இதழ்கள் இளைஞர் முழக்கம்

புதிய கல்விக்கொள்கை: உயர்கல்வியில் தொடரப்போகும் நவீன தாராளமய சூழ்ச்சி – விக்ரம் சிங் பொதுச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்

higher-education

உலகில் மிக இளமையான நாடுகளில் இந்தியா ஒன்று. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 54 சதவீதத்திற்கும் மேல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது பெருமைக்குரியதே. நாட்டினுடைய கல்விமுறை என்பது மூன்று முக்கிய அடிப்படைகளை கொண்டிருக்க வேண்டும். எளிமையான அணுகுமுறை கொண்டதாகவும், சமத்துவத்தையும், தரமான கல்வி என்பதையும் கொண்டிருக்க வேண்டும். நமது மாபெரும் இளம் மனித வளத்தை சீரிய முறையில் பயன்படுத்தவும், அதன் மூலம் தேசத்தை கட்டியமைக்கவும் இந்த மூன்று அம்சங்களிடையே பொருத்தமான சமநிலை பேணப்பட வேண்டும்.

உலகளவில் இன்றைக்கும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்கள் இந்தியாவில் எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர். குறிப்பாக எழுத்தறிவு பெற்ற இளைஞர்கள் 15-24 வயதுக்குட்பட்டவர்கள் 86.1 சதவீதம், 15 வயதுக்கு மேல் என்று எடுத்துக் கொண்டால் 69.3 சதவீதம் மட்டும் எழுத்தறிவு பெற்றவர்கள். மேலும் எழுத்தறிவு பெற்ற இளைஞர்களில் பாலின இடைவெளி என்பதும் பெருமளவில் உள்ளது, அதாவது 8.2 சதவீதம் அளவிற்கு. எழுத்தறிவு பெற்ற ஆண்கள் 90 சதவீதம் பேர்; எழுத்தறிவு பெற்ற பெண்கள் 81.8 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் உயர்கல்வி அமைப்பின் அடிப்படையும், அதற்கான அடித்தளமும் மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. நம்முடைய உயர்கல்வி அமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. கல்வி அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தற்போது அரசாங்கம் இந்த திசையில் எதையும் செய்யவில்லை. இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் அரசாங்கம் ஒரே விளக்கத்தைத்தான் கூறுகிறது. உருவாக்கப்பட்டு வரும் புதிய கல்விக் கொள்கையே அனைத்திற்குமான தீர்வு என்கிறது. உயர்கல்வி உட்பட இந்தியாவின் கல்வி எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருகின்றது. ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதன் மீதான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியக் கல்வியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வரைவு அறிக்கை என்ன நோக்கங்களை கொண்டிருக்கின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முரண்பட்ட அணுகுமுறை

இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம்  மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியா எதிர்கொண்டு வரும் மிகப்பெரும் சவாலாகவும் இருந்து வருகின்றது. இந்தியாவில் உயர்கல்வி பெறும் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2014-15ம் ஆண்டில் 23.6 சதவீதமாக இருக்கின்றது. 2017-18ம் ஆண்டில் உயர்கல்வி பெருவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25.2 சதவீதத்தை அடைய வேண்டுமென இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-21ம் ஆண்டில் இந்த இலக்கு 30 சதவீதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவாலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
“இந்த இலக்கு குறித்து புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை இவ்வாறு கூறுகிறது. தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி உட்பட இதர உயர்கல்வி வாய்ப்புகளை அனைவரும் சமமாகப் பெறுவதை, உயர்கல்வி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே கிடைக்கும் என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உயர்க்கல்விக் கட்டணம் சீர்திருத்தப்படும்.”

எனினும் அதே வரைவு அறிக்கையில் நிதி நெருக்கடி போன்ற காரணத்தால் புதிய அரசு கல்வி நிறுவனங்களை அரசாங்கம் உருவாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கொள்கையில் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைவதற்கான முறைகளுக்கிடையே தெளிவான முரண்பாடுகள் உள்ளன. அதற்கு பதிலாக புதிய கல்வி நிறுவனங்கள் பெரிய மூலதனத்தில் துவங்கப்படுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வி விரிவாக்கம், திறன் விரிவாக்கம் புதிய கல்வி நிறுவனங்கள் உருவாகாமல் நிகழப்போவதில்லை என்றும் புதிய கல்விக் கொள்கைக்காக முன்மொழியப்பட்டுள்ள அறிக்கை விளக்குகிறது. மேலும் இந்த வரைவுக் கொள்கை எதிர்காலத்தில் எந்த வகையான புதிய கல்வி நிறுவனங்கள் இருக்கும் என்றும் கூறுகிறது. உயர்கல்வி பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களின் இலக்கு 30 சதவீதத்தை அடைய வேண்டுமென்றால், தனியார் கல்வி நிறுவனங்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது.ஏற்கெனவே தனியார் கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் அதிகளவில் பெருகியுள்ளன. உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களில் 62 சதவீம் பேர் தனியார் கல்வி நிறுவனங்களில்தான் பயின்று வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, மத்திய அரசு உயர்கல்வியில் சமத்துவம், சமவாய்ப்பு என்ற அம்சங்கள் பற்றி சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தற்போதைய இந்தியாவில் உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கையில் பிராந்திய, சமூக மற்றும் பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. உதாரணமாக 2011-12ம் கல்வியாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் உயர்கல்வி பெற 8.4 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகிட்டியது. அதே நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 53 சதவீத மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே பிராந்திய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் என்பது உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இதேபோல் பல்வேறு வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற சமூக குழுக்கள் மத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த 2014-15ம் ஆண்டில் 23.6 சதவீதம். இதில் ஆண்கள் 24.5 சதவீதமும், பெண்கள் 22.7 சதவீதமும், தலித்துகள் 18.5 சதவீதமும், பழங்குடி மக்கள் 13.5 சதவீதமும் என ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இந்திய உயர்கல்வியில் இது ஒரு முக்கியமான சவால் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கை இதுபற்றி எதுவும் பேசாதது, அதன் தோல்வியையே காட்டுகிறது. வரைவு அறிக்கை வெற்று வரைவு அறிக்கையாகவே உள்ளது. பிராந்திய, சமூகக் குழுக்கள் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்வது குறித்தும், பின்தங்கிய பகுதிகளில் கல்வி விரிவாக்கத்திற்கான சிறப்புத் திட்டங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை குறைக்க எந்தெந்த பகுதிகளில் புதிய கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட வேண்டும் என்பது குறித்து அறிக்கையில் எதுவும் பேசப்படவில்லை. உயர்கல்வி பெறும் மாணவர்கள் சேர்க்கை குறைவிற்கான காரணம் மேலும் இடைவெளி அதிகரித்து வருவதே. குறிப்பாக மெட்ரோ நகரங்கள் மற்றும் மாநில தலைநகரம் போன்ற மையங்களே கல்வி நிறுவனங்களின் குவி மையமாக உள்ளன. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தனியாரின் வசமே உள்ளன. இதனால் பெரும் அளவிலான கட்டணங்கள் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகின்றன. செல்வம் படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் மட்டுமே மாநகரக் கல்வி மையங்களை நோக்கிச் செல்ல முடியும். கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான காரணிகளில் இது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையால் உயர்கல்வி பயில்வதற்காக சொந்த மாநிலத்தை விட்டு இடம்பெயர்தலுக்கும் இட்டுச் செல்கிறது.

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட – புறக்கணிக்கப்பட்ட பகுதி மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும்போதுதான் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயரும், ஆகவே தேவையான பகுதிகளில் புதிய கல்வி நிறுவனங்கள் அரசுத்துறையால் துவக்கப்பட வேண்டும்.
மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் சமூகநீதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. கண்மூடித்தனமான கட்டணக் கொள்கையால் சமூக தளத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் பயன்படுவதில்லை. அவர்களுக்கு கல்வி வாய்ப்பை அளிப்பதில்லை. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இதற்குத் தீர்வு காண எந்த சிறப்பு முன்மொழிவுகளும் திட்டங்களும் இல்லை. ஆகவே சமச்சீர் அல்லது அனைவருக்குமான சம வாய்ப்புடன் கூடிய உயர்கல்வி என்று வெற்று வார்த்தைகளால் மட்டுமே அலங்கரிப்பதால் எந்தப் பயனுமில்லை.

நிதி குறித்த முன்மொழிதல்

கல்வி குறித்து அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிட்டியும், கல்வி குறித்த ஆணையங்களும் கல்விக்காக நிதி ஒதுக்கீட்டை பொறுத்தளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவீதம் ஒதுக்கீடு செய்திட வேண்டுமென பலமுறை பரிந்துரைத்துள்ளன. முன்னதாக கல்வியாளர் கோத்தாரி தலைமையிலான கல்விக்குழு 1968லும், 1986 தேசிய கல்விக்கொள்கையிலும், பிறகு 1992 ஆண்டும் இது பரிந்துரைக்கப்பட்டது. அரசாங்கம் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால் இதுநாள் வரை அமல்படுத்தப்படவில்லை.

புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இவ்வாறு கூறுகிறது:

“கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவீதம் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற, நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்”.
இப்படி அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரைவு அறிக்கையின் மறுபுறம் கல்வித்துறையில் தனியார் பங்களிப்பையும், பெரு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் துறையினரின் முதலீட்டையும் ஊக்குவிக்கிறது. கல்வித்துறையில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. தனியார் மற்றும் அந்நிய நிதி மூலதனத்தை திரட்டுவதன் மூலம் கல்வி நிறுவனங்களின் விரிவாக்கத்தையும் செயல்பாட்டினை பலப்படுத்துவது என்ற சூழ்ச்சித் திட்டம், பிரதான அம்சமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இதன் அர்த்தம் எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் உயர்கல்வி என்பது இன்னும் தீவிரமாக தனியார்மயமாகிவிடும். புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையானது, நிதி மற்றும் வளங்களைத் திரட்டுவது என்ற பெயரில் முற்றாக தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் அரசின் திட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இது இந்தியக் கல்விக்கு மிகப்பெரும் ஆபத்து, ஏற்கனவே ஆராய்ச்சிக்கான நிதிகளை குறைத்திருக்கின்ற நிலையில் மேலும் உயர்கல்வி சீரழிக்கப்படும். ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துவதற்கான வகையில் ஆய்வு உதவித்தொகை கூடுதலாக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் பல மடங்கு உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்திருக்கிறது. இந்நிலையில் உயர்கல்வி தனியாரை நோக்கி முழுமையாக ஒப்படைக்கப்பட முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே இந்த முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட்டால் இந்திய உயர்கல்வியின் சீரழிவை யாராலும் தடுக்கமுடியாது.
உயர்கல்வி-யுஜிசி நிர்வாகம் சீர்திருத்தம்

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் உயர்கல்வி அமைப்புகள் குறித்து பல்வேறு நிர்வாக ரீதியான மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கல்வியாளர்களை கொண்டு புதிய “கல்வி ஆணையம்” உருவாக்கப்படும், 5 வருடத்திற்கொரு முறை இந்த ஆணையத்திலுள்ளவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் மாற்றப்படுவார்கள்.
மேலும் இந்திய கல்வி சேவை (ஐனேயைn நுனரஉயவiடிn ளுநசஎiஉநள) என்ற, அகில இந்திய அளவிலான கல்வித்துறை சார்ந்த பணிநிலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும்; மத்திய கல்வி தீர்ப்பாயம், மாநில அளவிலும் கல்வி தீர்ப்பாயம் உருவாக்கப்படும்; இந்த தீர்ப்பாயத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார்கள்; தேசிய உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மத்திய கல்விசார் புள்ளி விபர முகமை உட்பட பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்மொழிந்துள்ளது.

இதில் சில பரிந்துரைகள் வரவேற்கத்தக்கது போன்று தெரிந்தாலும் நீண்டகாலமாக இருந்துவந்த உயர்கல்வி அமைப்புக்கு முற்றிலும் மாறாக மாறுபட்ட செயல்பாட்டை கொண்ட புதிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. (குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு (யுஜிசி) மாற்றாக புதிய முகமையை உருவாக்கிட பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அரசின் முடிவுகளையும் திட்டங்களையும் திணிக்கும் ஒரு அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு மாற்றப்பட்டு உள்ளது. சில முக்கியமான உயர்கல்வி நிலையங்களின் செயல்பாட்டை கூர்ந்து கவனித்தால் இந்த பிரச்சனையை உணர முடியும். ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தனியார் கல்வி நிறுவனங்களின் சுதந்திரமான வணிக நடவடிக்கைக்கு தடையாக இருந்தது; எனவே நீண்டகாலமாக தனியார் கல்வி முதலாளிகளும் யுஜிசி அமைப்பினை அதிகாரமற்ற அமைப்பாக மாற்றவும் அதனை ஒழித்துக்கட்டவும் முயற்சித்து வந்தன. இந்த அமைப்பின் சுதந்திரமான செயல்பாட்டை பலப்படுத்துவதற்கு பதிலாக முற்றிலும் உயர்கல்வி அமைப்புகள் ஒழிக்கப்பட்டு இந்தியாவின் கல்வி வணிக நடவடிக்கைக்கு தாராள அனுமதியை அளிக்கும் வகையில் இந்திய உயர்கல்வி அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு சாதகமான முறையில் உயர்கல்வி அமைப்பில் நிர்வாக ரீதியான புதிய மாற்றங்களும் புதிய முகமைகளும் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் அமலானால் உயர்கல்வி பெறுவதிலிருந்து உழைக்கும் மக்கள் விலக்கப்படுவார்கள்.

அந்நிய பல்கலைக்கழகங்கள்

இந்திய கல்வித்துறையில் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்தை தீவிரப்படுத்துவதற்கான அடிப்படையில் வரைவு அறிக்கையில் பரிந்துரைகள் உள்ளன. அதனடிப்படையில் அந்நியப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் இந்திய கல்வித்துறையில் தொடர்ந்து அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அதில் அந்நிய பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் மசோதா முக்கியமானது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விளிம்பு நிலை மக்களும் சமூக தளத்தில் பின்தங்கியவர்களும் உயர்கல்வி பயில்வது பெரும் பிரச்சனைக்குரிய ஒன்றாக மாறிவிடும் என கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் “புதிய முயற்சிகளோடு அந்நிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக அனுமதிக்கப்பட வேண்டும்; அதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும்; அந்நியப் பல்கலைக்கழகங்களுக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதிப்படுத்தப்படும்; இந்திய மாணவர்கள் இந்தியாவிலிருந்தே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில முடியும்; இவர்கள் மட்டுமல்ல, அந்நிய நாட்டு ஆசிரியர்களும் இந்தியாவில் பணியாற்ற ஊக்குவிக்கப்படுவார்கள்” என்றும் வரைவு அறிக்கை கூறுகிறது.
“அந்நியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதற்கு தேவையான மாற்றங்களை இந்திய உயர்கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும். மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான உயர்கல்வி அமைப்பு செயல்படுத்தப்படுவதற்கு தேவையான முயற்சிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்படும்; கல்வித்தகுதி நன்மதிப்பு அடிப்படையில் அங்கீகரிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்தத் திசையில்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் உயர்கல்வி சுருளுஹ திட்டத்தின் மூலம் (சிபிசிஎஸ்) இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தனது சந்தையை விரிவுபடுத்திக் கொள்வதற்கான வகையில் பொதுக் களத்தை உருவாக்கித் தருவதற்கான பணிகளையே அரசு மேற்கொண்டு வருகின்றது.

உயர்கல்வியில் தரம்

உயர்கல்வியில் தரத்தை உறுதி செய்வது என்பது இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கிய சவால்களில் ஒன்றாகும். இதுகுறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகள், இந்திய கல்வி நிறுவனங்கள் மிகக் குறைந்த தரத்திலான கல்வியை அளிக்கின்றன என்கின்றன.

பெரும்பாலான அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அதே நேரத்தில் நாடு முழுவதுமுள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளும், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள்யின்மை, காலாவதியான கற்பித்தல் முறைகள், காலிப்பணியிடங்கள் போன்றவற்றை களையாமல் கல்வியின் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்த முடியாது. மேற்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல், ஆசிரியப்பணிக்கு இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பாக வரைவு அறிக்கையில் தனியாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய உயர்கல்வியில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்பிட அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து வரைவு அறிக்கை விரிவாகப் பேசவில்லை. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தற்காலிக விரிவுரையாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். நாம் கல்வியின் தரம் குறித்து விவாதிக்க வேண்டுமானால் முதலில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் மாணவர், ஆசிரியர் விகித்தாச்சாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும் மிக அதிகமாக உள்ளன. சரியான நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையும் அற்ற கல்வியமைப்பாக உள்ளது. இத்தகைய தடைகளை கடப்பதற்கான உறுதியான முன்மொழிவுகள் இல்லை. வரைவு கொள்கையில் சில பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை;
கல்வியின் தரத்தை உறுதிபடுத்துவதற்கான கட்டாய அங்கீகாரத்திற்கான தேசிய கல்வி தர மதிப்பீட்டு குழு மற்றும் அங்கீகாரத்துக்கான தேசிய வாரியம் வலுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருப்பது மட்டும் தான் சற்று ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் தகுதிவாய்ந்த ஆசிரியர் உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி வசதி போன்றவை மேம்படுத்துவது அவசியம். ஆனால் பரவலாக ஊழல் நடைமுறைகள் மற்றும் தனியார் துறை மதிப்பீடு என்று வரும் போது இப்பிரச்சனைகளுக்கு வரைவு அறிக்கை தீர்வினை முன்வைக்கவில்லை.

உண்மையில் தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும்; கட்டணங்களை முறைப்படுத்தவும்; மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தவும்; தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டுப்படுத்தவும் மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மாணவர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கை மவுனம் காக்கிறது.

தனியார் கல்வி நிறுவனங்களில் சமூகரீதியான இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து எதுவும் அறிக்கையில் கூறப்படவில்லை.

புதிய கல்வி கொள்கைக்கான அறிக்கை மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்றுள்ளதாக முன்நிறுத்தப்படுகிறது. உண்மையில் அறிக்கையில், இன்றைக்கு நாம் சந்திக்கும் – இந்திய கல்வி எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வை உருவாக்குகின்ற நம்பிக்கையை அது அளிக்கவில்லை. இந்த வரைவு அறிக்கை பகுப்பாய்வில் கல்வியாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த புதிய கல்விக் கொள்கை தனியார்மயமாக்கலை தீவிரப்படுத்தவும் உயர்கல்விக்கான நிதியினை குறைத்திடவும் வழிவகுக்கிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான பரிந்துரைகள் இல்லாமல், சம வாய்ப்புள்ள – தரமான உயர்கல்விக்கான அணுகுமுறை உருவாகப் போவதில்லை.

தமிழில்: ஜோ.ராஜ்மோகன்

Related Posts