புத்தகம் பேசுது‍

பின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன! ரொமிலா தாப்பர் நேர்காணல்

பயாப்தி சுர், கனாட் சின்ஹா

தமிழில் – ச.சுப்பாராவ்

கே – ஒரு வரலாற்றாளராக, இந்தியாவில் கல்விப்புலம் சார்ந்த வரலாற்றை பொதுவெளிக்குக் கொண்டுவருவதில் நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள். அரசின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள ‘பொதுவான அறிவுஜீவிகள்‘ உதவவேண்டும் என்ற உங்களது கருத்து மிகவும் கவனம் பெற்றது. அரசியலில் வரலாற்றை நன்முறையில் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும், ஒரு ஜனநாயக சமூகமாக,   இந்தியா எந்த அளவிற்குப் புரிந்துகொண்டுள்ளது?

ப –  வரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும்,  அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன். வரலாற்றை ஜனரஞ்சகமாக்கி, கல்விப்புலம்சார்ந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடும் போக்கு இருக்கிறது. கல்விப்புலம் சார்ந்த வரலாறு மாறுபட்ட ஒன்று என்பதைப் புரியவைப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. மக்களுக்கு தம் கடந்த காலம் பற்றி தெரிய வைப்பது என்பதால் வெகுஜன வரலாறு (popular history) சரியானதுதான் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.  இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

கே – ‘வெகுஜன வரலாறுகளுக்கும்‘, கல்விப்புலம் சார்ந்த வரலாற்றிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது.  கொள்கை முடிவு செய்யக் கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களோ, பொதுமக்களோ, இருவருமே ‘பொதுவான அறிவுஜீவிகளின்‘ கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவது கிடையாது என்று நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.   உண்மையில், அது திரிக்கப்பட்டதோ, புராணமயமாக்கப்பட்டதோ, துதிபாடுவதோ, போலி வரலாறோ, பயனற்றதைக் கிளறிவிடுவதோ, எதுவாக இருந்தாலும், சரி, பொது வெளியில் விவாதங்களை நியாயப்படுத்த வரலாற்றை சுதந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு தொழில்முறை வரலாற்றாளர்களின் அறிவுச் செருக்குதான் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ப – நான் சற்றுப் பின்னால் சென்று இது பற்றி விளக்குகிறேன். எல்லா தேசியவாதங்களிலும் வரலாறு ஒரு மையமான பாத்திரம் வகித்துள்ளது. ஒரு விதத்தில், கடந்த காலம் காட்டப்பட்ட விதத்திலிருந்துதான் தேசியவாதம் தனக்கான அடையாளத்தைப் பெறுகிறது.  கடந்தகாலத்தை கட்டமைக்கும் செயலில், கல்விப்புலம் சாராத வரலாறாக, கடந்த காலம் வேண்டுமென்றே மாற்றப்படலாம், திரிக்கப்படலாம், தவறாகக் கூறப்படலாம். எனவே, வரலாற்றை எழுதும் அரசியல்வாதிகள் கடந்த காலத்தை வரலாற்றாளர்கள் போல் பார்ப்பதில்லை.  தமக்குத் தேவையான தத்துவார்த்த அடிப்படையில் அதை வளைப்பார்கள். அங்கேயே ஒரு தெளிவான வேறுபாடு வந்து விடுகிறது. மேலும், வரலாறு எழுதுதல் பற்றிய காலனியப் பார்வையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டு, அதன் தகவல்களை நடந்த நிகழ்வுகளாகச் சொல்லி விடுவார்கள். 1950களில் இது போன்ற எழுத்துக்கள் கேள்விக்குள்ளாகின. வரலாறு மாற ஆரம்பித்தது. அது இந்தியவியலின் (Indology) ஒரு பகுதியாக இருப்பது மாறியது. கடந்தகாலம் பற்றிய காலனியப் பார்வை பற்றி ஏராளமான கேள்விகளை எழுப்பியது. விரைவில் அது சமூக அறிவியலின் ஒரு பகுதியாக மாறியது. சமூகவியல், பொருளாதாரம், மானுடவியல், தொல்லியல் போன்ற மற்ற சமூக அறிவியல் துறைகளுடன் உறவாட ஆரம்பித்தது. காலப்போக்கில், வரலாறு ஒரு ஆய்வு முறையாக மாறியது. அதுதான் இன்றைய கல்விப்புல வரலாற்றின் அடிப்படையாக இருக்கிறது. இப்போது ஒரு செயல்முறை உள்ளது. வெகுஜன வரலாற்றுக்கு அந்த முறை பற்றி எதுவும் தெரியாது. இந்த செயல்முறையோ, வரலாற்றாளர்கள் எழுப்பும் கேள்விகளோ வெகுஜனக் கருத்திற்குப் புரியாமல் போகும்போதுதான் பிரச்சனை எழுகிறது.  பொதுவாக மக்களைப் பொருத்தவரை, வரலாறு என்றால், சில தேதிகள் குறிப்பிடப்படும், கடந்தகாலத்தைப் பற்றிய சில தகவல்கள் என்பதாகவே இருக்கிறது. எனவே, வரலாற்றை வெகுமக்கள் புரிந்துகொள்வதற்கும், வரலாற்றாளர்கள் புரிந்து கொள்வதற்கும் இடையில் பெரிய இடைவெளி, ஒரு தவறான இடைவெளி இருக்கிறது.

கே- நீங்கள் வரலாறு பற்றி  மக்களிடம் பேசும்போது. அவர்கள் அதன் மையமான சிந்தனையை கவனிக்காமல், அதை வெறும் தகவல்களின் தொகுப்பாகப் பார்க்கும் போது மிகவும் வெறுப்பாக இருக்கும், இல்லையா?

ப – ஆம். ஒரு வரலாற்றுத் தகவல் ஒரு வரலாற்றுத் தகவல் மட்டுமே. பிறகு எதற்கு பல்வேறு விளக்கங்கள் பற்றிப் பேசுகிறீர்கள்? என்று மக்கள் என்னிடம் மிக சாதாரணமாகக் கேட்பார்கள். எவையெல்லாம் வரலாற்றுத் தகவல்கள், அவை எப்படி ஆராயப்பட்டன, என்று புரிந்துகொள்வது மக்களுக்குப் பெரும்பாலும் மிகவும் கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் இந்தப் புலத்தில் பயன்படுத்தப்படும் செயல்முறைகளில் அக்கறை காட்டுவதில்லை. இது போன்ற கேள்விகளை மக்கள் விஞ்ஞானிகளிடம் கேட்பதில்லை.  ஏனெனில், அவர்களுக்கு அறிவுப்புலம் புரியாதது. அவர்கள் விஞ்ஞான அறிவு காலத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  பொருளாதார அறிஞர்களிடமும் அவர்கள் இவ்வாறு கேட்பதில்லை. காரணம் அவர்களுக்கு பொருளாதாரம் புரியாது. சமூகவியல் பற்றிக் கூட அவர்களுக்கு சற்று தயக்கம்தான். ஆனால், வரலாறு மக்களின் அடையாளங்கள் தொடர்பானது, அவர்களது கடந்த காலம் தொடர்பானது, அதை அவர்கள் விரும்பும் வண்ணம் மாற்றமுடியும் என்பதால், அவர்களுக்கு எளியதாகத் தெரிகிறது.

கே – அப்படியானால், இதற்குத் தீர்வுதான் என்ன?

ப – பள்ளிகளில் வரலாற்றை முறையாகக் கற்றுத் தருவதன் மூலம், இந்தப் பிரச்சனையை ஓரளவு தீர்க்க முயலலாம் என்ற நான் நினைக்கிறேன். நல்ல மதிப்பெண் பெறுவதற்காக, தகவல்களை அப்படியே திருப்பிச் சொல்லவே குழந்தைகள் பழக்கப் படுத்தப் படுகிறார்கள். இது கிட்டத்தட்ட மதக் கல்வி போன்றதுதான். கேள்விகளும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும். பதில்களும் கூட தெரியும்.  சொல்லித் தருவது எல்லாம் குப்பை என்று நான் சொல்ல வரவில்லை. அறிவு விரிவடைந்து, மேலும் பல கேள்விகள் கேட்கப்படும் வகையில் ஒஒரு ஆக்கபுர்வமான வகையில் அறிவைக் கேள்வி கேட்கும் வகையில் கற்றுத்தர வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உயிரற்ற அறிவைத்தான் சொல்லித் தருகிறீர்கள். உதாரணத்திற்கு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்து மற்றும் முஸ்லீம் தேசியவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது நோக்கம் அறிவைக் கேள்விக்குள்ளாக்குவது அல்ல. உங்களுக்கு விடைகள் தரப்பட்டு விடுகின்றன. அவற்றை நீங்கள் ஏற்றுத் தான் ஆகவேண்டும். மதரஸாவின் ( முஸ்லீம் பள்ளிக்கூடம்) பாடத்திட்டமும், சிசு மந்திரின் (இந்து பள்ளிக்கூடம்) பாடத்திட்டமும் மாணவர்கள் அறிவைக் கேள்விகேட்பதைத் தடுக்கின்றன. இது சரி செய்யப் படாதவரையில், பொது மக்கள் கருத்து திரும்பத் திரும்பக் கூறப்படும் தகவலின் அடிப்படையில்தான் இருக்கும். அது கேள்வி கேட்கப்படாமல் தொடரும்.

கே – நீங்கள் குறிப்பிட்ட இந்து, முஸ்லீம் தேசியவாதங்கள் பற்றி. இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவது குறித்து சர்வதேச அளவில் செய்திகள் அடிபடுகின்றன. இது எல்லா இடங்களிலும் இருக்கக்கூடிய ‘இஸ்லாமோஃபோபியா‘தான், இந்தியாவிற்கு மட்டுமான பிரச்சனை அல்ல என்று நீங்கள் கருதுகிறீர்களா?

ப – ஆம். முஸ்லீம்களுக்கு எதிராக கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்கள் என்று பார்க்காமல், உலக அளவில் என்ன நடக்கிறது என்ற வகையில் ஆராய வேண்டும். நாடுகள் ஏற்றுள்ள தத்துவம் என்ன? உலகப் பொருளாதாரம் என்ன செய்கிறது? இதன் ஆரம்பம் வரலாற்றில் இருக்கிறது என்று ஒருவர் உறுதியாகக் கூற முடியும். ஐரொப்பாவில் இஸ்லாமியருக்கு எதிரான உணர்வுகள் புனிதப் போர்களில் ஆரம்பித்தன என்பதை மறந்து விடக்கூடாது. சமீபத்திய ஆய்வுகள் அவற்றில் மதத்திற்கு அதிக பங்கு இல்லை என்றும், வர்ததகம், லாபத்திற்கான போட்டிதான் முக்கிய காரணம் என்று காட்டியுள்ளன. இந்த மோதல்களில் சில அம்சங்கள் அழுத்தம் பெற்று, மக்களின் நினைவில் ஆழப் பதிந்துவிடும்போதுதான் சிக்கல் வருகிறது.  இதில் இருந்த மதரீதியான காரணம் இன்று பரவலாக இருக்கக்கூடிய இஸ்லாமோஃபோபியாவைத் தூண்டிவிட்டுவிட்டது. நமது காலத்தில் நடந்த ஈராக் போர், சூழலை மேலும் மோசமாக்கிவிட்டது. இன்றைய ஐரோப்பிய – அமெரிக்க அரசியலும், இஸ்லாமிய நாடுகளுடனான அவர்களது உறவும் இந்த ஃபோபியா அதிகரிக்க காரணமாக உள்ளன. இந்த இஸ்லாமோஃபோபியாவை அதிகரிக்கும் ஒரு அரசியல், பொருளாதார யதார்த்தமும் ஒன்று இருக்கிறது. எனவே, இவற்றை ஒருவர் மதங்கள் ஒன்றோடொன்று மோதுவதாக மட்டுமே பார்க்கக் கூடாது. உண்மையில் அது யதார்த்தங்களின் மோதல்.  சில நாடுகள் தாம் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அவற்றிற்கு அண்டை நாடுகளுடன் பிரச்சனைகள் வருகின்றன. எனவே, இன்று உலகில் உள்ள அச்சங்கள் குறித்து நாம் யோசித்தால், அதை மதம் குறித்த அச்சங்களாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமோஃபோபியாவை நீட்டிக்கச் செய்யும் பல பிரச்சனைகள் உள்ளன. எனவே அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

கே – எங்களில் ஒருவர் நெதர்லாந்தில் பணிசெய்பவர். அது சகிப்புத் தன்மை உள்ள நாடு என்ற பெருமை உடையது.  அது இந்தியாவில் சொல்லப்படும் வேற்றுமையில் ஒற்றுமைஎன்பது போன்ற தேசியவாதச் செய்தியை  ஒத்தது. சகிப்புத் தன்மை என்றால் என்ன? அப்படி ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் இது போன்ற விவாதங்கள் எழுப்புகின்றன.  வேற்றுமை என்பது இயல்பானது, ஒரு வழிமுறையாக ஏற்கத்தக்கது என்ற நிலையில், சகிப்பின்மை பற்றி போதிப்பது முரணில்லையா? அந்த வகையில், சகிப்புத்தன்மை என்பது நுட்பமான உள்ளர்த்தம் உள்ள ஒரு சொல்லாடலாக அமைகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா?

ப – சகிப்புத்தன்மைக்கு அழுத்தம் தருவது சகிப்பின்மை நிலவுவதைச் சுட்டிக்காட்டுகிறது. எங்கோ சகிப்பின்மை ஓரளவிற்காவது இருப்பதால்தான் நீங்கள் சகிப்புத்தன்மையின் அவசியம், அது எத்தனை நல்லது என்றெல்லாம் பேசுகிறீர்கள். எனவே அது இரண்டு பக்கமும் கூரான ஒரு சொல்.  இப்போது நாம் ஏன் இந்தியாவில் இந்தச் சொல் பற்றி இவ்வளவு அலட்டிக் கொள்கிறோம்? நாம் சற்று பின்னோக்கி காலனிய காலத்து தேசியவாத தத்துவத்திற்குப் போகவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போது மேற்கிற்கும், கிழக்கிற்கும் (அதாவது, இந்தியா) உள்ள வேறுபாடே சகிப்புத்தன்மையும், அகிம்சையும்தான் என்று சொல்லப்பட்டது. மேற்கத்தியர்கள் கிழக்கின் மீது கிழக்கத்திய கொடுங்கோன்மையையும், ஜனநாயக விரோத சமூகங்களையும் திணித்தார்கள். கிழக்கைப் போல் ஆன்மீகத் தன்மையோடு இல்லாது, பொருளாயத விஷயங்களுக்கே மேற்கு முக்கியத்துவம் தருவதாக இந்தியர்கள் இதற்கு எதிர்வினை ஆற்றினார்கள். இந்த ஆன்மீகத்தின் ஒரு பகுதிதான் சகிப்புத் தன்மை.  அதிலிருந்துதான் இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கலாச்சாரம் கொண்டதாகக் காட்டிக் கொண்டது. சகிப்பின்மையின் பெரிய பின்விளைவு வன்முறை என்பதால், சகிப்புத் தன்மையோடு இருக்க, நீங்கள் அஹிம்சையையும் பின்பற்ற வேண்டும். இரண்டும் ஒன்றோடொன்ற பின்னிப் பிணைந்தவை. இந்த  அஹிம்சை, அன்மீக இந்தியா பிம்பம், தேசியவாதப் பிரச்சாரத்திற்கு, குறிப்பாக காந்திக்கு மிகவும் உதவியது. ஆனால். பிரிவினை சமயத்து வன்முறை நிகழ்ந்து விட்டது. நாம் உள்ளார்ந்த வகையில் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக, அஹிம்சாவாதிகளாக இருந்திருந்தால், அத்தகைய வன்முறை நடந்திருக்குமா என்பதுதான் கேள்வி. ஒருவேளை நடக்காது இருந்திருக்கலாம் !

இந்திய வரலாறு நெடுகிலும், புத்தர், அசோகர், அக்பர் என சகிப்புத்தன்மையின் நன்மைகளைப் பேசிய பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவற்றோடு கூடவே, மதக் கலாச்சாரங்களுக்கிடையிலான மோதல்கள் இருந்ததற்கும் உதாரணங்கள் உள்ளன. எனவே நாம் அத்தனை சகிப்புத்தன்மை கொண்டவர்கள் அல்ல என்பது தெரிகிறது. மெகஸ்தனிஸ், அசோகரது ஸ்தூபிகள், யுவான் சுவாங், அல்-பெரூனி ஆகியோரது எழுத்துகளிலிருந்து, பிராமணர்களுக்கும், சிரமணர்களுக்கும் (பௌத்தர்கள், ஜைனர்கள் போன்ற வேதமதம் சாராத வேறுகோட்பாடுகளைச் சேர்ந்த துறவிகள்) இருந்த வேறுபாட்டைத் தெளிவாக அறியலாம். இலக்கண ஆசிரியர் பதஞ்சலி, ( கிமு இரண்டாம் நூற்றாண்டு) அவர்களது உறவு கீரிக்கும், பாம்பிற்குமான உறவு போன்றது என்கிறார். பௌத்த, ஜைன உபதேசங்கள் வேத பிராமணீயத்தை ஏற்கவில்லை.  இதன் விளைவாக ஏராளமான இறப்புகளும், அழிவுகளும் ஏற்பட்டன. எனவே, அது முழுமையாக, ஒத்திசைவோடு இருந்த சமூகமல்ல.  இதை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வரலாற்றாளராக இதன் பின்னாலிருந்த சகிப்பின்மை என்ன என்று புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஐரோப்பாவில் நடந்தது போல நியாயவிசாரணை, மதவிரோதக் கருத்துக்காக உயிரோடு எரிப்பது போன்றவை எல்லாம் இந்தியாவில் நிகழவில்லை என்பது  உண்மைதான்.  இங்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டது என்றாலும், அது ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், முதலில் சகிப்பின்மை இருந்தது என்பதை ஒருவர் ஏற்க வேண்டும்.  அதன்  பிறகுதான் அதைப்பற்றி ஆய்வு செய்வது சாத்தியப்படும்.  மேலும்,  மதத்தைத் தாண்டி, தலித்துகளுக்கு எதிராக ஏராளமான சமூகப் பாரபட்சங்கள் இருந்தன.  நீங்கள் சகிப்பின்மை என்று சொன்னவுடன், மக்கள் மதத்தைப் பற்றித்தான் நினைப்பார்கள். ஆனால், எந்த மதமாயினும், இந்திய சமூகம் படிநிலையாகப் பிரிக்கப் பட்டிருப்பது சகிப்பின்மை மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்த ஒரு இடமாகும்.

கே – நீங்களே சகிப்பின்மையால் பாதிக்கப்பட்டவர். சில அரசியல் குழுக்களிடமிருந்து உங்களுக்கு அச்சுறுத்தல்கள்  கூட வந்திருக்கின்றன .

ப – (சிரிக்கிறார்)  ஓ! ஆமாம்… மொரார்ஜி தேசாய் அரசாங்கம் வந்த போது. நாங்கள் எழுதிய வரலாற்றுப் பாட புத்தகங்களை முரளி மனோகர் ஜோஷி தாக்க ஆரம்பித்தார். பாராளுமன்றத்தில் எங்களை தேச விரோதிகள், இந்திய விரோதிகள், அறிவுஜீவி பயங்கரவாதிகள் என்றெல்லாம் குறிப்பிட்டார். நாங்கள் எழுதிய பாடபுத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார். தம்மோடு உடன்படாதவர்களை தேசவிரோதிகள் என்று சொல்லிவிடுவது இவர்களுக்கே உரித்தான ஒன்று. அன்றிலிருந்து நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கு அந்த விவாதம் நடந்தது, நடந்தது, நடந்து கொண்டே இருந்தது. பிறகு அரசாங்கம் கவிழ்ந்தது. ஆனால், அந்தப் புத்தகங்கள் தொடர்ந்தன!  இந்த நாட்டில் பாடபுத்தகங்களின் கதை இதுதான் – வலதுசாரி இந்துத்துவ தீவிரவாதிகளுக்குப் பிடிக்காத ஒரு பாடபுத்தகத்தை நீங்கள் எழுதும்போதெல்லாம், அவர்கள் அதை இந்தியாவிற்கு விரோதமானது, தேச விரோதமானது என்பார்கள். அந்த வரலாற்றாளர் தாக்கப் படுவார். கடுமையான சொற்போர் நடக்கும்.  கல்வியாளர்களுக்கு எதிராக இதுவரை வார்த்தைகளும், நடவடிக்கைகளும்தான். ஆனால், முற்போக்கு சிந்தனையாளர்கள் நிலமை மோசம். அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த முறை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

கே – உங்கள் அறிக்கைகள் எப்போதும் வலுவாக, அழுத்தமாகவே இருக்கின்றன…

ப –ப நான் வலுவான அறிக்கைகள் விடுவதில்லை. நீங்கள் ஒரு தொழிலில் இருக்கிறீர்கள், உங்களது அந்தத் தொழில் தாக்கப்படுகிறது என்றால், நீங்கள் அதைப் பாதுகாத்துத்தான் ஆகவேண்டும். நான் செய்வது அதைத்தான்.

கே – இந்த விஷயத்தில் நீங்கள். முற்றிலும் மதச்சார்பற்ற இந்தியாவை அடையது குறித்த கோரிக்கையை முன்வைத்து, மிகத் துணிச்சலான, வெளிப்டையான பிரச்சனையை எழுப்பி விட்டீர்கள் என்று நினைக்கிறோம். இதற்கு சட்ட அமைப்பு மாற்றப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ( காலனிய காலத்திலிருந்து) இது ஒரு  முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. யாருமே இதில் கைவைக்க பயப்படுகிறார்கள். இந்தியாவில் வாழும் பலதரப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டால்,  எல்லா அரசியல் குழுக்களுக்குமே அதை நிறைவேற்றுவது மிகவும் கடினமானதாகத்தான் இருக்கும். உண்மையில் நீங்கள் ஒரு குடிமகள் என்ற உணர்வோடு. நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கான துணிவோடும் வாதிடுவதாகச் சொன்னீர்கள். இப்படிப்பட்ட பெரிய மாற்றங்கள் நடக்க முதல்படியாக என்ன செய்யவேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? முதல் முயற்சியை அரசாங்கமோ அல்லது மக்களோ எடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ப பநான் சொல்ல வருவதெல்லாம் விரிவான விவாதத்திற்கான காலம் வந்துவிட்டது என்பதைத்தான். அது வெறும் மதரீதியான குறிக்கோள்களை முடிவுசெய்வதாக மட்டும் இருந்துவிடக் கூடாது.  பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்பதைப் பற்றி அது விவாதிக்க வேண்டும்.  இதை நாம் பேசிக் கொண்டே இருந்தாலும், யாருக்கும் அது பற்றித் தெரியாது. அது ஜனநாயகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதால், அது மிகத் தெளிவாக வரையறுக்கப் பட வேண்டும். ஒவ்வொரு சமூகமும் சமமானதாக, ஒவ்வொரு குடிமகனும் சம உரிமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு ஜனநாயகத்திற்கு மதச்சார்பின்மை தேவைப்படுகிறது. இதற்கு அடிப்படையான சிவில் உரிமைகள் சமமாக பிரயோகிக்கப்பட வேண்டும். இது பொது சிவில் சட்டத்தில் பிரதிபலிக்கும். நாம் ஒரு ஜனநாயகத்தில் இருக்கிறோம் என்றால், அதன் தவிர்க்க வியலாத் தன்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்த வன்முறையும், அர்த்தமற்ற லவ் ஜிகாதியும், காஃப் பஞ்சாயத்தும், இது போன்ற மற்ற வழக்கங்களும்  இருக்கத்தான் செய்யும். நமக்கு முறையான சிவில் சட்டம் வேண்டுமா? அல்லது அவரவரது மதச் சட்டங்கள் தொடர அனுமதிக்கப் போகிறோமா?

நான் ஒரு பொது சிவில் சட்டம் என்று சொல்லும் போது, எல்லா மதச் சட்டங்களையும் இணைத்து, எப்படியோ அவற்றை ஒன்று சேர்ப்பது பற்றிப் பேசவில்லை. பிறப்பைப் பதிவுசெய்தல், திருமணம், சொத்து வாரிசுரிமை போன்ற ஒரு குடிமகனது வாழ்வில் முக்கியமாக உள்ள விஷயங்கள் குறித்த மதச்சார்பற்ற சட்டத்தை உருவாக்குவது பற்றிப் பேசுகிறேன். இந்த மூன்று விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு பொது சிவில் சட்டம் உருவாக்கினால்கூட, தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் போன்றோரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம். நான் நிச்சயமாக ஒரு புரட்சிகரமான மாற்றங்கள் செய்வதைப் பற்றிப் பேசவில்லை. நான் சொல்வதெல்லாம் அதைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாமே, விவாதிக்கலாமே, அதை ஒருவிதமான யதார்த்தமாக ஆக்கலாமே என்பதைத்தான். மக்கள் இதைப் பற்றி விவாதிக்காமல் இது முன்னுக்கு வர முடியாது. இந்த நாட்டின் மக்களாக நாம் இதன் ஒவ்வொரு அம்சம் பற்றியும் விவாதிக்க வேண்டும்.

கே – பிரச்சனை –  அறிவுஜீவிகள் எழுதுவதை யார் படிக்கிறார்கள்? – என்ற  பழைய கேள்வியில்தான் இருக்கிறது.  பெரிய அறிஞர்கள் எழுதும் வரலாற்று நூல்களை யாரும் படிப்பதில்லை என்பது நன்கு தெரிந்த விஷயம்தான். அவை ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டம் தாண்டி வாங்கப்படுவதும் இல்லை, விவாதிக்கப்படுவதும் இல்லை. அதற்காக வரலாறு விற்பனை ஆவதில்லை என்றும் சொல்ல முடியாது. வரலாற்றுப் பாத்திரங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வரலாற்றுக் கதைகள் என்ற மிகப் பெரிய இலக்கிய வகைமை ஆகியவற்றிற்கு மக்கள் ஆதரவு நிறைய உள்ளது. ஆனால், ஒருபுறம் வரலாறு பற்றிய உணர்வைப் பரப்புவதற்கும், அதே நேரத்தில். வரலாற்று நிகழ்வுகளைத் திரித்துப் பரப்புவது என்பதற்குமான முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு ? பயங்கரமான அடையாள அரசியலைத் தூண்டிவிடும் பாரபட்சமான வரலாற்றுச் சித்தரிப்புகளைப் பயன்படுத்துவது பற்றி இந்த படைப்பாக்க அறிவுஜீவிகளுக்கு பொறுப்புணர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது?

ப – அவர்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு அது தெரிவதில்லை. தெரிந்தாலும்கூட, அவர்கள் தமது சொந்த வா்த்தக நலன்களைத் தான் பெரிதாக நினைக்கிறார்கள். இன்று நாம் கேள்விப்படும் ஏராளமான வன்புணர்ச்சி சம்பவங்கள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. அதை வடிவமைத்ததில் ஊடகங்களுக்கு ஓரளவு பங்கு உண்டு.  ஆணாதிக்கம் என்பது இந்தியாவில் ஏற்கப்பட்ட ஒன்று. அது எல்லா இடங்களிலும் இருக்கிறது.  எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. தொடரவும் செய்கிறது. இந்த நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் தான் மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். மக்களிடம் பேசுவதன் மூலமாக, அறிவுறுத்துவதன் மூலமாக, ‘நீங்கள் வன்புணர்ச்சியை ஏற்கவில்லை என்றால், அதற்கு எதிராக ஏராவது செய்யத் தயாரா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதன் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்த முயலவேண்டும். ஊடகங்கள் அதிக பொறுப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும். பிற்போக்குத்தனமான மதிப்பீடுகளை ஆதரிக்கக் கூடாது. கொஞ்சம் விழிப்புணர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் சிவில் சமூகம், ‘நாங்கள் பார்க்கவோ, கேட்கவோ நினைக்கும் விஷயம் இதுவல்ல‘ என்று எதிர்த்துச் சொன்னால்தான் அது வரும்.

கே – விழிப்புணர்வு பெற்ற பொதுமக்களை உருவாக்குவதில் அறிவுஜீவிகள் எப்படிப் பங்காற்றலாம்? கட்டுரைகள் எழுதுவது, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எழுதுவது, பொதுக் கூட்டங்களில் பேசுவது, மின், சமூக ஊடகங்களில் அதிகமாக ஈடுபடுவது, பிராந்திய மொழிகளில் அதிகமாக எழுதுவது என்பது போன்று கல்விப்புலத்திற்கு வெளியே அறிவுப்பரவலாக்கத்தில் அவள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமா?

ப – மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு உண்டாக்குவது என்பதுதான் கேள்வி. எல்லா அறிவுஜீவியும் ஒரு பத்திரிகையாளனின் பாணியில் எழுதிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பத்திரிகைப் பாணி அறிவுஜீவிப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.  நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு உண்மையான தீவிர கல்வியாளர் தனது ஆய்வுக் கட்டுரையை தனது சக ஆய்வாளர்களுக்காகத்தான் எழுதுகிறார். அதனால் அது ஏராளமான பொது மக்களை விலக்கிவிடுகிறது. அதற்காக, நீங்கள் பொதுமக்களை கவரும் வகையில் எழுதத் தெரிந்தவர் என்றாலும், அப்படி எழுதக் கூடாது என்பதல்ல. உங்களால் அதை  கண்டிப்பாகச் செய்ய முடியும்.  ஆனால் அதை மக்களுக்கு அறிவு புகட்டுவது என்ற பொறுப்புணர்ச்சியோடு செய்ய வேண்டும்.  பிரச்சனைகளை ஆழமாக விவாதிக்க ஒரு தொலைக்காட்சி சானலோ அல்லது வானொலியோ இந்தியாவில் இல்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இந்த உலகில் சுயமரியாதை உள்ள எல்லா நாடுகளிலும்  தீவிரமான விவாதங்கள் நடைபெற ஒரு சானல் இருக்கிறது. முக்கிய நேரத்தில் பாதி நேரம் அதற்கு ஒதுக்கப் படுகிறது. இங்கு அப்படி இல்லவே இல்லை. இருந்தாலும் மிகவும் மேலோட்டமான விவாதங்கள்தான். அதனால், நல்ல அறிஞர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.  ஆனால், இது போக, பள்ளி, கல்லூரிகளில் அடிப்படைக் கல்விக்கு இந்த அறிவுஜீவிகள் தாமும் பொறுப்பு என்பதை உணரவேண்டும். ஆசிரியர்கள் எப்படி பயிற்றுவிக்கப் படுகிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. அவர்கள் இளைஞர்களை சிந்திக்கத் தூண்டுபவர்களாக இருக்கவேண்டும். தகவல்களைப் பெறுவது, பிறகு அது பற்றி யோசிப்பது, அது பற்றி கேள்வி கேட்பது – அதுதானே கல்வி! இதைச் செய்துவிட்டோம் என்றால், நம்மிடையே கற்றறிந்த பொதுமக்கள் இருப்பார்கள்.

பேட்டி எடுத்த பயாப்தி சுர் காலனிய, உலக வரலாறு பற்றி லெய்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.  அவர் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி.

கனாட் சின்ஹா டெல்லியின் செயிண்ட். ஸ்டீஃபன் கல்லூரியில் ஆசிரியர். அவர் மஹாபாரதம் மற்றும் பண்டைய இந்திய வரலாறு குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

 

Related Posts