இதழ்கள் இளைஞர் முழக்கம்

சாதிகளை ஒருங்கிணைக்கும் பாஜக

என்.ரெஜீஸ்குமார்

                பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற குரல் வலுத்து வரும் இன்றைய சூழலில் தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவர் தங்கராஜ் எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லைஞுஞு என்று குரலெழுப்பியிருக்கிறார். பிஜேபி யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி உள்ளிட்டு சமூகநீதிக்கு எதிராக, சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிக்கும் தலைவர்கள் குழுமியிருந்த மாநாட்டில்தான் இப்படியொரு கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டை பெறுபவரே இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறுகிறார். எனவே, இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று கொக்கரித்துள்ளனர் அமித்ஷாவும், குருமூர்த்தியும்.

“தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்குத் தரும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அவமானத்தைத் தருகிறது”  என்று பேசியிருக்கிறார் தங்கராஜ். தங்கராஜ் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினரும் இவ்வாறே கருதுகின்றனர். கடந்தகால வரலாறு தெரியாத பாமர மக்கள் இப்படிப் பேசினால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வரலாறு தெரிந்த, வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் கும்பல் பேசுவதன் சூழ்ச்சியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீ ஒரு சாதாரண செருப்பு தைப்பவனாக இருப்பதாலும், உனது மரணத்திற்குப் பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விரும்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்புத் தைக்கும் தொழிலைத்தான் செய்ய வேண்டுமேயொழிய, ஒரு வீரம் செறிந்த இராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானாகவோ வர விரும்பக் கூடாதுஞுஞு என்கிறது கீதை. இப்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை கடவுளின் பேராலும், விதியின் பேராலும் மிரட்டியும், அச்சுறுத்தியும் அடக்கி, ஒடுக்கி, அடிமைகளைப் போல் வைத்திருந்ததால்தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகப் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளனர்.

தொட்டால் மட்டுமின்றி பார்த்தாலே தீட்டு என்று தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒதுக்கிவைத்த சமூகத்தில் இன்று எல்லோரும் கல்வி நிலையத்திற்குச் சென்று படிக்க முடிகிறது என்றால் அது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. இராஜாராம் மோகன்ராய், ஜோதிபாபுலே, அம்பேத்கர், நாராயணகுரு, வைகுண்டசுவாமிகள், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தப் போராளிகளாலும், பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் போன்ற கம்யயூனிஸ்ட் தiலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் மூலமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் தலை நிமிர முடிந்தது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக சில சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் முதன்மையானது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. ஆனால், துரதிஷ்டவசமாக இடஒதுக்கீட்டை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும் அதன் முழுமையான அர்த்தத்துடன் அமல்படுத்தாத நிலையே உள்ளது. அதற்கு பிரதான காரணம் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க சாதி மனநிலை.

பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மண்டல் குழு தனது பரிந்துரைகளை 1980ல் மத்திய அரசிடம் ஒப்படைத்தது. ஆதிக்க சாதி மனநிலைக் கொண்ட காங்கிரஸ் கட்சி மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாத நிலையில் 1990ல் மண்டல் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசாணையை வி.பி.சிங் அரசு வெளியிட்டது. இந்த அரசாணைக்கெதிராக முன்னேறிய சாதியினரை, குறிப்பாக மாணவர்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தியது சங்பரிவார் அமைப்புகள். சில மாணவர்கள் தீக்குளித்து மரணமடையும் அளவிற்கு இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெறித்தனமாக பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ். இடதுசாரிகளின் ஆதரவுடன் இருந்த மன்மோகன்சிங் அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்ட போது அதற்குகெதிராக மேல்சாதி மாணவர்களை திரட்டி போராடியதில் எபிவிபி முன்னின்றது.

ஆரம்பத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆதிக்க சாதியினர் பிற்காலத்தில் தங்களையும் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உட்படுத்தக் கேட்டு போராடியதும், தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு இத்தகைய சாதியினரை இடஒதுக்கீட்டு பட்டியலில் இணைத்துக் கொண்டதும் கடந்தகால வரலாறு. (ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக ஜாட் இனமக்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு முன்னேறிய சாதியான இவர்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இணைத்தது பிஜேபி அரசு).

இத்தகைய சூழலில் இடஒதுக்கீடு எங்களை அவமானப்படுத்துகிறது என்ற கதறலைக் கூட தனது ஆதிக்கசாதி அரசியலுக்கு பயன்படுத்துகிறது பிஜேபி கூட்டம். மறுபுறம் சாதிய கட்டமைப்புதான் சிறந்தது என்று ரீல் விடுகிற வேலையும் செய்கிறார்கள். சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தி அதனை தங்களது தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தும் முயற்சிகளை கடந்த காலத்தைவிடவும் தற்போது எவ்வித கூச்சமுமின்றி வெளிப்படையாகவே செய்து வருகிறது பிஜேபி யின் அகில இந்தியத் தலைமை. அதன் வெளிப்பாடுதான் பீகார் சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பதவிவெறி என்பதைத் தவிர வேறு எந்த கொள்கை ஒற்றுமையும் இல்லாத பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் மூலம் பீகாரில் கணிசமாக வாழும் தலித்துகள் சமூகத்தின்   வாக்குகளை பெறமுடியுமென கருதுகிறது. அதற்காகவே இதே சமூத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்தை பீகார் மாநில ஆளுநராக நியமித்துள்ளது. வகுப்புவாத அரசியலை மட்டுமல்ல தனக்கு ஆதாயம் என்றால் சாதிய அரசியலையும் பிஜேபி முன்னெடுக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தமிழகத்தில் கூட மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சாதிய அமைப்புகளின் தலைவர்களை அமீத்ஷாவும், நரேந்திரமோடியும் சந்தித்து பேசியுள்ளனர். வடமாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தீண்டாமைக்கெதிராக, சாதி ஆதிக்கத்திற்கெதிராக வலுவான குரல் எழும்பியுள்ளது. இதில் தந்தைபெரியாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரியாருக்கு பிந்தைய திராவிட கட்சிகள் திராவிட இயக்கத்தின் நல்லக் கூறுகளை கைவிட்டு அரசியல் அதிகாரத்திற்காக சாதிய சக்திகளோடு சமரசம் செய்துகொண்டது. இதன் விளைவாக வெளிப்படையாகவே சாதிய அரசியல் பேசும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், சாதி அமைப்புகளின் தலைவர்களை அமித்ஷாவும், நரேந்திர மோடியும் சந்தித்து பேசியது பல கேள்விகளை எழுப்புகிறது.

தமிழகத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தகைய உத்தியை கடைபிடித்து மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி திட்டமிட்டு வருகிறது. 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சாதி ரீதியாக பிளவுப்படுத்தி தர்மபுரியிலும், மதரீதியாக பிளவுப்படுத்தி கன்னியாகுமரியிலும் பெற்ற வெற்றியை மாநிலம் முழுவதும் பரவலாக்கிட பிஜேபி முயற்சிக்கிறது.

பெருமாள் முருகனின் மாதொருபாகன்ஞு நாவல் குறித்து பிரச்சனை எழுப்பிய போது மதத்தை மட்டுமின்றி சாதிய பின்புலத்தையும் இணைத்து மக்களை திரட்டியது ஆர்.எஸ்.எஸ், சென்னை ஐஐடி-யில் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்ததும் ஆதிக்க சாதி அரசியலின் வெளிப்பாடுதான். தற்போது நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களில் சாதிரீதியாக அணிதிரட்டும் நோக்கத்துடன் தலைவர்களை முன்னிறுத்தியும் ஆதிக்க சாதி அமைப்புகளின் தலைவர்களை இணைத்துக் கொண்டும் மக்களுக்கெதிரான கருத்துக்களை பரப்பியதை காண முடிந்தது.

அடிப்படையில் பிராமணிய அரசியலை முன்னிறுத்தி உழைப்பாளி மக்களான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வகுப்புவாத அரசியலோடு சாதிய அரசியலையும் தமிழகத்தில் முன்னிறுத்துகிறது. இத்தகைய கீழ்த்தரமான முயற்சிகளை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Related Posts