பிற

நூல் அறிமுகம் – திமுக பிறந்தது எப்படி?

பெரியார் படத்தில் இவ்வாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

காட்சி 1: ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைகிறது. இந்திய நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற இருக்கின்றனர். ஆட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து இங்குள்ள உயர் சாதியினர்களின் கைக்குத்தான் மாறவிருக்கிறது. ஆகவே இந்நாளை நாம் “துன்ப நாளாக” அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்து, தன்னுடைய பத்திரிகையில் “துன்ப நாள்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிடுகிறார்.

காட்சி 2: அண்ணா தன்னுடைய சகாக்களுடன் இதை எப்படி நாம் துன்ப நாளாகக் கருத முடியும்? நமக்கு இரண்டு எதிரிகள் ஒன்று ஆங்கிலேயர்கள் மற்றோன்று பார்ப்பனியம், இதில் முதல் எதிரியான ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் நாளை நாம் எவ்வாறு துன்ப நாளாகக் கருத முடியும்? இது உண்மையில் நமக்கு “இன்ப நாள்” தான் என்று விளக்கி தன்னுடைய திராவிட நாடு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார். உடனிருக்கும் சகா தோழர் ஒருவர் பெரியாருக்கு எதிராக அண்ணா கட்டுரை எழுதுகிறார் இது எங்குச் சென்று முடியுமோ? என்று குமுறுகிறார்.

காட்சி 3: ஒரு கோவில் நிகழ்ச்சிக்காகத் திருவண்ணாமலை வரும் அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜியைச் சந்திக்கும் பெரியார், தனக்கு உதவியாக இருக்கும் மணியம்மை அவர்களை மனம் செய்து கொள்ள இருப்பதாகவும், இது தன்னுடைய திராவிட கழகத்தை காப்பாற்றும் ஒரு ஏற்பாடு என்றும், இதற்கு தாங்கள் வந்து முன்னின்று திருமணத்தை நடத்தித் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார். இது உங்களுடைய கழகத்திற்கும் உங்களுக்கும் மிகப் பெரிய அவப்பெயரைக் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்று எச்சரிக்கிறார் ராஜாஜி.

காட்சி 4: மணியம்மைக்கும் தனக்கும் ஜி.டி.நாயகம் அவர்களின் முன்னிலையில் பதிவுத் திருமணம் நிகழ்ந்ததாக தன்னுடைய கழகத் தோழர்களிடம் தெரிவிக்கிறார் பெரியார். இது உடல் உறவுக்கான திருமணம் அல்ல, நம்முடைய கழகத்தில் என்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக யாருமில்லை என்று சொன்னால், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இது கழகத்தையும், கழகத்தின் சொத்துக்களையும் காப்பாற்றும் ஒரு ஏற்பாடு என்று விளக்கமளிக்கிறார்.

காட்சி 5: பெரியாரின் இம்முடிவிற்கு எதிராக அண்ணாவின் தலைமையில் கூடியவர்கள் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்கிற பெயரில் தனிக்கட்சியொன்றைத் துவங்குகிறார்கள்.

இவ்வாறு காட்சிகள் நீள்கிறது பெரியார் திரைப்படத்தில் .

பெரியார் – மணியம்மை திருமணமா திமுக பிறப்பிற்குக் காரணம்?

ஒரு திருமண விஷயத்திலா தமிழகத்தை ஆளப்போகும் மிகப்பெரிய கட்சி தோன்றியிருக்க முடியும்? என்ற கேள்வியிலிருந்து அதற்கு விடை தேடும் ஆய்வுப் புத்தகமாகவே துவங்குகிறது பேராசிரியர் அருணன் அவர்களின் “திமுக பிறந்தது எப்படி?”

 

வெறுமனே ஆம்/இல்லை என்று நேரடியாகப் பதிலை சொல்லிவிடாமல் ஏன், எதற்கு, எப்படி என்று நம் எண்ணத்தில் எழும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், அதற்கு முன் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவருடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் முதலான வரலாற்றைத் தொட்டும், அண்ணா எவ்வாறு பெரியாருக்கு அறிமுகமானார் எவ்வாறு நெருக்கமானார் என்று விவரித்து அண்ணாவின் செயல்பாடுகள், இயக்கம் , சமூகம் மற்றும் அரசியல் சார்ந்து அவருடைய எழுத்துக்கள் என நீள்கிறது ஆய்வு.

கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இந்நிகழ்வை எடுத்துக்கொண்டு மிக நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார் பேராசிரியர் அருணன் அவர்கள். இன்றைய காலகட்டத்தில் இவ்வாய்வு புத்தக வாசிப்பு அவசியமா என்ற கேள்வி எழலாம். ஆம் நிச்சயமாக அவசியம் என்றே நான் கூறுவேன்.

திராவிடர் கழகம் துவங்கி நூறாண்டுகள், தமிழகத்தில் திராவிட ஆட்சி துவங்கி 50 ஆண்டுகள் மற்றும் கலைஞர் கருணாநிதி 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மூன்றையும் பெரும் விழாவாக திமுக கொண்டாடிவருகிறது. தி இந்து தமிழ் நாளிதழ் “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் மற்றும் பேட்டிகளை நாளிதழில் வெளியிட்டுமுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் திமுக பிறந்தது எப்படி என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம்தானே?

செப்டம்பர் 17, 1949 நாள் சரியாக பெரியாரின் பிறந்தநாளன்று. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா அவர்களை பொது செயலாளராகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. திராவிடர் கழகத்திலிருந்து ஓட்டுமாஞ் செடியாக பிறந்தது திமுக. நாங்கள் தான் உண்மையான திராவிடர் கழகத்தினர் என்று பெரியாருடன் மல்லுக்கு நிற்காமல், ஆனால் பெரியாருடைய மற்றும் அவர் நிறுவிய திக வின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தலைவர் பதவியை பெரியாருக்காக ஒதுக்கி வைத்துக்கொண்டு செயல்படத்துவங்கியது.

திகவின் பெரும்பாலான தொண்டர்கள் பெரியார்-மணியம்மையின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் அதன் அடுத்தகட்ட தலைவர்கள் அண்ணாவின் பக்கமே நின்றார்கள். இருந்தும் தாங்கள் தான் உண்மையான திராவிட கழகத்தினர் என்றும் திராவிட கழகம் தங்களுடையது தான் என்றும் பெரியாருடன் மல்லுக்கு நிற்கவில்லை. ஏன்?

முன்னே கூறியது போல் பெரியார் – மணியம்மை திருமணத்தைக் கழகத்தை காப்பாற்றுவதற்கான ஏற்பாடு என்ற நோக்கிலேயே பெரியார் முடிவு செய்து மணியம்மை அவர்களின் முழு சம்மதத்துடன் நிகழ்த்தினார். கழகத்தைக் காப்பது என்பது திக வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பெரும்பாலும் தேர்தல் அரசியலை நோக்கி கழகத்தை இட்டுச் செல்ல நேரிடும் என்பதைப் பெரியார் உணர்ந்திருந்தார். பெரியரைப் பொறுத்தவரை ஒரு கழகமோ அல்லது இயக்கமோ ஒரு தலைவரின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால் மட்டுமே அது கட்டுக்கோப்பாகவும் உறுதியாகவும் நடைபோட முடியும்.

அதைவிட முக்கியம் எத்தகைய காரணங்களுக்காக பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அதே இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி உரிமைகளை நிறைவேற்றி வந்த நீதிக்கட்சியோடு தன்னை இணைத்துக்கொள்ளாமல், சுயமரியாதை இயக்கத்தை நிறுவித் தேர்தல் அரசியலிலிருந்து விலகி சமூக இயக்கமாக இயங்கி வந்தார். தேர்தல் அரசியலில் ஈடுபட்டால் நம்முடைய இலக்கு ஆட்சி அதிகாரத்தோடு சுருங்கி விடும் என்பதே.

பெரியாரோடு இலக்கு, சமூக இயக்கமாகச் செயல்பட்டால் தான் நம்முடைய குடிமை சமூகத்தில்(Civil Society) திடமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் குடிமை சமூகத்தில் பணியாற்ற யாருமின்றி மிகப் பெரிய வெற்றிடம் நிலவி வந்தது. அத்தோடு நம்முடைய குடிமை சமூகம் பார்ப்பனர்களின் சித்தாந்த ஆதிக்கத்தில் ஆழ்ப்பட்டு இருந்துவருகிறது. அப்படிப்பட்ட தளத்தில் பணியாற்றுவதே தன்னுடைய வாழ்நாள் இலக்காகக் கொண்டு இயங்கிவந்தார்.

பெரியாரின் கொள்கைகளை ஏற்று அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட அண்ணா திக வின் பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த போதும், அண்ணா தன்னுடைய அரசியல் வாழ்வைத் தேர்தல் அரசியலில் இருந்தே துவக்கியுள்ளார். ஒவ்வொரு இயக்கத்திலும் அவ்வியக்கத்திற்கு உள்ளிருந்து முரண்கள் எழுவது இயற்கையே. அத்தகைய உள்முரண்கள் எழுந்தே தீரும். ஒவ்வொரு காலகட்டங்களிலும் இத்தகைய உள்முரண்கள் ஏதாவதொரு வடிவில் வெளிப்பாட்டுக் கொண்டும் இருக்கும். அவ்வாறு திக இல் ஏற்பட்ட உள்முரண்கள் பெரியார் – அண்ணா இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், உறவு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விவரிக்கிறார் பேராசிரியர் அருணன். இயக்கத்தைத் தொண்டர்கள்/செயல் வீரர்களை அடிப்படையாகக் கொண்டு (Cadre based party) சுறுக்கிவிடாமல், நவீன கருத்தாக்கங்களான ஜனநாயக மாண்புகளை தன்னகத்தே கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வெகுஜன இயக்கமாக (Mass based party) கழகத்தை வளர்த்தெடுப்பதில் அண்ணா ஆர்வமிக்கவராக இருந்தார். இத்தகைய எண்ணங்கள் ஆரம்ப காலகட்டங்களில் அவர் வெளிப்படையாகத் தெரிவித்ததில்லையென்றாலும், அவருடைய மனதில் அதற்கான விதை விதைக்கப்பட்டிருந்தது. வெகுஜன இயக்கமாக வளர்த்தெடுக்கக் கொள்கைகளை சற்று தளர்த்திக் கொள்ளவும் தயாராகவே இருந்துவந்துள்ளார்.

உள்முரண்கள் அவ்வப்போது புகையவும் செய்திருக்கிறது. பெரியாரின் பத்திரிக்கையான விடுதலை மற்றும் குடியரசில் துணை ஆசிரியராக ஈரோட்டில் தங்கி சில காலம் வேலை பார்த்து வந்த அண்ணா, அவ்வப்போது பெரியாருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் கோபித்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்றுவிடுவதும், திரும்ப வருமாறு பெரியார் கடிதம் எழுதுவதும் பல முறை நிகழ்ந்துள்ளது. ஒருகட்டத்தில் நீதிக்கட்சியின் சார்பில் இயங்கி வந்த விடுதலைப் பத்திரிகை அரசின் நிர்வாகப் பொறுப்பில் ஒப்படைப்பது என்று கட்சி முடிவெடுத்தது. அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த அண்ணா இம்முடிவை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலையிலிருந்து வெளியேறினார்.

வெளியேறிய கையேடு காஞ்சிபுரம் சென்று, தன்னுடைய பணக்கார நண்பர்களான டி.பி.எஸ்.பொன்னப்பனார் போன்ற சுயமரியாதை இயக்க ஆதரவாளர்களின் உதவியுடன் ‘திராவிட நாடு’ எனும் பத்திரிக்கையை துவக்கினார் அண்ணா. ஒரே கழகத்தைச் சார்ந்த தலைவருக்கு ஒரு பத்திரிகை, பொதுச் செயலாளருக்கு ஒரு பத்திரிகை என்ற வெளிவரத் துவங்கியது.

இந்நிகழ்விற்கு முன் திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் “திராவிட நாடு” பெற வேண்டும், அது ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் தனி நாடாக அமைத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிட நாடு கோரிக்கைக்கு வலு சேர்க்க வேறு எந்தவொரு சித்தாந்த விளக்கங்களும் இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிக்கட்சியின் முந்தைய தலைமுறை தலைவர்களுக்கும் பெரியாருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளால் பெரியார் – அண்ணா இருவரும் மேலும் இணைந்து செயல்படத் துவங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி திராவிடர்க் கழகம் எனப் பெயரிடப்பட்டது.

திராவிடர்க் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணியவேண்டும் என்று பெரியார் முடிவு செய்து, அம்முடிவை அறிக்கையாக வெளியிட்டார். கழகத்தை எப்போதுமே வெகுஜன இயக்கமாக அமைக்க வேண்டும் என்ற கருத்து கொண்ட அண்ணாவிற்கு இம்முடிவில் உடன்பாடில்லை. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் வெள்ளை நிற வேட்டி சட்டை அணிவதுதான் வழக்கமாக இருந்து வருவதையும் அண்ணா சுட்டிக்காட்டினார். இம்முடிவு பெரும்பான்பை மக்களிடமிருந்து நம்மை தனித்துக் காட்டிவிடும் என்றும், கருப்பு துக்கத்தின் குறியீடாக இங்கே பார்க்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து இந்தியா விடுதலைப் பெற்ற நாளான ஆகஸ்டு 15 ஆம் நாள், வெள்ளையரிடமிருந்து ஆட்சி இங்குள்ள உயர் சாதியினரிடம் செல்கிறது, அவ்வளவே, இது முழுமையான விடுதலை இல்லை, இந்நாளை நாம் துன்ப நாளாக அனுசரிக்க வேண்டும் என்று முடிவு செய்து பெரியார் அறிக்கையொன்றை வெளியிடுகிறார்.

அண்ணா அவர்கள், அனைவரும் இந்திய விடுதலையை வரவேற்கின்றனர். குறிப்பாக நாட்டு விடுதலையில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொள்கிறார். நம்முடைய இரண்டு எதிரிகளான ஆங்கிலேயே ஆட்சி மற்றும் பார்ப்பனீயம் ஆகியவற்றில், முதல் எதிரியான ஆங்கிலேயே ஆட்சி முடிவுக்கு வரவிருக்கிறது, ஆங்கிலேயர்கள் வெளியேறவிருக்கின்றனர். ஜனநாயகம் போன்ற நவீன அரசியல் மாண்புகள் இங்கே வரவிருக்கின்றது. இதை எப்படி துன்ப நாளாக அனுசரிக்க முடியும்? இது “இன்ப நாள்” தான் என்று தன்னுடைய திராவிட நாடு பத்திரிகையில் கட்டுரையொன்றை வெளியிடுகிறார். இவ்வாறு திகவின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுவது தொடர்ந்த வண்ணமாக இருந்து வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து விடுதலைப் பெற்ற இந்தியாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக திக முன்னெடுத்த போராட்டங்களின் மூலம் பெரியாரும் அண்ணாவும் இணைந்து செயல்படும் வாய்ப்பை அன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியே ஏற்படுத்தித் தந்தது.

இருப்பினும் தனக்குப் பிறகு கழகத்திலுள்ள அடுத்தகட்ட தலைவர்கள் திக வை தேர்தல் அரசியலை நோக்கித் தள்ளுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த பெரியார், திகவையும், அதன் சொத்து மற்றும் நிதி ஆதாரங்களையும் பாதுகாத்துக்கொள்ள தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். தன்னுடைய அண்ணன் மகன் சம்பத்தை தன்னுடைய வாரிசாகத் தத்தெடுப்பது, தன்னுடைய நம்பிக்கையைப் பெற்ற அடுத்தகட்ட தலைமுறை தலைவர்களை இனங்காண்பது என்னும் எண்ணத்தில் இருந்தார். இவையேதும் நிறைவேறாத சூழலிலேயே, மணியம்மை அவர்களை மணக்கும் முடிவை எடுத்தார்.

அன்றைய பத்திரிகைகள் பல காங்கிரஸுக்கு மாற்று எதிர்க்கட்சிகள் இங்கே எதுவுமில்லை என்று எழுதி வந்தது. உலக நாடுகளைப் போலவே சுதந்திர இந்தியாவில், நாடு முழுவதும் கம்யூனிச இயக்கங்களைத் தடை செய்து, அதன் தொண்டர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வந்தது. இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சியை துவங்குவதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்தார். இதுவே சரியான தருணம் என்று எண்ணியிருந்த அண்ணா, பெரியார் மணியம்மை அவர்களின் திருமண நிகழ்வைச் சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு “திராவிடர் முன்னேற்றக் கழகம்” அல்ல “திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் கட்சியை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17, 1949 ஆம் நாளன்று துவங்கினார்.

ஆரம்பக் காலத்தில் தேர்தல் அரசியலிலிருந்து விலகியே இருந்து வந்த போதிலும், 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டது, அடுத்த பத்து ஆண்டுகளில் 1967 இல் திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.

திகவின் அடுத்த கட்ட தலைவர்கள் தேர்தல் அரசியலை நோக்கி நகர்வார்கள் என்னும் பெரியாரின் எண்ணம் உறுதியானது. பெரியார் மற்றும் திகவின் கொள்கையே எங்களுடைய கொள்கை என்று பறைசாற்றி வந்த திமுகவிடம் நாளடைவில் கொள்கை நீர்த்துப் போனது.

ஆட்சிக்கு வந்த திமுக, இடஒதுக்கீடு, சுமரியாதைத் திருமணம், அனைவரும் அர்ச்சகராகும் உரிமை என திகவின் கொள்கைகளைச் சட்டமாக இயற்றியது. பிற்காலத்தில் “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்தோடு மாநில அதிகார உரிமைக்காகப் போராடியதோடு பிற மாநிலத்திற்கு முன்னோடியாக இருந்தது. சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தும் வந்தது. திமுக 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்படி இருந்தது, அதன் கொள்கைகள் 1990 காலகட்டத்திற்குப் பிறகு எவ்வாறு மாறியது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். 1990 களில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவுடன் இங்குள்ள இரண்டு திராவிட கட்சிகளும் அவற்றை வெகு வேகமாகச் சுவீகரித்துக்கொண்டன.

உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் காரணங்களால் அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையத்துவங்கியது. தாராளமயமாக்கல் கொள்கைகள் அமுலுக்கு வந்து 25 ஆண்டுக் காலம் நிறைவுபெற்ற இன்றைய காலகட்டத்தில், கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் பெருவாரியான இளைஞர்கள் தனியார் துறையில் அல்லது முறைசாராத் துறைகளிலேயே வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொள்ளவேண்டியுள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் ஓரளவேனும் முன்னேறத் துவங்கியிருந்த தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்துவந்த வாய்ப்புகள், இன்று வெகுவாக பறிக்கப்பட்டுள்ளது. இன்றளவும் அரசுத்துறையில் இடஒதுக்கீடு முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று நாம் “தனியார் துறையில் இடஒதுக்கீடு” கோரிக்கையை முன்வைத்துப் போராடவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதாகப் பேசி வரும் திமுக விற்கு பிற நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடான அமெரிக்காவில் சமூக நீதி எவ்வாறு நிலைநாட்டப்படுகிறது என்பது தெரியாதா?

திமுக பெயரளவிலேயே “தனியார் துறையில் இடஒதுக்கீடு” கோரிக்கையை முன்வைத்து ஒன்றிரண்டு கருத்தரங்கங்களை நடத்தியுள்ளது. அக்கட்சி முழுமனதாக, ஆரம்ப காலகட்டங்களில் இடஒதுக்கீடு மற்றும் இந்தி திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் காட்டிய வேகத்தையோ வீரியத்தையோ இப்போது “தனியார் துறையில் இடஒதுக்கீடு” கோரிக்கையில் காண முடியவில்லை.

இங்குள்ள அரசு அமைப்பு முதலாளித்துவத்தையும் சாதியக் கூறுகளை உள்ளடக்கிய நிலவுடைமைச் சமூகத்தையும் காக்கும் அமைப்பு. அத்தகைய அமைப்பில் தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரிக்கையைக் கையிலெடுப்பது என்பது இவ்விரண்டு அமைப்பையும் ஒருங்கே எதிர்ப்பதாகும். திமுக மற்றும் இதர திராவிட கட்சிகள் பல முற்போக்கு சிந்தனைகளை பேசினாலும், அதற்கான சட்டங்களை இயற்றினாலும், அது ஒருபோதும் முதலாளித்துவத்திற்கு எதிராகச் சிறு துரும்பைக் கூட தூக்கிப்போடாது என்பதை அதன் கடந்த கால வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

திமுக பிறந்தது எப்படி? – பேராசிரியர் அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
விலை: ரூ. 60
பக்கங்கள்: 136

Related Posts