இதழ்கள் இளைஞர் முழக்கம்

பகத்சிங் மரண தண்டனை குறித்து அம்பேத்கர்

 

பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு இறுதியில் தூக்கிலடப்பட்டார்கள். அவர்கள் சாண்டர்ஸ் என்ற ஆங்கிலப் போலீஸ் அதிகாரி மற்றும் ஷாமன் சிங் என்ற சீக்கிய போலீஸ் சிப்பாய் கொலையுண்டதற்காக  குற்றம் சாட்டப்பட்டனர். மேலும் பனாரஸ் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி, சட்டமன்றத்தில் குண்டு வீச்சு, மௌளிமிய என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை அடித்து அதன் சொத்துக்களை சூறையாடுதல் போன்ற மூன்று அல்லது நான்கு குற்றங்களும் அவர்கள் மேல் சாட்டப்பட்டது. பகத் சிங் ஏற்கனவே சட்டமன்றத்தில் குண்டு வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த குற்றத்திற்காக  அவருக்கும் , பதுகேஷ்வர் தத்  என்றவருக்கும் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பகத் சிங் தோழர்களில் ஒருவரான ஜெயகோபால் என்பவர் சாண்டர்ஸ்ஐ கொலை செய்ததில் தனக்கும், புரட்சியாளர்களுக்கும் , பகத் சிங் மற்றும் பலருக்கும் தொடர்புடையதாக வாக்குமூலம் அளித்தார். அரசாங்கம் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் மீது வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து ஒருமனதாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது.

பகத் சிங்கின் தந்தை கருணை மனு ஒன்றை பேரரசருக்கும், வைஸ்ராய்க்கும் அனுப்பினார். அதில் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாதென்றும், அதை வேண்டுமானால் ஆயுள் தண்டனையாக மாற்றி அந்தமான் சிறைக்கு மாற்றுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலரும்  இந்த விஷயத்தில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க முயற்சி செய்தனர்.

பகத் சிங்கின் மரண தண்டனை பிரச்சனையை முன்னிறுத்தி காந்தி, லார்ட் இர்வினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். லார்ட் இர்வின் பகத் சிங்கின் உயிரை காப்பாற்றுவதற்கான உறுதியான உத்தரவாதம் அளிக்காவிட்டாலும், இர்வினிடம் இடைக்காலத்தில் நடைபெற்ற காந்தியின் பேச்சு, அவர் தன் அதிகாரத்திற்குட்பட்ட சிறந்த முயற்சியை எடுத்து இந்த மூன்று இளைஞர்களின்  உயிரை காப்பாற்றுவார்  என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த நம்பிக்கை , கணிப்புகள் மற்றும் முறையீடுகள் பயனற்றுப் போனது.  அவர்கள் மார்ச் 23, 1931  அன்று லாகூரில் உள்ள  மத்திய சிறைச்சாலையில்  இரவு 7 மணிக்கு தூக்கிலடப்பட்டு  கொல்லப்பட்டனர். அவர்கள் யாரும் அவர்களை காப்பாற்ற மேல் முறையீடு செய்யவில்லை. பகத் சிங் தூக்கிலிடப்பட்டு உயிர் விடுவதை  விட துப்பாக்கி முனையில் சாவதை தான் விரும்புவதாக ஏற்கனவே பத்திரிக்கைகளில்  வெளியிடப்பட்டிருந்தது.. ஆனால் அவரது இந்த இறுதி விருப்பத்தையும் நிறைவேற்றாமல் நீதி மன்றத்தின் தீர்ப்பை  அவர்கள்  நடைமுறைப்படுத்தினர். இறக்கும் வரை கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்று நீதி மன்ற தீர்ப்பு இருந்தது, அவர்கள் புல்லட் மூலம்  கொல்லபட்டிருந்தால், அந்த தீர்ப்பை உறுதி செய்ய முடியாது என்றும், நீதி தேவதையின் பொருட்டு கீழ்படிந்து , அவள் பரிந்துரைக்கப்பட்ட முறையில் கொல்லப்பட்டனர் என்றும் கூறினர்.

யாருக்கான தியாகம் ?

நீதி தேவதையின் மீது கொண்ட பக்தியும் அதன் கீழ் படிந்து நடத்தப்பட்ட இந்த அரசாங்கத்தின் கொலையை   மக்களால் கவரப்படும் என்றும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்  என்று நினைத்தால் அது அவர்களின்  அப்பட்டமான அறியாமையாகவே இருக்கும். பிரிட்டிஷ் நீதி அமைப்பின் தூய்மையை நிலைநாட்டுவதற்காகவும், அதற்கு களங்கம் வராமல் தடுப்பதற்காகவும் இத்தகைய தியாகத்தை செய்ததாக கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். இத்தகைய புரிதலில் இந்த அரசாங்கமே தன்னை சமாதானப்படுத்த முடியாது. பிறகு எப்படி நீதி தேவதையின் திரையை வைத்துக்கொண்டு மற்றவர்களை சமாதானப்படுத்த முடியும்?. இங்குள்ள அரசாங்கத்திற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தெரியும், இந்த கொலை நீதி தேவதை மீது கொண்ட பக்தியால் செய்யப்பட்டது அல்ல , இங்கிலாந்து நாட்டின் பழமைவாத கட்சிக்கும் அங்குள்ள மக்களின் கருத்திற்கும் பயந்தும் இத்தகைய தியாகம் செயல்படுத்தப்பட்டது.

அவர்கள் அரசியல் கைதியான காந்தியை விடுவித்தது மற்றும் காந்தியின் கட்சியுடனான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது போன்ற நடவடிக்கைகள் இங்கிலாந்து பேரரசின் கவுரவத்தை சேதமடைய செய்ததாக நினைத்தனர். இதற்கான காரணம் தொழிலாளர் கட்சியும் அவர்களின் அமைச்சரவையும், வைஸ்ராயும்தான் என்றும் சில பழமைவாத கட்சியின் பழமை வாய்ந்த தலைவர்கள் அங்குள்ள மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். இத்தகைய சூழலில் லார்ட் இர்வின் ஒரு ஆங்கில போலீஸ் அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்கான தண்டனையை பெற்ற  அரசியல் புரட்சியாளர்களுக்கு இரக்கம் காண்பித்தால் , எதிர் கட்சிக்கு எரியும் ஜோதியை அவர்கள் கையிலேயே கொடுத்ததாக ஆகி விடும். ஏற்கனவே தொழிலாளர் கட்சியின் நிலை சீராக இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தொழிலாளர் கட்சி ஒரு ஆங்கிலேயரை கொலை செய்த குற்றவாளிக்கு கருணை காட்டினால், அது பழமை வாத கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் அங்குள்ள பொது மக்களை தொழிலாளர் கட்சிக்கு எதிராக தூண்டிவிட எளிதாகிவிடும். இந்த உடனடி நெருக்கடியை தவிர்ப்பதர்க்காகவும், பழமை வாத கட்சியின் தலைவர்களை குளிர்விப்பதர்க்காகவும், இந்த மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

இது நீதி தேவதையை திருப்தி படுத்த அல்ல, இங்கிலாந்து நாட்டின் பொது மக்களை திருப்தி படுத்த  செய்யப்பட்டது. லார்ட் இர்வினின் சொந்த விருப்பு வெறுப்பு பிரச்சனையாக இருந்திருந்தால், தனது சொந்த சக்திகளை பயன்படுத்தி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி இருக்க முடியும்.இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியின் அமைச்சரவை லார்ட் இர்வினின் இந்த முடிவிற்கு ஆதரவு கொடுத்திருக்கும். இது காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். நாட்டை விட்டுப் போகும் பொழுது நல்லெண்ணத்தை சம்பாதிக்க விரும்பி இருப்பார். ஆனால் அவர் இங்கிலாந்தின் பழமை வாத உறவினர்களின் கோபத்திற்கும், இந்திய அதிகாரத்துவம் மற்றும் அதில் ஊக்குவிக்கப்படும்  சாதிய மனப்பான்மை இடையே நசுங்கி போயிருப்பார். எனவே இந்த நாட்டின் மக்கள் கருத்தை மனதில் கொள்ளாமல் , லார்ட் இர்வினின் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வெறும் 2 அல்லது 4 நாட்களுக்கு முன்பாகவே பகத் சிங் மற்றும் அவரது தோழர்களை தூக்கிலிட்டது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்பட்டது  மற்றும் அதன் நேரம் மட்டுமே காந்தி இர்வின் ஒப்பந்தத்தை முறியடிக்க போதுமானதாக இருந்தது. லார்ட் இர்வின் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதாக இருந்தால், இதை விட ஒரு நல்ல தருணம் கிடைத்திருக்காது.

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் , காந்தி கருதியது போல , அரசு ஒரு மிகப் பெரிய தவறை செய்தது என்றே கூற முடியும்.

மொத்தத்தில், இங்கிலாந்தின் பழமைவாதிகளின் கோபத்தை தவிர்ப்பதற்காக ,பகத் சிங் மற்றும் அவரது தோழர்களை தூக்கிலிட்ட. அவர்கள் மக்களின் கருத்தை புறக்கணித்து ,காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் நிலையை எண்ணாமல் இத்தகைய ஒரு செயலை செய்தனர். ஆனால் இந்த அரசாங்கம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும், எப்படியெல்லாம் இந்த செயலை மூடி மறைத்து மெருகூட்ட முயற்சித்தாலும், அவர்களால் உண்மையை மூடி மறைக்க முடியாது.

ஜனதா ,13 ஏப்ரல்  1931

தமிழில் : அன்புவாகினி

Related Posts