அரசியல்

படிக்கக் கூடாத கடிதம்-2!

முதல் பகுதி இங்கே

பிரீதம்!

இப்போது ஒரு வேளை உனக்கு தெரிந்திருக்கக் கூடும். சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் கூட நிர்வாகம் அனுமதித்த எண்ணிக்கைக்கு மேல் கழிப்பறைக்கு செல்ல முடியாது. எத்தனை முறை என்பது மட்டுமில்லை, எவ்வளவு நேரம் என்பது கூட வரையறுக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டுக் கூட மிகக் குறைந்த நேரமே கொடுக்கப்பட்டிக்கிறது. சாப்பாட்டு நேரம் ஆனவுடன் தட்டுக்களை ஏந்திக் கொண்டு நீண்ட வரிசையில் நாங்கள் நின்றிருக்கிறோம். சில நேரங்களில் சாப்பாட்டை வாங்குவதற்கு கூட 15 நிமிடம் ஆகியிருக்கும். சொல்லப் போனால், பிரீதம் இரண்டு முறை வாங்கிய சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு உணவு நேரம் முடிந்ததால், வேலை தளத்திற்கு ஓடிப்போயிருக்கிறேன். வாழ்க்கைக்காக உழைக்கப் போய் வயிற்றை நிரப்பக் கூட நேரமின்றி ஓடியதை பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்ளவா முடியும்.

உனக்குத் தெரியும் தெருவில் யாரேனும் வசவுச் சொற்களை உதிர்க்கிற போது நான் அருவருப்படைந்திருக்கிறேன். ஆனால், உன்னிடம் நான் சொல்லாதது அத்தகைய அருவருக்கத் தக்க வார்த்தைகள் தொழிலாளர்கள் மீது மிகச் சரளமாக வீசப்படும்.

காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் போது நான் அனுசரிக்கிற சில நடவடிக்கைகளை நீ கேலி செய்திருக்கிறாய். டீயை கையில் வாங்கிக் கொண்டு உட்காருவதற்கு இடம் தேடுவேன். நின்று கொண்டு டீ குடிப்பது எனக்குப் பிடிக்காது. ஆனால், பிரீதம் நீயும் நமது குடும்பமும் பெருமிதப்படும் இந்த வேலையில் எங்களுக்கு டீ குடிக்க ஏழு நிமிடம் தான் அளிக்கப்படும். அது ஒரு சடங்கு போல, எந்திரம் போல ஓடிச் சென்று டீயை வாங்கிக் கொண்டு அவசரமாக வாயில் ஊற்றிக் கொண்டு வேலைத் தளத்திற்கு ஓடுவோம்.

நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். 48 நிமிடத்தில் ஒரு கார் உற்பத்தியாகி வெளியே வந்துவிடும். எனவே, சில நொடிகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்காது. ஆனால் பிரீதம், ஒரு மனிதன் டீ குடிக்கக் கூட உட்கார முடியாது என்பது எத்தனை பெரிய அவலம்.

அப்படி ஒரு அவலத்திலும் கூட எங்கள் மேலதிகாரிகள் டீ குடிக்கிற இடத்தில் வேலை சம்மந்தமாக ஆணைகளை பிறப்பிப்பார்கள். அது ஒன்றும் புதிய விசயம் கிடையாது, எங்களுக்குப் பழகிப்போன ஒன்றுதான்.

துரதிர்ஷ்டமான அந்த ஜூலை 17 ஆம் தேதி ஒரு தொழிலாளி பாவம் அவன், என்ன சிரமத்தில் இருந்தானோ அவனிடமிருந்த மனிதன் சற்று தலையைத் தூக்கி மேலதிகாரியிடம் இந்த 7 நிமிடம் டீ குடிப்பதற்கான எங்கள் நேரம். இப்போது எதுவும் சொல்லாதீர்கள் என்று கூறியிருக்கிறான். உலகம் முழுவதும் பெருமிதத்தோடு தங்கள் கார்களை ஓடிவிட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் சூப்பரவைசரிடம் அப்படியெல்லாம் பேசக் கூடாது என்கிற நியதி பாவம் அந்த தொழிலாளிக்கு தெரிந்திருக்கவில்லை. அப்படி கேள்வி கேட்டதற்காக அந்த தொழிலாளியை சாதியைச் சொல்லி அந்த சூப்பிரவைசர் திட்டிவிட்டார். இயல்பாகவே தொழிலாளர்கள் இது அனைத்து தொழிலாளிகளின் முன்பு நடந்து. அனைத்து தொழிலாளிகளும் அவமானம் உணர்வை அனுபவித்தார்கள். இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது சம்மந்தப்பட்ட சூப்பிரவைசர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவமானப்பட்ட தொழிலாளி சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதையொட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பின்பு இதுவரை நாங்கள் சிறையிலிருக்கிறோம்.

ஆகஸ்டு 1 ஆம் தேதி 2012 இல் போலீஸ் 10 பேரை கைது செய்தது. அவர்களில் சங்கத் தலைவர்களும் அடங்குவர். அவர்களை போலீஸ் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யவில்லை. போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் அவர்களாகவே காவல் நிலையத்திற்கு போனார்கள்.

பிரீதம், காக்கி உடையைப் போட்ட பிறகு காவல் துறையினர் மனித குணங்களை கழற்றி வைத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சரணடைந்த அந்த தொழிலாளிகளை காவல் துறையினர் வாயிலும் நெஞ்சிலும் பூட்ஸ் கால்களால் மிதித்ததையும், அது அவர்களின் கடமையைப் போல செய்ததையும் என் வாழ்நாளில் அதை மறக்க மாட்டேன். அதன் பிறகு நானும் கைது செய்யப்பட்டேன். இப்போது 147 பேரில் காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தவிர மீதி அனைவரும் சிறைக்குள் தான் இருக்கிறோம். நான் கைது செய்யப்பட்ட போது சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று கேட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் நான் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் அல்ல. தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சிறைக்குள் வந்த பல நாட்களில் எனக்கு உறக்கமே பிடித்ததில்லை. நான் சிறைக்குள் வந்ததை விட, இதர 146 பேருடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத நான் சிறையிலடைக்கப்பட்டதை அவமானமாக கருதினேன். ஆனால், பிரீதம் இப்போது இவர்களோடு இருப்பதற்காக அவர்களின் துயரங்களில் பங்கெடுத்தற்காக அவர்களின் ஒருவனாக நிர்வாகமும் போலீசும் சொல்வதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வார இருமுறை உறவினர்கள் சந்திப்பு என்கிற ஆடம்பரத்தை நான் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே நீ இனிமேல் என்னைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பிரீதம், நேற்று வரை நாங்கள் சிறைக்கு வந்து 15 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்று வரையிலும் எங்களுக்கு பெயில் கிடைக்கவில்லை. நம் நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பெருமிதத்தோடு பிரகடனப்படுத்தி நமது நாட்டின் பாராளுமன்றம், சட்டமன்றமங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது நாட்டின் தாலுகா முதல் தலைநகரம் வரை பல படிநிலை நீதிமன்றங்களிலும் தினந்தோறும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். நமது நீதி வழங்கும் முறை ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் கூட மேல்முறையீடு செய்து இடைக்காலத்தில் பெயிலில் வெளியே வருகிறார்கள். ஆனால், 147 பேர் 15 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறைச் சாலைக்குள்ளே இருக்கிறோம். அன்று ஒரு சகோதரி தன்னுடைய அண்ணனை பார்க்க வந்திருந்த போது நீதிபதிகளுக்குத் தெரியாதா 147 பேர் சேர்ந்து ஒரு மனிதனைக் கொண்டிருப்பார்களா என்றெல்லாம் கேள்வி கேட்டார். இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்படுவதற்கு நமது சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு நமது அரசியல் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. இப்போதும் கூட அதன் மீதான நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்திலிருப்போர் அவ்வபோது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முடங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

பிரீதம், மாருதி சுசுகி தொழிலாளர்கள் சம்மந்தப்பட்டமட்டில் சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால், இந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். தொழிலாளர்கள் விசயத்தில் கடமையைச் செய்யாத சட்டம், மாருதி சுசுகி நிறுவனத்திற்காக 147 குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இது அவானிஷ் தேவ் இன் கொலைக்காக இத்தனை கடுமையாக நடந்து கொள்வதாக நான் நினைக்கவில்லை. மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கான சட்டப்படியான உரிமையைக் கோரியதற்காகவும் சங்கம் வைக்க முயற்சித்தற்காகவும் கொடுக்கப்பட்ட தண்டனை.

இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்திடமும் தொழிற்சங்கம் வைப்பதற்கு எவனும் துணியக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை. இந்தியாவில் இருக்கக் கூடிய அந்நிய தூதரங்கள் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி செயல்படும். ஆனால், இந்தியாவில் செயல்படும் எந்த நாட்டு நிறுவனமும் எந்த நாட்டு சட்டங்களையும் மதிக்காது.

நம்முடைய அரசியல் சட்டம் முடமாக்கக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வீடு, மனைவி, மக்கள், சுகம், செல்வம் அனைத்தையும் இழந்து நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரம், அந்நிய நிறுவனங்களிடம் செயலற்று நிற்பதைப் பார்க்கிற போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அந்த பிரகடனம் கண்கள் பிடுங்கப்பட்டு, செவிப்பறைகள் கிழிக்கப்பட்டு, குரல் வளை நெறிக்கப்பட்டு, தேகம் எங்கும் குருதி வலிய குற்றுயிராய் கிடப்பதை நான் உணர்கிறேன்.

பிரீதம், இப்போது என் மனதில் ஒரே ஒரு நோக்கத்தைத்தான் பிரதானமாக வைத்திருக்கிறேன். நேற்று உனக்குப் பின்பு வேறொருவரை பார்க்க வைத்திருந்த ஒருத்தர் சொன்னார், மாருதி சுசுகி நிறுவனத்தின் வாயில் முன்பாக பறந்து கொண்டிருக்கும் சங்கத்தின் கொடி அழுக்கடைந்து, கந்தலாகி படபடத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதை சொல்கிறபோது நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் குற்றுயிரும் குலையிருமாய் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஏதோ ஒரு விசுவாசத்தால் ஏதோ ஒரு பயத்தால் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தால் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.

ஒரு சங்கம் வைக்க முயற்சித்தற்காக நாங்கள் 146 பேர் சிறையிலிருப்பது மட்டுமல்ல, 3200 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நிரந்தரத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, அப்ரண்டிஸ் என எல்லா தொழிலாளிகளும் அடக்கம். இவர்களுடைய எல்லா குடும்பங்களும் தெருவில் தான் நின்று கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறதாம். ஒருவேளை நாங்கள் 147 பேரும் கொலைக் குற்றத்திற்காக உள்ளே இருக்கிறோம் என்றால் இந்த 3200 பேரும் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்ததற்காக. எனவே, இது அவானிஷ் தேவ் கொல்லப்பட்டதற்கான தண்டனை அல்ல. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்டதற்கான எச்சரிக்கை.

பிரீதம், எனக்கு ஒரு கனவிருக்கிறது. நான் வெளியே வருவேன். பாராளுமன்றத்தால், சட்டமன்றங்களாலும் நீதிமன்றங்களாலும் கைவிடப்பட்ட அழுக்கடைந்து கிழிந்து படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியை பட்டொளி வீசி பறக்கக் செய்வேன். தேசியக் கொடியை வணங்குவதுபோல் தொழிலாளிகள் தங்கள் சங்கக் கொடியை பெருமிதத்தோடு வணங்கச் செய்தவற்கான பணியில் என்னை ஈடுபடுத்ததிக் கொள்வேன்.

பிரீதம், கிழித்தெறியப்பட்டு கீழே கண்டெடுக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் அந்தப் பக்கத்தை பத்திரமாக வைக்கிறேன். அதை அதன் ஆன்மாவை பாதுகாக்கும் முயற்சியில் இதர தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நான் போராட வருவேன். முன்பிருந்தது போன்ற குருட்டுத் தனமான பக்தியின் அடிப்படையில் அல்ல. ஒரு அரசியல் சட்டம் தன் நாட்டின் அத்தனைக் குடிக்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற உண்மையான அர்த்தத்தில்.

என்னைப் போன்று கணவனையோ, மகனையோ, தந்தையையோ, சிறையில் கடந்த ஓராண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் சொல், நிச்சயமாக ஒரு நாள் நமது நியாயங்களை நமது அரசியல் சட்டம் உத்தரவாதப்படுத்தும். ஒருவேளை அது இயலாமல் போனால், புதியதொரு அரசியல் சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற சட்டத்தை நாம் உருவாக்குவோம்.

பிரீதம், இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன்பாக மிகப்பெரும் சுமைகளை உனக்கு விட்டு வந்திருப்பதற்காக நான் வருந்துகிறேன். நான் சிறைக்கு வந்த பிறகு அம்மாவுக்கும் உனக்குமான பிணக்குகள் கூட தீர்ந்திருப்பதாக அம்மா கூறினார். அவர்களை தன் மகளைப் போல பார்த்துக் கொள்வதாக அம்மாக குறிப்பிட்டார். உன் தாய் தந்தையர் உனக்கு உதவ முயற்சித்த போது அதை மறுத்துவிட்டதாகவும் அம்மா என்னிடம் சொன்னார். நீ பக்குவப்பட்டிருப்பதையும் தைரியம் அடைந்திருப்பதையும் நான் உணர்கிறேன்.

சிறையிலிருக்கும் 146 பேரையும் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் பல தொழிற்சங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. அவர்களது முயற்சியில் உன்னையும் இணைத்துக் கொள். வாரா, வாராம் என்னைப் பார்ப்பதை விட வாரத்தில் ஒரு நாளாவாது அந்த முயற்சியில் பங்கெடுப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்.

அன்புடன்

ஜிட்டேந்தர்

(கற்பனைக் கட்டுரை… ஆனால் உண்மையான நிகழ்வு)

Related Posts