அறிவியல் சமூகம்

பருவநிலை அகதிகள் …

பேராசிரியர் கே. ராஜு
சிரியா, ஆப்கானிஸ்தான், எரிட்ரியா போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், மோதல்கள் காரணமாக ஐரோப்பிய யூனியன் எல்லையில் இதுவரை சுமார் 4,00,000 அகதிகள் தஞ்சமடையத் தயாராக வந்து சேர்ந்திருக்கிறார்கள். சின்னஞ்சிறிய படகுகளில் நெருக்கியடித்துக் கொண்டு மக்கள் தங்கள் நாட்டைவிட்டுத் தப்பி ஓடி வருகிறார்கள்.  தமது நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை செலுத்தப்பட்டது.. தண்ணீர்க் குண்டுகள் பாய்ந்தன.  அய்லான் என்ற சிறுவனின் உடல் கரையொதுங்கிய பிறகு ஐரோப்பிய நாடுகளின் மனச்சாட்சி சற்றே தட்டியெழுப்பட்டுள்ளது. அகதிகளை ஏற்க பல நாடுகள் தயாராகி வருகின்றன.

இது மாதிரியான காட்சிகள் பருவநிலை மாற்றங்கள் காரணமாக எதிர்காலத்தில் நிகழ்ந்துவிட மாட்டா என்று தற்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பலமான புயல்கள், வெப்ப அலைகள், மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டுவரும் வறட்சிகள், கடல்நீர்மட்டம் உயர்வது போன்ற காரணங்களால் நிலைமை படுமோசமாகி மக்கள் தங்கள் தாய்நாடுகளை விட்டு ஓடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, “பருவநிலை அகதிகளாக (climate exiles)” மாறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பருவநிலை அறிக்கையின்படி (Stern review) சுமார் 20 கோடி மக்கள் சொந்த நாட்டை விட்டு இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. கடல் மட்டத்திற்கு சில மீட்டர்கள் மட்டுமே உயரே இருக்கும் பசிபிக் கடலில் உள்ள டுவாலு தீவு, இந்துமாக் கடலில் உள்ள மாலத்தீவுகள் போன்ற தீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது. ஆனால் இனம், மதம் போன்ற காரணங்களால் பழிவாங்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுபவர்களுக்கு மட்டுமே, அகதிகள் என்ற “அந்தஸ்து” கிடைக்கும் என ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்திருப்பதால் பருவநிலை அகதிகளுக்கு அவர்களுக்குக் கிடைத்துவரும் பாதுகாப்பு கூடக் கிடைக்காது என்பதுதான் தற்போதைய நிலை.

இதிலும் வசதி படைத்த மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஏழை எளிய மக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும்தான் பிரச்சனை. இதில் கொடுமை என்னவெனில், காற்று மண்டலத்தை பசுமை இல்ல வாயுக்களைக் கொண்டு மாசுபடுத்தியதில் இம்மக்களது தாய்நாடுகளின் பங்கு மிகமிகக் குறைவுதான். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. பருவநிலை மாற்றங்கள் காரணமாக உயரும் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேட் என்பதற்குப் பதில் 1.5 டிகிரி சென்டிகிரேட் என நிர்ணயம் செய்யுமாறு சின்னஞ்சிறு தீவு நாடுகளின் கூட்டமைப்பு உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

உலகில் தாழ்வான டெல்டா பகுதிகளில் இருக்கும் கங்கை – பிரம்மபுத்ரா,  மியான்மாரைச் சேர்ந்த இர்ரவாடி போன்ற இடங்களும் உயரும் கடல் மட்டத்தினால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.உலக மக்களில் பத்து சதத்திற்கும் மேற்பட்டோர் கடல்  மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திற்குள் வசிக்கிறார்கள்.

வங்கதேசத்தின் பாதி இப்படிப்பட்ட தாழ்வுப் பகுதியில் இருக்கிறது. பருவநிலை  மாற்றம் குறித்த விவாதத்தில் “இழப்பு மற்றும் சேதாரம் (Loss and damage)” என்ற புதிய அம்சம் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு குறைக்கப்பட்டாலும் மக்களுக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்பட்ட இழப்பு கணிசமாகவே இருக்கும். இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆனால் இதற்கும் பணக்கார நாடுகளின் தயவு தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் பாரிசில் உலக நாடுகள் கூடி உருவாக்கும் ஒப்பந்தத்தில் இந்த இழப்பு மற்றும் சேதாரம் என்ற அம்சம் கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்று வளரும் நாடுகள் கோரி வருகின்றன. பாரிஸ் மாநாடு பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்ற அம்சத்தோடு முடிந்துவிடாமல் இன்னும் பரந்த அளவில் அமைய வேண்டும் என்பதை ஐரோப்பா தற்போது சந்தித்துவரும் அகதிகள் பிரச்சனை நமக்கு தீவிரமாக நினைவுபடுத்தும் விதத்தில் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.
உதவிய கட்டுரை : 2015 செப்டம்பர் 22 தேதியிட்ட தி ஹிண்டு நாளிதழில் சுஜாதா பைரவன் எழுதியது

Related Posts