இதழ்கள் இளைஞர் முழக்கம்

பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்

இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது ஒரு பசு உட்கார்ந்திருக்கிறது. அந்த அட்டைப் படத்தை பார்த்ததும் புத்தகத்தின் உள்ளடக்கம் புரிந்தது. பாஜக அரசின் நடவடிக்கையை இதைவிட கேலி செய்திட முடியாது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் அ.பாக்கியம் எழுதியுள்ள பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் என்ற இந்த சிறு பிரசுரம் ஏராளமான விவரங்களோடும், ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் மதவெறி துவேச பிரச்சாரங்களை உடைத்தெறியும் விவாதங்களையும் கொண்டுள்ள நல்ல படைப்பு.

ஆட்சிக்கு வரும் வரை திட்டம் போட்டு சதி செய்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம் இப்போது சட்டம் போட்டு சதி செய்து வருகின்றனர் என்று துவங்குகிறது ஆர்.எஸ்.எஸ் இந்திய நாட்டின் பெரும்பான்மை இந்து மதத்தினரை திரட்டுவதற்காக புராண இதிகாசங்களில் புனிதமானதாக முன்நிறுத்தப்பட்டுள்ள பசுவை ஓர் இந்து அடையாளமாக பயன்படுத்தி எப்படி தமது பாசிச அணிதிரட்டலை நடத்துகின்றனர்? இந்து முஸ்லிம் மக்களிடையே வெறுப்பையும், சாதி இந்துக்கள் – தாழ்த்தப்பட்டோரிடையே சாதி வெறுப்பை எப்படி தூண்டுகின்றனர் என்பதையும் தெளிவாக விளக்குகிறது.

இறைச்சிக்கூடங்கள் மூடப்படுவதால் அதனுடன் தொடர்புள்ள இறைச்சி, தோல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வேலையிழக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய நாட்டில் 60 சதவீத மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் என்றும் இந்த தடையினால் அவர்கள் பாதிப்புக்குள்ளாவதையும், எருது, பசு உள்ளிட்ட கால்நடை சார்ந்த துறை பாதிக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பையும் பிரசுரம் புள்ளிவிவரங்களுடன் உணர்த்துகிறது.

மாட்டிறைச்சி தடை சட்டப்படியானதல்ல என்பதற்கான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மாட்டிறைச்சி தடை என்று துவங்கி இன்று முட்டை உள்பட அனைத்து அசைவ உணவுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனால் குஜராத்தில் 41 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதே போல் மத்திய பிரதேசத்தில் 71.1 சதவிகிதம் பேர் இரத்தசோகை நோயாலும் 60 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்கன்ட் மாநிலத்தில் 56.5 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை யாவும் பிஜேபி நீண்ட காலமாக ஆளும் மாநிலங்கள் என்று புத்தகம் புள்ளிவிவரங்களோடு முன்வைக்கும் தகவல்கள் மாட்டிறைச்சி தடை ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரத்தையும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியம் இல்லாத நோஞ்சான்களாக மாறிவரும் அபாயம் உள்ளதையும் உணரமுடிகிறது.

இந்தியாவின் 5 பெரிய இறைச்சி ஏற்றுமதியாளரில்; மூன்று பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் மாடுகளை கொல்வதும் அதன் இறைச்சியை, தோலை ஏற்றுமதி செய்வது முஸ்லிம்கள்தான் என்ற பிஜேபியின் பொய்ப்பிரச்சாரத்தை நொறுக்கியுள்ளது.

பசுவதைக்காக சங்பரிவாரங்கள் நடத்திய கலகத்தையும் அதற்கு பிறகு அமைக்கப்பட்ட ஏ.எஸ்.சர்க்கார் குழு பற்றியும், “உண்மையில் தமக்கு பின்னால் பெருந்திரள் மக்களை திரட்டவும் காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்கவுமே பசுபாதுகாப்பை வலியுறுத்துவதாக ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வால்கர் ஒப்புக்கொண்டதை ஆதாரப்புர்வமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் அகிம்சையினை வலியுறுத்திய மகாத்மா காந்தி பசுவதை கூடாது என்ற கோரிக்கையை நிராகரித்தார். பசுவின் மீது பக்தி கொண்ட பசுவை தெய்வமாக வழிபடும் காந்தி மாட்டிறைச்சி சாப்பிடும் உரிமையை அங்கீகரித்தார் என்ற வரலாற்று தகவல்கள் பிஜேபிக்கு எதிரான வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மாடு ஏற்றுமதிக்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பொது சமூகத்தில் இதுகுறித்த விவாதம் தீவரமாக நடந்து வருகிறது. பசு புனிதமானது அதனை கறிக்காக வெட்டி சாப்பிடுவது தவறுதான் என்று நம்ப வைக்கப்பட்டுள்ள சாதாரண அப்பாவிக் குடிமகனுக்கு மதவெறி பிஜேபியின் உண்மை முகத்தை உணர்த்துவது நமது முக்கிய கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமக்கு இந்த சிறு புத்தகம் வழிகாட்டும். புத்தகத்தின் ஆசிரியர் நல்ல வாசிப்பாளர் என்பதால் ஏராளமான விவரங்கள், தகவல்கள், புள்ளிவிவரங்களையும் வழங்கியுள்ளார். இந்த புத்தகத்தின் விவரங்கள் பிஜேபிக்கு எதிரான கோபத்தை தூண்டும். மதவெறி நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும்.

பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல்
அ.பாக்கியம்
முதல் பதிப்பு : மே 2017, வெளியீடு : பாரதி புத்தகாலயம்

Related Posts