இதழ்கள் இளைஞர் முழக்கம்

பிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்

பசு பாவம் தானே?

பசுவை கொல்வது பாவம் தானே? என்ற பொது புத்தியிலிருந்து சங்பரிவாரங்கள் தங்களது குதர்க்க புத்தியை புகுத்துகின்றனர். மிருக வதை என்பது பொதுவாக தடை செய்யப்பட்டுள்ளது. வேட்டையாடுவதும், அத்துமீறிக் கொல்வதும் இன்று குறிப்பிட்ட வரையறைக்குள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பசுக்கள் உட்பட கால்நடைகள் அனைத்தும் உலகம் முழுவதும் விவசாய பொருளாதாரத்தோடு இணைந்ததாகும். ஊட்டச்சத்து, வேலை வாய்ப்பு மற்றும் விவசாயிகளின் செல்வாதாரமாக அவற்றின் பங்கு இருக்கிறது. இந்த செல்வாதார தேவையின் காலம் முடிந்தவுடன் பசு முதல் அனைத்து கால்நடைகளும் அதன் அடுத்த கட்டத்தை அடையவில்லை என்றால் பொருளாதார சுழற்சியின் சங்கிலி அறுபட்டு நெருக்கடிகள் உண்டாகும். இவை அனைத்தும் மத்திய ஆட்சியாளர்களுக்கும் சங்பரிவாரங்களுக்கும் சந்தேகமின்றி தெரிந்த விஷயம்தான். ஆனாலும் இவர்கள் பசுவிற்காக ஏற்படுத்துகிற கலவரங்களுக்கு பின்னால் பாசிச அரசியல் அணிதிரட்டல் புதைந்து கிடக்கிறது.

பிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் :

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ இன்றைய மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு அப்படியே பொருந்தும். பசு பாதுகாப்பு என்ற பெயரால் மாமிசத்திற்கு தடைவிதித்து நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மாமிசம் வைத்திருந்தால்.. மாடுகளை ஏற்றிச் சென்றால்.. செத்தமாட்டின் தோலை உரித்தால்.. நடுவீதியில் பச்சாதாபமின்றி படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். தவறுகள் நடந்தால் புகார் செய்வது, வழக்குப்பதிவு செய்வது, விசாரணை நடத்துவது, நீதிமன்றம் தண்டனை கொடுப்பது என்ற சட்டத்தின் ஆட்சி எதுவும் இங்கு இல்லை. சட்டத்தின் ஆட்சிக்கு சமாதிகட்டி சனாதன ஆட்சியை சிம்மாசனத்தில் சிங்காரித்து வைத்துவிட்டனர். இதனால் புதிய புதிய பெயர்களில் பிணந்தின்னி அமைப்புகள் தோன்றி இரத்தவெறியோடு காட்டேரிகளாக காட்சி தந்து சாலைகளில் ஆட்சி செய்கின்றனர். கடந்த 17 மாதங்களில் 16 இஸ்லாமியர்கள் நடுரோட்டில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இரு முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்து மதத்தை சேர்ந்த ஏழு பேர் உட்பட 40 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் மின்ஹாஜ் அன்சாரி என்ற 22-வயது இளைஞன் சட்டப்படியான முறையில் தனது இறைச்சி வியாபாரத்தை வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்ததற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு காவலர்கள் முன்னிலையிலேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளான். இவை அனைத்தும் பசு ரட்சகர்கள் என்ற பெயரால் சங்பரிவாரங்கள் நடத்தியுள்ளது.

ஒரு மாட்டுக்கு இத்தனை ஆவணமா?

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில் விலங்கு வதை தடைச் சட்டத்தின் கீழ் விதிகளை திருத்தி தடைகளை விதித்து மக்கள் வாழ்க்கையை தடுமாற செய்துள்ளார்கள். இந்த திருத்தத்தில் 50-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து போதுமடா சாமி, மாடே வேண்டாமென்று ஓடும் அளவிற்கு செய்துள்ளனர்.
கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. பண்ணை உரிமையாளர்கள் மட்டுமே சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும். விவசாய தேவைக்காக மட்டுமே கால்நடைகள் விற்கப்பட வேண்டும். அதை விற்பவரும் வாங்குபவரும், இறைச்சிக்காக கால்நடைகள் விற்கப்படவில்லை என்ற உறுதிமொழியை கைப்பட எழுதி தர வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை 5 நகல் எடுத்து அவற்றை வருவாய் அதிகாரிகள், மாவட்ட கால்நடை மருத்துவர், கால்நடை சந்தை கமிட்டி, வாங்குபவர் மற்றும் விற்பவர் என அவர்களுக்கு தனித்தனியாக என 5 நகல்களை தர வேண்டும். கால்நடைகளை வாங்கியவர்கள் 6 மாத இடைவெளிக்குள் அவற்றை விற்பனை செய்யக் கூடாது.

இளம் கன்றுகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது. வெளி மாநிலங்களுக்கு கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கால்நடைகளை பலியிட தடை விதிக்கப்படுகிறது. கால்நடை சந்தைகள் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டுமே மாடுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். கால்நடை சந்தைகளில் போதிய இட வசதி, தண்ணீர் தொட்டி, மின் வசதி, மருத்துவ வசதி, கழிவறை, வழவழப்பாக அல்லாத தரைதளம், கால்நடைகள் திடீரென மரணமடைந்தால் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிப்பு கமிட்டி சோதனை செய்ய வேண்டும்.

மாநில எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்குள் சந்தை அமைய வேண்டும். ஒவ்வொரு கால்நடை சந்தையிலும், மாடுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் உரிய உயரத்துடன் உள்ளதா? அவற்றில் குறிப்பிட்ட அளவிலான மாடுகள் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கால்நடை கண்காணிப்பாளர் கண்காணித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

புதிய முறையில் கொள்ளை அடிப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் லஞ்ச லாவண்யத்திற்கு ஏராளமான வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளார்கள். இவை தவிர பசு ரட்சகர்கள் என்ற பெயரில் காவிக் கூட்டங்கள் ஊடுருவி பணம் பண்ணுவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தியுள்ளார்கள். ராஜஸ்தானில் உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் பெகுல்கான் என்றவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு நேரடி சாட்சியாக இருக்கிறது. கால்நடை வணிகத்தையே குற்றமாக்குகிற ஒரு கொடூரமான செயல்முறையை இந்த அறிவிக்கை ஏற்படுத்துகிறது. அத்துடன், விற்கப்படுகிற ஒரு விலங்கு விவசாய நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்படுமேயன்றி இறைச்சிக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை விற்பவர் மீது சுமத்துகிறது. கால்நடை சந்தைக்குத் தனது விலங்கை கொண்டுவரக்கூடிய ஒரு விவசாயிக்கு, அதை வாங்குகிறவரின் நோக்கம் என்ன என்பது எப்படித் தெரிந்திருக்க முடியும்?

இப்போது புரிகிறதா? விவசாயி தன் சொந்த பொருளை விற்க வேண்டுமென்றால் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். நடக்கிற காரியமா? இல்லை. இது மோடி அரசின் அடாவடி நடவடிக்கை. இந்தியாவின் விவசாயிகள் ஏற்கெனவே பெரும் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. சராசரியாக நாளொன்றுக்கு 32 தற்கொலைகள். இந்நிலையில் மோடி அரசின் இந்த அறிவிக்கை விவசாயிகளின் தற்கொலைகளை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத்திலும் பாதிப்பு

மத்திய அரசின் இந்த விதி திருத்தத்தால் தமிழகம் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றது. ஏற்கனவே சங்பரிவாரங்கள் நடத்தும் பிரச்சாரத்தால் தோல் தொழில்கள் சரிவை சந்தித்துள்ளன. இப்போதைய `அறிவிக்கை’ பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தோல் தொழில் மற்றும் ஏற்றுமதியின் மையமாக வேலூர் மாவட்டம் உள்ளது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 250 தொழிற்சாலைகள் மோடி அரசின் அறிவிப்பால் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 5000 கோடி முதலீடு உள்ள தோல் தொழிலுக்கு 90 சதமான தோல்கள் மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, கேரளாவிலிருந்து வருகிறது. மகாராஷ்டிராவிலிருந்து கிடைக்கும் தோல் கச்சாப் பொருள் தரமானது என்பதால் 40 சதம் அங்கிருந்து வரவழைக்கப்படுகிறது. தற்போது இந்த கச்சாப் பொருட்கள் கிடைக்கவில்லை. தமிழகத்திற்கு முக்கிய வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு களமாக வேலூர் மாவட்டத்தின் தோல் மற்றும் தோலாடை தொழில்கள் உள்ளன. வேலூரில் 1230 தோல் தொழிற்சாலைகளில் ஒரு லட்சம் பேர் நேரடியாக பணியாற்றுகின்றனர். இதில் சுமார் 2.50 லட்சம் பேருக்கு மறைமுக பணிகள் கிடைக்கிறது. இங்கிருந்து மட்டும் ரூ. 2000 கோடி அந்நிய செலாவணி கிடைக்கின்றது. இவை தவிர சென்னை, திருச்சி, திண்டுக்கல், வேலூரையும் சேர்த்து ஆண்டுக்கு 16,250 கோடிக்கு மேல் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி நடைபெறுகிறது. இவை அனைத்தும் தற்போது முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.

தமிழகத்தில் 125க்கும் மேற்பட்ட கால்நடை சந்தைகள் உள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச் சந்தை பிரசித்தி பெற்றது. விடிய விடிய சந்தை நடைபெறும். ஒரு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். தென் மாநிலங்கள் கூடும் இடமாக இந்த சந்தை இருக்கிறது. ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை கூடும். எல்லா வகை மாடுகளும் சந்தைகளில் கிடைக்கும் ஒரு மாடு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை விற்பனையாகும். வாரம் ரூ.3 கோடி வரை வியாபாரம் நடைபெறும். தென்னிந்தியாவின் மிகப்பெரும் மாட்டு சந்தையாக பொள்ளாச்சி சந்தை உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வியாழன் சந்தை கூடும். இரண்டு நாட்களிலும் சேர்த்து 5000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இருநாட்களிலும் ரூ.6கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மோடி அரசின் அறிவிப்பை அடுத்து பொள்ளாச்சி சந்தைக்கு 50 மாடுகள் கூட கொண்டுவரப்படவில்லை.

கால்நடை வளர்ப்பில் ஒரு விவசாயிக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 35,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரையில் செலவாகிறது. இதில், ஒரு தனி மாட்டை பராமரிக்கக் குடும்பமே அளிக்கிற உழைப்பு, குறிப்பாக பெண்களின் உழைப்பு, சேரவில்லை. மாடு பயனற்றதாகிவிட்ட பிறகு அதனை இறைச்சிக்காக விற்க முடியாது என்றால் முழுச் சுமையும் விவசாயியின் தலையில்தான் விழும். தமிழகத்தை பொறுத்தவரை வறட்சி காலத்தில் ஒரு மாட்டிற்கு தினசரி ரூ.400 வரை செலவிட வேண்டும். அதற்கான உணவுகளை அளித்தால்தான் மாடுகளை பாதுகாக்க முடியும். ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.7000 வரை கொடுத்து வாங்கிட வேண்டும். இது ஏதோ பணப் பிரச்சனை மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த விவசாயத்தையும் முடக்கும் செயலாகும்.

Related Posts