அரசியல்

படி, போராடு: மாணவர் அரசியல் கால விரயமா?

“உண்மையில், உலகம் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவதற்கு செயற்பாடுகள் மாணவர்களுக்கு உதவும்.”

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடக்கும் மாணவர் போராட்டங்களைக் கண்டு நாட்டில் ஒருசாரார் கேலி செய்கின்றனர். போராடும் மாணவர்களைத் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரைக் குத்துவது முதல் ’மாணவர்களுக்கு படிப்பது தான் வேலை, போராடுவது இல்லை’ என்பது வரை பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இப்படிக் குற்றம் சாட்டுவதற்கும் முத்திரை குத்துவதற்கும் பின்னால் இருக்கும் நோக்கம் மாணவர்களைப் பயமுறுத்தி அடக்குவது. காஷ்மீர் பிரச்னை, தலித் பிரச்சனை, உதவித்தொகைக் குறைப்பு, அல்லது கல்வி வளாகங்களில் அவலநிலை என மாணவர்கள் ஏன் அறப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் என்னவென்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் வெறுமனே மாணவர்கள் மீது வெறுப்பு கொட்டப்படுகிறது.

ஒரு இடதுசாரியான வரலாற்றாளர் தீபேஷ் சக்ரபர்த்தியும் மாணவர்களை வெறுக்கும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட்டார் என்று தெரியவந்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் (Presidency College) அவர் ஆற்றிய உரையைப் பற்றி எழுதிய இரு பத்திரிக்கைகள் (‘ஆனந்த் பசார்’ மற்றும் ‘தி டெலகிராப்), மாணவர்கள் படித்தால் மட்டும் போதும் அரசியலில் குழப்ப வேண்டாம் என தீபேஷ் சக்ரபர்த்தி பேசியதாக எழுதியிருந்தன. கல்லூரி காலத்தில் அரசியல் செயல்பாடு என்பது தேவையற்ற கவனச்சிதறல் எனவும் மூத்த அரசியல் தலைவர்கள் மாணவர்களை தங்களது சுய வளார்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார்கள், மாணவர்களின் வளார்ச்சிக்கு உதவுவது இல்லை எனவும் அவர் பேசியதாக எழுதியிருந்தன. இது ஒரு மோசமான சந்தேகப் பார்வை. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்தது. மாணவர்கள் பக்கம் நின்றவர்கள் சக்ரபர்த்தியை பரிகசிக்கவும், அவரது கருத்துடன் ஒத்துப்போனவர்கள் அவரைக் கொண்டாடவும் செய்தனர்.

தவறான மேற்கோள்

ஆனால் உண்மையில் சக்ரபர்த்தி மாணவர்கள் போராட்டத்தையோ, மாணவர்களையோ தாக்கிப் பேசவில்லை. இந்த சம்பவம் நடந்தேறிய சில நாட்களில் நான் அவரிடம் மேற்கொண்ட ஒரு நேர்காணலின் போது, தான் கூறியது தவறாக மேற்கோள் காட்டப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அரசியல் ஈடுபாட்டினால் மாணவர்கள் காணாமல் போவார்கள் என்று நீங்கள் கூறியதன் அர்த்தம் என்ன என்று கேட்டதற்கு அவர்:

” மாணவ அரசியலில் பிழைத்திருந்தோமானால், அந்த அனுபங்கள் வாழ்வை செழுமைப்படுத்தும் என்பதில் யாருக்குத்தான் ஐயம் இருக்கக்கூடும்? நான் மாநிலக்கல்லூரியில் படித்த காலத்தில், இயற்பியல் வகுப்பிலும், கனித வகுப்பிலும் இருந்த என்னுடைய நல்ல நண்பர்கள் ஒரு சிலரைப் பற்றிப் பேச்சு வந்தது- இரண்டு நண்பர்களில் ஒருவர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்டார்  – மற்றொருவர் தற்போது ஒரு சிறந்த வக்கீலாகவும், வணிகராகவும் இருக்கிறார்- என்றாலும், இருவரும் நக்சல் இயக்கத்தில் ஒரு சில ஆண்டுகள் தீவிரமாகச் செயல்பட்டுவிட்டு வெளியேறிய பிறகு, நீண்ட காலத்துக்கு என்ன செய்வதென்று அறியாமல் சுற்றிக் கொண்டிருந்தனர். இது போன்ற பல சம்பவங்கள் சுதந்திரப் போராட்டத்தின் போதும் நடந்தன. என்னுடைய குடும்பத்திலும் சிலர் பாதிக்கப்பட்டார்கள். எங்களது காலத்தில் மாணவர் போராட்டத்தின் முன்னணியில் இருந்த சிலர் இன்று தொலைந்து போய்விட்டார்கள். எல்லோரும் அல்ல, சிலர். ஆனால், அதற்காக அந்த அனுபவங்கள் அவர்களது வாழ்வை செழுமைப்படுத்தியிருக்காது என்பது இல்லை.”

படிப்பதையும் போராடுவதையும் ஒருங்கே செய்யும் போது, அது மாணவர்கள் மீது ஏற்படுத்தும் அழுத்தம் அவர்களை பாதிக்கவே செய்கிறது, முக்கியமாக நிர்வாகம் அப்படிப்பட்ட மாணவர்களை குறிவைக்கும் போது. ரோஹித் வெமூலா இத்தகைய அழுத்தத்துக்கு ஓர் உதாரணம்தான்.

செய்தித்தாள்களில் வந்த மேற்கோள்கள் தெளிவற்றதாக இருந்தன.  நவ-தாராளவாத கொள்கையை கல்வியில் தினிப்பதில் உள்ள சிக்கல்களில் ஒன்று, அது பல்கலைக்கழகங்களை அரசியல் அற்றாதாக மாற்றுகிறது. மாணவர்கள் வேலைக்கு போவதற்கான முன் தயாரிப்பே கல்வி பயில்வது. மற்ற அனைத்து செயல்பாடுகளும் நேரத்தை விரயம் செய்பவை. அரசியலுக்கு எதிரான பிழைப்புவாதத்தை மாணவர்கள் மத்தியில் இந்த நவ தாராளவாத கொள்கை உறுவாக்க முயல்வதைக் குறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு அவர்:

” தொழில் வாய்ப்புகள் என்பதை, வேலை கிடைப்பது, பதவி உயர்வுகள் பெறுவது, என்பதான குறுகிய அர்த்தத்தில் நான் பேசவில்லை. பெரும்பாலான கல்வியாளர்களிடம் இந்த அம்சங்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை நான் பார்க்க வேண்டியது என்றாலும்,  கல்விப் புலமை என்ற வாழ்க்கை முறையையும் சேர்த்துத்தான் நான் வாழ்க்கை என்பதைப் பற்றிப் பேசினேன். எந்த ஒரு துறையிலும் வல்லமை பெற வேண்டும் என நீங்கள் கருதினாலும், நீங்கள் உலகத்தரமான ஒரு வயலின் கலைஞராக வேண்டும் என நினைத்தாலும், பல ஆண்டு பயிற்சிக்குப் பிறகுதான் அது சாத்தியம். அதற்கு ஒருவர், மிகவும் சீக்கிரமே அந்த வேலையைத் தொடங்க வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, சமூக அறிவியலில் புலமை அடைய ஒருவருக்கு ஆய்வு மொழிகளில் நீண்ட கால பயிற்சி வேண்டும். ஐரோப்பிய ஆய்வாளார்கள், ஐந்தாறு பண்டைய மற்றும் நவீன மொழிகளில் இருந்து மூலங்களை எடுப்பதை நாம் எளிதாக பார்க்கலாம். இதற்கு பயிற்சியும், பொருமையும், காலமும் தேவைப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் உள்ள நிலைமை வேறு. இங்கு மாணவர்கள் சந்திக்கக்கூடாத பல சமூக சிக்கல்கள் உள்ளன. எல்லா அரசியல் கட்சிகளும், மாணவர்களை தங்களது செயல்பாட்டாளர்களாக இணைத்துக்கொள்ள முண்டிக்கொள்ளும் அரசியல் சூழல் வேறு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மாணவர்களிடம் அரசியலில் ஈடுபடாதீர்கள் எனச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறினேன். கல்வி வளாகங்கள் அடிக்கடி கொந்தளிக்கின்றன; சில சமயம் ஜேஎன்யூ, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில், ஆளும் அரசியல் கட்சிகளே, மாணவர் அரசியலிலும், கல்வி வளாக வாழ்க்கையிலும் தலையிடத் துடிக்கின்றன. ஆனால் காலம்  எல்லையில்லாதது தல்ல. நீங்கள் அரசியலுக்கு செலவிடும் உங்களுடைய நேரம், நீங்கள் படிப்பதற்கோ, பயிற்சிக்காக ஆய்வுக்கூடத்திலோ செலவிட முடியாத நேரமாக இருக்கிறது. இது தான் உண்மையான பாதிப்பு.

அந்தப் பாதிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி உங்களுடைய அறத்தையும், சார்பையும் பற்றியது. கல்வி என்பது நல்ல வேலையையும், தொழிலையும் (Career) அமைப்பதைத் தாண்டியது என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன். நான் ஏற்கனவே சொன்னதைப்போல், நான் வேலையைப் பற்றி பேசவில்லை. புலமையை ஒரு வாழ்க்கைமுறையாக எண்ணிப் பேசும் பொழுது, இந்தியாவில் அது வேலையைப் பற்றிய பேச்சு என்று  மக்கள் எண்ணிக்கொள்ள சாத்தியம் இருக்கிறது.

சக்ரபர்த்தியின் இந்த முன்மொழிவுகள் மாணவர்கள் மீதான அக்கறையில் இருந்து வருகின்றன. ஆனால்  திறன் வளர்ப்புக்கும், உலக இயக்கத்தை புரிந்து கொள்வதற்கான சட்டகத்தை கட்டமைத்துக்கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்  முன்வைக்க தவறுகிறார். சக்ரபர்த்தி வழங்கும் சான்றுகள் (ஆய்வு வேலைகள், மொழி பயிற்சிகள்) அனைத்தும் திறன் குறித்தானவையாகவே உள்ளன. திறன் கல்வி கால அவகாசம் எடுக்கவே செய்யும், ஆனால் அது மட்டுமே போதாது. உலகைப் புரிந்து கொள்ள புதிய சட்டகங்களை கட்டமைப்பதும் மாணவர்களுக்கு அவசியம். அறத்தின் அடிப்படையிலான கொள்கை ரீதியான ஒரு உலகப் பார்வையை உருவாக்கிக்கொள்ள வகுப்பறை அனுபவங்கள் மட்டுமே போதாது என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்தே சொல்லலாம். போராட்டத்தின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவுமே எனக்கு அது சாத்தியமாயிற்று. படித்தல் நிச்சயமாக அவசியம், ஆனால் அறச்செயல்பாடுகளுக்கு போராட்டமும் முக்கியமாகிறது.

படி! போராடு!

’படி போராடு’ என்பது, இடது மாணவர் அமைப்புகளின் உலகப் பார்வையை உள்வாங்கி நிற்கிறது. இந்திய மாணவர் சங்கமும் (SFI), அகில இந்திய மாணவர் இயக்கமும் (AISF) ‘படி போராடு’ என்ற வாசகத்தையே கொண்டுள்ளன. SFI-ன் அமைப்புச் சட்டம் மாணவர்கள் ஏன் படிக்கவும் போராடவும் வேண்டும் என்பதற்கான காரணத்தை,” ஜனநாயக, அறிவியல், முற்போக்கு கல்வி அமைப்பை” அமைக்கவும்,” மாணவ சமுதாயத்தின் ஜனநாயக உரிமைகளை” அடையவும், “வேலைக்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தால் அளிக்கப்படும் அடிப்படை உரிமையாக” ஆக்குவதற்கு போராடவும், சமூகத்தில் உள்ள அனைத்து ஏற்றத்தாழ்வுகளை கலையவும் என முன்வைக்கிறது.

AISF-ன் அமைப்புச்சட்டம் மாணவர்களை,” பிற்போக்கு சித்தாந்தங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு எதிரான இடைவிடாத போராட்டத்தை தொடுக்க வேண்டும்” என்றும் சொல்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இது – நவீன கல்விக்கு முரணானது.  இந்த மாணவர் இயக்கங்கள் எதற்காக போராடுகின்றனவோ அவை மாணவர்களுக்கு மட்டும் அல்ல ஒவ்வொறு முற்போக்குவாதிக்குமான இலக்காக இருக்க வேண்டும். பாடத்திட்டம் பழமைவாதத்தை பேசுவதாகவும், பிறரைத் தாக்கும் விதமாகவும் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் கல்வி கற்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

மாணவர் போராடத்துக்கு எதிரான இந்த விமர்சனங்கள் 1904-ல் கர்சன் கொண்டு வந்த பல்கலைக்கழகங்கள் சட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. அன்றைய இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் மாணவர்களை தேசியவாத அரசியலை விட்டுவிட்டுப் படிக்குமாறு கூறினார். வைசிராய் அலுவலகத்திலிருந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதன்படி மாணவர்கள் ”புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற சுதேச இயக்கத்திற்கு தொடர்புடைய எந்த செயல்பாடுகளிலும் ஈடுபட அனுமதிக்கக் கூடாது” எனப் பகலைக்கழங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அப்படி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை நிறுத்தத் தவறும்பட்சத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் நிதியும், மாணவர் ஊக்கத் தொகையும் நிறுத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு, கர்சனின் கல்விக் கொள்கையைத் தொடர எண்ணுகிறது. அதன் ஆதரவாளர்கள் கர்சனின் அதே பிரக்ஞையைக் கொண்டு மாணவர்களைத் தாக்க நினைக்கிறார்கள். காலனியவாதிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளபட்ட தேசபக்திதான் அவர்களுடையது. மாணவர்கள் இந்திய தேசத்தின் பக்கம் திடமாக நிற்கிறார்கள். அவர்கள் படிப்பதன் மூலமாகவும் போராடுவதன் மூலமாகவும் இந்த உலகைச் சிறந்த உலகாக மாற்ற நினைக்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் ஆசிரியர், விஜய் பிரசாத், லெஃப்ட் வேர்ல்ட் புக்ஸின் தலைமை ஆசிரியர். ட்ரினிட்டி கல்லூரியின் சர்வதேச ஆய்வுகள் துறையின் பேராசிரியர். இடது திருப்பம் எளிதல்ல: இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் என்பது, அவருடைய சமீபத்திய நூல். ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அவர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

scroll.in கட்டுரை தமிழில்: சிபி நந்தன்

Related Posts