பிற

பழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . !

பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது பத்து பேர் கூடுதலாக இருப்பார்கள். இது அல்லாமல் அடிக்கடி வரும் உறவினர்கள். ஆக குறைந்தது பதினைந்து பேருக்காவது அம்மா தினமும் சமைக்க வேண்டும்.

தாத்தா தனது அறுபதுகளிலும் உடலுழைப்பில் எந்த சுணக்கமும் இல்லாமல் ஈடுபடும் விவசாயி. பாட்டியும் அப்படியே. அப்பா கொஞ்சம் விவசாய ஆர்வமும் நிறைய மைனர் தனமும் கொண்ட, அம்மா மீது தீவிர மையலுள்ள ஆணாதிக்கவாதி.

நாங்கள் ஐந்து பேரும் பள்ளிக்குப் போனோம். கிராமம்தான் என்றாலும், நகரத்தைப் போன்ற உணவு முறைக்கு எல்லாரையும் பழக்கி வைத்திருந்தாள் அம்மா. அவள் நகரத்திலிருந்து வந்தவள் என்பதால் ஆரம்பத்தில் வெகுளித்தனமாக எல்லாமும் செய்திருக்கிறாள். அது அத்தனை சுமையாக மாறும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. காலையில் எல்லாருக்கும் காஃபி என்பதில் தொடங்கும் அவளது வேலை, எங்களுக்கு இட்லி மற்றும் மதியத்துக்கு அதே இட்லி என கட்டித்தருவதில் தொடங்கி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இட்லி சுட்டு பரிமாறுவதற்கு பத்து மணியாகிவிடும்.

பெரிய பித்தளை இட்லிப்பானை. இட்லிகள் ஒவ்வொன்றும் சரவணபவன் இட்லியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். பெரியவர்கள் குறைந்தது பதினைந்து இட்லிகள் சாப்பிடுவார்கள். வயலில் வேலை செய்பவர்கள் அனாயாசமாக இருபதை நெருங்குவார்கள். மாவை கையால் ஆட்டுரலில்தான் ஆட்டவேண்டும். சட்னியும் ஆட்டுரலில்தான். காலை உணவு முடிந்ததும் அப்பா உள்ளிட்ட எங்களது துணிகளைத் துவைக்க வேண்டும். பிறகு மதிய உணவு. நாங்கள் பள்ளிவிட்டு வந்தபிறகு எங்களுக்கு உணவு. பிறகு இரவில் தனி சமையைல். அவள் உறங்கச் செல்ல இரவு பத்து மணியாகிவிடும்.

இது எங்கள் வீட்டில் மட்டுமல்ல. எண்பதுகளின் பொதுவான பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும். இவ்வளவு வேலைகளையும் செய்துவிட்டு கூடுதலாக விவசாய வேலைகளை செய்யும் அத்தைகளும் ஊரில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சமையலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள். வெறும் சோறும் குழம்பும்தான் இருக்கும். அந்த வகையில் கொஞ்சம் ஆறுதல்.

நம் வீட்டுக்கு வருவோம். இந்த உடலை நலிவுறச் செய்யும் வேலை, அம்மாவை உருக்கியது. நரம்பு போலானாள். விறகடுப்பில் புகைந்து கொண்டே இருந்தவளுக்கு உணவின் மீதான ஆர்வம் கூட குறைந்துவிட்டது. வரகாப்பியைப் போட்டு குடித்துக்கொண்டே வேலை செய்ய பழகிக்கொண்டாள். அவளுக்கு யார் மீதும் புகார் இல்லை. அன்புடனேயே அவள் இதைச் செய்தாள். அவளுக்கு சமைக்கப் பிடிக்கும். பரிமாறப் பிடிக்கும். ஆனால் இப்போது யோசிக்கையில் அவள் மீது நிகழ்த்தப்பட்டது மிகப்பெரிய சுரண்டல்.

அவளுக்கு கதைகள் படிப்பது பிடிக்கும். தனது பள்ளிக்காலத்தில் புத்தகங்களில் வரும் தொடர்கதைகளை பைண்ட் செய்து வைத்து படித்தது குறித்து என்னிடம் எப்போதாவது சொல்வாள். தனது முப்பதுகளில் இருந்த அவள் அதை ஏதோ போன யுகத்து கதை போல சொன்னது எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்.

ஒரு கட்டத்தில் அவள் சோர்வடைந்து போனாள். தனது சமையல் ஆர்வத்துக்கு அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஓயாமல் உழைத்ததன் நலிவை உடல் வெளிக்காட்டத் தொடங்கியபோது அக்கா வயதிற்கு வந்திருந்தாள். அம்மாவின் சுமையை அவள் பகிர்ந்துகொண்டாள்.

அம்மாவுக்கு ஐந்து குழந்தைகளும் சுகப்பிரசவம்தான். நான் ஒரு புதன் கிழமை இரவில் 10.55 க்குப் பிறந்ததாகவும், அன்றைய இரவு பத்து மணிக்கு அப்பாவுக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தபோது வலி எடுத்ததாகவும், மருத்துவமனை சென்ற பத்து நிமிடங்களில் நான் பிறந்துவிட்டதாகவும் சொல்வாள். அந்த குரலில் வெளிப்பட்டது பெருமையா? புளகாங்கிதமா? ஒரு வெகுளிப் பெண்ணாக அவளது குரலில் வெளிப்பட்டது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் அவள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு வன்முறை என்று நான் உணர்ந்துகொள்வதற்கு நான் நிறைய வளர வேண்டியிருந்தது. பிறகு நானே மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன். நான் இந்த வாழ்வியலை என் அம்மாவின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ரொமான்டிசைஸ் செய்கிறேனா என்று. இல்லை என்று உறுதியாகத் தோன்றுகிறது.

இப்போது இந்த உரையாடல்களை நான் இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.உடலுழைப்பிலிருந்து நாம் எவ்வளவு தூரம் வெளியேறுகிறோமோ அவ்வளவு தூரம் நாம் சுதந்திரமடைகிறோம். குறிப்பாக பெண்கள். அதனால்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக வாஷிங் மெஷினை அவர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். என் அம்மாவிடம் கேட்டிருந்தால், அவளும் அதைத்தான் சொல்லியிருப்பாள். ஒரு கேஸ் ஸ்டவ் இருந்திருந்தால் அவள் இவ்வளவு புகையை உள்வாங்கியிருக்க நேராது. அவளுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கும். அவள் தனக்குப் பிடித்த கதைகளைப் படித்திருப்பாள். ஓய்வு நேரத்தில் கொஞ்சம் புரணி பேசியிருப்பாள். அப்பாவைத் தொந்தரவு செய்திருப்பாள். அவர் ஒரு ஆணாதிக்கவாதி என்பதைக் கூட கண்டறிந்திருப்பாளாயிருக்கும். குறிப்பாக நாங்கள் சுகப் பிரசவத்தில் பிறந்திருக்காமல் சிசேரியனில் பிறந்திருப்போம். அவளுக்கு அது குறித்து எந்த வருத்தமும் இருந்திருக்காது.

ஐந்தாவது குழந்தைக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டபோது, முதுகில் போட்ட மயக்க ஊசி தான் இப்போதும் வலித்துக்கொண்டே இருக்கிறது என்பதை அவள் தனது இரண்டாவது குழந்தைப் பிறப்பின்போதே கூட சொல்லியிருப்பாளாயிருக்கும்.

நாம் பேசுகிற பழம்பெருமை எல்லாவற்றிலும் உள்ளார்ந்த ஆணாதிக்கக் கூறுகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவளை ஒப்பிட இப்போது உள்ள தலைமுறைப் பெண்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறது. முந்தைய தலைமுறைப் பெண்களைப் போல உடலுழைப்பு இல்லாததால் இந்த தலைமுறைப் பெண்கள் நிறைய நோய்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அம்மாவுக்கு உணவின் மீது வெறுப்பு வந்தபோது, அதை வரகாப்பியை வைத்து சரிசெய்து கொண்டது போல, பல்வலிக்கு மருத்துவமனை சென்றால் அன்றைய உணவை எப்படி சமைப்பது என்ற பிரச்சினையால், புகையிலைக்குப் பழகிய அவளது சமரசங்களைப் போல நிறைய விட்டுக்கொடுத்தல்களில்தான் தனது அமைதியையும், வீட்டின் அமைதியையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். நமது பழம்பெருமையும் அவ்வாறே.

நமது பெருமிதங்களுக்குப் பின்னால் இவ்வாறு அவர்களது பிரஞ்ஞைக்கே வராமல் அமைதியாக்கப்பட்ட கருதுகோள்கள் நிறைய உண்டு. பெண்ணுடல் என்பது முழுக்கவும் அவளுக்கானது. அறிவியல் அதை முடிந்த அளவு அவளுக்கு உறுதி செய்கிறது. ஒரு பெண் தன் வலியிலிருந்து முதலில் வெளியேற விரும்புகிறாள். பிறகே தனது சொகுசை நோக்கி நகர்கிறாள். அந்த எத்தனத்தில் சில சில்லறை சச்சரவுகளில் அவள் ஈடுபடலாம். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. வீட்டில் ட்ரெட் மில்லில் ஓடுவதை விட, இந்தத் துணியைக் கையால் துவைத்தால் பலன் அதிகம் என்று அவளுக்கு சொல்வதை விட அயோக்கியத்தனம் வேறு இருக்கமுடியாது. தெரிவுக்கும் நுகத்தடிக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பகல் முழுக்க உடலுழைப்பு இல்லாமல் இருந்துவிட்டு, அந்தியில் நடக்கப்போகும் ஒருத்தியின் செயல் மேனாமினுக்கித்தனம் அல்ல. அதுவொரு விடுதலை. அவள் தலைமுறைகளாக பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறாள் என்றே பொருள். நடப்பதால் எடை குறையவேண்டும் எனும் நிபந்தனை கூட அவசியமில்லை.

நடை வழியில் அவள் வெறுமனே எதையாவது வேடிக்கை பார்க்கலாம். தனக்குள்ளேயே சிரிக்கலாம். தன்னைக் கடந்து போகும் ஒரு ஆணைக் குறித்து ஒரு கேலியை உருவாக்கலாம். தற்காலிகமாவது தன்னைப் பொறுப்பற்றவளாக உணர்ந்து களிக்கலாம். தன்னைக் கண்டு விரியும் தெருவின் கண்களை உணர்ந்து ரகசியமாகப் பரவசமடையலாம். நடை என்பது நடை மாத்திரம் அல்ல.

நமது பண்பாடு, கலாச்சாரம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது. ஒருத்தியின் ஒரு துளி ரத்தத்தை சேகரித்துக்கொள்ள, ஒரு துண்டு வலியை மரத்துவிட அது இடம் தருமெனில் அதுவே அவளுக்கான கலாச்சாரம். அவளுக்கான பண்பாடு. இந்த திசையில் அறிவியலைப் போன்ற சிறந்த பண்பாடோ கலாச்சாரமோ பெண்களுக்கில்லை. இருக்கவும் முடியாது.

எதன் பொருட்டும் திரும்பி வந்துவிடாதீர்கள் என்பதே பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது!

ஜி. கார்ல் மார்க்ஸ்.

Related Posts