அரசியல்

பிரண்ட்லைன் இதழாசிரியரின் எமெர்ஜன்சி நினைவுகள் …

(பிரெண்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் தொடர் முகநூல் பதிவை தொகுத்து இங்கே வழங்குகிறோம்)

இரவு 9 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நடக்கும்போது புகைபிடிக்கும் பழக்கமில்லாத அப்பா அன்று இரவு புகைபிடித்துக் கொண்டே உறையூர் நாச்சியார்பாளையத்தில் இருந்த வீட்டிற்கு வந்தார். ஏதோ ஒரு பதட்டம் புகையாய் போய்க்கொண்டிருந்தது. ”கலைஞர் கருணாநிதியின் அரசைக் கலைத்து விட்டனர். நான் இப்போதே போகட்டுமா, அல்லது காலையில் போகட்டுமா என்று அம்மாவிடமும் குழந்தைகள் எங்களிடமும் கேட்டார்.” நாங்கள் இப்போதே போங்கள் என்று ஒருமித்த குரலில் கூறினோம். அகில இந்திய வானொலியின் இரவுச் செய்தியைக் கேட்டு அரசு கலைக்கபட்டதை உறுதி செய்து கொண்டோம். இரவுச் சாப்பாட்டை சரியாகக் கூடச் சாப்பிடாமல் தட்டிலேயே கைகழுவி விட்டு எழுந்த அவர் இரண்டு சட்டைகள், இரண்டு வேட்டிகளை மடித்து ஒரு கருப்புநிற ப்ரீஃப்கேஸீல் எடுத்துக்கொண்டு இருளில் மறைந்துபோனார். எங்கே போனார் என்று இன்றுவரை எங்களுக்கு தெரியாது.

ஆறு மாதங்களாக நாடு முழுவதிலும் அராஜக ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த அவசரநிலைப் பிரகடனத்தை உறுதியாக எதிர்த்து நின்று, பல்வேறு கட்சிகளின் அகில இந்திய தலைவர்களுக்கு புகலிடம் கொடுத்த தமிழகத்தை ஆண்ட கருணாநிதி அரசாங்கம் கலைக்கபட்ட பிறகு எந்த நேரமும் போலீஸ் அப்பாவை கைது செய்யலாம் என்ற நிலையில் நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு தெளிவானது. ஏற்கெனவே உதிர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த கதவு தட்டப்பட்டது. அம்மா எழுந்து சென்றார். ”டிஎஸ்பி சேதுராமலிங்கம் வந்திருக்கிறேன். ராமச்சந்திரன் இருக்கிறாரா” என்று கதவுக்கு வெளியிலிருந்தே கேட்டார். “கோத்தாரி சர்க்கரை ஆலை தொழிற்சங்க பேச்சுவார்த்தைக்காக நேற்றிரவே மலைக்கோட்டை எக்ஸ்பிரசில் சென்னை சென்றுவிட்டார்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். சரி நாங்கள் வருகிறோம் என்று சொல்லி அதிகாரியும் போலிஸ்காரர்களும் சென்று விட்டனர்.

கதவை தட்டும் முன் வீட்டை போலீசார் சுற்றி வளைத்திருந்தனர் என்ற விவரம் காலையில் பக்கத்துவீட்டுக் காரர்கள் சொல்லும்போதுதான் தெரிந்தது. அப்பாவுக்கு அதற்குப்பின் தலைமறைவு வாழ்க்கை.

ஒரு நாள் பெரும் கூட்டம் புடைசூழ இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்தனர். நானும் அக்காவும் மட்டும் வீட்டில். அவர்களில் ஒருவர் அக்காவைப் பார்த்து அப்பா எங்கே இருக்கிறாரம்மா என்று கேட்டார். “போலீசாகிய நீங்கள்தானே அவரை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தால் நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்களும் அவரைப் பார்த்து பல மாதங்களாகிவிட்டன,” என்றார். அக்கா. “அவர் ஒரு மாதத்தில் சரணடைய வில்லையென்றால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம். அதற்கான நோட்டீஸ் இது என்று” என்று சட்டைப்பபையிலிருந்து ஒரு பேப்பரை உருவினார் ஒரு காவலர். இதை எங்கே ஒட்டுவது என்று அவர் யோசித்தபோது நான் இங்கே ஒட்டுங்கள் என்று ஒரு வாகான இடத்தைக் காண்பித்தேன். எதை வைத்து ஒட்டுவது என்று அவர்கள் யோசித்தபோது “கொஞ்சம் இருங்கள்” என்று சொன்ன நான் வீட்டிற்குள் ஓடிப்போய் மரநிறப் பசை இருக்கும் புட்டியைக் கொடுத்தேன். “கம்யூனிஸ்டுகள் பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்கிறார்கள் பார்” என்று சொல்லியபடியே நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றனர். எனக்கு வயது 13. அக்காவுக்கு 16.
நாற்பது வருடங்களுக்குப் பின்னரும் பசையின் பிசுபிசுப்பு என் கைகளில். அதன் மணம் என் நாசிகளில்!

அப்பா தலைமறைவாகி விட்டார். நண்பர்கள் பலர் நழுவி விட்டனர். சில குடும்ப நண்பர்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டனர். தெருவில் பார்த்தாலும் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அவசரமாகப் பேசி விலகிச் சென்றனர். எங்களுக்கு வரும் கடிதங்களைப் படிப்பதற்காகவே தபால் அலுவலகத்திற்கு வந்து, லாவகமாகப் பிரித்து படித்து விட்டு அதே லாவகத்துடன் மீண்டும் ஒட்டி விட்டு செல்வதற்காகவே போலீஸ் உளவாளிகள் தன் அலுவலகத்திற்கு வந்து செல்வதாக எங்கள் குடும்ப நண்பராக இருந்த தபால் துறை அதிகாரி கூறினார். பத்திரிக்கை அலுவலகத்திற்கே வந்து அமர்ந்து செய்திகளை சென்சார் செய்யும் வழக்கம் இருந்ததால் பிரதமரின் இருபது அம்ச திட்டத்தைக் குறித்த செய்திகளும், ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடின என்று அவசரநிலையின் ’பலன்களைக்’ கூறும் செய்திகள் மட்டுமே வந்தன. நாட்டின், மாநிலத்தின் பிறபகுதிகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே வாழ்க்கை சென்றது. அகில இந்திய வானொலியில் “இருபது அம்ச திட்டம், அது இந்தியாவின் திட்டம்’ என்று பாட்டு அடிக்கடி ஒலிக்கும்.

முன்பே எச்சரித்த படி ஒரு நாள் போலீஸ் அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். அப்பா சேர்த்து வைத்த ஒரே சொத்தான புத்தகங்களை நாங்கள் ஏற்கனவே தலைமறைவாக்கி விட்டோம். எடுத்துச்செல்ல ஒன்றுமில்லாததால் வெறும் கையுடன் திரும்பினர் போலீஸ்.

அம்மா நோய்வாய்ப்பட்டார். எனக்கு கடுமையான டைபாய்டு ஜுரம். குடும்பத்தலைவர் இல்லாமல் எப்படி குடும்பம் நடக்கிறது என்று குத்தல் பேச்சுகளையும் கேட்க வேண்டியிருந்தது. ரஷ்யாவிலிருந்தும், சீனாவிலுருந்தும் பணம் வந்திருந்தாலாவது கஷ்டம் குறைந்திருக்கும்!!! அந்த இக்கட்டான நேரத்திலும் மகராஷ்டிர மாநிலத்தில் வோர்லி பழங்குடியினரின் வீரமிகு போராட்டத்தைப் பற்றி கோதாவரி பருலேகர் எழுதிய ”மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது” என்ற புத்தகத்தை அம்மா மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். பின்னர் அது புத்தகமாக வெளி வந்தது.

அக்காவை கல்லூரியில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் அப்பாவின் கையெழுத்து வேண்டும் என்ற கட்டாயம் வந்தது. கல்லூரிக்கு எப்படி வந்தார், எப்போது வந்தார் என்று தெரியாது. ஆனால் படிவத்தில் அவருடைய கையெழுத்து இருந்தது.

பள்ளியில் நான் அமர்ந்திருந்தபோது தலைமையாசிரியர் வகுப்புக்கு வந்தார். வகுப்பாசிரியருடன் ஏதோ பேசினார். அவர் சென்ற பிறகு வகுப்பாசிரியர் என்னை அழைத்து உன் அப்பா கம்யூனிஸ்டா என்று கேட்டார். ஆம் என்றேன். உளவுத்துறை அதிகாரிகள் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதாகவும், தலைமையாசிரியர் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

மார்ச் 21, 1977 என்று அவசரநிலைப் பிரகடனம் ரத்து செய்யப்பட்டது. அப்பா அடுத்தநாள் காலை வீட்டிற்கு வந்தார். ஏறக்குறைய 14 மாதங்களுக்குப் பிறகு! எப்போதுமே வேட்டியும், வெள்ளை அல்லது வெளிர்நிறச் சட்டையும் அணியும் அவர் நல்ல பளிச்சென்ற நிறத்தில் சட்டையும், பேண்டும் அணிந்திருந்தார். மூக்குக் கண்ணாடி இல்லை. இது தலைமறைவு வாழ்க்கைக்காக அவர் போட்ட மாறுவேஷம்! சாரி சாரியாக மக்கள் அவரைப் பார்க்க வந்தனர். “நீங்கள் எல்லாம் என்ன தவறு செய்தீர்கள் என்று உங்களைப் போலீஸ் துரத்தியது?” என்பதுதான் அன்று பலரின் கேள்வியாக இருந்தது.

அன்று பத்து மணிக்கு தேர்தல் பற்றி விவாதிக்க திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம். இவரும் கூட்டத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பரபரப்பு! போலிஸ் அதிகாரிகள் உள்ளே வருவதும், கலெக்டருடன் பேசுவதுமாக இருந்தனர். சிறிது நேரத்தில் கலெக்டர், “ராமச்சந்திரன் உங்கள் மீதான வாரண்டு இன்னும் நிலுவையில் இருக்கிறது!” என்றார். உடனே ஒரு போலிஸ் அதிகாரி உங்களைக் கைது செய்கிறோம் என்று சொல்லி அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் விடுதலையும் செய்தனர். கூட்டம் நடந்தது. அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்டு தலைவர் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தில தோன்றியதால் பரபரப்பு என்று செய்தி வந்தது.

சில நாட்களுக்குப் பின் இந்திரா காந்தி பிரச்சாரத்திற்காக மதுரையிலிருந்து திருச்சி வருவதாக இருந்தது. திமுக, மார்க்சிஸ்ட் தொண்டர்கள் திருச்சி எல்லையில் கருப்புக் கொடியுடன் காத்திருந்தனர். அம்மாவும் அங்கு இருந்தார். போலிஸ் அனைவரையும் கைது செய்தனர்.

சில நாட்கள் கழித்து குடும்ப நண்பரான ஒரு போலீஸ்காரர் வீட்டிற்கு வந்தார். கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலைக் கையிலெடுத்து இதில் உங்கள் கட்சிக்காரர்களின் பெயர்களை மட்டும் குறித்துக்கொடுங்கள். திமுக தொண்டர்களை மட்டும் “கவனிக்கச்” சொல்லி எங்களுக்கு உத்தரவு என்றார். உடனே அம்மா, திமுக அரசு கலைக்கப்படும் வரை எங்களுக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்தது. எமர்ஜென்சியை எதிர்ப்பதில் எங்களுடன் உறுதியாக இருந்தவர்களை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்..

இந்த நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்வதற்கு மீண்டும் ஒரு அவசரநிலையை நோக்கி செல்கிறோம் என்ற உள்ளுணர்வுதான் காரணம். !

Related Posts