இதழ்கள் இளைஞர் முழக்கம்

பிரதர் ஒபாமா * பிடல் காஸ்ட்ரோ

 

ஸ்பெயின் தேசத்தின் மன்னர்கள் நம்மை ஆள்வதற்கு பிரபுக்களையும் எஜமானர்களையும் அனுப்பினார்கள்; அவர்கள் விட்டுச்சென்ற காலடித் தலங்கள் இன்னும் நமது நிலத்தைச் சுற்றிலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தக் காலடித் தலங்கள், நமது நதிகளின் மணற்பரப்பில் தங்கத்தை தேடும் வேலையை சிலரிடம் ஒப்படைத்திருக்கின்றன; மிகவும் மோசமான, வெட்ககரமான சுரண்டல் வடிவம் அது; நமது நாட்டைச் சுற்றிலும் வானத்திலிருந்து பார்த்தால் அந்தச் சுவடுகளை எளிதாக கவனிக்க முடியும்.
நமது நாட்டைச் சுற்றிலுமுள்ள பல நாடுகளின் பெருவாரியான பகுதிகளில் சுற்றுலா என்பது மிகப்பெரும் தொழிலாக மாறியிருக்கிறது. அவர்கள் நமது நிலத்தின் பேரழகைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல, நமது கடல்களின் பிரம்மாண்டமான வளங்களை ருசிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; இந்த வளங்களையெல்லாம் மிகப்பெரும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் தனியார் மூலதனத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்; இவற்றின் மூலமாக அந்த நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர் அளவிற்கு கொள்ளை லாபம் அடிக்க முடியாமல் போயிருந்தால் அவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் விட்டிருப்பார்கள்.
இதை இப்போது நான் ஏன் கூறுகிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன்; நான் அவசியம் இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது-மனிதகுல வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் நான் குறிப்பிடும் இந்த அம்சங்களின் முக்கியத்துவம் குறித்து சில மனிதர்கள் மட்டுமே விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். காலம் கடந்துவிட்டது என்று நான் சொல்லமாட்டேன்; ஆனால் நாம் முழுமையான அறிவினை – போதுமான தகவல்களை கிடைக்கப்பெறவில்லை என்பதைச் சொல்வதற்கு தயங்கமாட்டேன்; உண்மையில் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சவால்களை – அந்தச் சவால்களின் எதார்த்தத்தை எதிர்கொள்வதற்கான போதிய அறிவுப்பூர்வமான விபரங்களையோ அல்லது அத்தகைய மனசாட்சியையோ நாம் போதிய அளவு பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.
முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நம்முடைய வாழ்க்கை என்பது, மனிதகுலத்தின் மிகப்பிரம்மாண்டமான வரலாற்றுக் காலத்தில் ஒரேயொரு மணித்துளி அளவிலும் ஒரு துளி மட்டுமே.
ஆனால் அந்த ஒரு சிறு துளி அளவிலான வாழ்க்கையும் மனிதகுலத்தின் ஒவ்வொரு மனிதனுக்குமான மிகவும் அடிப்படையான தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் சமூகத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிக்கக்கூடிய துளியாக அவசியம் இருக்க வேண்டும்.
மிக மிகக் குறுகிய இந்த வாழ்க்கையின் குணாம்சங்களில் ஒன்று என்னவென்றால், இந்த வாழ்க்கைக் காலத்தின் பங்களிப்பை பற்றி அதீதமான மதிப்பீடு செய்துகொள்ளும் போக்கு உருவாகியிருக்கிறது என்பதுதான்; பெருவாரியான மனிதர்கள் மிகப்பிரம்மாண்டமான கனவுகளோடு கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்.
எவர் ஒருவரும் தனிப்பட்ட முறையில் முற்றிலும் நல்லவர் அல்லது முற்றிலும் கெட்டவர் என்பதல்ல. ஒரு புரட்சிகர சமூகத்தில் நாம் அவசியம் ஆற்றவேண்டிய பங்களிப்பிற்கான திட்டத்துடன் நம்மில் ஒருவரும் கட்டமைக்கப்படவில்லை; கியூபர்களாகிய நாம் மகத்தான புரட்சியாளர் ஜோஸ் மார்ட்டியின் பெருமிதத்திற்குரிய வழியில் வந்தவர்கள் என்றபோதிலும்.
இன்னும் சொல்லப்போனால் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், டாஸ் ரியாஸ் நகரில் வாழ்வா சாவா என்ற நிலையில் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஜோஸ் மார்ட்டிக்கு வந்தபோது “என்னைப் பொறுத்தவரை இதுதான் தருணம்” என்று முழங்கியவாறு ஸ்பானிய படைகளை அடித்து நொறுக்கும் விதத்தில் பெருமுழக்கமிட்டு போர்ப்பரணி பாடினார். அவர் அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அங்கு அவர் மீண்டும் வருவதை அவர்கள் விரும்பவும் இல்லை. அவரது டைரிக் குறிப்புகளிலிருந்து சில பக்கங்களை சிலர் கிழித்தெறியலாம். சந்தேகமேயின்றி அந்த காரியத்தைச் செய்த சதிகாரர்கள், அதற்கு பொறுப்பாளிகள் யார் என்பது தெரியுமா?
தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் ஒருபோதும் அது ஒழுங்குமீறியதாக இருந்தது இல்லை.
“கியூபாவை கைப்பற்ற எவர் முயற்சித்தாலும் அவர்கள், ரத்தத்தில் தோய்ந்திருக்கும் கியூபாவின் மண்ணைக்கூட அந்தப் போராட்டத்தில் அவர்கள் செத்து மடியவில்லை என்றால் தொட முடியாது” என்றார் கருப்பின மக்களின் மகத்தான தலைவர் ஆண்டனியோ மேசியோ. இந்த வார்த்தைகளை அங்கீகரித்து அதேபோன்று தானும் முழக்கமிட்டவர் நம்முடைய வரலாற்றில் மிகவும் ஒழுங்குமிக்க, வீரமிக்க ராணுவத்தை கட்டமைத்த தளபதி மேக்சிமோ கோமெஸ்.
இதே விசயத்தை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்ப்போம். கியூபாவை நோக்கி தொலைதூரத்திலிருந்து கடலில் ஒரு படகில் வந்துகொண்டிருந்த போனிபேஸியோ புர்னே கூறியதை நாம் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்; கியூபாவை நோக்கி வந்துகொண்டிருந்த அவரது கண்களில் நமது கரையில் அவர் இதுவரையிலும் பார்த்திராத கொடி பறந்துகொண்டிருந்தது; ஒற்றை நட்சத்திரம் பொறித்த அந்தக் கொடியைப் பார்த்து அவர் கூறினார்: “எனது கொடி ஒருபோதும் சதிகாரர்களின் அடிமைக் கொடியாக இருக்க முடியாது…”
இப்படி கூறியதோடு, அடுத்த நொடியே மற்றொன்றையும் அவர் குறிப்பிட்டார். நான் ஒரு போதும் கேட்டிராத மிக அழகான வார்த்தைகள் அவை; “சதிகாரர்களின் அடிமைக் கொடி கந்தல் கந்தலாக கிழித்தெறியப்படுமானால் அதுவே ஒருநாள் எனது கொடியாக இருக்கும்… அந்தக் கொடியை உயர்த்திப்பிடிக்க மரணித்துப் போன எமது மக்களின் கரங்கள் எப்போதும் உயர்ந்தே நிற்கும்”.
அதேபோல, நமது புரட்சியை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் எதிர்ப்புரட்சி சக்திகளை ஊக்குவித்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களின் கைகளில் இருந்த இயந்திரத் துப்பாக்கிகள், அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக தயாராகக் காத்திருந்த நம்மை நோக்கி குறி வைக்கப்பட்டிருந்த நிலையில், சில பத்து மீட்டர் தூரத்தில் ரத்தவெள்ளத்தில் கொல்லப்பட்ட கேமிலோ சியன்ப்யூஜியஸ் அன்றைக்கு கூறிய வார்த்தைகளை நான் மறந்துவிடுவேனா?
ஒபாமா 1961 ஆகஸ்ட்டில் பிறந்தவர். அதற்குப் பிறகு அரை நூற்றாண்டுக்காலம் கடந்திருக்கிறது.
எனினும் நமது பிரியத்திற்குரிய அந்த விருந்தாளி இன்றைக்கு என்ன கருதுகிறார்:
“அமெரிக்கக் கண்டத்தில் நடந்துகொண்டிருக்கும் பனிப்போரின் கடைசித் துளிகளையும் குழிதோண்டி புதைப்பதற்கு நான் இங்கே வந்திருக்கிறேன். கியூப மக்களோடு நட்புக்கரம் நீட்டவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று நம்மில் பெரும்பாலான மக்களுக்கு, விசிறிவிடப்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு இடையில், முற்றிலும் புதிய செய்தியை சொன்னார்:
“நாம் இருவருமே ஐரோப்பியர்களால் காலனிமயமாக்கப்பட்ட ஒரு புதிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி மேலும் தொடர்கிறார்: “கியூபா என்பது, அமெரிக்காவைப் போலவே, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்ட அடிமைகளால் கட்டப்பட்ட தேசம். அமெரிக்காவைப் போலவே கியூப மக்களும் தங்களது பாரம்பரியத்தை அடிமைகளிடமும், அடிமைகளின் எஜமானர்களிடமும தேட வேண்டும்”.
ஒபாமாவின் உள்ளத்தில் ஒருபோதும் பூர்வீக குடிமக்கள் இல்லை; கியூபாவில் இனரீதியான பாகுபாடு என்பது நமது மகத்தான புரட்சியால் அடித்து வீழ்த்தப்பட்டு விழுங்கப்பட்டுவிட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை; திருவாளர் பாரக் ஒபாமாவிற்கு 10வயது பூர்த்தியாவதற்கு முன்பே அனைத்து கியூபர்களும் முழுமையான ஓய்வூதியங்களையும் முறையான ஊதியங்களையும் பெறத் துவங்கிவிட்டார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. பொழுதுபோக்கு மையங்களாக மாற்றப்பட்ட இடங்களிலிருந்து கறுப்பினக் குடிமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்காக உடல் வலுமிக்க பலசாலிகளை கூலிப்படைகளாக வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் இனவெறி பிடித்த முதலாளித்துவ வழக்கத்தை கியூபப் புரட்சி அடியோடு துவம்சம் செய்துவிட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் அங்கோலா நாட்டில் வரலாற்றுத் துயரமாக நீடித்து வந்த இனவெறிக்கு எதிராக மாபெரும் யுத்தம் தொடுத்து அதில் வெற்றிபெற்று அங்கோலாவை விடுவித்தது கியூபா என்ற வரலாற்றை அவர் குறிப்பிடவில்லை.
நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு கண்டத்தில் – ஆப்பிரிக்கக் கண்டத்தில் – கொடிய அணுஆயுதங்கள் இருப்பதற்கு முடிவுகட்டியது கியூபா என்பதை அவர் குறிப்பிடவில்லை. இது நமது ஆதரவின் திட்டமிட்ட நோக்கத்துடன் கூடிய வெளிப்பாடு அல்ல; மாறாக அங்கோலா, மொசாம்பிக், கினியா பிஸ்ஸாவு மற்றும் இதர நாடுகள் போர்ச்சுக்கல்லின் பாசிச வெறிபிடித்த காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்தபோது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உதவி செய்தது கியூபா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
1961ம் ஆண்டு மகத்தான கியூப புரட்சி வெற்றிபெற்று வெறும் ஓராண்டும் மூன்று மாதமும் மட்டுமே முடிந்திருந்த நிலையில், ஆயுதமேந்திய ஒரு கூலிப்படையானது, அமெரிக்க போர்க்கப்பல்களுடனும் போர் விமானம் தாங்கிய கப்பல்களுடனும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட துருப்புக்களுடனும் திடீரென்று நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது. நமது நாட்டின் நூற்றுக்கணக்கான மகத்தான உயிர்களைப் பறித்த, எண்ணற்ற மக்களைக் காயப்படுத்திய அந்த ஈனத்தனமான தாக்குதலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அமெரிக்காவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கியூபர்கள் கூலிப்படையாக செயல்பட்டு கலகம் விளைவிக்கிறார்கள் என்று கூறித்தான் அந்த முதலாளித்துவ எஜமானர்களின் ஆதரவுக் கூலிப்படையினர் இங்கே தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி ஒரு நபரைக் கூட அடையாளம் கண்டுபிடித்து, இவர் கியூப கூலிப்படையைச் சேர்ந்தவர் என்று கூறி வெளியேற்ற முடியவில்லை. கியூபர்கள் திட்டமிட்டு ஒரு கலகக் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் கூட மேற்படி முதலாளித்துவ எஜமானர்களின் கூலிப்படையினர் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நமது நாட்டின் ராணுவ அனுபவமும், ராணுவ சக்தியும் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்ததே. ஆப்பிரிக்காவில் அவர்கள், புரட்சிகர கியூபாவை மிக எளிதாக வீழ்த்திவிட முடியும் என நம்பினார்கள். இனவெறியர்களின் ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்க ராணுவத்தின் ஆயுதமேந்திய படையினர்தெற்கு அங்கோலா வழியாக லுவாண்டா நாட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டு அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தலைநகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
அங்கு மிகப்பெரும் யுத்தம் வெடித்தது. அந்தப் போராட்டம் 15 ஆண்டுகள் நீடித்தது.
ஹவானாவின் அலிசியா அலன்சோ கிராண்ட் தியேட்டரில் ஒபாமா ஆற்றிய உரை பற்றி எனது கருத்தைச் சொல்லுகிறபோது, இதையெல்லாம் கூட நான் சொல்ல வேண்டியது அவசியமில்லைதான்; எனினும் வரலாற்றை நினைவுப்படுத்துவது எனது அடிப்படைக் கடமை.
ஏராளமான விபரங்களுக்குள் நான் செல்லவில்லை; மனிதகுல விடுதலை போராட்டம் எழுதப்படுகிறபோது அதில் கியூபாவின் மகத்தான அத்தியாயத்தை சுட்டிக்காட்டவே குறிப்பிடுகிறேன். அந்த வகையில் ஒபாமாவின் அணுகுமுறை சரியானது என்று நான் நம்புகிறேன். அவரது அமைதியான தோற்றமும் இயல்பான அறிவுத்திறனும் இங்கே வெளிப்பட்டது.
மண்டேலா தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்; அதிலிருந்து விடுதலையானபோது மனிதகுலத்தின் சுயமரியாதைக்கான போராட்டத்தில் எவராலும் வெல்லப்பட முடியாத ஒரு மாமனிதராக நின்றார். ஒரு நாள், மண்டேலாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை விளக்கும் புத்தகம் ஒன்றின் பிரதி எனது கைகளில் கிடைத்தது. என்னே ஆச்சரியம்! – பாரக் ஒபாமாவால் முன்னுரை எழுதப்பட்டிருந்தது. நான் வேகமாக அந்தப் பக்கங்களை படித்தேன். மண்டேலாவின் கையெழுத்துடன் கூடிய பிரதிகள் நம்ப முடியாத பல உண்மைகளை குறிப்பிட்டிருந்தன. அவரைப் போன்ற மனிதர்களை படிப்பது எத்தனை பெரிய பாக்கியம்.
தென்னாப்பிரிக்காவில் கியூபா ஆற்றிய பங்கினை நினைத்துப் பார்க்கும்போது நான் மற்றொரு அனுபவத்தை குறிப்பிட்டாக வேண்டும். தென்னாப்பிரிக்கர்கள் எப்படி அணு ஆயுதங்களைப் பெற்றார்கள் என்பது குறித்து அறிந்துகொள்வதில் நான் உண்மையில் ஆர்வமாக இருந்தேன். மொத்தத்தில் 10 அல்லது 12 அணுகுண்டுகளுக்கு மேல் இருக்காது என்ற தகவலை மட்டும்தான் நான் பெற்றிருந்தேன். அப்போது ஒரு நம்பத்தகுந்த ஆதாரமாக பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான பியரோ கிலெய் ஜீஸஸ் எழுதிய “முரண்படும் நோக்கங்கள் : ஹவானா, வாஷிங்டன் மற்றும் ஆப்பிரிக்கா, 1951-1976” என்ற நூல் எனக்கு கிடைத்தது. அது ஒரு அற்புதமான புத்தகம். அவர் மிகவும் நம்பத்தகுந்த ஒரு ஆதாரம் என்பதை நான் அறிவேன். உண்மையில் என்ன நடந்ததோ அதை அப்படியே எழுதியிருக்கிறார்; அதை அவரிடமே குறிப்பிட்டேன். கியூபத் தூதரான ஜோர்ஜ் ரிஸ்கட் கேட்ட கேள்விகள் உட்பட பல்வேறு விசயங்களை அந்த நூலில் கொடுத்திருந்தார். ஜோர்ஜ் ரிஸ்கட் அந்த காலக்கட்டத்தில் அங்கோலாவில் கியூபாவின் தூதராக, பிரதான பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டவர்.
சமீபத்தில் ரிஸ்கட்டை சந்திக்க மேற்கண்ட எழுத்தாளர் பியரோ கியூபாவிற்கு வந்தார். அப்போது ரிஸ்கட் உடல்நலம் குன்றி மோசமான நிலையில் இருப்பதை அவருக்கு தெரிவித்தேன். எனினும் அவர் சந்தித்துச் சென்றார். சில நாட்களிலேயே ரிஸ்கட் மரணமடைந்துவிட்டார். பியரோவிடமிருந்து தகவல்களைப் பெற நினைத்திருந்த நான், அவரது வருகைக்கு முன்பே தகவல்களைப் பெற்றுவிட்டேன்; இனவெறி ஆட்சி நடத்திய தென்னாப்பிரிக்க அரசுக்கு அணு ஆயுதங்களைக் கொடுத்தது அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் இஸ்ரேலும் என்பதுதான் அந்தத் தகவல்.
இந்தக் கதையைக்கேட்டால் ஒபாமா என்னசொல்வார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன தெரிந்து வைத்திருந்தார், என்ன தெரியாமல் இருக்கிறார் என்பதைப் பற்றியும் நான் அறியேன்; அவருக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும்!
எனது பணிவான ஆலோசனை என்னவென்றால் அவர் அதை அப்படியே விட்டுவிடுவதும், கியூபாவின் கொள்கைகள் சார்ந்த கோட்பாடுகளைப் பற்றி விரிவாக பேச முயற்சிக்காமல் இருப்பதும்தான் அவருக்குப் பொருத்தமானது.
அதேபோல மற்றொரு முக்கியமான விசயம் இருக்கிறது:
ஒபாமா மிக மிக இனிமையான தனது வார்த்தைகளால் இங்கே பேசியிருக்கிறார்:
“கடந்த காலத்தை மறந்துவிடுவதற்கு இதுதான் தருணம்; கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளுங்கள்; எதிர்காலத்தை ஒன்றுபட்டு எதிர்நோக்குவோம்; நம்பிக்கை மிகுந்த எதிர்காலம் இருக்கிறது; ஆனால் அது எளிதானதல்ல, அதில் ஏராளமான சவால்கள் இருக்கின்றன; காலத்தின் கைகளில் அதை ஒப்படைப்போம்; ஆனால் நான் இங்கே வந்திருப்பது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது; நாம் நண்பர்களாக இருக்க முடியும்; நாம் ஒரு குடும்பமாக இருக்க முடியும்; நாம் மிக நெருங்கிய அண்டை வீட்டுக்காரர்களாக இருக்க முடியும், ஒன்றுபட்டு இருக்க முடியும்”.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட போது நாம் எல்லோருக்குமே இதயமே வெடித்துவிடும் போல் இருந்ததை நான் அறிவேன். கிட்டத்தட்ட 60 ஆண்டுக்காலம், மிகக்கொடூரமான பொருளாதாரத் தடைகளை அமலாக்கிய பிறகு, கியூபாவின் கப்பல்கள் மீதும், துறைமுகங்கள் மீதும், அமெரிக்கக் கூலிப்படையினர் கொடூரமான தாக்குதலை நடத்தி ஏராளமான உயிர்களைக் கொன்றுகுவித்தபிறகு, நடுவானில் கியூப விமானத்தை குண்டுவைத்துத் தகர்த்து நூற்றுக்கணக்கான பயணிகளை கொன்றுகுவித்த பிறகு, எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான கூலிப்படைகளை கியூபாவிற்குள் ஊடுருவச் செய்த பிறகு, வன்முறைச் செயல்களை இடைவிடாமல் ஏவிக்கொண்டே இருந்தபிறகு, அமெரிக்க நாட்டு ஜனாதிபதியின் இந்த வார்த்தைகள் வந்திருக்கின்றன.
யாரும் இங்கு எந்த மாயையிலும் சிக்கவில்லை; கம்பீரமிக்க, எந்தவிதச் சுயநலமும் இல்லாத இந்த மகத்தான கியூப தேசத்தின் மக்கள் தங்களது பெருமிதமிக்க வரலாற்றை, தங்களது உரிமைகளை, அல்லது இங்கு ஏற்கெனவே நிரம்பிக்கிடக்கும் உணர்ச்சிப்பூர்வமான செல்வங்களை, பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ள கல்வி, அறிவியல், கலாச்சார வளர்ச்சிகளின் பலன்களை எல்லாம் கைவிட்டுவிடுவார்கள் என்ற எந்த அச்சமும் இல்லை.
நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் சக்தி நம்மிடம் உள்ளது. நமது மக்களை மேலும் மேலும் அறிவுப்பூர்வமானவர்களாக மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளும் அதற்கான ஏற்பாடுகளும் நிறையவே உள்ளன. இந்த முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளே நமக்குத் தேவை. அருகில் இருக்கும் பேரரசு எதையும் கொடுக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. நமது முயற்சிகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை; அமைதிக்கானவை. ஏனென்றால் நாம் எப்போதும் இந்த ஒட்டுமொத்த பூவுலகில் வாழும் அனைத்து மனித உயிர்களுக்கும் அமைதியும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை உயர்த்திப்பிடிப்பவர்கள்.
-மார்ச் 27, 2016 இரவு 10.25 மணி
நன்றி : கிராண்மா
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

Related Posts