பிற

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி …

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஐடி இளைஞர்கள் முன் நின்று ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்விற்காக. ஸ்வாதியின் குடும்பத்தாரும் வந்திருந்தனர். நானறிந்த சிலரும், நான் அறியாத பலரும் வந்திருந்தனர். மிஞ்சிப்போனால் 100 பேர் இருக்கும்.

செத்த உடலைப் பார்த்தும் கடந்து சென்ற பல்லாயிரம் பேர் வசிக்கும் சென்னையில் இது பெரிய எண்ணிக்கை என்றே கருதுகிறேன்.

ஒரு பத்திரிக்கையாளர், “ஸ்வாதி மரணத்திற்கு ஒருதலை …. “ என்று ஆரம்பித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உடனே தலையிட்டு – தயவு செய்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை செய்தியாக்க முயற்சிக்காதீர்கள் இது அதற்கான இடமல்ல என்றார். #பாராட்டுக்கள்

யாராவது ஒரு பெண் பேசுங்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டார்கள். சகோதரி Nivitha Ilango பேசினார், “வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இந்த சமூகம் இருக்கிறது. ஆண்களும், பெண்களும் இணைந்து முயன்றால்தான் இந்த சூழலை மாற்ற முடியும். எங்கள் கனவுகளுக்கும், முயற்சிகளுக்கும் கைகொடுங்கள்” என்று பேசினார். அவர் குரல் நடுங்கியது. ஆனால் குரலில் அச்சமில்லை.

அங்கு வந்திருந்த பலருக்கும் ‘நடத்தை’ பற்றிய விவாதங்களை ஏன் எதிர்க்கிறோம் என்பது புரியவில்லை. நிகழ்ச்சியிலிருந்து திரும்பும்போது பலரும் உணர்ந்திருந்தனர். சில பெண்கள் இன்னும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தார்கள். உணர்ச்சிவயப்படுதல் இல்லாமல் எப்படிப் போகும்!!.

இங்கே ஒரு மரணம், அல்லது ஒரு சம்பவம் அல்ல பிரச்சனை. சட்டம் ஒழுங்கு அல்ல பிரச்சனை. “பெண் ஆளும் மாநிலத்தில், பெண்களுக்கே பாதுகாப்பில்லையா?” என்பது போன்ற அரசியல் உரையாடல்களை மேற்கொள்ள ஏராளமான சம்பவங்கள் கிடைக்கும்.

ஸ்வாதியின் கொலை – ஒரு சமூகப் பொருப்புள்ள தலைமுறையை உருவாக்குவதற்கானது. பாதுகாப்பான சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கானது.

நீங்களும், நானும் அப்படிப்பட்ட சமுதாயம் இதுவில்லை என்று எளிதாகச் சொல்லிவிடுவோம். ஆனால், அப்படியான பாதுகாப்போடு, சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையை, பொது நிலையாக மாற்றுவது அத்தனை எளிதா??

அதற்கான அரசியலை, அதற்கான உரையாடலை, அதற்கான விவாதங்களை, அதற்கான செயல்பாடுகளை – எங்கிருந்து தொடங்குவது???

எல்லோரும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றோம். அந்த நெருப்பு என்னிடம் இந்தக் கேள்விகளைத்தான் முன்வைத்தது.

Related Posts