

கோவை கலவரத்தில் எனது சாட்சியம்
ஏ.வி. நாசர் (எழுத்தாக்கம் ; பழனி ஷஹான்)

இந்நுலுக்கு பாரதி கிருஷ்ணகுமார் முன்னுரை எழுதி இருக்கிறார் அம்முன்னுரையில் சில வரிகள்…இந்தப்புத்தகத்திற்கான முன்னுரையை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமித உணர்வுடனும் எழுதுகிறேன். வேறு எந்த நூலுக்கு முன்னுரை எழுதிய போதும் இந்த உணர்வு தோன்றியதில்லை. இந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்துடன் தொடர்புடையது அல்ல; மாறாக, இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்துடன் தொடர்புடையது. உண்மையை அறியவும் உணரவும் விரும்புகிறவர்கள் மட்டும் இந்த புத்தகத்தை வாசிக்க கடவது.
மற்றவர்களை விலகி நிற்குமாறு ஆணையிடுகிறேன். எப்போதும், என்றைக்கும், நீதி மறுக்கப்பட்டவர்களின், பாதிக்கப்பட்டவர்களின், வஞ்சிக்கப்பட்டவர்களின், நிராகரிக்கப்பட்டவர்களின், பக்கத்தில் நின்று கொள்ளுங்கள். அது அவர்களோடு போய் நிற்பது மட்டுமல்ல; நீதியின் பக்கம் நிற்பது; நீதியாகவே நிலை பெறுவது;

வெளியீடு ; ஆழி பதிப்பகம்
விலை; 100
பக்கம்;128

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்
எடுவர்டோ காலியானோ
தமிழில்; ப.கு. ராஜன்

லத்தீன் அமெரிக்க வரலாறு, அரசியல் போராட்டங்கள், அதன் இலக்கியங்கள், என ஒரு வண்ணமிகு கண்டத்தை ஒரே நூலில் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் அதற்கான நூலும் இதுதான்.
சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசை அமெரிக்காவின் சிஐஏ சதியாலும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சவடார் அலெண்டே படுகொலையான பின் சிலி-யிலிருந்து தப்பிச்சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச்சென்ற சொற்பமான உடமைகளில் ஒன்றாக இருந்ததும் இந்நூல்.
இந்திய மொழிகளில் முதன் முறையாக தமிழில் வரும் நூல்

வெளியீடு; பாரதி புத்தகாலயம்
விலை; 350
பக்கம்;400

ஐன்ஸ்டீனிடம் மயங்கிய மாயவிசை (நாவல்)
வினோத் குமார்

அறிவியலும் வரலாறும் புனைவும் இணைத்து பின்னப்பட்ட புதுமையான நாவல். மாமேதை ஐன்ஸ்டீனின் வாழ்வும் கோட்பாடுகளும் கதை நிகழ்வுகழ்வுகளாகவும் கதை பின்புலமாகவும் அமைந்து மனதை மயக்கும் மாயப் படைப்பு இந்நூல்.

வெளியீடு; பாரதி புத்தகாலயம்
விலை;120
பக்கம்; 144

நான் அவள் கேபுச்சினோ (நாவல்)
ஹரிஷ் குணசேகரன்

கனவுகளும், ஹார்மோன்களும் அலைக்கழிக்கும் வயதில் தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரிய வரும் இளம் தலைமுறையினரின் லட்சியங்களற்ற விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை; மிகுந்த செயலாக்க உணர்வும் புதிய சிந்தனைகளும் அலைமோதும் உள்ளத்தை கட்டி செக்கு மாட்டு இழுப்பாய்ப் போகும் பணி நிலை. வயதின், சூழலின் நெருக்கத்தில் தவிர்க்கவியலாது வரும் காதல்கள், பிரிவுகள் பிரிவுத்துயரங்கள். என ஹரிஷ் குணசேகரனின் துள்ளலான நடையில் உள் புதைந்து பாலில் ஒளிந்திருக்கும் வெண்ணெய் போல் திக்ழ்கிறது.

வெளியீடு; பாரதி புத்தகாலயம்
விலை;120
பக்கம்:144

கூலி விலை லாபம்
காரல் மார்க்ஸ்

சாதாரண தொழிலாளர்களின் புரிதலுக்காக 1849இல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 165 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட்தாயினும் இன்றைக்கும் இந்நூலுக்கான தேவையும், வாசிக்கும் எவருக்கும் புதிய தெளிவையும் தரக்கூடிய செம்பனுவலிது.

Related Posts