நிகழ்வுகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்கு ‘சரிநிகர்’ கண்டனம்!

பண்பாட்டுத் தளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு எதிரான விரிந்த மேடையாக தமிழகத்தில் உருவாகியுள்ள ‘சரிநிகர்’ இயக்கம் சார்பில் திங்களன்று (மார்ச் 9) வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

உலக மகளிர் தினத்தையொட்டி ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் மார்ச் 8 அன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக இருந்த ‘தாலி பெண்ணை பெருமைப்படுத்துகிறதா, சிறுமைப்படுத்துகிறதா’ என்ற விவாதத்தை ஒளிபரப்பக்கூடாது என்று இந்து மதவாத அமைப்புகள் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுத்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அறிந்து தமிழ்நாட்டில் சிந்தனையாளர்களும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதோடு பெண் செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டு இழிவான சொற்களால் வசைபாடப்பட்ட செய்தியும் வந்துள்ளது. அந்தத் தொலைக்காட்சியில் இந்தச் சம்பவம் ஒளிபரப்பட்டுள்ளது.
காவல்துறையின் கண்முன்னால் நடந்த இந்தத் தாக்குதலைத் தடுக்கவோ தாக்கியவர்களைக் கைது செய்யவோ தங்களுக்கு ஆணையில்லை என்று கூறி வேடிக்கை பார்த்த காவல்துறையின் செயலையும் சரிநிகர் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் கருத்துரிமையின் மீது தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் காவல்துறையின் ஆதரவுடன் நடப்பதாகவே தோன்றுகிறது. அதன் அடுத்த இலக்காகவே தற்போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மீது நடந்த தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து மதவாத அமைப்பினரை சரிநிகர் வன்மையாகக் கண்டிக்கிறது. தங்கள் தரப்பு வாதங்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு மாறாக, இப்படி வன்முறையின் மூலமாகவும் மத்திய ஆட்சியில் தங்களுக்கு சாதகமானவர்கள் இருக்கிற அதிகார வலிமையின் மூலமாகவும் ஆரோக்கியமான விவாதங்களை முடக்குவது என்பதே அவர்களது கருத்தியல் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மக்கள், குறிப்பாக பெண்கள் புதிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளவிடாமல் தடுக்கிற ஆதிக்க மனோபாவமே இது.

இந்தத் தாக்குதல் பற்றிய செய்தியை அதே தொலைக்காட்சியில் தொகுத்தளித்த செய்தியாளரது மனைவியின் படத்தை முகநூலில் வெளியிட்டு இழிவான முறையில் எழுதியிருப்பதும் அந்த பலவீனத்தின் விளைவாக வரும் வன்மத்தின் வெளிப்பாடுதான். இப்படி குடும்பத்தினருக்கு அச்சமும் கவலையும் ஏற்படுவது போல் செயல்படுகிற அநாகரிகத்தைத் தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும்.

ஊடகத்துறையினர் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாமல், மக்களிடையே கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் கொண்டு செல்கிற பணியைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்று சரிநிகர் கேட்டுக்கொள்கிறது. அதற்கு தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் துணை நிற்பார்கள்.

தமிழ்நாட்டில் அரசே செயலற்றுப் போய்விட்டது என்று எண்ணக்கூடிய அளவிற்கு இந்தத் தாக்குதலுக்குத் துணைநின்ற காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசை சரிநிகர் கேட்டுக்கொளகிறது.

  • சரிநிகர் சார்பில்
    ச. தமிழ்ச்செல்வன்
    ஒருங்கிணைப்பாளர்

Related Posts