அரசியல்

நோய் தொற்றில் ஊடக தர்மம்

ஐக்கிய நாட்டு சபை உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கரோனா பரவுதல் மற்றும்  சிகிச்சை பற்றிய தகவல்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.  இந்த கோவிட்-19 நோய்க்கெதிரான போராட்டம் வெறும் ஊரடங்கு மற்றும் சமூக விலக்கல் மூலம் மட்டும் முழுமையாக தடுக்க இயலாது.  மாறாக ஓரளவிற்கு கட்டுப்படுத்தவே உதவும்.

இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு தரவுகள், புள்ளி விவரங்கள் மற்றும் பலரின் பரிசோதனை முடிவுகள் போன்றவையின் அடிப்படையில் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் தீர்வுகள் கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இன்னும் பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்ளையும் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி தமிழகத்தைச் சார்ந்த டாக்டர் M.S. சுவாமிநாதனின் மகளான இவர் இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research)யின் இயக்குனராக 2015-2017 ஆண்டுகளில் பணியாற்றியிருக்கிறார். உயிர் கொல்லி HIV மற்றும் காசநோய் T.B. தடுப்பு நடவடிக்கைக்கான ஆராய்ச்சியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இவர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் நடைபெற்று வரும் பரிசோதனைகள் மிகக் குறைந்த அளவில் இருப்பதையும் இவர் இந்த நேர்காணலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு சமய மாநாட்டில் கலந்து கொண்ட ஏறக்குறைய 4500 நபர்களால் நாட்டின் பல பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டிருப்பதையும், போக்குவரத்துத் தடையால் இங்கு தங்கி விட்ட ஆயிரத்திற்கு அதிகமானவர்களை வெளியேற்றி தனிமைபடுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படடதையும் பெரும்பாலும் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக பல நாட்கள் காண முடிந்தது.   கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்கள் மட்டுமல்லாது, குடும்பத்தார், அவர்களை சந்தித்தவர்கள், ரயில், விமானம் மற்றும் இதர வாகனங்களில் உடன் பயணித்தவர் என்று பல ஆயிரம் பேர்கள் தனிமைப் படுத்தப்பட்டு பரிசோதனைக்குள்ளாக்ப்பட்டு வந்துள்ளதையும், அறிய முடிந்தது.  ஏறக்குறைய 80 விழுக்காட்டிற்கு மேல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டர்வர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப் பட்டார்கள். 

 இப்பரிசோதனைகளை வரவேற்பதில் வேறு மாற்று கருத்து இருக்க முடியாது.  இப்பரிசோதனைக்கு அரசுகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளில் பல விமர்சனங்கள், ஆதங்கங்கள் இருந்த போதிலும் நாட்டு மக்கள் நலன் கருதி அனைவரும் ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.

அதே காலககட்டத்தில், சிறிது முன்பும், பின்பும், ஏன் இன்றும்  பல மக்கள் திறளாக கலந்து கொண்ட நிகழ்வுகள் நடந்து வந்தன.  நடந்தும் வருகின்றன. டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கு கொண்டவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை, போல் சிறிய விழுக்காட்டளவாவது இக்கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் பரிசோதிக்கப் படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

கோவிட்-19 நோயின் ஆபத்தை எதிர்நோக்கும் முன்னேறிய அல்லது வளரும் நாடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோர் எண்ணிக்கை 10 இலட்சத்தில் 13000 என்று உள்ளது.  ஆனால் நம் நாட்டிலோ பத்து இலட்சத்தில் வெறும் 102 பேருக்குததான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது விவாதத்திற்குரியது. பரிசோதனைக்கு மாதிரி (sample) எடுத்தலில் மிகப் பெரிய பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று புள்ளியியல் வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொற்று அறியப்பட்டவர்களாக ஏப்ரல் முதல் வாரத்தில் 60% மேல் உள்ளவர்கள் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று முதன் நிலை தேசிய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டது   குறிப்பிடத்தக்கது.அச்சமயத்தில் நாட்டில் கண்டறியப்பட்ட நோய் தொற்றில் 95 விழுக்காடு வரை டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் ஏற்பட்டதென்று பல ஊடகச் செய்திகள் அலறல் விடுத்தன.சாய்கோதோ தத்தா மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோயோஜீத் பால் போன்ற ஏராளமான உலகளாவிய தொழில்சார் வல்லுனர்கள் ஊடக செய்திகளை மறுத்து அதன் உண்மைத் தன்மையைப் பற்றிய ஆழமான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

 ஆனால் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களின் விழுக்காடு எத்தனை என்று இன்றளவும் யாரும் வெளியிடவில்லை.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் அறிவிப்பில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று அறியப்பட்ட 1103 நபர்கள்இரு வாரங்களுக்கு மேலாக தனிமை படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் 939 நபர்கள் நோய் தொற்று இல்லாதவர் என்று அறிவித்துள்ளார். மீதமுள்ள 164 நபர்களும் நோய் தொற்றுள்ளவர் என்று அறிவிக்காத நிலையில் மேலும் பலர் தொற்றில்லாதவராக இருக்க வாய்ப்புள்ளது.

ஊரடங்கிற்கு சற்றுமுன் நடந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அயல் நாட்டவர் பலர் தங்கள் நாட்டிற்கு திரும்பிய போது நோய் தொற்றுள்ளதாக கண்டறியப்பட்ட செய்திகளும் பன்னாட்டு ஊடகங்களில் வெளிவந்தன.  இந்தியாவிலிருந்து திரும்பிய இவர்களால்தான் நோய் தொற்று ஏற்பட்டதென்று எந்த அரசும் குறை கூறாதது கவனிக்கத்தக்கதாகும்.

மேலும் பிழைப்பிற்காக வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிந்து திரும்பியவர்களும்,  தொடர்பில் இருந்தவர்களும் இவ்வாறே பரிசோதனைக்கு உள்ளாகப்பட்டு தொற்றுள்ளவர் கணக்கெடுக்கப்பட்டனர்.  ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளிலிருந்து திரும்பியுள்ள உயர்  பணி/பதவியிலுள்ளோர் , தொழில்  ரீதியாக பயணம் மேற்கொண்டோர், பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோர் மற்றும் அவர்கள் தொடர்புடையோர்கள பெரிய அளவில்  பரிசோதனைக்கு உள்ளாக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.  அரசு இதில் கவனம் செலுத்தி தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.  இந்த விவரங்களின் அடிப்படையில்  தமிழக முதல்வர் நாம் தொற்றின் மூன்றாம் நிலையை எட்டலாம் என்று அறிவித்திருப்பதாக கருதத்  தோன்றுகிறது.  பாதிக்கப்பட்டோரை கண்டறிவதில் அரசுக்கு உதவ மக்கள் முன்வருவது இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர உதவும். அரசின் அறிவிப்புகள், செயல்பாடுகள், கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிக அவசியம். 

எம்.ஜி.தாவூத் மியாகான்
கல்வியாளர்.

Related Posts