இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாபநாசம் – கதையின் கருத்து சரியா?

நீண்ட காலம் முன்பு விகடன் பிரசுரமாக வந்த நாவல் கிருஷ்ணவேணி. சமீபத்தில் என் நண்பர் மூலம் பெற்று அதை வாசித்த நான் பாபநாசம் என்ற பெயருக்கே ஈர்க்கப்பட்டேன். அந்த பகுதிகளை பார்க்க வேண்டும் என்ற என் ஆர்வத்திற்கு தீனி போடுவது போல தலைப்பு வந்ததால் இந்தப் படம் பார்க்க சென்றேன் .

ஏற்கெனவே மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ என்ற பெயரில் வெளிவந்து மோகன்லால் நடித்த படம் மிக சிறப்பாக இருப்பதாக நண்பர்கள் கூறியிருந்தனர். அந்தக் கதையை தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் எடுத்து, அதில் கமலஹாசன் நடித்ததாக கூறப்பட்டதும் படம் பார்க்கத் தூண்டுதலானது.

எதிர்பார்த்தபடியே இப்படம் முழுவதும் இயற்கை அழகு கொஞ்சியது, நெல்லையின் தமிழ் உச்சரிப்பு, இயல்பான கதைப் பாத்திரங்கள், கச்சிதமான குடும்பம் என எல்லாமும் மனதை கொள்ளை கொண்டு படத்தோடு கட்டிப் போட்டது. பாபநாசம் படத்தில் நடித்த யாரும் நம்மை ஏமாற்றவில்லை. அவரவர் பங்கை இயல்பாக செய்திருந்தனர்.

மனைவி, இரு பெண் குழந்தைகள் என அமைதியான வாழ்வு, கடின உழைப்பு இவற்றோடு படிப்பறிவு இல்லாவிட்டாலும் நடைமுறை அறிவு சார்ந்து சமூகத்தில் தனக்கென ஒரு சமூக மரியாதையும் மதிப்பும் தேடிக் கொண்ட குடும்பத் தலைவன் ‘சுயம்புலிங்கம்’. சின்ன சின்ன செலவுகளுக்கும் கணக்கு பார்ப்பதும் மனைவியின் அன்பிலும் காதலிலும் மயங்கி விட்டுக் கொடுப்பதும் என சுவாரசியமான குடும்ப வாழ்வு கண் முன் நிழலாடியது.

பள்ளியிலிருந்து சுற்றுலா செல்லும் பள்ளிப் பருவச் சிறுமி சைபர் க்ரைம் குற்றம் புரியும் இளைஞரிடம் சிக்குவதும், அவனின் மிரட்டலுக்குப் பணிய மறுக்கும் போதும் தாயையும் பார்த்து சபலப்படும் இளைஞனை – எதிர்பாராமல் கொலை செய்வதும். பின் குடும்பத்தைக் காக்க அந்தக் கொலையை மறைப்பதும், இவர்களை மோப்பம் பிடிக்கும் காவல் துறை அதிகாரிகள் – விசாரிப்பதும், உண்மையை அறிய முடியாமல் சித்ரவதை செய்யும் காட்சிகளும் என கதை சொல்லப்பட்ட விதம் சுவாரசியமானது, பரபரப்பானது.

இறுதியில் அந்த பிணம் தான் புதிய காவல் நிலையத்தின் அஸ்திவாரம் என்பதை அறியும் போது திரையரங்கே விசில்களால் நிரம்புகிறது. இரு தரப்பும் பெற்றோர் என்ற நிலையில் சந்திக்கும் போது உருகாத மனமும் இல்லைதான்.

எல்லாம் சரி! இதன் மூலம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும், அதன் அடிப்படையில் நிகழும் கொலையை பின் மறைக்கப் பாடுபடுவதும் தான் கதை.

இதுதான் படம் பொதுவான பார்வையாளனுக்கு உணர்த்துகிற பாடம் என்னும் போது நாம் தவிர்க்க இயலாமல் சில விசயங்களை பற்றி சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்.

இன்றைய உலக மய சூழலில் நுகர்வு கலாசாரத்தில் சர்வ சாதரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ளாகின்ற பாலியல் சீண்டல்கள் சைபர் க்ரைம் மிரட்டல்கள், ஏமாற்றுதல்கள், பலாத்காரங்கள் என எல்லாமும் தனி நபர் பிரச்சினை என்பதிலிருந்து பொது பிரச்சினையாக மாறி அதையும் பொது மக்கள் புரிந்து கொண்டு அதன் மீதான நியாயங்களை தேடி சக்தி வாய்ந்த போராட்டங்களை நடந்த ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிறது.

இப்படி பட்ட பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகக் கூடிய பெண்களை அவர்கள் குடும்பங்களை அணுகி அவர்கள் குற்றாளிகள் அல்ல என்னும் மன நிலைக்கு கொண்டு வந்து பல வகையில் தைரியம் தந்து அவகள் முறையாக காவல் நிலையத்தை அணுகி குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வைத்து நியாயமான நீதி மன்ற தீர்ப்புகள், தேவைப்படும் புதிய சட்டங்கள் உருவாக்க நிர்ப்பந்தம் என்று பல போராட்டங்கள் நடத்தி, வெற்றிகளும் காணப்பட்டுள்ளன.

பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி மரணமடைந்த சரிகாஷா முதலாக, சட்டத்தை காக்க வேண்டிய காவலர்களே குற்றவாளிகளாக மாறிய சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி வழக்கு என வாழும் உதாரணங்கள் வரை இன்று நம் முன் உலாவரும் காலம். நிர்பயா பலாத்காரமும் அந்த பிரச்சனையை மையமாக வைத்து திரண்ட மக்களும், நீதியரசர் வர்மா ஆணையத்தின் சிபாரிசுகளும் – அதைத் தொடர்ந்து வெளியான ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படமும் இன்றைய உதாரணங்கள்.

பாபநாசம் – வெற்றிப்படம். ஆனால் அதன் கருத்து அப்படியே ஏற்கத்தக்கதா?

பாதிக்கப் பட்ட பெண்கள் தாங்களே குற்றவாளிகள் போல கூனிக் குறுகும் மனநிலையை இன்னும் நீண்ட காலம் வாழ வைக்க போகிறோமா? இதற்காகத்தான் இப்படிப் பட்ட கதைகளா? இவைகளை நியாயப்படுத்தத்தான் இந்த முன்னுதாரணமா? இதற்குத் தான் நமது பெரும் ஆதரவா? என்பதே அடிப்படைக் கேள்வி.

கலைஞர்கள் – ரசனையை மட்டும் திருப்திப்படுத்த வேண்டியவர்கள் அல்ல. ஒரு சமூகத்தில் சிந்தனையை மேம்படுத்தும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. அந்த வகையிலான படைப்புகளை எதிர்பார்ப்போம், ஆதரிப்போம், கலை வளர்ப்போம்.

Related Posts