சினிமா தமிழ் சினிமா பிற

பிச்சைக்காரன் – ஒரு பார்வை . . . . . . !

Pichaikkaran-press-release-333bf89d849a06e2a1f04dde464c3c2985
இயக்குநர் சசியும் விஜய் ஆண்டனியும் இணைந்து உருவாக்கி உள்ள இந்த பிச்சைக்காரன், சிரிக்க வைக்கிறான், சிந்திக்க வைக்கிறான், உருக வைக்கிறான், நெகிழ வைக்கிறான், நிமிர்ந்து உட்கார வைக்கிறான், எங்கேயும் நெளிய வைக்கவில்லை என்பதால் நம்மை அசர வைக்கிறான்.

ஒரு மகன், தன் தாய் மீது கொண்ட அன்பை எப்படிக்காட்ட முடியும்?

இயக்குநர் சசி, மிக ரசனையான, மென்மையான இயக்குநர். சில மனிதர்கள் தங்களின் சக மனிதர்களை எப்படி பார்க்கிறார்கள், என்பதை மிக மென்மையாக பகடி செய்துவிட்டு, பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார்.

ஆகப்பெரிய ஆக்சன் காட்சிகளோ, ஆளை இழுக்க வேண்டி அரைகுறை காட்சிகளோ இல்லாமல் இருக்கும் இந்த பிச்சைக்காரன், பெண்களையும் குழந்தைகளையும் திரையரங்குகளுக்கும் வரவைப்பான்.

படம் முழுவதும் பிச்சைக்காரர்கள், யாரையாவது கலாய்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏ.சி. கூட இல்லாமல் ஆடி கார் வைத்திருக்கும் ஒருவர் பிச்சைக்காரனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் இடத்தில்…. உங்களுக்கு விசில் அடிக்கத் தெரிந்தால் கண்டிப்பாக விசில் அடிக்காமல் இருக்க முடியாது.

முதல் படத்தில் மிக மிக சுமாராக இருக்கும் ஹீரோ, 3வது படத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக தெரிகிறார் என்றால், அவர் உண்மையிலே அழகாயிட்டார்னு அர்த்தமா, அப்டி எல்லாம் கிடையாது, நம்ம அவரைப் பார்க்க பழகிட்டோம் என மூர்த்தி கலாய்க்கும் இடத்தில் உங்களால் உங்களையும் மீறி கை தட்டாமல் இருக்க முடியாது.

எவ்ளோ நாளா நான் பிச்சைக்காரனா இருந்திருக்கேன், ஆனா அதுக்காக வெட்கப்பட்டதில்ல, அவமானப்பட்டதில்ல. ஆனா, பணக்காரனா இருக்கிறதுக்காக ரொம்ப வெட்கப்படுறேன், என காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தைப் பதம் பார்க்கும் இடத்தில் உங்கள் இதயங்கள் குறுகுறுக்காமல் இருக்க முடியாது.

500 ருபாய் நோட்டுகளையும் 1000 ருபாய் நோட்டுகளையும் நிறுத்திவிட்டால், இந்தியா முன்னேறி விடும்… எப்படி? என்பதற்கு ரேடியோ ஜாக்கியிடம் பிச்சைக்காரன் கொடுக்கும் விளக்கம் வாய்பிள்ந்து கேட்கும் உங்களால் சிந்திக்காமல் இருக்க முடியாது.

காதலி, காதலனுக்காக பரிந்து கொடுக்கும் பணத்தை வேண்டாம் என மறுக்கும் காதலனிடம், நான் பிச்சையாக தந்தால் பெற்றுக்கொள்வாயா என்கிறாள். எந்த எதிர்ப்பேச்சும் இல்லாமல், காதலி முன் மண்டியிட்டு கையேந்தும் காதலனைப் பார்த்து உங்களால் நெகிழாமல் இருக்க முடியாது.

காதலனுடன் காதலி காதல் கொண்டு செல்ஃபி எடுக்கிறாள். பார்த்துவிட்டு டெலீட் செய்கிறாள். ஏன் எனக் கேட்கிறான் காதலன். போட்டோல ஒரு பிச்சைக்காரன் வந்துவிட்டான் என்கிறாள் காதலி. படம் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களால், அந்த அப்பாவிக் காதலியை நினைத்து நமட்டுச்சிரிப்பு சிரிக்காமல் அடுத்த காட்சியை பார்க்க முடியாது.

அந்த நேரத்துல மட்டும் எங்கிட்ட பணம் இருந்திருந்தா எங்கம்மாவை காப்பாத்தி இருப்பேன், எங்க அப்பாவை காப்பாத்தி இருப்பேன், என் பிள்ளையை காப்பாத்தி இருப்பேன், என எத்தனையோ பேர் குற்ற உணர்ச்சியோடு சொல்லக்கேட்டிருக்கிறேன். ஆனா, என்கிட்ட பணம் இருக்கு. ஒருவேளை நான் இதைப் பண்ணிருந்தா எங்கம்மா எனக்கு திரும்பக் கிடைச்சிருப்பாங்களோன்னு எனக்கு குற்ற உணர்ச்சி வரக்கூடாது…. அதுக்காகத்தான் இப்டி… என நண்பனிடம் உருகும் கதாநாயகனின் நியாயத்திற்கு தலைவணங்காமல் உங்களால் இருக்க முடியாது.

இப்படியாக பிச்சைக்காரன் பற்றி சொல்ல நல்ல விசயங்கள் நிறைய நிறைய இருக்கின்றன. குறைகள் இருக்கலாம். ஆனால் சில படங்களை முழுப்படமுமே குறையாகவும் கறையாகவும் பார்த்துப் பழகிவிட்ட கண்களுக்கு இந்தப் பிச்சைக்காரனிடம் குறை காணத் தோணவில்லை.

இந்தப் படம் பார்க்க ஆரம்பித்த பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே தோன்றிய ஒரு விசயம், இதில் ரஜினி நடித்திருக்கலாம் என்று. ஆனால், விஜய் ஆன்டனி குறைவின்றி நடித்திருக்கிறார்.

இயக்குநர் சசி, படத்தை தயாரித்திருக்கும் விஜய் ஆண்டனி, பாத்திமா விஜய் ஆன்டனி, வெளியிட்டிருக்கும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்… மற்றும் பிச்சைக்காரன் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கமும் மரியாதையும் நிறைந்த நன்றி.

சசியிடம் இருந்தும் விஜய் ஆன்டனியிடம் இருந்தும் இன்னும் இன்னும் அழகான படங்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கு பிச்சைக்காரன் உத்த்ரவாதம் தருகிறான்.

கண்டிப்பாக இந்தப் பிச்சைக்காரனுக்கு நீங்கள் நம்பி பிச்சை போடலாம். அவன் உங்களை ஏமாற்ற மாட்டான், மாறாக திருப்தியோடு திருப்பி அனுப்பி வைப்பான்.

Related Posts