அரசியல்

படிக்கக் கூடாத கடிதம்-1!

அன்புள்ள பிரீதம்,

எனது அன்பு முத்தங்கள். நேற்றோடு 79 முறை சிறையில் கம்பிகளுக்கு அப்பால் இருந்து என்னை பார்த்துச் சென்றாய். இப்போது எந்த நாளையும் விட நேற்றைய தினம் உனது வருகை என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. நேற்றோடு நமக்கு திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது திருமண நாளை அதை நினைவுபடுத்தாமலேயே என்னை நீ பார்த்துச் சென்றாய். எனக்கு நினைவு இருந்த போதும் அதை உனக்கு சொல்லுகிற தைரியம் இல்லாததால் நானும் உன்னிடம் பேசவில்லை. இனிமேல் அடிக்கடி நீ என்னை சிறையில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறைக்கு வந்த சில வாரங்கள் தினந்தோறும் நீயோ நமது உறவினர்களோ என்னைப் பார்க்க வரவேண்டும் என்று நான் ஏங்கியிருக்கிறேன். சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரைச் சொல்லி என்னை சந்திக்க வேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொள்ள உனக்குக் கூறியிருந்தேன். உனக்கு நினைவிருக்கிறதா, வாரம் இருமுறை சந்திப்பதற்கு வாய்ப்பிருந்தும் போன ஆண்டின் ஒரு வாரத்தில் ஒரு நாள் நீ வராத போது நான் மிகவும் துடித்துப் போனேன். அடுத்த முறை சந்தித்த போது நான் அழுவதைப் பார்த்து என்னிடம் ஏன் என்று கேட்டாய்? நான் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததையும் அவர்களோடு நீ இருந்ததையும் நீ எனக்குச் சொல்லவில்லை. ஆனால், பின்னர் வழக்கறிஞர் மூலம் அதை நான் தெரிந்து கொண்டேன். ஆனால், இப்போது நான் சிறையிலிருந்து வெளிவரும் வரை என்னைப் பார்க்க வராமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.

என்னைப் போல இன்னும் 146 பேர் என்னோடு பணிபுரிந்தவர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக இந்த சிறைச் சாலைக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களில் பலரது அம்மாவோ மனைவியோ அவர்களை வாரா வாரம் சந்திப்பதில்லை. நிரந்தர வருமானமற்று போனதால் குழந்தைகளை படிக்க வைக்க, பெற்றோரை மருத்துவரிடம் கவனிக்க என்று எத்தனையோ செலவுகளுக்காக வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் சிறைச் சாலைக்கு வருவது என்பது ஒரு நாள் உணவை இழக்க வேண்டும் என்பதோடு இன்னொரு நாள் உணவுக்கான பணத்தை பயணத்தில் இழக்க வேண்டியிருக்கிறது.

சிறையில் இருப்பவர்களுக்கு வெளியிலிருப்பவர்கள் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வது ஒரு மிகப்பெரிய ஆடம்பரம். என்னோடு வேலை செய்து இப்போது சிறையில் இருக்கிற இதர 146 பேரில் பலருக்கும் உறவினர்களை பார்க்கும் இந்த வாய்ப்பு இல்லாத போது அந்த ஆடம்பரத்தை நான் அனுபவிப்பது ஒரு அன்னியப்பட்டுப் போன உணர்வை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் என்னைப் போலவே 25க்கும் 30க்கு இடைப்பட்ட வயதினர். சிலருக்கு திருமணமாகவில்லை. பலருக்கும் கைக்குழந்தைகள் இருக்கிறார்கள்.

உனக்கு நினைவிருக்கிறதா பிரீதம், கல்யாணமான போது எங்கோ தொலைதூரத்தில் நாட்டுப் பண் பாடப்படுவது கேட்டாலே நான் எழுந்து அசையாமல் நிற்பதை நீ கேலி செய்திருக்கிறாய். நம் நாட்டின் சட்டதிட்டங்களை, விழுமியங்களை நான் மிக அதிகமாக நேசித்தேன். தேசியக் கொடி எங்கு பறப்பதைப் பார்த்தாலும் அதற்கு வணக்கம் செலுத்தாமல் நான் சென்றதில்லை என்பதை நீ அறிவாய். இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் கிழிந்து கிடந்த அழுக்கான ஒரு பக்கத்தை எடுத்து எனது சான்றிதழ்களோடு வைத்திருந்தேன். நீ கேலி செய்திருக்கிறாய். அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டாய். கீதையின் ஒரு பக்கம் கிழிபட்டு கீழே கிடந்தால் அதை என்ன செய்வாய் என்று நான் திருப்பிக் கேட்டேன். பதில் சொல்வதற்குப் பதிலாக கீதையும் அரசியல் சட்டமும் ஒன்றா என்று மீண்டும் நீ கேள்வியையே பதிலாக்கினாய். இரண்டுமே எனக்கு முக்கியம். இரண்டில் எது முக்கியம் என்று கேள்வி எழுப்பப்பட்டால் நான் அரசியல் சட்டத்தையே சொல்லுவேன் என்று நான் கூறினேன்.

நம்முடைய சட்டங்களின் மீதும் நெறிகளின் மீதும் விழுமியங்களின் மீதும் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அந்த கம்பீரமான பிரகடனம் என்னை ஆகர்சிப்பட்டிருந்தது. அந்தஸ்தால், பணத்தால், ஆடம்பரத்தால் என்னை விட உயர்ந்தவர்களைப் பார்க்கிற போது எனக்கும் அலட்சியமான ஒரு எண்ணம் தோன்றும். போங்கடா நீங்களும் உங்கள் பகட்டும். சட்டத்திற்கு முன்னாள் நாம் இருவரும் நிறுத்தப்பட்டால் உனக்கு என்ன தனிச் சலுகையா கிடைத்துவிடப் போகிறது என்றெல்லாம் நான் கர்வத்தோடும், பெருமிதத்தோடும் நினைத்திருக்கிறேன்.

ஆனால், பிரீதம் நம்முடைய அரசியல் சட்டத்திற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. எல்லோரும் சமம் என்று ஆணையிடுகிற அதன் அதிகாரத்தை யாரோ வளைத்திருக்கிறார்கள் அல்லது பிடுங்கியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

உனக்கு நினைவிருக்கும், சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களில் நீ என்னைப் பார்க்க வந்தபோது மிகப்பெரிய தைரியத்தோடும் தெம்போடும் உனக்கு ஆறுதல் சொன்னேன். விரைவில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவேன். என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் என்பதை நிரூபிப்பேன். பொய் வழக்குப் போட்டவர்களை சட்டத்தின் முன்னாள் நிறுத்துவேன் என்று உன்னிடம் கூறியிருந்தேன். நான் சிறைக்கு வரும் முன்பாக அந்த தொழிற்சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அவர்கள் மீது எனக்கு வெறுப்பும் இருந்ததும் கிடையாது. ஆனால், இன்று அந்த தொழிற்சாலையின் வாயிலுக்கு முன்னாள் ஓங்கி வளர்ந்த ஒரு கம்பத்தை நட்டு அதன் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் சங்கத்தின் கொடியை பறக்கவிட்டு தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது போல தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலைக்கு செல்லும் முன் அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்திருக்கிறேன். இப்போது என்னுடைய ஒரே கனவாக அது மட்டுமே இருக்கிறது.

எங்கள் நிறுவனத்தின் (நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நிர்வாகம் என்னை அவர்கள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டது) மனித வளத்துறை பொது மேலாளர் அவானிஷ் தேவ் இறந்து போன அன்றைய தினத்தில் எத்தனை பதட்டத்தோடு இருந்தேன் என்பதை நீ அறிவாய். எனது சொந்த சகோதரனை பறிகொடுத்தது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.

அப்போது சங்கத் தலைவர்களாக இருந்தவர்கள் கூட அவரைப் பற்றி நல்லவிதமாகவே பேசினார்கள். அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவானவர் என்பதால் நிர்வாகம் கூட அவர் மீது கோபமாக இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இப்போது அவருடைய பிரதே பரிசோதனை அறிக்கை மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டிருக்கிறது. அவரை அடித்து கொன்று எரித்ததாக எல்லா பத்திரிக்கைகளும் செய்திகள் வெளியிட்டன. நானும் கூட உண்மை என்று நம்பியிருந்தேன். இப்போது காலில் சில காயங்களைத் தவிர வேறு காயங்கள் உடம்பில் இல்லை என்றும் மூச்சுத் திணறல் மற்றும் தீ காயங்களால் இறந்து போனார் என்றும் வெளிப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளைப் பற்றி எனக்குத் தெரியும். தொழில் தகராறுக்காக அவர்கள் யாரையும் கொல்லத் துணியமாட்டார்கள். அப்படி எல்லாம் நடந்தால் இந்த நிறுவனத்தில் எத்தனையோ கொலைகள் நடந்திருக்க வேண்டும். இந்த நல்ல மனிதரை கொல்வதற்கு நிச்சயம் தொழிலாளிகள் துணிந்திருக்க மாட்டார்கள்.

நம் திருமணம் முடிந்து ஒரு வார கால முடிந்த பிறகு உனது வீட்டிற்கு விருந்திற்காக வந்திருந்தேன். உனது உறவுக்காரர்களை எல்லாம் அழைத்து வந்து உனது அப்பா பெருமை பொங்க எனது மருமகன் மாருதி சுசுகியில் வேலை செய்கிறார். அது ஒரு ஜப்பான் நிறுவனம். நல்ல சம்பளம். கவுரமான வேலை என்று குறிப்பிட்டார்.

அப்போது, உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் உறவினர்களிடமும் ஒரு பெருமிதும் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது. அடுத்த நாள் நான் கடைவீதிக்குச் சென்றபோது சில இளைஞர்கள் தாங்கள் மாருதி சுசுகி நிறுவனத்தில் பணிக்குச் சேர முடியுமா? என்னால் அதற்கு உதவ முடியுமா என்றெல்லாம் கேட்டார்கள். சில சிறார்கள் கூட, அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்றால் என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் கூட கேட்டார்கள். நான் அவற்றிற்கெல்லாம் ஏதோ பதில் சொல்லிவிட்டு வந்தேன்.

பிரீதம் உனக்கு தெரியுமா, அந்த வேலையில் சேர்ந்த போது இவர்களிடம் இருந்த அதே பெருமிதம் எனக்கும் இருந்தது. ஆனால், வேலைக்குச் சேர்ந்த சிறிது நாட்களில் என்னுடைய வேலை நிலைமைகள் குறித்து வெளியே சொல்வதற்கு நான் அவமானப்பட்டவனாக இருந்தேன். உன்னிடம் கூட அதுகுறித்து நான் பேசியது கிடையாது.

உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் ஏன் எனது குடும்பத்தாருக்கும் ஊருக்கும் இருந்த அந்த பெருமித கற்பனையை கலைக்க விரும்பவில்லை. விருப்பம் இல்லை என்பதை விட தைரியம் இல்லை என்பது தான் உண்மை.

தொடரும்..

Related Posts