அரசியல்

பயமறியா செங்கொடிக் காதலர்களடா நாங்கள்…

ஏதோ ஏழெட்டு பேர் வந்து பயமுறுத்தினா பயந்து ஓடீர்ற கூட்டம்ன்னு நினைச்சுட்டு மாணவர் அமைப்பு என்று சொல்லிக் கொள்கிற ABVP என்ற ஆர்எஸ்எஸ் இன் காவி சிறுசுகளாகிய நீங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகம் முன்பு நேற்றைய தினம், இவ்வுலகில் எங்கும் அடிமைத்தளை இருக்கக் கூடாது என்று உயிரை துச்சமென பயணித்த பல வீரர்களின் ரத்தத்திலும் சதையிலும், இந்திய தேச விடுதலைப் போரிலும் அதன் பின்பாக இந்த தேசத்து மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து எண்ணற்ற உயிரையும் ரத்தத்தையும் சதையும் அர்ப்பணித்த இயக்கத்தின் செங்கொடியை கையில் கொண்டு வந்து பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளீர்கள்.

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சார்ந்த இயக்கம் கற்றுத்தருகிற தேசபக்தியை கொஞ்சம் சுயபரிசீலனை செய்து பாருங்கள். சற்றேனும் நிதானமாக சிந்தித்தால் அது எவ்வளவு கொடூரமானது என்பது புரியும். நம்முடன் அன்றாடம் பேசிப் பழகி, நம் தெருவில், பள்ளியில் கல்லூரியில் நம்முடன் பழகி வாழ்ந்துவரும் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களை எதிரிகளாகச் சித்தரித்து வெறியேற்றி வருகிறது என்பது புரியும்.

தாங்கள் சார்ந்த அமைப்பு இதுவரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் எத்தனைகளில் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதில் உங்கள் தவறு என்னவென்றால் உங்களுக்கு வழிகாட்டும் ஆர்எஸ்எஸ் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படுவதுதான். கொஞ்சம் கேள்வி கேட்டுப் பாருங்கள். உங்களையும் அவர்கள் தேசவிரோதி அல்லது கம்யூனிஸ்ட் முத்திரை குத்தி வெளியேற்றுவார்கள்.

உங்களை நேரில் கண்டபோது பாவமாகத்தான் தோன்றியது. “மாணவர்களுக்கு அரசியல் என்பது அவசியமானது. 18 வயதுக்கு மேலானவர்கள் அமைப்பாக திரளக் கூடாதென தடுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானதாகும்” என்று நேற்றைய தினம்தான் தோழர் பினராயி விஜயன் கூறியிருந்தார். நீங்கள் அவரது படத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்தீர்கள்.
பினராயி விஜயன் அப்படி என்ன செய்துவிட்டார்? உங்களை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் உங்களைப் போன்ற ஆர்எஸ்எஸ்சின் தேர்தல் அமைப்பான பிஜேபி பின்பற்றிவரும் கார்ப்பரேட் கொள்கைகளுக்கு பதிலாக மக்களுக்கான திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்திவருகிறார். இதற்கு நீங்கள் உண்மையிலேயே கோபப்பட வேண்டுமெனில், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நபர்கள் மீதுதான் கோபப்பட வேண்டும். இப்படி உங்களுக்கு மாதக் கணக்கில் வகுப்பெடுக்க முடியும். ஆனால், நீங்கள் பேசுவதற்கு தயாராக இல்லை. அது கிடக்கட்டும்.

இறுதியாக ஒன்றைக் கூறிவிடுகிறேன். “இந்தப் புவி மீது முழுமையான காதல் கொண்டிருக்கும் செங்கொடியுடன் மோதாதீர்கள் என்பதை எச்சரிக்கையாக அல்ல, உங்களைப் பார்த்து பரிதாபமாகத்தான் கூறுகிறேன், நீங்கள் மாணவர்கள்தானே கொஞ்சம் உலக வரலாற்றைப் புரட்டி பாருங்கள், நாங்கள் செங்கொடிக் காதலர்கள். மறந்துவிடாதீர்கள்.”

Related Posts