அரசியல்

பீகார் : என்னடா நடக்குது இங்கே..?

ஓவியம்: ராமமூர்த்தி
பீகார் தேர்தல் முடிவுகளை அறிய வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சற்று நேரத்தில் பார்த்தால்,  கிட்டத்தட்ட அனைத்துத் தொலைகாட்சி சானல்களிலும், பா ஜ க முன்னிலை என்று போடத் தொடங்கி விட்டனர். நிமிடத்திற்கு நிமிடம் அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்லவும், ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்புகளை மேலும் குறைத்துக் காட்டியவண்ணம் அரை மணி நேரம் கடந்தது. என்னருகில் இருந்த நெருங்கிய உறவினர், என்ன சார், கேஸ் மானியம் போயிருமா என்று கிண்டலாகக் கேட்டார். கேஸ் கொடுத்தால்தானே மானியம், இனி விறகு பொறுக்கப் போக வேண்டியதுதான் என்றேன் நான். நல்ல வேளை பீகார் மக்கள் தொலைகாட்சி எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாக்களித்து, பா ஜ கவை ஓரம் கட்டி விட்டனர்.
எங்கள் உரையாடலாவது, சமையல் எரிவாயு விஷயத்தோடு தெளிவுக்கு வந்தது. பாவம், பாட்னா பா ஜ க தலைமை அலுவலகத்து ஆசாமிகள்! 100 கி.கி லட்டுகள் வாங்கி வைத்திருந்ததாகவும், பட்டாசுகள் எல்லாம் வெடிக்கத் தொடங்கி புகை அடங்குவதற்குள் அவர்கள் கனவும் அதோடு சேர்ந்து எரிந்து போனதாகவும் பின்னர் இணையதளத்தில் செய்திகள் வந்தன.
இதில் எல்லாம் சிறிதும், கிஞ்சிற்றும், லவலேசமும், எள்ளளவும் கலங்காத ஒரே மனிதர் பா ஜ கவில் இருக்கிறார் என்றால், அவர் திருவாளர் நரேந்திர மோடிதான். இதோ, நவம்பர் 12ம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணம் தொடர்கிறது. பிரதமராக ஆனபிறகு 28 நாடுகள் சுற்றிப் பார்த்துவிட்டார். அவரது மனைவி யசோதா பென், உறவினர்களைப் பார்க்க பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் உங்கள் திருமணம் குறித்த எந்த அதிகாரபூர்வ காகிதங்களும் இணைக்கவில்லை என்று அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இதை எல்லாம் எந்தக் கோவிலில் போய்ச் சொல்லி அழுவது?
அடுத்து அசராத கருத்து உதிர்த்திருப்பவர், (மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போனாலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தக்கவைத்தபடி நிதியமைச்சராகி இருக்கும்) அருண் ஜேட்லி. பீகார் முடிவுகளால் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் எந்த விதத்திலும் பாதிக்கப் படாதாம். எப்படி? பீகார் தேர்தலை வைத்து தங்களது வலுவை மாநிலங்களவையில் அதிகரித்துக் கொண்டுவிட முடியும் என்ற பேராசையில் காத்திருந்ததில் மண் விழுந்திருந்தாலும் அவர் மீசையில் ஒட்டவில்லையாம் (எப்படி ஒட்டும், அவருக்குத் தான் மீசையே இல்லையே!). அதனால், நிர்வாக உத்தரவுகள் மூலம் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று சொல்லி. இருக்கிறார். நம்மூரில் 110 – மத்திய ஆட்சியில் அவசர மசோதா! விவாதமாவது, மாற்றுக் கருத்தாவது, ஜனநாயகமாவது, புண்ணாக்கு!
பீகார்  தேர்தலில் பா ஜ க தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்று அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார். பாகிஸ்தான் அல்ல, இந்தியா அதைக் கொண்டாடும் என்று ஃபிரண்ட்லைன் விஜயசங்கர் சொன்னதை பத்திரிகையாளர் சமஸ் சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறார்.
பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரையும், லாலுவையும் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள் என்று பா ஜ க பேச்சாளர்கள் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தனர். தமது 50வது பிறந்தநாளை ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கிடையே கொண்டாடிய ஷாருக்கான், தேசத்தில் பெருகி வரும் சகிப்புத் தனமையற்ற போக்கு குறித்து வேதனை தெரிவித்தவுடன், அவரை பயங்கரவாதிக்கு ஒப்பிட்டு பாகிஸ்தானுக்குப் போகட்டும் என்று சொன்னார் பா ஜ க எம்.பி. யோகி ஆதித்யநாத். விசுவ இந்து பரிஷத் சந்நியாசினி பிராச்சி ஷாருக்கான் பாகிஸ்தான் ஏஜென்ட் என்று வருணித்துக் கரித்துக் கொட்டினார். ஒரு மாநிலத் தேர்தலை அதற்குரிய லட்சணங்களுக்கு அப்பால் நடத்த முயன்று மண்ணைக் கவ்வி இருக்கிறது பா ஜ க.
இந்திய – ஆப்பிரிக்க அமைப்பு சார்பான முக்கிய மாநாட்டில் பங்கேற்க தொடர்புடைய நாட்டுத் தலைவர்கள் தில்லியில் குழுமி இருக்க, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்காமல், பிரதமர் மோடி முசாபர்பூர், கோபால்கஞ்ச் பொதுக்கூட்டங்களில் பேச பீகார் பறந்து விட்டார் என்று சுட்டிக் காட்டுகிறார் தி இந்து செய்தியாளர் சுகாசினி ஹைதர். வெளிநாட்டுக் கொள்கை குறித்த பார்வை, அணுகுமுறை எல்லாம் அண்மையில் நேபாளத்தில் மூண்டிருக்கும் பிரச்சனைகளில் இந்தியாவின் அத்துமீறிய தலையீடு குறித்த விவாதங்களிலேயே வெளிப்பட்டிருக்கின்றன. உள்நாட்டில் மோடி பற்றி ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனில் மிக எளிய பீகாரின் வாக்காளர்கள் ஊசி எடுத்துக் குத்தி இருக்கின்றனர்.
என்ன இருந்தாலும், நரேந்திர மோடி அண்ட் கம்பெனிக்கு அத்வானி மீது அத்தனை காழ்ப்பு இருக்கக் கூடாது.
என்னதான், இன்னொரு அவசரநிலை காலம் வருவதற்கான அபாயம் இருக்கிறது என்று அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிகாரத் திமிரோடும், சகிப்புத் தன்மை அற்ற வெறியோடும் நாடு கடந்து கொண்டிருக்கும் நிலைமையைச் சுட்டிக் காட்டி இருந்தாலும், நவம்பர் 8 எல் கே அத்வானி பிறந்தநாள் என்பதால் அன்று வாட்டம் நிரம்பிய முகத்தோடுதான் அவரோடு கை குலுக்கிவிட்டு வரவேண்டும் என்பதற்காகவே பீகார் தேர்தலில் தோற்று விட்டார்களோ என்று கூடத் தோன்றுகிறது.
முன்பெல்லாம் எல் கே அத்வானியைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும் அவரது பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு எழுந்திருக்கும் மோடி அதை ஏன் இன்று செய்யவில்லை என்று நண்பர் ஒருவர் நேற்று இரவு கேட்டார். அதற்கும் சேர்த்துத் தான் பீகாரில் அவர்களை மக்கள் குப்புற விழவைத்து விட்டார்களா, போதாதா என்றேன் நான்.

Related Posts