இதழ்கள் இளைஞர் முழக்கம்

நீதிமன்றத்தை கேவலப்படுத்திய சாதியும், வேடிக்கை பார்த்த அரசும் – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

2016ஆம் ஆண்டு பிறந்த முன்றாம் நாளில் 100 வயது நிரம்பிய செல்லமுத்து இறந்துபோனார். இறந்து போனவர் தலித் என்ற காரணத்தால் சனநாயக சோசலிச குடியரசு நாட்டின் குல வழக்கபடி அவரது பிணம் பொதுப்பாதையில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அரசு நிர்வாகம் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அவரது பேரன் கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய தாத்தாவின் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று வழக்கு தாக்கல் செய்தார். நம்புங்கள் பிணத்தை வீட்டில் வைத்துக்கொண்டுதான் நீதி மன்றத்தை நாடினார். சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 4ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு, செல்லமுத்துவின் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடிக்க அது சாதி பஞ்சாயத்து தீர்ப்பா? வெறும் நீதிமன்ற தீர்ப்புதானே!

இதனால் வெறுப்படைந்த தலித் மக்கள் ஜனவரி 6 அன்று செல்லமுத்துவின் சடலத்தோடு சிதிலமடைந்த ஒரு வீட்டுக்குள் ஒன்றுகூடி கதவைப் பூட்டிக்கொண்டனர். பொதுப் பாதையில் பிணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கும் வரை நாங்கள் யாரும் இந்த வீட்டைவிட்டு வெளியே வர மாட்டோம் என்றனர். போலீஸ் கொண்டு செல்லாம் என உறுதியளித்ததும், சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்லும் போது சாதி ஆதிக்கவாதியினர் ஆயுதங்களுடன் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். வேறு வழியில்லாமல் பிணத்துடன் சாலையில் அமரதுவங்கினர். சாதி ஆதிக்கவாதிகளை அடித்து விரட்டி பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்யவேண்டிய காவல்துறை வழக்கம்போல தலித் மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். பிணத்தையும் போலீஸாரே அடக்கம் செய்தனர். பொதுப்பாதையில் அல்லம் வயல்வெளியில் தூக்கிச் சென்றுதான்???

இந்த கேவலம் நடந்தது நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ளது திருநாள்கொண்டசேரி கிராமத்தில், இங்குள்ள தலித் மக்கள் 40 ஆண்டு காலமாகத் தங்களுக்கு சுடுகாட்டுப் பாதை வேண்டும் என்று போராடிவருகின்றனர். பொதுப் பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல சாதி ஆதிக்கவாதியினர் அனுமதி கொடுப்பதில்லை.

ஜனவரி மாதம் இறந்து போன செல்லமுத்துவின் மனைவி குஞ்சம்மாள் கடந்த 2015 நவம்பர் 11ம் தேதி இறந்துபோனார். அப்போது மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியிருந்தது, குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல தலித்துகள் முயன்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதியினர் தடுத்தனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் தனது பாட்டியின் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடமும், எஸ்பியிடமும் புகார் கொடுத்துள்ளார்.

உடனடியாக பாய்ந்து வந்த காவல்துறை சாதி ரீதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சாதி ஆதிக்கவாதிகளிடம் தயவுசெய்து பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கின்றனர். அவர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் தலித் மக்களிடமே வந்து ”சடலத்தைத் தனிப் பாதையில் எடுத்துச் சென்று அடக்கம்செய்யுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று பேசியிருக்கிறார்கள். முடியாது என தலித் மக்கள் உறுதியாக நின்றதால், மூன்று நாட்கள் கழித்து நவம்பர் 29 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனால்தான் கார்த்திக் தனது தாத்தா இறந்தவுடன் நீதிமன்றம் சென்றார். ஆனாலும் பயன் என்ன?

நீண்ட காலமாக நீடித்துவரும் சாதி முரண்பாடு ஒன்றை நேர்மையாக அணுகித் தீர்ப்பதற்கான எந்தவொரு வழிமுறையும் நம்முடைய அரசிடம் இல்லாததுமட்டுமல்ல, நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்ததன் மூலம் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இவர்களுக்கு வக்கில்லை. அவர்களோடு பேசுவதற்கான எந்த மொழியும் அரசிடம் இல்லை. மாறாக, சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, நடைமுறைப்படுத்த மறுத்ததற்கு எதிராகப் போராடிய தலித்துகள் மீதே தடியடி மற்றும் கைது செய்து தனது ஆடைகளை கலைந்து காட்டியிருக்கிறது அரசு.

சுதந்திர தினத்தன்று சேஷசமுத்திரத்தில் நடந்த தேர் எரிப்புக்குப் பின் குடியரசு தினத்திற்கு முன் திருநாள்கொண்டசேரி தமிழகத்திற்கு மிக அபாயகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மக்கள் நகக் கூட்டணி கட்சிகள் தவிர தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் இந்த சம்பவம் குறித்து கள்ள மவுனம் காக்கின்ற. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகநீதி தளத்தை கொண்ட தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சினைகளில் குறைந்த பட்சம் பக்குவம் கூட இல்லாமல் தத்தளிப்பது அதிர்ச்சியாகதான் இருக்கிறது.

தமிழகத்தில் சமீப காலமாகப் பெருகியிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள், கவுரவக் கொலைகள், தலித்துகளுக்கு எதிரான, வெளிப்படையான அரசியல் கூட்டமைப்பு என்கிற தொடர்ச்சியின் ஒரு உதாரணம்தான் இந்தச் சம்பவம். அதுவும் தேர்தல் நெருக்கும் நேரத்தில் சாதியை வைத்து அரசியல் நடத்துவோருக்கு இத்தகைய சமபவங்கள் ஒரு இனிபான செய்திதான். எப்போதெல்லாம் கலவரங்கள் உருவாக்கப்படுகிறதோ அல்லது உருவாகிறதோ அப்போதெல்லாம சாதிய இயக்கங்கள் வலுபெறுவதென்பது சமூக சமன்பாடாக இருப்பது நகை முறண்தான்.

திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காண்போர் மீதான பேரிடி. ”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்று கேட்கும் அப்பாவிகளுக்கு இப்போதைய சாட்சி. சாதி என்பது அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை தன் முன் மண்டியிடவைக்கும் என்பதற்கான மீண்டுமொரு உதாரணம்! இவைகளை கடந்துதான் போராட்டங்களை நடத்தவேண்டியுள்ளது. சாதியாதிக்கத்திற்கு எதிராக ஒரு அடியும் எடுத்துவைக்காத தமிழக ஆட்சியாளர்களை, ஆளத் துடிப்பவர்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களை தீண்டாமைக்கு எதிராக போராட தூண்ட வேண்டும்.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Related Posts