இதழ்கள் இளைஞர் முழக்கம்

பகத்சிங் – ஒரு கனவுலகத்தின் முன்னுரை – கமலாலயன்

பகத்சிங் – ஒரு கனவுலகத்தின் முன்னுரை –  கமலாலயன்

     இன்று: ‘ஏதோ ஓர் அசாதாரணமான நிகழ்வு இப்போது இந்த நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மிகவும் ஆபத்தான, தீவிரமான அதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் குறிப்பிட்ட கருத்து இது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் தேசத்துரோகக் குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.காவல்துறையினர் சூழ்ந்திருந்த போதிலும் பாரதிய ஜனதா,  விஷ்வ ஹிந்த் பரிஷத் ஊழியர்களும், வழக்கறிஞர்களும் அவரை முரட்டுத்தனமாகத் தாக்குகிறார்கள். அமைதியை நிலைநாட்டுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை, டெல்லி மாநகர காவல் ஆணையரால் குப்பைக் கூடையில் வீசப்படுகிறது. எனவே தன் உயிருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் நேரடியாக உச்சநீதிமன்றத்திடமே முறையிடுகிறார் ஜே.என்.யூ மாணவர் தலைவர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி வெளியிட்ட கருத்துதான் இக்கட்டுரையின் தொடக்க வாசகம்.

அன்று: பகத்சிங் விசாரணைக்காக லாகூர் மத்திய சிறையிலிருந்தார் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகையில் கை விலங்கிட்டு அழைத்து வந்தார்கள். நீதிபதியிடம் முறையிட்டு அதை அகற்றுமாறு பகத்சிங்கும்,அவரது தோழர்களும் கோரினார்கள். கீழமை நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டது விசாரணையை எதிர்கொண்ட பகத்சிங் நீதிமன்ற சாட்சிக் கூண்டையே பரப்புரை மேடையாக்கி அரசு தரப்பு வாதங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்தார். இதே நிலைமை நீடித்தால் என்ன நடக்குமென்று புரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு, ஒன்பது மாதங்கள் கடந்து விட்ட நிலையில் லாகூர் சதிவழக்கு அவசரச்சட்டம்  ஒன்றைப் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது. அமைதியையும், சமாதானத்தையும் பாதிக்கும் அவசர நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது வைஸ்ராயின் அறிவிப்பு. இந்த சட்டப்படி பகத்சிங் உள்ளிட்ட போராட்ட வீரர்களை ஒரு சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்களோ, சாட்சிகளோ இல்லாமல் அரசு தரப்பு மட்டுமே கலந்து கொள்ளும் நீதி விசாரணை நடைபெறும் வழக்கறிஞர்கள் இருக்கமாட்டார்கள் மரணதண்டனை உட்பட எந்தக் கடுந்தண்டனையையும் இந்நீதிமன்றம் விதிக்கலாம். ஆனால் அதன் தீர்ப்பை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது! இப்படியோர் அவசரச் சட்டம்.

விடுதலைப் போரில் பகத்சிங்கும், அவரது தோழர்களும் நிகழ்த்திய மகத்தான உண்ணா நோன்புக்கு வித்திட்டது, இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நடந்த தடியடி தாக்குதல்தான் 14 நாட்கள் வரையிலும் நடந்த விசாரணையின்போது, நீதிமன்றத்துக்குள் நுழைகையில் இந்தப் போராளிகள் முழக்கங்களை எழுப்புவது வழக்கம். அவ்வாறு முழக்கம் எழுப்பியதற்காக விசாரணைக் கைதிகளின் கைகளில் விலங்குகளைப் பூட்டுமாறு சிறப்பு நீதிமன்றத் தலைவர் உத்தரவிடுகிறார். கீழமை நீதிமன்றத்திலோ, ஒரே ஒரு முறை இவர்களை கொண்டு சென்ற உயர்நீதிமன்றத்திலோ இவ்வாறு முழக்கமிடுவது ஆட்சேபிக்கப்படவில்லை என்பதை இவர்கள் சுட்டிக்காட்டியதும், பலாத்காரத்தைப் பிரயோகிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்திற்குள்ளேயே, வழக்கறிஞர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் முன்பாக ஏராளமான போலீஸ்காரர்கள் குண்டாந்தடிகளுடன் கைதிகள் மீது பாய்ந்து தடியடிகளை மழையெனப் பொழிந்தார்கள்.

இந்தக் கொடிய செயலைக் கண்ட, அந்நீதிமன்றத்தின் ஒரே ஓர் இந்திய நீதிபதியான ஆகா ஹைதர் மனமுருகி வருந்தி, கைதிகளின் கைகளில் விலங்கிடும் உத்தரவுக்கும், தமக்கும் யாதொரு தொடர்புமில்லை என ஓர் அறிக்கை விட்டார். அடுத்த சில நாட்களிலேயே அந்த சிறப்பு நீதிமன்றம் திருத்தியமைக்கப்பட்ட போது நீதிபதி ஆகா ஹைதரின் பெயர் அங்கு நீதிபதியாக இருக்கபோகிறவர்களின் பெயர்பட்டியலில் காணப்படவில்லை. காரணம் இதுதான்: கைதிகளைச் சட்டவிரோதமாக  அடிப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாமல் வெளிப்படையாக அறிக்கை விட்டவரான ஆகா ஹைதர், நாளை விசாரணை முடிவடைந்து தீர்ப்புக் கூறும் போதும் இதே போல் ஒரு மனச்சாட்சியுள்ள நீதிபதியாக நடந்து கொள்வாரே, அந்த சங்கடத்தை எப்படி எதிர்கொள்வதென்பது தான் பிரிட்டிஷ் அரசின் பிரச்சனை.

பகத்சிங் பற்றிய எண்ணற்ற நூல்களும், அவருடையவும் சக தோழர்களுடையவுமான எழுத்துகளும் நீதிமன்ற விசாரணைப் பதிவுகளும், பிற ஆவணங்களும் அன்றைய காலக்கட்டத்தின் உண்மைப் போராளிகளை நமக்கு இனங்காட்டுகின்றன. நடிப்புச் சுதேசிகளை அம்பலப்படுத்துகின்றன. பகத்சிங்கும், அவரின் சகவீரர்களும் தூக்கிலிடப்பட்ட சம்பவம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அதே சமயம், அவ்வாறு அந்த இளம் வீரர்கள் தூக்கிலிடப்படாமல் தடுப்பதற்கு அன்றைய இந்திய தேசிய இயக்கத் தலைவர்கள் குறிப்பாக, காந்தி அந்தரங்க சுத்தியுடன் போராடத் தவறிவிட்டனர் என்ற செய்தியும் ஒரு கருப்பு அத்தியாயமாகவே நிலைத்துவிட்டது.

உண்ணா நொன்பு, அகிம்சைப் போராட்ட வழிமுறை என்பனவற்றின் இக்கணமாகவும், இலக்கியத் திருவுருவாகவும் நமது பொதுப் புத்தியில் காந்தி மட்டுமே பதிந்து விட்டிருக்கிறார். ஆனால், சிறையிலிருந்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, கிஷோரிலால், ஜதீன்தாஸ், அஜாய் கோஷ், சிவர்மா போன்றவர்கள் பலமுறை உண்ணாநிலை அறப்போராட்டத்தின் உச்சிவரை சென்றவர்களே. லாகூர் சதி வழக்கிலும், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கிலும் கைதாகி விசாரிக்கப்பபட்ட போது, 1929-1930 களில் 63 நாட்கள் நீடித்த லாகூர் மத்திய சிறை உண்ணாவிரதம் உட்பட பல போராட்ட நிகழ்வுகளை தோழர் அஜாய் கோஷ், சிவவர்மா ஆகியோர் எழுதிய நூல்கள் விவரிக்கின்றன. அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள், இந்திய வரலாற்றில் கைதிகளுக்கான அரசியல், மனித உரிமைகளை முதன்முறையாக முன்வைத்தன எனலாம்.

சகல அரசியல் கைதிகளையும் சிறையில் ஒரே வகுப்பில் வைத்திருக்க வேண்டும் மனிதர்களாக நடத்த வேண்டும்: நல்ல உணவும், பத்திரிகைகள், புத்தகங்களும் எழுத படிக்கத் தேவையான சாதனங்களும், வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்கிற இக்கோரிக்கைகளுக்காக 63 தினங்கள் வரை தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் உண்ணாநோன்பின் எழுச்சி மகத்தானதாய் அமைந்திருந்தது. சிறை நிர்வாகம், இப்போராட்டத்தை முறியடிப்பதற்குத் தன்னாலியன்ற எல்லாத் தந்திரங்களையும், கையாண்டது. தந்திரங்கள் பலிக்காமற் போன போது தடிகளால் மிருகத்தனமாகத் தாக்கி சித்ரவதை செய்தது. குடிக்க நீர் தராமல், தாகத்தினால் நாவறண்டு  தவித்த கைதிகளின் அறைகளில் குடங்கள் நிறைய பாலை நிரப்பி வைத்திருந்தது. பொறுக்க முடியாமல் பொங்கியெழுந்த இளம்போராளிகள் அந்த பாற்குடங்களை உடைத்து நொறுக்கி ஆவேசமுற்றனர்.ஏற்கெனவே பலவீனமுற்று, உருக்குலைந்து கிடந்த அவர்களை சிறைக் காவலர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கி வீழ்த்தினர்.

இந்த உண்ணாநோன்பின் போது, ‘கதர் கட்சியை நிறுவியவரும், முதலாவது (1915-1916) லாகூர் சதிவழக்கு வீரருமான பாபா சோகன் சிங் பக்னா என்ற முதியவரும் அதில் பங்கேற்றிருந்தார். அப்போதே அவர் அந்தமான் தீவுச் சிறை உள்ளிட்ட பல இந்தியச் சிறைகளில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டவர், விடுதலையாகி வெளியே வரவேண்டிய தருணத்திலிருந்த அவர் உண்ணாவிரதப் போரில் இறங்கியதன் விளைவாக மேலும் ஓராண்டு சிறையில் வாடினார் பாபாஜி, நெடிய சிறைவாசத்தினால் உடல் சிதைந்திருந்த நிலையில், பாபா சோகன்சிங் உண்ணாவிரதமிருந்தது அவருடைய உயிருக்கே உலை வைத்திருக்கக்கூடிய செயல். பகத்சிங் அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும் பாபாஜி தனது நிலையில் சிறிதும் பின்வாங்கவில்லை.

இங்கு, ஒரு விஷயத்தை நாம் ஒப்பு நோக்கிச் சிந்திக்கலாம். பிரிட்டிஷ் அரசாங்கம், காந்தியின் உண்ணாநோன்புகளுக்கு ஒருபோதும் தடை விதிக்கவோ, சிறையில் வலுகட்டாயமாக உணவூட்டவோ முயன்றதாக ஒரே ஒரு சான்று கூட இல்லை. லாகூர் சதி வழக்கில், பகத்சிங்கின் ஏழு தோழர்களுக்கு தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுள் ஒருவரான மஹாபீர் சிங், அந்தமான் சிறையில் நடந்த முதல் உண்ணாநிலைப் போராட்டத்தின் போது உயிர் நீத்தார். லாகூரில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து ஜதீன்தாஸ் மறைந்தார். கிஷோரிலால், ஜெயதேவ், சிவவர்மா, கயா பிரசாத் ஆகிய நால்வரும் பதினாறரையாண்டுகள் 16 1யி2 கடந்த பின்பும் சிறையில் வாடினர். ஜதீன்தாஸின் உண்ணாவிரதப் போரின் இறுதியில் சிறை நிர்வாகமும், அரசும் பணிந்தன. சில வாக்குறுதிகளை, சிறைச் சீர்திருத்தங்களை அறிவித்தன. ஆனால் சில நாட்களிலேயே அவை காற்றில் பறக்க விடப்பட்டன. அவ்வாறு வாக்குறுதிகள் மீறப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் உண்ணாவிரதத்தில் இறங்கினர். அவர்கள் சிறைக்குள் வாடிய இரண்டு ஆண்டுகளுக்குள், சற்றேறக்குறைய ஐந்து மாதங்களை 150 நாட்கள்  உண்ணாநிலைப் போரில் கழித்துள்ளனர். ஒப்பு நோக்கில், மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி தனது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் இருந்து உண்ணாவிரத நாட்களைக் காட்டிலும், ‘பயங்கரவாதிகளான பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் இருந்த உண்ணாவிரத நாட்கள் அதிகம்!

வெற்றியைப் பெற்றுவிட்டதாக பகத்சிங் உள்ளிட்ட போராளிகள் நினைத்த அச்சமயத்தில், வெற்றியின் விலையாக ஜதீன்தாஸின் உயிர் அமைந்து விட்டது. அதைப் பற்றி அஜாய்கோஷ் எழுதுகிறார்: ‘ கல் நெஞ்சு படைத்த பிரிட்டீஷ் அதிகாரிகளின் கண்களிகூம் கூட கண்ணீர் ததும்பியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்தும் கூட எந்த மனிதனை முறியடிக்க முடியாமற் தோற்றுப் போனதோ அந்த மனிதனின் முன்பு, லாகூர் சிறைக் கண்காணிப்பாளர் ஹாமில்டன் ஹார்டிங் தன் தொப்பியை கழற்றி தலைவணங்கி மரியாதை செலுத்தினான்.

பகத்சிங்கின் முன்னோடித் தோழரான ராம்சரண்தாஸ் தான் எழுதிய ‘கனவுலகம்” கவிதைத் தொகுதியை இளைஞர்கள் படித்தாக வேண்டுமெனப் பரிந்துரைக்கிறார், காரணம் ராம்சரண்தாஸின் கவிதைகளில் இழையோடும் கருத்துகள் 1914-15 ஆம் ஆண்டின் புரட்சிக்காரர்களுடையவை என்கிறார். அதே சமயம் ‘ நான் இப்புத்தகத்தை இளம் வாலிபர்களுக்கு மிக வலிமையாகப் பரிந்துரை செய்கிறேன் ஆனால், ஓர் எச்சரிக்கை: இதைக் கண்மூடித்தனமாகப் படித்து இதில் எழுதியிருப்பதே வேதவாக்கு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். இதைப் படியுங்கள் இதை பற்றி சிந்தியுங்கள், விமர்சியுங்கள் இந்நூலின் உதவியுடன் உங்களுடையவையான சொந்தச் சிந்தனைகளை வடித்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்ற எச்சரிக்கையோடுதான் ‘கனவுலகம்” தொகுப்பைப் பரிந்துரைக்கிறார்.

கட்டுரையின் தொடக்க வரிகளுக்கு மீளவும் வருவோம் விடுதலை பெற்று 60 ஆண்டுகளான, பிறகு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்க முற்படாத ஒரு காவல்துறைத் தலைமையின் கீழ் இந்தியாவின் தலைநகரம் உள்ளது. பகத்சிங் போன்ற இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் சிறை நிர்வாகம் வழங்கிய அதே விதமான ‘ பரிசுகளைத்தான் சுதந்திர இந்தியாவின் பிஜேபி அரசும் கண்ணையாவுக்கு வழங்குகிறது. இந்த இழிநிலையிலிருந்து நம் நாட்டை மீட்கவும், மாற்றுப் பாதையில் இட்டுச் செல்லவும் இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், இத்தகைய ஒரு பின்னணியில் பகத்சிங்கின் எழுத்துகளும் அவருடைய, சக தோழர்களுடைய வரலாறுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடிய தகுதி படைத்தவை.

ஏ.ஜி நூரனி, சமன்லால் போன்றோர் பகத்சிங்கின் வழக்கு விசாரணை, சக தோழர்களுடன் இணைந்து அவர் நடத்திய போராட்டங்கள், சிறை வாசங்கள் மூலம் கிடைக்கும புரட்சிகர சிந்தனைகள் ஆகியவற்றை தொகுத்து ஆங்கில நூல்களாக ஆக்கித் தந்துள்ளார்.

ஏ.ஜி நூரனி நூல் ‘பகத்சிங் வழக்கு விசாரணை நீதியின் அரசியல்” (ஆங்கிலம்) என்பதாகும். ஞிசிவ வர்மா, சமன்லால், டீ.என் குப்தா போன்றவர்கள் பகத்சிங் எழுதியி கட்டுரைகள், கடிதங்கள், நீதிமன்ற விசாரணை ஆவணங்களைத் தொகுத்து ஆங்கில நூல்களாக்கியுள்ளனர். இர்/பான் ஹபீப், கோபால் தாக்குர்,  எஸ்.கே மித்தல் போன்றவர்களின் தொகுப்பு நூல்களை நெல்லை எஸ். வேலாயுதம்,அ. மார்க்ஸ் – பாரதிப் பிரியா, அசோகன் முத்துசாமி போன்றவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளனர். கோபால் தாக்குர் எழுதி, நெல்லை வேலாயுதம் மொழி பெயர்த்த பகத்சிங் வரலாற்று- அரசியல் நூல் ‘செம்மலர்” மாத இதழில் தொடராக வெளிவந்து ‘அன்னம்” மீரா அவர்களால் நூல் வடிவில் வெளியிடப் பெற்றது. மிக சிறந்த ஒரு நூல் இது.

தமிழிலேயே ஏராளமான நூல்கள் வந்துள்ளன. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு ஓராண்டு முடிவதற்குள் 11 நூல்கள் தமிழில் வெளியாகி பிரிட்டிஷ் அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளன என்றால், பார்த்துக்கொள்ளலாம். பகத்சிங்கும், அவரது தோழர்களும் என அஜாய்கோஷ் ஒரு நூல் தமிழில் ஏ.ஜி எத்திராஜுலு மொழிபெயர்ப்பில் தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக இப்போதும் கிடைக்கிறது. அஜய்கோஷ் நூல் என்.சி.பி ஹச் வெளியீடு, இர்பான் ஹபிப், சமன்லால் நூல்களை பாரதி புத்தகாலயம்  வெளியிட்டுள்ளது. சுப. வீரப்பாண்டியன் எழுதிய ‘பகத்சிங்கும், இந்திய அரசியலும்” நூல் மிக முக்கியமான, சிறப்பாக எழுதப்பட்ட ஓர் ஆய்வு நூல் அறந்தை நாராயணன், பகத்சிங் வரலாற்றை நாடகமாக்கி எழுதிய நூல் என்சிபிஹச் வெளியீடு.

“கேளாத செவிகள் கேட்கட்டும்.” என்ற தலைப்பில் பகத்சிங் நீதிமன்ற வாக்குமூலம் உள்ளிட்ட சிறை ஆவணங்கள், கடிதங்கள், பிற கட்டுரைகளின் தொகுப்பு நூலை த.சிவக்குமார் ‘நெம்புகோல் பதிப்பகம்’ மூலம் வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மண்ணில் பரவியதை விட, தமிழ் மண்ணில் பகத்சிங்கின் புகழ் பட்டி- தொட்டியெங்கும் பரவியிருப்பது வியப்பை அளித்ததாக ஏ.ஜி நூரனி கூறியிருப்பது நம் கவனத்திற்குறிய செய்தி. பகத்சிங் 24 வயதை அடையும் முன்பே தூக்கிலிடப்பட்ட ஓர் இளைஞர். சுரண்டல் இல்லாத, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, சோஷலிச சமுதாயம் அமைய வேண்டிய ஒரு கனவு நிலமாக இந்தியாவைக் கண்டார். நிலம் அப்போது கரடுமுரடாய், அடிமை பூமியாய்க் கிடந்தது. பண்படுத்திச் சீர்திருத்தப் புரட்சி விதைகளை விதைக்க முற்பட்டபோது, முன்னுரை எழுதும் போதே அவர்தன் உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. இன்னமும் அவரின் கனவு பூமி கசடர்களின், தேசத்தை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் கயவர்களின் கைகளில் சிக்கிச் சீரழிகிறது விடுதலை விதையிட்டு, களை பறித்து, பயிரை காத்து வளர்த்துச் செழிக்க வைக்க வேண்டிய உழவர்கள் இன்றைய இளைஞர்கள் அல்லவா?

Related Posts