இதழ்கள் இளைஞர் முழக்கம்

பழைய பிரச்சனைகளும், புதிய பரப்புரைகளும் – மதுக்கூர் ராமலிங்கம்

பழைய பிரச்சனைகளும், புதிய பரப்புரைகளும்மதுக்கூர் ராமலிங்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அவரவர் பாணியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் சேர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். தமிழக அரசியலில் இதுவரை இல்லாத முறையில் போராட்டக் களத்தில் இருந்து உருவான கூட்டியக்கம் இது. அதுமட்டுமின்றி, குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றையும் உருவாக்கி தமிழக மக்களின் முன்னால் வைத்துள்ளனர்.

மறுபுறத்தில் ஆளும்கட்சியான அதிமுக பணபலம், அதிகார பலத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை எளிதாக சமாளித்துவிட முடியும் என நம்புகிறது. அரசு செலவில் அதிமுக பிரச்சார வாகனம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மத்திய ஆளும் கட்சியான பாஜக தமிழகத்தில் உள்ள பல்வேறு சாதிகளை உசுப்பிவிட்டு அதன்மூலம் ஒரு விபரீதக் கூட்டணியை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்காகவே அடிக்கடி தமிழகம் வந்து சென்றவண்ணம் இருக்கிறார். எஸ்.சி. பட்டியலில் உள்ள சாதியை எம்.பி.சி. பட்டியலுக்கு மாற்றுவது, பி.சி.பட்டியலில் உள்ள சாதிகளை எம்.பி.சி. பட்டிலுக்கு மாற்றுவது என வாக்குறுதி அளிப்பதோடு விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம், ஆட்டோ நிலையம், சைக்கிள் ஸ்டேன்ட் போன்றவற்றிற்கு அந்தந்த சாதி தலைவர்களின் பெயர்களை சூட்டுவதற்கும் வாக்குறுதி அளித்து வருகிறது பாஜக.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் களத்தில் ஏற்கனவே குஷ்பு இருக்கும் நிலையில் அடுத்ததாக நக்மாவும் இணைந்திருக்கிறார். இதேபோன்று இன்னும் பலர் வர இருப்பதாக பீதியூட்டுகிறார்கள்.

பாமகவை பொறுத்தவரை இப்பொழுதே முதல்வர் ரெடி! அன்புமணி ராமதாஸின் தந்தை மருத்துவர் ராமதாஸ் மாநாடு கூட்டி மகனிடம் முதல்வரானவுடன் முதல் கையெழுத்துப் போடுவதற்கான பேனாவைக் கொடுத்துவிட்டார். இங்க் ஊற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி. அன்புமணியும் இந்த பேனாவை பையில் வைத்தபடி ஊர் ஊராகச் சென்று பைல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒட்டப்படுகிறது. அடுத்து முதல்வர், முதல் கையெழுத்து, மதுவிலக்கு என்ற போஸ்டர் புதுப்பட போஸ்டர் போல வருகிறது. இதேபாணியில் மேலும் பல போஸ்டர்கள் தயாராக இருப்பதாகத் தகவல். முதல்வர் வேட்பாளர்களிலேயே அன்புமணிதான் அழகு என்றுவேறு அவருடைய தந்தை புல்லரித்திருக்கிறார். இப்போது நடப்பது முதல்வர் வேட்பாளர் தேர்வா அல்லது ஆணழகன் தேர்வா என்ற சந்தேகம் வருகிறது. பாமக நடத்தும் பரப்புரை ரொம்ப அழகுதான் போங்க!

நானோ, என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அரசுப் பதவிகளுக்கு வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்! என்று கர்ஜித்தார், ஒரு காலத்தில் மருத்துவர் ராமதாஸ். தனது மகனை மத்திய அமைச்சர் ஆக்கியபோதே அந்த சாட்டை கிழிந்து தொங்கிவிட்டது. அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வகைதொகை இன்றி போட்ட கையெழுத்துக்கள் இப்போது வழக்கு சவுக்குகளாக மாறி அவரை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரித் தொகுதியில் திட்டமிட்டு சாதிய வன்முறைகளை தூண்டியதன்மூலம் வெற்றிக்கோட்டை நெருங்க முடிந்தது பாமகவால். அதே சூத்திரத்தை இப்போதும் பயன்படுத்த தயாராகி வருகிறார்கள்.

1967-ல் அண்ணா ஆட்சியைப் பிடித்து திமுகவின் ஆட்சி வரலாற்றைத் துவக்கி வைத்தார். அடுத்தடுத்து தொடர்ந்து பலமுறை திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. ஆனால் எப்போதும் பின்பற்றாத தேர்தல் பிரச்சார அணுகுமுறை இப்போது திமுகவால் பின்பற்றப்படுகிறது.

தேர்தலில் மோடிக்கு ஆலோசகர்களாக விளங்கிய ஹை – டெக் டீம் வந்திறங்கியுள்ளது. தளபதியின் மருமகன் சபரீஷன் மேற்பார்வையில் புதுப்பட வேலை போல புதிய பிரச்சார வேலை தொடங்கியுள்ளது.

முடியட்டும்! விடியட்டும்! என்ற முழக்கத்தோடும், நமக்கு நாமே என்ற நம்பிக்கையோடும் தளபதியின் நவீன பிரச்சாரம் நான்கு திசைகளிலும் தூள் பறத்திக் கண்டிருக்கிறது. குமரி முனையில் இருந்து புறப்படும்போது சிறுபான்மை மத தலைவர்களை மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். சார்பு சாமியார்களையும் சந்தித்து ஆசி பெற்று புறப்பட்டிருக்கிறார் தளபதி. ஏதோ இப்போதுதான் வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த மனிதர்போல எதைப்பார்த்தாலும் ஆச்சர்யப்படுகிறார். திருநெல்வேலியில் அல்வா எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை நேரடியாகச் சென்று அறிந்து கொண்டாராம். ஆனால் அரசியலில் இவரது கட்சி நீண்ட காலமாக கொடுத்துக் கொண்டிருக்கிற அல்வாவோடு ஒப்பிடுகிறபோது திருநெல்வேலி அல்வா சுமார்தான். திருவில்லிபுத்தூர் சென்றபோது பால்கோவா செய்பவர்களை பார்த்து பரவசப்பட்டிருக்கிறார். அரசியல் பேசினால் சிக்கலென்று முடிந்தவரை பலகாரங்களைப் பற்றியே பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கலாம். இனிமேல் அவ்வாறு நடக்காது என்று சில இடங்களில் சத்தியம் செய்திருக்கிறார் தளபதி. பக்கத்தில் நிற்பவர்கள் யாரென்று பார்த்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் மந்திரிகள், கமிஷனில் புகழ்கொடி நாட்டிய மாவட்டச் செயலாளர்கள்.

ஆட்டோவில் தொங்கிக் கொண்டே செல்வது, பஸ்ஸில் பயணம் செய்வது, நடந்து செல்வது என பல்வேறு வேடிக்கைகள் காட்டி வருகிறார். உச்சகட்டமாக ஹெலிகாப்டரில்கூட தொங்கக்கூடும். இவர் ஒருபுறம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்க, அவருடைய துணைவியார் ஒவ்வொரு கோயிலாகச் சென்று வழிபாடு நடத்தி எப்படியாவது முடிந்துவிட வேண்டும், என் கணவருக்கு விடிந்துவிட வேண்டும் என வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். பொதுவாக தமிழக தேர்தல் களத்தில் முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதில்லை. மோடியிடம் கற்றுக் கொண்ட தவறான பாடத்தால் இப்போது இந்த போக்கு தலை தூக்கியிருக்கிறது.

முதல்வர் நான்தான் என்று முண்டியடிக்கும் இளைய தளபதிகள் தமிழகத்தில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிப்பது குறித்தோ, புதிய தொழில்கள் உருவாவது பற்றியோ பாரம்பரியத் தொழில்கள் அழிவது குறித்தோ, சாதி ஆணவப் படுகொலைகள் குறித்தோ வாய் திறப்பதே இல்லை. மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து அவர்களை திசை திருப்பும் அரசியலின் தொடர்ச்சியாகவே இப்போதைய பயணங்களும் நடந்து வருகிறது. எப்படியோ இவர்களுக்கு பிரச்சார வேலை கிடைத்துவிட்டது. படித்து முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் விரக்தியில் விடியும், சோகத்தில் முடியும் இளைஞர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

Related Posts