பிற

பசுத் தோல் போர்த்திய புலி – எம்.வீரபத்திரன்

 

1998ம் ஆண்டு கோவையில் அந்தோணி செல்வராஜ் என்ற கிருத்துவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்டபோது செல்வராஜ் என்ற இந்து காவலரை இஸ்லாமியர்கள் கொலை செய்ததாக பிரச்சாரம் செய்தது காவிக்கூட்டம். இதன் விளைவு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்; 22 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இஸ்லாமிய தீவிரவாதிகள் ரயில் நிலையம், மருத்துவமனைகளில் குண்டு வைத்தனர். இதற்கு அப்பாவி மக்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை ‘அல்லாவுக்கு விரோதமான செயல்’ என்று இஸ்லாமியர்கள் கண்டித்தனர். மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் அப்பாவி இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றனர்.

கலவரத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்து – இஸ்லாமியர்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் காவிக்கூட்டத்தினர் என்பதை அ.கரிம் “தாழிடப்பட்ட கதவுகள்” என்ற கட்டுரைத் தொகுப்பில் நுட்பமாக உணர்த்தியுள்ளார்.
கொலை செய்யப்பட்டு 22 உடல்கள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துணியையும் அகற்றும் போது, பெண்கள் தங்கள் நெஞ்சை இறுகப்பற்றிக் கொண்டு, இது தன்னுடைய கணவனாக இருக்கக்கூடாது என்று கலங்கும் இடம் படிக்கும் வாசகன் மனதை உலுக்கிவிடும்.

அஸ்ரப்பின் ஆணுறுப்பு வெட்டப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர் என்று ஒருவன் சொல்லும் இடம் மிருகங்களை விட மிக கொடூரமான காவிக்கூட்டம் “ பசுத் தோல் போர்த்திய புலி” என்பதை போல் இந்தியாவில் அதிகாரத்தோடு உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘மொஹல்லாவின் மய்யத்துகள்’ தொகுப்பு நமக்கு எடுத்துக் கூறுகிறது.

கேரளாவிலிருந்து கோவை நகருக்கு வந்து, தன்னுடைய கடின உழைப்பால் மளிகை கடை வியாபாரம் செய்துவந்த சலீமின் கடையை எரித்து அவனை அடித்து துரத்தியதை ‘வந்தாரை’ என்ற கட்டுரையிலும், குருவி போலச் சேர்த்த பணத்தில், மைமுனும் அவன் மகன் ஜாகிரும் சொந்தமாக வீடு வாங்கியிருந்தவர்களை உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றியதையும், மறுநாள் அவர்கள் வீட்டை தீயிட்டு எரித்ததையும், கூடு இழந்த “பறவைகளின் சாபம்” என்பதிலும் இஸ்லாமியர்களின் வளர்ச்சி எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை விவரிக்கிறது.
பெருநாள் தொழுகைக்காக காலையில் இஸ்லாமிய குடியிருப்புகளில் அதிகாலை 3 மணிக்கு கஜல் பாடல்கள் மூலம் டேப் பஷீர் பாடுவார். குடும்பத்துடன் அனைவரும் நோன்பு முடிந்து சந்தோஷமாக இருப்பார்கள். டேப் பஷீர் மட்டும், ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் தரும் சன்மானத்தை பெற்று இரவு வீடு வந்து சேருவார்.

அப்படி ஒருநாள் சன்மானத்தை பெறுவதற்கு பர்கத் வீட்டிற்கு செல்லும் போது, பள்ளிவாசலில் இருந்து மைக் ஒலியின் மூலம் சகருக்கு எழுப்புகிறார்கள். நல்ல உடம்பை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து பிழைப்பது ஒரு பிழைப்பா என்று பஷீரை பார்த்து ஏசுவான் பர்கத். இதனால் மனம் உடைந்த டேப் பஷீர், அந்த ஈகை பெருநாளில் இறந்துவிடுவார். இப்படி இழிவான மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை ‘பிலால் என்கிற டேப் பஷீர்’ கட்டுரை கூறுகிறது.

ஜமாத்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையும், ஜமாத் இடத்தில் கடைகள் கட்டிவிடும்போது, இளம் விதவைப் பெண்களுக்கு கடையை வாடகை விடவேண்டும் என்றும் ஜமாத்தில் மனு செய்தாள் பட்டதாரியும், விதவையுமான சுபைதா. ஜமாத்கார்கள் இவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிர்கிறார்கள். எல்லா மதங்களிலும் ஆண் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது என்பதை ‘மெதோ கேள்வி’ என்ற சிறுகதை வெளிபடுத்துகிறது.

கலவரத்தின் போது, கதவைப் பூட்டிவிட்டு, பின் பக்கமாக சென்று விளக்குகளை அணைத்தும், ஜன்னலை மூடியும் மூன்று நாள் பட்டினியுடன், உயிர் வாழ்வதற்கு முருங்கை இலையை சமைத்து உயிர் பிழைத்த அமனுல்லாவையும், மனைவி ஆயிஷா மகன் சான்ஷா, உயிர் பிழைப்பதை தாழிடப்பட்ட கதவுகள் என்ற சிறுகதை படிக்கும் போதும் எப்போது தான் காவிக்கூட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விடுதலை கிடைக்குமோ என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.

18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அகமதுவின் மனைவி ரெஜினா தன்னந்தனியாக தன் குழந்தையான ஜாஸ்மியை வளர்த்து வருகிறாள். பள்ளிக்கூடத்தில் அவளை கொலைகாரன் மகள் என்று ஒதுக்கி வைப்பதால் அப்பா என்ற பிம்பத்தின் மீது வெறுப்பு கலந்த விரோதத்துடன் வளர்கிறாள். குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்ட அகமது விடுதலையான பின் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்கிறான். ஆனாலும் ஒரு நாளும் ஜாஸ்மி தன் அப்பாவிடம் பேசியது கிடையாது. மகள் எப்போது நம்மிடம் பேசுவாள் என்ற ஆசையுடன் காத்திருக்கிறார் அகமது. ஜாஸ்மியின் திருமணம் முடிந்து அவளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது மகள் பேசமாட்டாளா என்று ஏங்கிய தருணத்தில், அத்தா (அப்பா) என்று அழைக்கும் மகளைப் பார்த்து ஓவென்று கதறி அழுகிறான் அகமது. இந்த இடத்தை படிக்கும் வாசகன் கண்கள் கலங்காமல் இருக்க முடியாது. தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட எத்தனை அப்பாவி இளைஞர்கள் சிறையில் வாடுகின்றனர் என்பதை ‘வெடிப்புக்குப் பின் காலம்’ என்ற சிறுகதை அகமதுவின் சாட்சி.
நீதிமன்ற வளாகத்தில் கைதிகளை காவலர்கள் அழைத்து வரும்போது, தாடி வைத்திருந்தாலும், வாட்டசாட்டமான உடல்வாகுடன் இருந்தால், நீதிமன்ற வளாகத்தில் இருந்த 2 பேர்கள், இந்த பாய்கள் (இஸ்லாமியர்கள்) என்னவிதமான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, அங்கு வரும் ஒரு மூதாட்டி, டேய் மயில்சாமி உனக்கு எப்போ விடுதலை என்று கேட்பாள். பொதுவாகவே வெகுஜன மக்கள் மத்தியில் தாடி வைத்திருந்தாதல் அவன் இஸ்லாமியர், மோசமானவர் என்ற கருத்து ஆழமாக நமது மனதில் பதிந்துள்ளது என்பதை ‘144’ என்ற சிறுகதை கூறுகிறது.

மிக்சிறந்த இந்த தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.
காவிக் கூட்டத்தின் உண்மையான முகத்தை ‘எழுத்து’ என்ற சாவி கொண்டு வாசகர்களுக்குத் திறந்து காட்டுகிறார் அ.கரிம். களப்பணியாற்றும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

Related Posts